பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பல்!

அறிவின் வரிசையில் ஏழாவது இடத்தில் உயர்ந்து நின்று ஏனைய உயிர்களை அடக்கியாள்கிற மனிதன், உயிரின் வரிசையில் அவ்வாறு இல்லாமல் எல்லா உயிர்களோடும் சமத்துவம் பேண வேண்டிய பொறுப்பினைப்

அறிவின் வரிசையில் ஏழாவது இடத்தில் உயர்ந்து நின்று ஏனைய உயிர்களை அடக்கியாள்கிற மனிதன், உயிரின் வரிசையில் அவ்வாறு இல்லாமல் எல்லா உயிர்களோடும் சமத்துவம் பேண வேண்டிய பொறுப்பினைப் பெற்றிருக்கிறான். இதையே இயற்கையும் விரும்புகிறது; இலக்கியமும் வலியுறுத்துகிறது.
ஏனைய உயிர்களிடத்திலிருந்து தான் பெற்ற இன்பத்தைத் திரும்பவும் அதைவிடக் கூடுதலாகப் பகிர்ந்தளிக்க வேண்டியதே மனிதன் பெற்ற ஆறாவது அறிவின் பெருமை.
ஓரறிவு உயிரான தாவரத்துக்கும் இரக்கம் காட்டிய பண்பே உலகத்தில் இன்றும் புகழ்ந்து போற்றப்படுகிறது. புல் இலை ஆயினும் கடவுள் தனக்கானதாக ஏற்றுக் கொள்வதைப் போல, அவற்றைத் தருகிற தாவரங்களையும் தன்னுடன் வாழும் சக உயிராகக் கருதும் பண்பையே மனிதனிடமுள்ள தெய்வத்தன்மை என்று இலக்கியங்கள் போற்றுகின்றன.
கூடி வாழ்தலின் நோக்கம் பல்லுயிர்களையும் பராமரிக்கும் சூழலை ஏற்படுத்துவதுதான். நம்மைச் சுற்றியிருக்கும் செடி கொடிகள் தொடங்கி, சிறு பூச்சிகள், எறும்புகள், கால்நடைகள் வரைக்கும் அனைத்தையும் மனிதன் அன்பினால் தழுவிக் கொள்வதே இயற்கை சார்ந்த அறிவுடைய உயர்ந்த வாழ்வு.
விருந்தோம்பல் பண்பு என்பது மனிதருக்கு மனிதர் செய்யும் பகிர்வு மட்டுமன்று. உயிர்கள் யாவற்றுக்கும் உவந்து செய்யும் தொண்டு.
அக்கால வாழ்வில் அதிகாலையில் வாசலில் இடுகிற மாக்கோலத்தில் தொடங்குகிறது இந்தப் பல்லுயிர் போற்றும் பண்பு. எறும்புகள் சாரைசாரையாய்த் தனக்கான அன்றைய உணவை மனிதர்கள் வசிக்கும் வீட்டின் வாசலிலேயே பெற்று விடுகின்றன. அதனால் அவை வீட்டுக்குள் வந்து தொந்தரவு செய்வதில்லை. 
அடுத்து, பறவைகளுக்கு உணவு. காக்கை என்பது பொதுவாகச் சொல்லப்பட்டாலும் எந்தப் பறவையும் வந்து உணவுண்டு செல்லும். மீந்த உணவினை அணில் தொடங்கி ஏனைய சிறு உயிரினங்கள் உண்டு மகிழும்.
வயலில் விளைகிற விளைபொருள்கள் மனிதனுக்கு மட்டுமானவையாக இருக்காது. 'நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே' சேர்வது கால்நடைகளைக் கருத்தில் கொண்டுதான். நெல் மனிதருக்கு என்றால் புல் கால்நடைகளுக்கு உரியதாகிறது. 
நெல் மனிதருக்கு மட்டும் இல்லை எங்களுக்கும்தான் என்று மனிதர்களிடம் பங்கு போடும் எலிகளும் பெருச்சாளிகளும், பாம்புக்கும் அதுபோன்ற பெரிய விலங்குகளுக்கும் தாங்கள் உணவாகின்றன. 
இப்படியாக ஒன்றிலிருந்து மற்றொன்று உயிர்ப்பெய்துவதும் தன்னினத்தைப் பெருக்கிக்கொண்டு சூழியலை வளமாக்குவதும்தான் அற்புதமான உலக வாழ்வு. இங்கு மனிதன் தலைமையிடம் பெறுகிறானே தவிர, தனியிடம் பெறுவதில்லை.
மனிதர்கள் விடுகிற தாவரக் கழிவுகளைத் தான் உண்டு மனிதருக்கு உணவாகும் பாலைத் தருகிறது பசு. மீதமிருக்கிற கழிவும் கூடச் சாணமாகி விளைநிலங்களுக்குச் சென்று மண்ணுக்குள் மறைந்து உயிர்வாழ்கிற நுண்ணுயிர்களுக்கு உணவாகி விடுகிறது. இது இயற்கையாய் இயற்கையே அமைத்துக் கொண்ட சுழற்சி முறை. மனிதன் தான் பெற்ற அறிவினால் இந்தச் சுழற்சி முறை மாறாமல் காக்க வேண்டிய பொறுப்புடையவனாகிறான். 
மாறாக, இந்தச் சுழற்சியை மாற்றிச் சிதைத்துவிடக் கூடாது. ஆனால், இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வாழ்வில் அந்தச் சுழற்சி சிதைக்கப்படுவதைக் குறித்துக் கடுமையாக எச்சரிக்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்.
அசுத்தமுடைய யாவும் மீண்டும் சுத்தமடைய இந்தச் சுழற்சி அவசியமாகிறது. ஆனால், இன்றைய பல்லுயிர்களின் அழிவு, சுழற்சி முறைக்குப் பதிலாக அழற்சியையே உருவாக்குகிறது.
குப்பைகள் மட்கி எருவாவதில்லை. நீரின் அழுக்குகளைத் தூய்மைப்படுத்த மீன்கள் இல்லை. கொசுக்களை உணவாகக் கொண்ட சின்னஞ்சிறு பூச்சிகள் இல்லை. எலிகளையும், பெருச்சாளிகளையும் உணவாகக் கொண்டு வேளாண்மைக்கு உதவி செய்யும் பாம்புகளின் இனம் அருகிப் போய்விட்டது. 
உழவர்களின் நண்பனான மண்புழுக்கள் ரசாயன உரங்களின் அழுத்தத்தினால் வேகமாக மறைந்து வருகின்றன. செயற்கையாகவும் வீரியமாகவும் உருவாக்கப்படும் நவீன விதைகளில் தோன்றும் தாவரங்கள் மலட்டுத் தன்மை உடையன. இவற்றால் சூழலுக்கு எவ்வித நன்மையுமில்லை.
இயந்திர உலகத்தின் வேகத்திற்கேற்ப வாழ்வியல் முறைகளும் அவ்வாறே ஆகிவிட்டன. எறும்புகளுக்கும் கொசுக்களுக்கும் உரிய விஷங்கள் மனிதர்க்கு மருந்து விற்கும் கடைகளிலேயே விற்பனையாகின்றன. அதே விஷத்தன்மை கொண்ட திரவங்கள் பூச்சிமருந்துகளாய் விதைகளோடு சேர்த்து வேளாண் மையங்களில் விற்பனைக்கு உள்ளன.
சில வீடுகளில் மனிதருக்கு இணையான சுதந்திரங்களோடு நாய்கள் வளர்க்கப்பட்டாலும், பல நாய்கள் தெருவிலே நோய்களோடு அலைகின்றன. இந்தச் சுழற்சியில் பெரிதும் சிக்கிக் கொண்டவை மாடுகள்தான்.
நகரப் பகுதிகளில் மட்டுமல்லாமல் கிராமப்பகுதியில் உயிர்வாழும் மாடுகளும் உண்பதற்குப் பசும்புல் இல்லாமல் நெகிழிகளையும், காகிதக் குப்பைகளையும் தின்று இரைப்பையை நிரப்புகின்றன.
உலகுக்கே பொதுமறையாகத் தனது திருக்குறளை அறத்தை முன்னிறுத்தி வடித்துத் தந்த திருவள்ளுவர் நூலோர் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையானதாகக் குறிப்பிட்டுச் சுட்டுவது பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புக என்பதைத்தான்.
மனிதனுக்கு மனிதனே காட்டும் நேயம் குறைந்து வருகையில், பல்லுயிர்களின் நிலை கவலைக்குள்ளாகுகிறது. எல்லா உயிர்களோடும் பகுத்து உண்டுதான் வாழச் சொன்னாரே தவிர, எல்லா உயிர்களையும் பகுத்துக் கொன்று வாழுமாறு மனிதர்க்குச் சொல்லவில்லை என்பதை ஆறாவது அறிவு பெற்ற மனிதர்கள் அறிவார்களா? உணரத்தான் போகிறார்களா?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com