தொட்டில் குழந்தைத் திட்டமும் முதியோர் பாதுகாப்புச் சட்டமும்

குழந்தைகள் நிராகரிக்கப்படுவதும் முதியோர் கைவிடப்படுவதும் நிகழக்கூடாத குரூர சம்பவங்கள்.

குழந்தைகள் நிராகரிக்கப்படுவதும் முதியோர் கைவிடப்படுவதும் நிகழக்கூடாத குரூர சம்பவங்கள். எதார்த்த வாழ்க்கையில் அவை நடந்துவிடக்கூடாது என்பதற்கான எச்சரிக்கையைச் செய்தவர் வள்ளுவப் பேராசான். அதனால்தான் "நன்றி' - "உதவி' என்ற இரு சொற்களை கலைச்சொல் நுட்பத்தில் இரு குறள்களில் அவர் கையாண்டுள்ளார்.
நன்றி - உதவி என்பவற்றை நாம் பொதுத்தளத்திற்கு நகர்த்திக்கொண்டு வந்துவிட்டதால், அவை பிறந்த வீட்டின் பீடினை இழந்து நிற்கின்றன. நன்றி என்பதைத் தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்தவனுக்கும்கூடச் சொல்கிறோம். அலுவலகங்களின் விசாரணைப் பிரிவில் உதவி செய்வதற்காகவே நியமிக்கப்பட்டவர்கள் உண்டு. அவர்களுக்கும் நாம் நன்றிதான் சொல்கிறோம். நன்றி என்பதை வள்ளுவர் இவ்வாறு இளைத்துப்போன அர்த்தத்தில் கையாளவில்லை. 
தந்தை - மகன் உறவாக நன்றியை அவர் தகவமைத்துள்ளார். தந்தை தன் பிள்ளையைச் சான்றோனாகுமாறு வளர்க்க வேண்டும் என்பதில் தந்தைக்கு எவ்வித விதி
விலக்கும் அவர் தரவில்லை. பிள்ளைக்குரிய பின்னணியைத் தயார் செய்து தரவேண்டியது தந்தையின் கடமை. 
இப்படித்தான் வள்ளுவர் காலத்துச் சமுதாயம் வினையாற்றி வந்துள்ளது. தந்தை என்று வள்ளுவர் வரித்துள்ளதைத் தாய்க்கும் விரித்துக் கொள்வது எக்காலத்திற்கும் குறளைப் பொருத்தப்பாடுள்ளதாகச் செய்யும். 
இதேபோல, "மகனுக்கு' என்று வள்ளுவர் சொன்னதை "மகளுக்கும்' என்று கூடுதலாக்கிக் கொள்வதும் வள்ளுவருக்குப் பெருமை செய்வதுதான். 
"தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து / முந்தி யிருப்பச் செயல்' என்கிற சொற்களில் உள்ள தந்தையுடன் தாயையும் சேர்த்துப் பெற்றோர் எனலாம். மகனையோ, மகளையோ நன்கு திட்டமிட்டு வளர்த்தால்தான், அவர்களின் எதிர்கால வாழ்வு நல்வாழ்வாக அமையும். பிள்ளை வளர்ப்பு என்பது பிள்ளைகளின் சுயசிந்தனைக்கான கல்வியையும், நன்னடத்தைக்கான ஒழுக்கத்தையும் ஆரோக்கியத்திற்கான உணவையும், ஊட்டி வளர்ப்பதுதான். இக்கடமையைத்தான் "தந்தை மகற்காற்றும் நன்றி' என்கிறார். 
தந்தைக்கான இக்கடமை மகனுக்கு மட்டுமாகப் பேசப்பட்டது அக்காலத்திய மரபு. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் பெய்துள்ள "நன்றி' எனும் சொல், காலம் செல்லச்செல்ல மெலிந்து போய்விட்டது.
தந்தை தமது மகனை ஆளுமையுள்ளவனாகத் தயாரிக்கத் தவறிவிட்டால், அப்பிள்ளை தறுதலையாகி விடலாம். இதனைக் கருதியே உரையாசிரியர்கள் நன்றி என்ற வள்ளுவரின் சொல் நீர்த்துப் போனதை உணர்ந்து, அதனைப் புடம்போட்டு, அதன் அசலைக் கண்டறிந்துள்ளார்கள்.
"நன்றி' என்ற சொல்லுக்குப் பரிமேலழகர் "நன்மை' செய்வது என்கிறார். முனைவர் மு.வ. "நல்லுதவி' என்கிறார். தமிழறிஞர் வ.சுப. மாணிக்கனாரும், வ.உ.சி.யும் "கடமை' என்கின்றனர். தேவநேயப் பாவாணர் "நன்மை' என்கிறார்.
நன்மை, நல்லுதவி, கடமை என்பவற்றில் "கடமை' என்றால் அதன் கனம் சற்றே கூடுதலாகிறது. காரணம், தந்தையினுடைய முக்கியப் பொறுப்பை அது சுட்டிக் காட்டுகிறது. அப்படிச் சுட்டிக்காட்டினால்தான், பிள்ளைகளின் முன்னேற்றத்திற்குப் தாய் - தந்தையர் பொறுப்பாளியாவார்கள். இல்லையெனில் பொறுப்பற்றவர்களாகி விடுவார்கள். 
இக்குறளில் உள்ள "அவையத்து முந்தியிருப்பச் செயல்' என்பது மகனை முதன்மைப்படுத்துவதற்காகத் தந்தை செய்யும் தீவிர முயற்சியானது உயர்வு நவிற்சியாக உள்ளது. வள்ளுவர் குறிப்பிடுகிற "அவையம்' அறிவுடையார் சபைதான். 
ஒவ்வொரு தந்தையுமே தன் பிள்ளையை அந்த அறிவுடையார் அவையில் முதலாமவனாகச் செய்யவே ஆசைப்படுவர். எல்லாத் தந்தைகளும் அப்படிச் செய்வாரானால், எல்லா மகன்களுமே முதலானவர்களாகவே விளங்குவர். பண்புடையார் கூட்டத்தினரில் தங்கள் பிள்ளைகளை இடம்பெறச் செய்தாலே போதும், அதுவே தந்தை மகனுக்குச் செய்யும் உயர்வுதான். 
"நன்றி' என்பதன் மூலம், பிள்ளை வளர்ப்பைக் கட்டளையாகவே தந்தைமார்களுக்கு வள்ளுவர் பிறப்பித்திருக்கிறார். வகுப்பில் ஆசிரியர்கள் தருகிற கல்வி முறையைவிட, வீட்டில் பெற்றோர்கள் செய்யும் வளர்ப்பு முறையே சமூக நேயத்தை வளர்க்கக்கூடியது. 
நன்றி என்ற சொல்லை வள்ளுவர் வேறு சில சூழ்நிலைகளிலும் கையாண்டுள்ளதைத் திருக்குறளில் பரவலாக - குறிப்பாக "செய்நன்றியறிதல்' அதிகாரத்தில் காணலாம்.
வள்ளுவப் பேராசான் சொல்லுகின்ற "செய்நன்றி', தந்தை மகனுக்குச் செய்கிற நன்றியல்ல. தெரிந்தவர்கள் மத்தியில் பரிமாறிக் கொள்கிற பொது உதவி அது. அந்த உதவியை மறப்பவர்களைச் "செய்நன்றி கொன்றவர்" என்றும், அவருக்கு உய்வில்லை என்றும் சபித்திருக்கிறார்.
மூன்றாம் நபர் செய்த உதவியை மறந்து விடுபவரையே சபிக்கிற வள்ளுவர், தந்தை செய்த உதவியை மறந்துவிடுகிற மகனைச் சபிக்காமல் விடுவாரா? அதனால்தான், "நன்றி மறப்பது நன்றன்று' என்றும் கூறியுள்ளார். 
இதேபோல இன்னொரு குறள், "மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை / என்நோற்றான் கொல் எனும் சொல்' இக்குறளில் உள்ள "உதவி' என்பது இக்காலத்திய உதவியாக இருக்க முடியாது. 
பெற்றோருக்குப் பிள்ளைகள் செய்ய வேண்டிய உதவி என்பது மூன்றாம் நபர் செய்யும் உதவி அல்ல. இதனைக் கடமை என்றால் இதன் கனம் கூடுகிறது. அந்த உதவியைக் "கைம்மாறு' என்றால் பிள்ளைகள் திருப்பிச் செலுத்தக் கடமைப்பட்டவர் ஆகிறார்கள். 
முதுமைக் காலத்தில் பெற்றோர்களுக்கு நிறைய உதவிகள் அவசியம். பணம் செலுத்தியும் இவ்வுதவிகளைப் பெற முடியும். அதில் அர்ப்பணிப்பில்லை. அது வேலைக்காரர்களால் சம்பளத்துக்காகச் செய்யும் உதவி. அதன் வாணிபத் தன்மை கவனத்திற்குரியது. இந்த உதவிகளைச் செய்பவர் எவரும், சம்பந்தப்பட்ட வயோதிகரிடமிருந்து எந்தப் பலனையும் பெற்றவர்கள் அல்ல. 
இவர்களின் உதவி இரண்டாம் தரமானது. அப்படியானால், அசலான உதவியை, தள்ளாத காலத்தில் பிள்ளைகள்தான் தந்தைக்குத் தரமுடியும். காரணம், தந்தையால்தான் அந்த மகன் உருவாக்கப்படுகிறான். 
வள்ளுவரின் "உதவி' என்ற சொல் தேய்மானமாகியுள்ளதை உணர்த்த உரையாசிரியர்கள் அதனைக் "கைம்மாறு' என்று காட்டியுள்ளது சிறப்பானது. இக்கைம்மாறை பிள்ளைகள் செய்யத் தவறுவார்
களானால், அப்பெற்றோர்கள் ஆதரவற்றவர்களாவர்; பரிதாபத்திற்குரியவராவர். 
பிள்ளைகள்மீது பெற்றோர் வைக்கிற பாசம் இயல்பானது. ஆனால், பிள்ளைகளின் பாசம் அப்படிப்பட்டது அல்ல. தங்களின் சொந்தப் பிள்ளைகளின்மீது அதிகப்பாசம் இருக்கும். 
அதே பாசம் அவர்களின் பெற்றோர்களின்மீது இருக்குமா என்பது சந்தேகம்தான். பெற்றோர்களைப் பிள்ளைகள் அலட்சியப்படுத்துவதற்கான உளவியல் காரணம் இதுதான். 
பெற்றோருக்கு இக்கைம்மாறுகளைப் பிசகாமல் செய்கிற நல்ல பிள்ளைகளை "இப்பிள்ளையைப் பெறுவதற்கு இவனுடைய பெற்றோர் என்ன புண்ணியம் செய்தனரோ' என்றே எல்லோரும் வியப்பார்கள். கைவிடப்பட்ட பெற்றோர்களைப் பார்த்து, "இவர்கள் என்ன பாவம் செய்தார்களோ' என்றுதான் கூறுவார்கள்.
வள்ளுவர் கையாண்டுள்ள "உதவி' என்ற சொல்லுக்குக் "கைம்மாறு' என்று முதலில் உரை கண்டவர் பரிமேலழகர். மு.வ.வும், தேவநேயப்பாவணரும் "கைம்மாறு' என்றே கூறுகின்றனர். வ.சுப. மாணிக்கனாரும், வ.உ.சி.யும் கைம்மாறுக்கு மாற்று நாணயமாகக் "கடமை' என்கின்றனர். 
இவ்விரு குறள்களில் தந்தை - மகன் உறவை, நன்றி - உதவி என்ற இரு சொற்களின் வழியாக வள்ளுவர் அடர்த்திப்படுத்திக் காட்டியுள்ளதைத் தற்காலத்துக்குத் தகுந்தாற்போலக் கையாள்வதற்கு, 
அவற்றை மேலும் விபரப்படுத்திக் கொள்வது தவறாகாது. இதேபோல தந்தை - மகன் என்பதைத் தாய் - மகள் என விரிவாக்கிக் கொள்வதும் வள்ளுவ நெறிக்கு விரோதமாகாது. 
"முந்தியிருப்பச் செயல்' என்கிற தொடரையும் "எந்நோற்றான் கொல்' என்கிற தொடரையும் உயர்வு நவிற்சியாக உணர்வோமானால், அக்குறள்களுக்குள் ஆழ்ந்திருக்கும் கவிஉளத்தையும் அனுபவிக்கலாம்.
ஒரு பாவமும் அறியாத பச்சை மண்ணைப் பெற்ற தாயே குப்பைத் தொட்டியிலோ, பொது இடத்திலோ வீசிவிட்டுச் சென்றதால்தான் நிராகரிக்கப்பட்ட அக்குழந்தைகளை வளர்க்கத் தொட்டில் குழந்தைத் திட்டத்தை அரசு அமல்படுத்தியது.
இத்தகைய ஊதாரி மனிதர்கள் உலவுகிற ஒரு சமுதாயத்தில், வள்ளுவப் பேராசான் எண்ணியதைப்போல, தந்தை மகனுக்கு ஆற்றும் நன்றி கடைப்பிடிக்கப்படுவதாக எப்படி நம்ப முடியும்?
தோள்மீதும் மார்மீதும் சுமந்து வளர்த்த தாய் தந்தையை அவர்களின் மகனே சரிவரக் கவனிக்காமல் அநாதை இல்லத்திற்கு அனுப்புவது அன்றாட நிகழ்வு. 
முதிய வயதில் பெற்றோர்களை இப்படிக் கைவிடக்கூடிய பாசமற்ற பிள்ளைகள்மீது, அப்பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் தருவதற்கும், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதற்கும் சட்டம் இப்போது சாதகமாக உள்ளது. இச்சட்டம் ஒன்றே போதும், "மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி'யின் அவலட்சணத்தை நாம் அறிந்து கொள்வதற்கு.
நன்றி - உதவி என்ற சொற்கள் வள்ளுவர் காலத்து அர்த்த அடர்த்தியை 
இழந்து விட்டதற்கு, வள்ளுவரல்ல காரணம். வளர்ப்பு முறைதான் காரணம். அதனால்தான் தொட்டில் குழந்தைத் திட்டமும் முதியோர் பாதுகாப்புச் சட்டமும் உருவாகியுள்ளன என்பதை உண்மையென உணரவேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com