வரலாற்றுப் புரட்டுகள்!

இன்றைய உலகில் சரித்திரத்திற்குப் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பண்டைய காலத்தைப் புகழ்வதும் இன்றைய நிலையைச் சாடுவதும் சாதாரணமாகக் காணப்படுகிறது. 

இன்றைய உலகில் சரித்திரத்திற்குப் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பண்டைய காலத்தைப் புகழ்வதும் இன்றைய நிலையைச் சாடுவதும் சாதாரணமாகக் காணப்படுகிறது. 
சரித்திரம் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் கற்பிக்கப்படுகிறது. அதை நிறைய பேர் கற்கவும் செய்கிறார்கள். கல்வெட்டுகள், பழங்காலக் கையேடுகள் மற்றும் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் பொருள்கள் சரித்திரத்திற்கு அடிப்படையாகப் பயன்படுத்தப்படுகின்றன. 
பழங்கால வரலாற்றைத் தெரிந்து கொள்வதில் மிகுந்த அக்கறை காட்டும் அதே வேளையில் தற்போதைய தீங்குகளுக்குத் தீர்வு காண்பதில் அக்கறை பெயரளவிலேயே காணப்படுகிறது. 
சரித்திரங்கள் தகுந்த ஆதாரங்கள் இல்லாத பெரும்பாலும் யூகத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப் பெற்றிருக்கின்றன என்ற உண்மைதான். 
சரித்திரத்தை உண்மையின் அடிப்படையில் தீர்மானம் செய்திருப்பதாகத் தெரியவில்லை. கூர்ந்து நோக்கின் சரித்திரம் நிறைய பொய்கள் கொண்டதாகவே யூகிக்க முடியும். 
முற்காலத்தில் அரசர்களும் தலைவர்களும் அவர்களின் உண்மை நிறத்தை மறைத்து வெகுவாகப் புகழப்பட்டு இருக்கிறார்கள் என்பதை இன்றைய நிலைமையைப் பார்த்து நம்மால் யூகம் செய்ய முடியும்.
அறிவியல், தொலைத் தொடர்பு மற்றும் இன்ன பிற அறிவியல் முன்னேற்றம் அடைந்துள்ள இன்றைய சூழலில் வரலாற்றை மிகவும் அப்பட்டமாகத் திரித்துக் கூறமுடிகிறது என்றால், முன்னேற்றத்தையே அறியாத பழங்காலத்தில் நிலைமை எப்படியிருந்திருக்கும் என்பதை எளிதில் கற்பனை செய்ய இயலும். 
இதைத்தான் ஸ்பெயின் நாட்டுத் தத்துவ ஞானி ஜார்ஜ் சாண்டயனா "சரித்திரம் என்பது முற்றிலும் நடக்காதவற்றை அந்தக் கால கட்டங்களில் வாழாதவர்கள் சொன்னதைக் கேட்டு கோர்க்கப்பட்ட பொய்களின் தொகுப்பு' என்று கூறியுள்ளார். 
மனிதப் பண்புகளான நேர்மை மற்றும் நிலைத்தன்மை தற்போதைய தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம் காணப்படுதில்லை. 
அவர்கள் பெரிய பேச்சாளர்களாகவோ மொழி வல்லுநர்களாகவோ, கவிஞர்களாகவோ, சமயோஜித புத்தியுள்ளவர்களாகவோ, சிறந்த நடிகர்களாகவோ மற்றும் பல துறைகளில் திறமைசாலிகளாகவோ இருக்கலாம். ஆனால், நேர்மை என்ற பண்பு இல்லையெனில் அவர்களைச் சிறந்த மனிதர்களாகக் கருதுவது சமுதாயத்திற்கு நல்லதல்ல. 
ஆனால், உண்மையில் நாம் காண்பது என்ன? நற்பண்புகளே இல்லாத ஆண்களும், பெண்களும் அவர்களது உண்மையான குணாதிசயங்களை மறைத்து, வானளாவப் புகழப்படுவதையே காண்கிறோம். நம் மூதாதையர்கள் செய்த அதே தவறை நாமும் செய்கிறோம் என்பது வருத்தமளிக்கக்கூடியதாக இருக்கிறது. 
நற்பண்பு இல்லாத நபர்களுக்கு சரித்திரத்தில் உயர்ந்த அந்தஸ்து கொடுப்பது மிகவும் மோசமான செயல். அது நாகரிகம் அடைந்தவர்களின் மன நிலையைப் பெரிதும் பாதிக்கும்.
தற்போது பத்திரிகைகளும் மற்ற ஊடகங்களும் சொந்த லாபத்திற்காகத் தவறாகப் பயன்படுத்தப்படுவதை சர்வ சாதாரணமாகக் காண முடிகிறது. மக்களுக்கு எதிராகப் பெருந்தவறு செய்தவர்களை ஊடகங்கள் புகழ்ந்து பேசுவது நல்லாட்சிக்கு விரோதமானது. 
ஊடகங்கள், இன்றைய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் எப்படித் தங்களது நேர்மையற்ற செயல்களினால் பெரிய பதவிகளிலும் அதிகாரத்திலும் அமர்ந்திருக்கிறார்கள் என்பதை வெளிக்கொணர காட்டும் அக்கறையும் செயல்பாடுகளும் மிகவும் வருத்தமளிக்கிறது.
ஊடகங்கள் மக்கள் விரோத சக்திகளுடன் சேர்ந்து கூட்டுச் சதியில் ஈடுபடுவது சமுதாயத்திற்கு மிகப் பெரிய அளவில் தீங்கு விளைவிக்கின்றன என்பதுதான் உண்மை. 
உண்மையை மூடி மறைத்து திரித்துக்கூறி போலிச்சரித்திரத்தை உண்டு பண்ணுவது நாகரிகமடைந்த சமுதாயத்தின் செயலாக இருக்க முடியாது. பத்திரிகைகளின் தவறான போக்கினைக்கண்டு வெகுண்ட அமெரிக்க எழுத்தாளர், ஜெரால்டு செலண்டே ஊடகங்களில் பொய் சொல்லிப் பிழைப்பு நடத்தியவர்களை "பத்திரிக்கை வேசிகள்' என்று வர்ணித்திருக்கிறார். 
எல்லாம் நன்றாகவே இருக்கிறது என்று எண்ணிக் காலத்தை கடத்துவது நாம் நம்மையே முட்டாளாக்கிக் கொள்ளும் நிலைமையே. அரசியல் மட்டுமல்லாது மற்ற அனைத்துத் துறைகளிலும் ஒழுக்கம் என்பது இல்லவே இல்லை என்பதுதான் உண்மை. 
கீழ்மட்டத்திலிருந்து உயர்மட்டம் வரை எல்லா இடங்களிலும் ஏமாற்று வேலைகள் மலிந்து காணப்படுவதால், மக்கள் மத்தியில் ஒற்றுமை, சகோரத்துவம், போன்ற நற்குணங்கள் காணப்படுவதில்லை. 
எப்படியாவது வாழ வேண்டும் என்ற உந்துதலால் ஏற்படுகின்ற சகிப்புத்தன்மை மட்டுமே காண முடிகிறது. முற்காலத்தில் நடந்ததைப்போல் இன்றைய தெளிவுள்ள சூழலிலும் ஊடகங்கள் போலிச்சரித்திரத்தை உண்டு பண்ணுவதற்குத் துணை போகக்கூடாது. 
மீண்டும் மீண்டும் போலிச் சரித்திரங்களை உண்டு பண்ணுவது நிகழ்காலத்தில் மிக மோசமான விளைவுகளை உண்டுபண்ணுவது மட்டுமின்றி எதிர்காலச் சந்ததினரையும் வெகுவாகப் பாதிக்கும்.
தற்போது மக்களிடையேயும் நாடுகளின் மத்தியிலும் காணப்படும் சண்டை சச்சரவுகளுக்குக் காரணம், உண்மையை மறைத்துக் கூறப்பட்டும் போலி வரலாறுகள்தான் என்பது நன்கு உணரப்படாத உண்மை. 
சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டின், மார்ட்டின் லூதர்கிங் மற்றும் ஆப்ரகாம் லிங்கன் முதலிய அறிஞர்கள் எல்லாம் "எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய குற்றங்களுக்கு அவ்வப்பொழுது எதிர்ப்புத் தெரிவிக்காமல் அமைதி காப்பது அந்தத் தீங்குகளைக் காட்டிலும் அபாயகரமானது' என்று கூறியிருக்கிறார்கள் என்பதை இன்றைய சமுதாயம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com