மனிதநேயம் தேவை

மருத்துவரை கடவுளாககூட மதிப்பவர்கள் நாம். ஆனால் தற்போது அதற்கு தகுதியில்லாதவர்களாக மருத்துவர் செயல்பட்டு வருகின்றனர்.

மருத்துவரை கடவுளாககூட மதிப்பவர்கள் நாம். ஆனால் தற்போது அதற்கு தகுதியில்லாதவர்களாக மருத்துவர் செயல்பட்டு வருகின்றனர். மருத்துவரிடத்தில் உண்மையை மறைக்கக் கூடாது என்பார்கள். அப்போதுதான், நாம் கூறும் நோய் அறிகுறிகளை கேட்டு அவர் சரியான சிகிச்சையை அளிக்க உதவியாக இருக்கும்.
ஆனால் தற்போது நோயாளிகளிடம் பேசுவதற்குகூட மருத்துவர்களுக்கு நேரமில்லை. தன்னை பார்க்க வரும் நோயாளிகளை வந்த உடனேயே ஓரிரு வார்த்தைகள் மட்டுமே கேட்டுவிட்டு உடனடியாக மருந்து சீட்டு எழுதி, ஊசி போடுவதற்கு அனுப்பி விடுகின்றனர்.
தன்னிடம் யார் வந்தாலும் அவர்களுடைய நோய் தீர்ப்பது ஒரு மருத்துவரின் கடமை. முன்காலத்தில் மருத்துவர்கள் தம்மிடம் வரும் நோயாளிகளை பரிவுடன், கனிவுடன் விசாரித்து அவர்களுடைய நோயை பேசியே தீர்த்து வைத்துள்ளனர். மருத்துவர்கள் கனிவுடன் பேசுவதிலேயே பாதி நோய் குணமாகிவிடும்.
மருத்துவர்கள் கனிவுடன் பேசி நோய் குறித்த அச்சத்தை போக்குபவராக இருக்க வேண்டும். பெரிய மருத்துவமனைகளில் மிக அதிகமான மக்கள் கூட்டத்தினால் சில நேரம் நல்ல சிகிச்சை கிடைப்பதில்லை.
மருத்துவர்கள் ஒவ்வொருவரிடமும் அதிக நேரம் செலுத்த முடிவதில்லை. தற்போது மருத்துவ சேவை வியாபாரமாகிவிட்டது. அதனால் அவர்களுக்கு நோயாளிகளுடன் பேச நேரமில்லை.
அவர்களுடைய நோயின் தாக்கம் குறித்து அறியாமல் அவசர கதியில் சிகிச்சை அளிக்கின்றனர்.
நண்பர் ஒருவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தன்னுடைய கைக்குழந்தையை இரவு சுமார் 8 மணிக்கு குழந்தை மருத்துவரிடம் அதுவும் பெண் மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.
மருத்துவமனையின் இருந்த பணியாளர் ஏற்கனவே வழங்கப்பட்ட டோக்கன் அடிப்படையில் நோயாளிகளை பார்க்க இரவு 8.30 மணிக்கு மேலாகிவிடும். அதனால் டோக்கன் வழங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது. இதற்கு மேல் மருத்துவரை பார்க்க முடியாது எனக் கூறிவிட்டார்.
அன்று ஞாயிற்றுக்கிழமையானதால் வேறு மருத்துவர்களும் அந்தப் பகுதியில் இல்லை. அதனால் அவர் மருந்து கடைக்கு சென்று குழந்தையின் நிலையை கூறி கடையில் மருந்து வாங்கிச் சென்றார்.
எங்கள் ஊரில் மற்றொரு குழந்தைகளுக்கான மருத்துவர் இருக்கிறார். மிகவும்
அவசர காலத்தில் நள்ளிரவு நேரத்தில் குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை தேவையான போது அவரது வீட்டுக் கதவை தட்டினால் கண்டிப்பாக திறக்கவே மாட்டார்கள்.
இவர்களை பார்க்கும்போது மிக மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல மற்றொரு மருத்துவர் இருதய நோய் சிகிச்சை நிபுனர். ஆனால் அவரிடம் சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகளுக்கு இருதய நோய் அதிகரித்துவிடும். அந்த அளவுக்கு அவர் நோயாளிகளிடம் நடந்து கொள்வார்.
இவை தனியார் கிளினிக் நடத்தும் மருத்துவர்களின் நிலமை. ஆனால் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களின் நிலமை இதைவிட மோசமானதாக இருக்கின்றது.
மக்களுடைய வரிப்பணத்தில் மருத்துவக் கல்வி பயின்று, அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து மக்களுடைய வரிப்பணத்தில் சம்பளம் வாங்குபவர்கள் அதே பொதுமக்களை கனிவுடனும், பரிவுடனும் கவனிப்பதில்லை.
அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் எரிச்சலுடன் பேசுகின்றனர். அரசு மருத்துவனை என்றாலே சேவைதான். சேவை செய்ய வந்துவிட்ட பிறகு மக்களுக்கு சேவை செய்யாமல் வணிக ரீதியில் கிளினிக் நடத்தும் மருத்துவர்களைபோல அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் நடந்து கொள்கின்றனர்.
இதற்கு எடுத்துக்காட்டு, அண்மையில் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால் இருவர் இறந்த சம்பவம்.
மருத்துவர்கள் சமுதாயத்தையே நான் குறைக் கூறவில்லை. குழந்தை மருத்துவருக்கு குழந்தை மீது பாசமும், கனிவும் இருக்க வேண்டியது அவசியம்.
எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை, கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளித்துவிட்டு தான் செல்வேன் என்று இருப்பவரே நல்ல மருத்துவர். ஆனால் அவ்வாறான மனநிலை தற்போது மருத்துவர்களுக்கு இல்லை.
கிராமபுறங்களில் மருத்துவச் சேவை குறைவாக இருப்பதால் கிராமம் மற்றும் மலைப் பகுதியில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு கூடுதல் சலுகை வழங்கப்படுகிறது.
அவர்களுடைய மருத்துவ மேல்படிப்பு நுழைவுத் தேர்வில் வழங்கப்படும் மதிப்பெண்களுடன், அவர்கள் கிராமப்புறம் மற்றும் மலைப் பகுதிகளில் பணிபுரிந்தமைக்காக வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்களும் சேர்க்கப்படுவதால் மருத்துவர்களுக்கு மேல்படிப்பில் எளிதாக சேர முடிகிறது.
கிராமபுற மக்களிடம் எளிதாக பழகி, கனிவுடன், பரிவுடன் நடந்து கொள்ள அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அத்தகைய பயிற்சி பெற்றவர்கள் எந்த பகுதியில் பணிபுரிந்தாலும், நோயாளிகளின் நிலை அறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.
ஆனால் அவர்கள் நுழைவுத் தேர்வு கூடுதல் மதிப்பெண்கள் பெறுவதற்காக மட்டுமே தற்போது கிராமபுறங்களையும், மலை பகுதிகளையும் நோக்கி பணி செய்ய செல்கின்றனர்.
நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள நோயை தங்களுடைய கனிவான, மனிதாபிமான பேச்சாலேயே பாதியாக குறைத்துவிடுபவராக மருத்துவர் இருக்க வேண்டும். மருந்தால் குணமாவது மீதியாக இருக்க வேண்டும்.
தங்களை மருத்துவர் கனிவாக நடத்த வேண்டுமென நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர். அதனால் கனிவான மருத்துவரை தேடுகின்றனர். ஆனால் கண்டுபிடிப்பது எளிதான காரியமாக இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com