பெயரளவில் மட்டுமே பெண்ணதிகாரம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நிகழ்வு 17 ஆண்டுகளுக்கு முன்பாக அரங்கேறியது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் 2000-ஆவது ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி. அன்றைய தினத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில்

வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நிகழ்வு 17 ஆண்டுகளுக்கு முன்பாக அரங்கேறியது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் 2000-ஆவது ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி. அன்றைய தினத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உலக நாடுகளின் பிரதிநிதிகள் அனைவரும் குழுமியிருந்தார்கள். அப்போது, ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அது தொடர்பாக விவாதமும் நடைபெற்றது.
ஆச்சரியம் என்னவென்றால், அதற்கு எந்த நாடும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. முடிவில் அந்தத் தீர்மானத்தை அனைத்து நாடுகளும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டன. சரி... இதிலென்ன பெரிய வரலாறு புதைந்திருக்கிறது எனக் கேட்கலாம், இருக்கிறது.
சர்வதேச அளவில் அமைதியான சூழலை உருவாக்குவதிலும் சரி; பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் நல்லெண்ண நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் சரி. அதுவரை ஆண்களே அவற்றில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். 
அதை மாற்றி அந்தச் செயல்பாடுகளில் பெண்களையும் பங்கெடுக்கச் செய்ய வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானத்தின் சாராம்சம். சமூகத்தில் நிலவி வரும் பல்வேறு முரண்பாடுகளைத் தீர்ப்பதில் பெண்களின் பங்கும் மிக அவசியம் என்ற உண்மையை அது வெளிச்சமிட்டுக் காட்டியது.
அதைத் தவிர மூன்று முக்கிய அம்சங்களும் அந்தத் தீர்மானத்தில் வரையறுக்கப்பட்டிருந்தன. அதாவது, பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளில் இருந்து அவர்களுக்குப் பாதுகாப்பளிக்க வேண்டும் என்பது ஒன்று. 
வலிமையான சட்டங்களின் வாயிலாக பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க வேண்டும் என்பது மற்றொன்று. பேரிடர் அல்லது போர்ச் சூழலுக்குப் பிறகு பெண்களுக்கு உரிய நிவாரணங்களும், மறுவாழ்வும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது மூன்றாவது அம்சம்.
இத்தகைய சிறப்பம்சங்களைத் தன்னகத்தே கொண்ட தீர்மானத்தைத்தான் உலக நாடுகள் அன்று ஆட்சேபமின்றி ஆதரித்தன. இப்போது அதை எத்தனை நாடுகள் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளன? என்பது வேறு விஷயம்.
இந்தச் சூழலில், அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தினத்தைக் கொண்டாடும் வகையில் பெண்கள் நலனுக்கான சர்வதேச அமைப்பினர் பலர் இந்த ஆண்டு ஓரிடத்தில் கூடி பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர். 
அப்போது மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தெரிவித்த சில தகவல்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தன.
சமகாலத்தில் பெண்கள் நலனுக்கு சவாலாக விளங்கும் மூன்று முக்கிய விஷயங்களை அவர்கள் கண்டறிந்து தெரிவித்தனர். அவை அனைத்தும் களையப்பட வேண்டியவை என்பதில் எள்ளளவும் மாற்றுக் கருத்தில்லை.
முதலாவதாக, வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் மத்திய - மாநில அரசுகளால் நிலம் கையகப்படுத்தும் பிரச்னையை அவர்கள் குறிப்பிட்டார்கள். பொதுவாகவே, எந்த நாட்டில் என்ன ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் சரி; ஒரு விவகாரத்தில் மட்டும் மாற்றம் வராது. அதாவது, அரசுத் திட்டங்களுக்காக மக்களின் நிலத்தைக் கையகப்படுத்தும்போது அதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களின் கருத்தினை எந்த ஆட்சியாளர்களும் கேட்டறிவதில்லை. 
இதன் காரணமாகவே பாதிக்கப்பட்ட மக்கள் தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள். ஆனால், அதைத் தடுக்க வேண்டிய அரசோ உரிமைகளுக்காகப் போராடும் அந்த மக்களின் குரல்வளையை நெறிக்கிறது. அடக்குமுறையை ஏவிவிடுகிறது.
அதிலும், அந்தத் திட்டங்களில் சில தனியார் நிறுவனங்கள் சம்பந்தப்பட்டிருக்கும் பட்சத்தில், அவற்றின் பாதுகாவலர்களும் போலீஸாருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். 
இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகள் தெற்காசியாவில், குறிப்பாக இந்தியாவில், வாடிக்கையாகி விட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள் என்பதை மறக்கக் கூடாது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் நலனுக்காக சொந்த நிலத்தை இழக்கும் அவர்களுக்கு வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிடுகிறது. இது தற்போது நிலவும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்று.
இரண்டாவதாக, பாதுகாப்பு என்ற பெயரில் ராணுவத்தினர் மக்களின் வசிப்பிடங்களில் நிறுத்தப்படுவது. இதை வெறுமனே பாதுகாப்புக்கான படைக்குவிப்பு என்று கருத முடியவில்லை. மாறாக, அதிகாரத்தின் துணையோடு தனிமனிதர்களின் இயல்பு வாழ்க்கையை முடக்குவதற்கான முயற்சியாகவே எண்ணத் தோன்றுகிறது.
ராணுவத்தின் செயல்பாடுகள் பெரும்பாலான தருணங்களில் நடுநிலையுடன் இருப்பதாக உணர முடியவில்லை. அசாதாரண சூழல் நிலவும் இடங்களில் மட்டுமல்லாது அனைத்துப் பகுதிகளிலும் தங்களது படை இருப்பினை பதிவு செய்யவே ராணுவம் விரும்புகிறது. 
இது பெண்களின் அடிப்படை வாழ்க்கையில் பெரும் அதிர்வலைகளை உருவாக்குகிறது. குறிப்பாக, அவர்களின் தனி உரிமைக்கும், சுதந்திரமான நடமாட்டத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதைத் தவிர, பெண்கள் நல அமைப்பினரின் செயல்பாடுகளையும் ராணுவம் கண்காணிக்கிறது.
இதன் வாயிலாக, கல்வி உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைக்கூட வேலிகளுக்குள் இருந்து பெற வேண்டிய நிர்பந்தத்துக்குப் பெண்கள் தள்ளப்படுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.
மூன்றாவதாக, பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைச் சம்பவங்கள். அதிலும், குறிப்பாக பாலியல் ரீதியான வன்கொடுமைகள்.
அதிகாரத்தின் போர்வையிலும், ஆணாதிக்க மனோபாவத்திலும் அரங்கேற்றப்படும் இத்தகைய சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளில் பலர் தண்டனையில் இருந்து தப்பித்துவிடுகிறார்கள் என்பது சமூகத்தின் மிகப் பெரிய அவலம்.
இது ஒருபுறமிருக்க, துப்பாக்கிகளையும், கத்திகளையும் கொண்டு பெண்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பான செய்திகள் வழக்கமான ஒன்றாகிவிட்டன. 
இதற்கு ஆயுதப் பரவல் ஒரு முக்கியக் காரணம். ஒரு நாட்டின் ராணுவமோ அல்லது அங்கிருக்கும் தீவிரவாத அமைப்புகளோ அதிக அளவில் பேரழிவு ஆயுதங்களைக் குவித்து வைத்திருக்கிறது என வைத்துக் கொள்வோம். 
அத்தகைய சூழ்நிலையில் வசித்து வரும் மக்களின் கைகளில் துப்பாக்கிகள் சுலபமாகச் சென்றடைவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?
இந்த நிலைதான் பெரும்பாலான நாடுகளில் நிலவுகிறது. அதன் தொடர்ச்சியாகவே, பெண்களை ஒடுக்கக் கைகளில் ஆயுதங்கள் எடுக்கப்படுகின்றன. இத்தகைய அச்சுறுத்தல்கள் உடனடியாக வேரறுக்க வேண்டியவை. 
இந்த மூன்று விஷயங்களைத்தான் அந்தக் கூட்டத்தில் மத்திய அமெரிக்க சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். கொலம்பியா, கியூபா, கெளதமாலா, ஹோண்டுராஸ், எல் சால்வடார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சமூக ஆர்வலர்கள் அதில் கலந்துகொண்டனர். அவர்கள் முன்வைத்த சில கருத்துகளும் நினைவிலிருந்து நீங்க மறுக்கின்றன.
ஹோண்டுராஸ் நாட்டைச் சேர்ந்த பெர்டா கேசரஸ் என்ற சமூக சேவகி கடந்த ஆண்டு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். புறச்சூழலை பாதுகாக்கவும், சமூக பாகுபாடுகளுக்கு எதிராகவும் போராடி வந்ததற்காக அவருக்குக் கிடைத்த பரிசுதான் அந்த மரணம். 
இதுவரையிலும் கொலையாளிகள் கண்டறியப்படவில்லை; பெர்டாவின் நோக்கங்களும் வென்றெடுக்கப்படவில்லை. இது மிகவும் வேதனைக்குரிய நிகழ்வு. இதுகுறித்து கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலானோர் கவலை தெரிவித்தனர்.
அடுத்தபடியாக, அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பியூர்டோ ரீகோ தீவானது புயலால் பாதிக்கப்பட்டது குறித்தும் விவாதிக்கப்பட்டது. புயல் கரையைக் கடந்து 50 நாள்களான பிறகும் அது ஏற்படுத்திய வலிகளை அப்பகுதி மக்களால் கடக்க முடியவில்லை. 
அதிலும், குடிநீர், மின்சாரம் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டது அந்தத் தீவைச் சேர்ந்த பெண்களே என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இப்படியாக, உலக நாடுகள் முழுவதிலும் ஏதோ ஒரு வகையில் பெண்கள் பாதிப்புக்குள்ளாகிக் கொண்டேதான் இருக்கின்றனர். அது பேரிடர்ச் சூழலோ அல்லது போர்க்களச் சூழலோ நிலைமை ஒன்றுதான்.
இதற்குத் தீர்வு காண வேண்டுமென்றால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அனைத்து உறுப்பு நாடுகளும் ஆக்கப்பூர்வமாக நடைமுறைப்படுத்த வேண்டும். 
தங்களது எல்லையில் பிரச்னைகளோ, முரண்பாடுகளோ இல்லை என்று கூறி அந்தத் தீர்மானத்தை அமல்படுத்தாமல் இருக்கக் கூடாது. சர்வதேச அளவில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய முக்கியத்துவத்தை உணர்ந்து உலக நாடுகள் செயல்பட வேண்டும். அதுவே சமூக ஆர்வலர்களின் முதன்மையான எதிர்பார்ப்பும் கூட.

கட்டுரையாளர்:
அரசியல் ஆய்வாளர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com