வசையல்ல வாழ்த்தே

ஜனநாயக நாட்டின் இரு கண்களாகப் பேச்சுரிமையும், கருத்துரிமையும் இருக்கின்றன. பேச்சுரிமையும், கருத்துரிமையும் இல்லாத நாட்டில் ஒன்று இராணுவ ஆட்சி நடக்க வேண்டும் அல்லது முடியாட்சியோ

ஜனநாயக நாட்டின் இரு கண்களாகப் பேச்சுரிமையும், கருத்துரிமையும் இருக்கின்றன. பேச்சுரிமையும், கருத்துரிமையும் இல்லாத நாட்டில் ஒன்று இராணுவ ஆட்சி நடக்க வேண்டும் அல்லது முடியாட்சியோ, காட்டாட்சியோ நடக்க வேண்டும். இந்த பேச்சுரிமையும், கருத்துரிமையும்தான் நம்மையறியாமல் நாம் செய்யும் தவறான செயல்களையும், மக்கள் விரோதப் போக்குகளையும் விளங்கச் செய்து ஒருவரைத் திருத்திக் கொள்ள உதவும். இதில் விமர்சனம் என்பது தவிர்க்க முடியாதது. 
விமர்சனம் என்பது ஒரு குழுவையோ அல்லது தனி நபரையோ பற்றிய மதிப்பீடாகக் கருதப்படுகிறது. அது ஒருவரின் மனதை காயப்படுத்துவதாகவும் இருக்கலாம், அவரின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாகவும் இருக்கலாம். விமர்சனம் செய்வது என்பதானது ஒருவரின் கருத்துரிமை. அதுதான் ஜனநாயகப் பயிர் தழைத்தோங்க உதவும் உரம். விமர்சனம் இல்லாத எந்தச் செயலும் ஆக்கப்பூர்வமானதாகக் கருத முடியாது. விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளாத எந்த ஒரு தலைவரும் பொது வாழ்வில் வலம் வர முடியாது. 
இப்போதெல்லாம் விமர்சனங்களை யாரும் வரவேற்பதேயில்லை. முகஸ்துதிகளையே விரும்பி வரவேற்கிறார்கள், அவர்களைப் பாராட்டி, மகிழ்ந்து வெகுமதியும் அளிக்கிறார்கள். 
எல்லாம் வல்ல எனப்படும் இறைவனைக்கூட அவனது படைப்பு எனப்படும் மனிதன் என்றும் விமர்ச்சித்து தான் வருகிறான். இந்தியாவின் தேசிய கவி ரவீந்திரநாத் தாகூர் ஒருமுறை சொன்னார், இறைவன் மிகப் பெரியவன், அவனை இல்லை என்று மறுக்கிற உரிமையையும் எனக்குத் தந்திருக்கிறான் என்று. அதாவது, விமர்சனம் என்பது உள்நோக்கமற்றதாக, உண்மையானதாக, நேரானதாக இருக்க வேண்டும். 
ஒருமுறை புத்தர் கிராமத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் கடுமையான வசை மொழிகளால் புத்தரை தாக்கிப் பேசினர். தன்னைப் பார்த்து வசை மாரி பொழிந்தவர்களைப் பார்த்து அமைதியான குரலில் புத்தர் கேட்டார், ""எனது அன்பிற்குரியவர்களே, ஒன்று கேட்கிறேன். ஒருவர் மற்றொருவருக்கு அன்பளிப்பாக ஒரு பொருளை அளிக்கிறார். 
ஆனால், மற்றவரோ அதனை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகிறார். அப்போது அந்தப் பொருள் யாருக்குரியது?' உடனே அந்தக் கொடியவர்கள், "அப்பொருளையளிக்க முற்பட்டவருக்கே அந்தப் பொருள் உரிமையாகும்' என்று கூறினார். 
புத்தர் "சரி மகனே, நீவிர் இப்போது எனக்கு அளித்த வசை மொழிகளை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் அதை நீரே வைத்துக் கொள்ளும். எதிரொலியானது எப்படி அதன் ஒலிக்கு சொந்தமோ, நிழல் எப்படி அதன் பொருளுக்குச் சொந்தமோ, அதேபோல் தீமையைச் செய்தவருக்கு இத்துயரம் போய்ச் சேரும்' என்றார்.
மேலும் தொடர்ந்து ""ஒழுக்கச்சீலரைக் கொடியவன் ஒருவன் பழிப்பது வானத்தைப் பார்த்து ஒருவன் எச்சிலைப் துப்புவது போன்றதாகும். எச்சில் ஒருபோதும் ஆகாயத்தைக் காயப்படுத்துவதில்லை. மாறாக துப்பியவனையே களங்கப்படுத்தும்' என்றார். 
புத்தரின் இந்த விளக்கத்தைக் கேட்டவர்கள் வெட்கமுற்று, புத்தரிடம் மன்னிப்புக் கேட்டனர். அவருடைய அடியவராயினர். விமர்சனங்களும் இப்படிப்பட்டதுதான்.
விமர்சனங்கள் உறுதி மனம் கொண்டு குறிக்கோளுடன் போராடுபவர்களுக்கு உரம் போன்றது. ஒருமுறை காந்திஜி மேல்சட்டை அணியாமல் எளிய உடையோடு, லண்டனில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாட்டிற்குச் சென்றார்.
அப்போது ஆங்கிலேயர் ஒருவர் அவரை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக, இந்தியாவின் விடுதலைக்கு போராட உங்களைப் போன்ற ஒரு நோஞ்சான்தான் கிடைத்தாரா? என கிண்டலாகக் கேட்டார்.
அப்போது காந்திஜி சிரித்தபடியே "உங்களை எதிர்க்க நான் ஒருவனே போதும், உங்கள் சாம்ராஜ்ஜியம் அவ்வளவு பலவீனமானது' என்றார். 
விமர்சனங்களைக் கோபத்தோடு எதிர்மறை எண்ணத்தோடு அணுகினால் அதன் பாதிப்பு ஒருதலைபட்சமாகத்தான் இருக்கும். அதன் விளைவுகள் நல்லதை கொடுக்காது.
ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க அதிபராக இருந்தபோது, நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியைச் சேர்ந்த ஒருவர் ""நீங்கள் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளின் மகன் என்பதை மறந்து விடாதீர்கள்'' என கேவலமாகப் பேசினார்.
அப்போது ஆபிரகாம் லிங்கன் கொஞ்சமும் நிதானம் இழக்காமல் "நான் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் என்பதை அவமானமாகக் கருதவில்லை. எனக்கு அந்தத் தொழில் நன்றாகத் தெரியம். உங்கள் காலணி பழுதுபட்டிருந்தால் சொல்லுங்கள் இப்போதே சரி செய்து தருகிறேன்' என்றார். நாடாளுமன்றமே ஆபிரகாம் லிங்கனின் நேர்மறை சிந்தனையைப் பாராட்டியது. 
மக்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் விமர்சனங்கள் ஆக்கப்பூர்வமானதாகவும், நன்கு ஆராயப்பட்டு தெரிவிக்கப்பட்டதாகவும் இருந்தால் அதை முழு மனதோடு ஏற்று செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் அந்த விமர்சனத்திற்கு உரிய பலனை அனைவரும் பெற முடியும். 
விமர்சனம் என்பது யார் சொன்னார் என்பதைவிட என்ன சொன்னார் என்பதே முக்கியமானது. அதனால் சமூகத்திற்கு ஏதேனும் நன்மை கிடைக்குமா, அதாவது சொல்லும் கருத்து சரியானதாக, அறிவுபூர்வமானதா, ஆக்கப்பூர்வமானதா என்று சிந்தித்து விமர்சிக்க வேண்டும். அதாவது பழைய கருத்துகளுக்குப் பதில் புதிய கருத்தை முன் வைப்பதாக இருக்க வேண்டும்.
நமக்கெதிராகச் சொல்லப்படும் உண்மையற்ற விமர்சனங்களுக்கு நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. பல சந்தர்ப்பங்களில் மெüனமே சிறந்த பதில் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com