மீண்டு வருமா மீனவர் வாழ்வு?

உலகெங்கும் பரந்து விரிந்த கடலின் பிள்ளைகளாகக் கருதப்படும் மீனவர்களின் வாழ்க்கையைப் போற்றும் விதமாகவே உலக மீனவர் தினம் கொண்டாடப்படுகிறது.

உலகெங்கும் பரந்து விரிந்த கடலின் பிள்ளைகளாகக் கருதப்படும் மீனவர்களின் வாழ்க்கையைப் போற்றும் விதமாகவே உலக மீனவர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த நாள் நவம்பர் 21 என்பதுகூட அவர்களுக்கே மறந்து போனதுதான் வேதனை. தமிழ்நாட்டில் மீனவர்கள் நிலை என்ன? அலைகளுக்கும், புயலுக்கும், சூறாவளிக்கும் அஞ்சியவர்கள் இப்போது இலங்கை கடற்படைக்கு அஞ்சியே வாழ வேண்டியிருக்கிறது.
தினமும் மீனவர்கள் எல்லை மீறியதாகக் கூறி அடித்து விரட்டுவதும், கைது செய்வதும் தொடர்கதையாகி விட்டது. அவர்களின் வாழ்வாதாரமாகக் கருதப்படும் படகுகளைப் பறித்தெடுப்பதும், அவர்களது வலைகளை அறுத்தெறிவதும், அவர்கள் பிடிக்கும் மீன்களைக் கொள்ளையடித்துக் கொண்டு போவதும் தொடருமானால் அவர்கள் வாழ்வது எப்போது?
இந்நிலையில், இந்தியக் கடலோரக் காவல் படையினரே ராமேசுவரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய சொந்த நாட்டுக் கடற்படையே துப்பாக்கிச் சூடு நடத்திய நிகழ்வு கடந்த நவம்பர் 13 அன்று, ராமேசுவரத்திலிருந்து 4 கடல் மைல் தொலைவில் இந்தியக் கடல் எல்லைக்குள் நடந்துள்ளது.
மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடலோரக் காவல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வலைகளைச் சேதப்படுத்தியதோடு, ஹிந்தியில் பேசச் சொல்லித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதுநாள் வரை இலங்கைக் கடற்படையினர்தான் தமிழ் மீனவர்களைச் சுட்டுக் கொன்றனர். இப்போது இந்தியக் கடலோரக் காவல் படையினரும் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர். இந்த நிகழ்வு பற்றி மண்டபம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், இந்தியக் கடலோரக் காவல்படையினர் தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை என அறிக்கை வெளியிட்டு மறுத்துள்ளனர்.
மீனவர் நலச்சங்கத்தின் தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கடந்த 1983-ஆம் ஆண்டுக்குப் பின் தமிழக மீனவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.
இந்த நிகழ்வு பற்றி விசாரிக்க மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கவும், பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனுவை ஏற்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை துணைக் காவல்துறை கண்காணிப்பாளருக்குக் குறைவில்லாத அதிகாரம் கொண்ட அதிகாரிகள் விசாரிக்கவும், பாதிக்கப் பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டு, இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
மீனவர்களின் தாய்வீடாக இருந்த கச்சத்தீவை எடுத்து இலங்கைக்குக் கொடுத்துவிட்டு, அப்போது எடுத்த உடன்பாடுகளையும், ஒப்பந்தங்களையும் உதாசீனம் செய்யலாமா? இலங்கை கடற்படையின் அட்டூழியங்களால் தமிழக மீனவர் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விட்டது.
117க்கும் மேற்பட்டவர்கள் யாழ்ப்பாணச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை நம்பி வாழும் குடும்பங்களின் நிலை என்ன? தந்தைமாரை 
இழந்து தவிக்கும் குழந்தைகளின் எதிர்காலம் என்ன? தாய்மார்களின் கண்ணீருக்கு விடை என்ன?
உலகமயமாக்கல் கொள்கை இந்தியாவில் அமல்படுத்தியபோது பாரம்பரிய மீனவர்களின் உரிமைகளும் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. 2004 சுனாமியின் பேரழிவிற்குப் பிறகு மீனவர் பாதுகாப்பு என்ற பெயரால் ஒழுங்குமுறைச் சட்டங்கள் இயற்றப்பட்டன. இதனால் அவர்களின் கடலோரம் வாழும் உரிமைகளும் பறிபோய்க் கொண்டிருக்கின்றன.
தமிழகக் கடற்கரை 1076 கி.மீ. நீளம் கொண்டது. இந்தக் கடல் வளத்தை நம்பி 608 மீனவக் கிராமங்களும், 11 லட்சத்துக்கும் அதிகமான மீனவர்களும் உள்ளனர். கடந்த ஆண்டு கணக்கின்படி 6.69 லட்சம் டன் மீன்பிடிப்பு தமிழ்நாட்டில் நடந்துள்ளது. அந்நியச் செலாவணியாகப் பல்லாயிரம் கோடி ஈட்டப்பட்டுள்ளது.
இந்தியக் கடற்கரையான 7516 கி.மீ. நீளத்தில் 1076 கி.மீ. நீளமுள்ள தமிழகக் கடற்கரை நாட்டிலேயே இரண்டாவது கடல் வளத்தைக் கொண்டுள்ளது. ஆட்சியாளர்களின் கவனிப்பு மற்றும் பராமரிப்பு போதுமான வகையில் இல்லாமையால் தமிழக மீன்பிடித் தொழில் 5ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. தமிழகத்தை விடப் பாதியளவு நீளம் கொண்ட கேரள மாநிலம் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது. கடந்த 1983ஆம் ஆண்டு முதல் தொடரும் இலங்கைக் கடற்படைத் தாக்குதலிலிருந்து தமிழக மீனவர்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. இந்திய, இலங்கை அரசுகளின் பேச்சு வார்த்தைக்குப் பிறகு தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.
அந்த நேரங்களில் தமிழக அரசு மத்திய ஆட்சியாளர்களுக்குக் கடிதம் எழுதுவதும், மத்திய அரசு மெளனம் சாதிப்பதும் இலங்கை ஆட்சியாளர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. தங்களது பொறுப்புகளை மறந்துவிட்டு இரண்டு நாட்டு மீனவர்களும் பேசித் தீர்வுகாண வேண்டும் என்று இரு நாடுகளும் ஒதுங்கிக் கொள்வது என்ன நியாயம்?
தமிழ்நாட்டு மீனவர்கள் மக்கள் தொகையில் 30 விழுக்காடு உள்ளனர். பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள அவர்களை பட்டியல் சாதியிலோ அல்லது பழங்குடி சாதியிலோ சேர்க்க வேண்டும் என மண்டல் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், இது இதுவரை தேர்தல் கால வாக்குறுதியாகவே இருந்து வருகிறது. இது பற்றி ஆவன செய்ய வேண்டும்.
தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணவே பிரதமர் விரும்புகிறார் என்று மத்திய கப்பல்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். விரும்பினால் மட்டும் போதுமா? ஆட்சிக்கு வந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று மீனவர்கள் முணுமுணுப்பது செவிகளில் விழவில்லையா?
இந்திய கடல் எல்லையைப் பாதுகாக்க கடலோரக் காவல்படையினர் 20 ரோந்துக் கப்பல்களில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 1984-ஆம் ஆண்டு தயாராகி 1988-ஆம் ஆண்டு கடலோரக் காவல்படையில் இணைக்கப்பட்ட வருணா கப்பல் சுமார் 30 ஆண்டுகள் பணியாற்றி, கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வுபெற்றது.
இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் கடல்சார் குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கையில் இலங்கை காட்டிவரும் ஈடுபாட்டுக்காக, அந்நாட்டுக் கடற்படையிடம் வருணா ரோந்துக் கப்பலை பரிசாக அளிக்கவுள்ளதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்திருப்பது தமிழக மீனவரிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அரசிடம் இலங்கை அதிபர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்தியக் கடலோரக் காவல்படையினரால் பயன்படுத்தப்பட்ட வருணா ரோந்துக் கப்பலை இலங்கை கடற்படை நன்கொடையாகப் பெற்றுக் கொள்வது என இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கைக்கு இலவசமாக ரோந்துக் கப்பலை அளிப்பதற்குத் தமிழக மீனவர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தனது சொந்த நாட்டு மீனவர்கள் மீதே தாக்குதல் நடத்துவதற்கு இலங்கைக் கடற்படைக்கு இலவசமாக ரோந்துக் கப்பலை வழங்கும் மத்திய அரசின் செயலை மீனவர் இயக்கங்கள் கண்டித்துள்ளன.
இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இதுவரை 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் உயிர் இழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகாயமடைந்து உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். எனவே இலங்கைக்கு வருணா ரோந்துக் கப்பலை வழங்கக்கூடாது என்றும், அந்தக் கப்பலை தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மத்திய அரசு பரிசீலனை செய்யுமா?
கடலில் தங்களுக்கு ஏற்படும் தொழில் சார்ந்த பல உலகளாவிய பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் 1997ஆம் ஆண்டு 42 நாடுகளைச் சேர்ந்த மீனவப் பிரதிநிதிகள் தில்லியில் கூடி விவாதித்தனர். அதன் முடிவில் உலக மீன்பிடித் தொழிலாளர் பேரவை உருவாக்கப்பட்டது. இதன் மூலம் மீனவர்களுக்கு எதிராக அரசுகள் கொண்டு வரும் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் பிரச்னைகள், பாரம்பரிய மீனவர்களின் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதிப்பால் கடல் மாசடைந்து மீன்வளம் குன்றி மீன்பிடித் தொழில் அழிவுப் பாதையை நோக்கிச் செல்வது உள்ளிட்டவற்றிற்குத் தீர்வுகாண முடிவு எடுக்கப்பட்டது. அந்த நவம்பர் 21ஆம் நாளே உலக மீனவர் தினமாக அறிவிக்கப்பட்டது.
மீனவர் தினத்தில் மட்டும் மீனவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டால் போதும் என்று ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் நினைத்தால் போதாது. அவர்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளைத் தீர்க்க முயல வேண்டும். தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். 
கடலும், மீனவர்களும் பிரிக்க முடியாதவர்கள். அவர்களை ஒழுங்குமுறை சட்டங்கள் மூலம் பிரிக்க நினைப்பது இயற்கைக்கு முரண்பட்டதாகும். மீனவர்களின் வாழ்வு ஒரு தேசத்தின் வாழ்வு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com