புள்ளிவிவரம் மாறுமா?

ஒரே நாளில் 100 முறை பெண்கள் மேல் வன்புணர்ச்சித் தாக்குதல். ஒரே நகரில் இதுதான் நமது நாட்டின் தலைநகரம் பற்றிய புள்ளிவிவரம்.

ஒரே நாளில் 100 முறை பெண்கள் மேல் வன்புணர்ச்சித் தாக்குதல். ஒரே நகரில் இதுதான் நமது நாட்டின் தலைநகரம் பற்றிய புள்ளிவிவரம். ஓர் ஆண்டில் ஒரு முறை என்றாலே அதிகம். ஒருநாளில் 100 முறை, அதுவும் மிக முக்கியமான மனிதர்கள் வசிப்பதால் மிக அதிகமான காவல் கட்டுப்பாடு இருக்கும் அந்த தில்லி மாநகரில் இது நடக்கிறது என்றால், ஆண்கள் அனைவரும் தலைகுனிய வேண்டும்.
தில்லிதான் குற்றங்களுக்கு எல்லாம் தலைநகரம் என்கிறார்கள். நம் தலைவர்கள் கண்ணுக்கெதிரேயே பெண்களுக்கு எதிராக 100 தாக்குதல்கள் தினமும் நடக்கின்றன. நமது தலைவர்கள் வளர்ச்சி பற்றியும், பொருளாதாரம் பற்றியும், வல்லரசாவது பற்றியும் கனவு காண்கிறார்கள். நன்றாகவே இருக்கிறது.
ஆண்கள் மனிதர்கள் இல்லையா? அவர்களுக்கு மனது, பாசம், நேசம் என்கிற உணர்ச்சிகள் இல்லையா? இதயம், ஈரல், நுரையீரல், குடல் இது எதுவும் இல்லையா? வெறும் ஆணுறுப்பு மட்டும் இருக்கும் உடலா? பெண்கள் மனிதர்கள் இல்லையா? அவர்களுக்கு, மனது, பாசம், நேசம் என்ற உணர்ச்சிகள் இல்லையா? இதயம், ஈரல் நுரையீரல், குடல் இது எதுவும் இல்லையா? வெறும் பெண்ணுறுப்பு மட்டும் இருக்கும் உடல் என்று பாடம் சொல்லித் தருகிறார்களா? புரியவில்லை.
இரண்டு மாதங்களேயான பெண் சிசுக்கும் இந்த கதி, 100 வயதான உத்தரப் பிரதேசத்து மாதரசிக்கும் அதே கதி . என்ன கொடுமை இது? அந்த அம்மாள் இறந்து போய்விட்டாள். பின்னே, சாகாமல் என்ன செய்வாள்? புணர்ச்சி இல்லை என்றால்... சீண்டல் துன்புறுத்தல் ஏதோ ஒன்று. பெண்களை சும்மா இருக்கவிட மாட்டோம் என்று கங்கணம் வேண்டுதல் போலும். 
ராயா சர்க்கார் என்று ஒரு பெண்மணி, இந்தியர்; பெண்ணிய ஆர்வலர்; அமெரிக்காவில் வசிப்பவர். இவர் அண்மையில் ஒரு பட்டியல் வெளியிட்டார் . அந்தப் பட்டியலில் பாலியல் சீண்டுதலில் ஈடுபட்ட கல்வியாளர்கள், மேல் கல்வித்துறையில் பெரிய பதவி வகிப்பவர்கள், ஆசான்கள். இவர்கள் பெயர்கள் விவரங்கள் அடங்கிய பட்டியல் அது . 
பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது அந்தப் பட்டியல். ஆதரவும் இருந்தது, எதிர்ப்பும் இருந்தது. இது சட்டத்தின் செயல்முறைக்கு வெளியே உள்ளது, இது முறையல்ல என்று ஒரு பக்கம். ஆமாம், செயல்முறைக்கு உட்பட்டு என்னத்தை கண்டோம், இது ஓர் எச்சரிக்கையாக இருக்கட்டும். 
இதுவே கீழ்மட்ட வர்க்க ஆண்கள் என்றால் இப்படிப் பேசுவீர்களா? இது இன்னொரு பக்கம். சண்டை இன்னும் முழுக்க ஓயவில்லை, அங்கே நாம் போக வேண்டாம்.
பிரச்னைக்கு வருவோம். சட்டத்தின் செயல்முறை உடனடி நிவாரணி அல்ல. குற்றம்சாட்டும் பெண்ணை பொதுவாக யாரும் நம்புவது இல்லை. அந்த ஆண் உத்தமர், மகிழ்வான இல்லறம் நடத்துபவர், அவர் ஏன் இது செய்ய வேண்டும்? சென்னை உயர் நீதிமன்ற நிர்வாகத்தினுள்ளிருந்து வந்த ஒரு வழக்கே இதற்கு சான்று. 
இது போன்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதை ஏற்று அந்தப் பெண் பழி வாங்கும் நோக்கம் உள்ளவள் என்று சொல்லி, அந்தப் பெண்மணியின் வழக்கை தள்ளிவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். நிமிர்ந்த நெஞ்சுடன் அவர் உச்ச நீதிமன்றம் சென்று நீதியை நிலைநாட்டிக் கொண்டார். அது எவ்வளவு பேரால் முடியும்? 
மேலும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அந்தப் பெண் தனது ஒப்புதல் இல்லை என்று ஐயமின்றி நிரூபிக்க வேண்டும். ஒரு கற்பனை காட்சியைப் பார்ப்போம்.
ஒரு பெரிய கல்வி நிறுவனம், அதில் ஒரு பேராசிரியர். அவரிடம் ஒரு பெண் படிக்கச் செல்கிறாள். "அறைக்கு வா' என்கிறார். பல நாள்கள் எல்லாம் சரியாகவே இருக்கின்றன. ஒரு நாள் கொஞ்சம் "சாயம்' கலந்த நகைச்சுவை ஒன்று சொல்கிறார். பெண் சிரிக்கிறார். வேறு வழி? அந்தப் பெண்ணின் முனைவர்பட்ட ஆய்வுக்கு அவர்தானே வழிகாட்டி? பிறகு ஒருநாள் கை வைக்கிறார். 
அந்தப் பெண்ணின் மனநிலையை சற்று யோசியுங்கள். அந்தப் பெண்ணைவிடக் குறைந்தபட்சம் பதினைந்து வயதாவது மூத்தவராக அவர் இருப்பார் இல்லையா ? அந்தப் பெண் உறைந்து போய்விடுவாள். "இது என்ன நம் ஆசிரியர் என்று நினைத்தோமே இவரா?' என்று நினைப்பார். 
"வீல்... வீல்...' என்று கத்தாமல் இருந்தால் அது அந்தப் பெண் சரி என்று சொல்கிறார் என்று பொருள் அல்ல. அவள் செய்வதறியாது திகைத்து நிற்கிறார், பயந்துபோய் அல்லது உறைந்து போயிருக்கிறார் என்று பொருள். அதை ஒரு பெண்ணின் ஒப்புதலுடன்தான் நடந்தது என்று எப்படிப் கணிப்பீர்கள்?
அந்தப் பெண் எப்படி ஒப்புதல் இல்லை என்று நிரூபிப்பாள்? சட்டத்தின் செயல்முறையைப் பின்தொடர்ந்து இதற்குத் தீர்வு காண்பது கடினம்'. எல்லாம் பார்த்தார். ராயா சர்க்கார் பட்டியலில் போட்டுவிடுவோம் என்று களம் இறங்கிவிட்டார். 
நான் இது சரி என்றோ தவறு என்றோ சொல்லவில்லை. இதற்கு எதிர்மறையான விளைவுகளும் வரலாம். ஆனால், சபல சித்தமுள்ள சில கல்வியாளர்களாவது தங்கள் கைகளை அலையவிடாமல் பட்டியலில் போடப்படுவோமே என்ற பயத்துடன் இருப்பார்கள் இல்லையா?
கல்வி என்பது என்ன? நம்மைப் பண்படுத்தும் ஒரு கருவிதானே? அப்படித்தானே நம்புகிறோம். நமக்கு அறிவை விரிவாக்கி, மற்றவரை மதிக்கும்படி சமன்படுத்தி, நச்சுப் பொருள்களைக் களைந்து, நம் மனதை நல்லதொரு விளைநிலமாக ஆக்குவது தானே கல்வி? 
ஆங்கிலத்தில் இருக்கும் உயிர்மெய்யெழுத்துகள் அனைத்தையும் தனது பெயருக்குப் பின்னால் ஒட்டிக்கொண்டு தன்னிடம் படிக்க வந்த ஒரு மாணவியைச் சீண்டாமல் முடியவில்லை என்றால், என்னதான் செய்தது அந்தப் படிப்பு? சொல்லுங்கள்!
ஒரு பெண்ணைப் பார்த்தால் உனக்கும் அவளுக்குள் இருக்கும் உயிர் தெரியவில்லையா ? உன் கல்வி உனக்கு ஓர் அதிகாரம் தருகிறது. ஒரு செல்வாக்கை தருகிறது. அதன் அடித்தளம் உன் மேல் அந்தப் பெண்ணுக்கு இருக்கும் நம்பிக்கைதானே. அந்த அதிகாரத்தை, செல்வாக்கை துஷ்பிரயோகம் செய்தால் அது நம்பிக்கை துரோகம் . நம்பிக்கை துரோகம் போல ஈனமான செயல் வேறு எதுவும் இல்லை.
திருமணமானவர்கள் தகாத காதல் உறவு கொள்வது சகஜமாகப் போய்விட்டது என்று சொல்கிறார்கள். அது வேறு, அது சம்பந்தப்பட்டவர்கள் தெரிந்து சம்மதத்துடன் செய்வது. அந்த உறவின் பாவ - புண்ணியம் பற்றி இப்போது நான் விவாதிக்கவில்லை.
இது ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு எதிரான அத்து மீறல். இந்த அத்துமீறல் செய்பவர்கள் பற்றித்தான் இப்பொழுது பேசுகிறோம். இது பலமுகம் கொண்டது. வன்புணர்ச்சி, பாலியல் சீண்டுதல் , பாலியல் துன்புறுத்தல் இத்யாதி. இது பற்றிதான் இங்கு பேசுகிறேன்.
அமெரிக்காவிலும் இந்தப் பிரச்னை திமிலோகப்படுகிறது. கெவின் ஸ்பேஸி என்று ஓர் அற்புதமான நடிகர். இருந்து என்ன பயன்? அவர் மீதும் பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகள். 'அப்ப் ற்ட்ங் ம்ர்ய்ங்ஹ் ண்ய் ற்ட்ங் ஜ்ர்ழ்ப்க்' (உலகத்திலுள்ள செல்வமெல்லாம் ) என்ற படத்தில் ஒரு பாத்திரம் அவருக்கு. 
ரிட்லி ஸ்காட் என்பவர் இயக்குநர். படம் முடியும் தருவாயில் ரிட்லி என்ன செய்தார் தெரியுமா? கெவின் ஸ்பேசியை நீக்கிவிட்டார். அவர் நடித்த காட்சிகளை மறுபடியும் வேறு நடிகரை வைத்து எடுப்பது என்று முடிவு செய்ததாகச் சொல்
கிறர். 
எவ்வளவு பொருள் நஷ்டம் இருந்தும் இதை ஒப்புக்கொள்ள மாட்டேன் என்பதாகச் சொல்லியுள்ளார் என்று செய்தி. இப்படி ஒரு வெறி இந்தியாவில் நிலவுகிறதே, இது எப்படி, எப்போது நிற்கும்? நமது பெண்ணிடம் மதிப்பு என்ற பாடத்தை எந்த இடத்திலிருந்து துவங்குவது? தொட்டிலில் இருந்தா?
காரில் செல்லும்பொழுது மூன்று பள்ளி மாணவிகளைப் பார்த்தேன். இரட்டை பின்னல், அழகாக மடித்துக் கட்டி, ரிப்பன் இரண்டு பட்டாம்பூச்சிபோல. பள்ளிச் சீருடையில் சிரித்துக்கொண்டே செல்கிறார்கள். 
எனக்கு அழுகை தொண்டையை அடைக்கிறது "கண்களே! என் கண்களே உங்களுக்கு ஒன்றும் ஆகக்கூடாது' மனது அலறுகிறது. ஆமாம், இன்றைக்குப் பெண் குழந்தைகளைத் தனியே வெளியே உலவவிடவே பயமாக இருக்கிறது.
பெண்கள் மனிதர்கள், உயிருள்ள மதிக்க வேண்டிய மனிதர்கள். அடுத்த ஆண்டாவது புள்ளிவிவரம் நல்லபடியாக மாறுமா?

கட்டுரையாளர்: நீதிபதி (ஓய்வு)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com