விடையை எங்கே தேடுவது?

கால் நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய அரசியல் சாசனத்தையும், சட்டக் கல்வியையும் மாணவர்களுக்குக் கற்பித்து வரும் எனக்கு அவ்வப்போது சில கேள்விகள் எழுவதுண்டு.

கால் நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய அரசியல் சாசனத்தையும், சட்டக் கல்வியையும் மாணவர்களுக்குக் கற்பித்து வரும் எனக்கு அவ்வப்போது சில கேள்விகள் எழுவதுண்டு.
இந்த நவநாகரிக சமூகத்தில் வாழும் அனைவருக்கும் அடிப்படை சுதந்திரமும், உரிமைகளும் முறையாக அளிக்கப்பட்டிருக்கின்றனவா என்பது அவற்றில் முதன்மையானது. பல தருணங்களில் அதற்கு விடை தெரியாமல் விழித்திருக்கிறேன்.
இத்தகைய சூழலில்தான் தனிநபர் ரகசியம் காப்பது என்பது மக்களின் அடிப்படை உரிமை என ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அண்மையில் ஆணித்தரமாகக் கூறியது. தாமதமாக வெளியானாலும்கூட, அந்த ஒற்றைத் தீர்ப்பானது ஆதங்கப்பட்டுக் கிடந்த மனதுக்கு சற்று ஆறுதலாக அமைந்தது.
அந்த அமர்வில் இடம்பெற்றிருந்த நீதியரசர் சந்திரசூட், தீர்ப்பின்போது ஒரு கருத்தை முன்வைத்தார். அதாவது, தனிநபர் ரகசியம் காப்பது என்பது சமூகத்தில் ஒருவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிமுக்கியமான அங்கீகாரம் என அவர் தெரிவித்தார். அதேபோன்று மற்றொரு நீதிபதியான செலமேஸ்வர், "விரும்பியவற்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு' என்றார்.
அடடா! ஆகச் சிறந்த கூற்றுகள் அல்லவா... என அகமகிழ்வதற்குள்ளாகவே அடுத்த கேள்வி ஒன்று நம் முகத்தில் அறைந்து விட்டுச் சென்றது. விரும்பியதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு என்றால் விரும்பிய மார்க்கத்தையும், வாழ்க்கையையும் தேர்ந்தெடுக்க ஹாதியாவுக்கு மட்டும் தடை விதித்தது ஏன்? என்பதுதான் அது.
ஹிந்து மதத்தில் இருந்து இஸ்லாமியத்துக்கு மாறிய கேரளப் பெண் ஹாதியா. அவருக்கும், முஸ்லிம் இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது. 
மதமாற்றம் செய்வதற்காகவே ஹாதியாவை அந்த இளைஞர் கரம் பிடித்தார் என்பது குற்றச்சாட்டு. இதற்கு "லவ் ஜிகாத்' எனப் பெயர் வேறு சூட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், அத்திருமணம் செல்லாது என்ற தீர்ப்பை வெளியிட்டது.
அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ஹாதியாவின் கணவர். அதன் பிறகு அந்த வழக்கு சென்ற விதம்தான் பல்வேறு விடை தெரியாத வினாக்களுக்கு அச்சாரமிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக வாதப் பிரதிவாதங்களை முழுமையாக நடத்துவதற்கு முன்பாகவே வழக்கு விசாரணையை தேசியப் புலனாய்வுத் துறை (என்ஐஏ) வசம் ஒப்படைத்தது உச்ச நீதிமன்றம். 
ஆத்ம நிறைவைத் தருவதற்குப் பதிலாக அதிருப்தி குரல்களை எழுப்ப வகை செய்யும் இந்த உத்தரவு எதற்காக பிறப்பிக்கப்பட்டது எனத் தெரியவில்லை.
இது ஒருபுறமிருக்க, ஹாதியா வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி சந்திரசூட் "ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம்' எனப்படும் உளவியல்ரீதியான அனுதாபம் குறித்து கருத்து கூறியதாகத் தெரிகிறது. அதற்கும், இந்த வழக்குக்கும் என்ன தொடர்பு?
அதை அறிந்து கொள்ள வேண்டுமென்றால், ஒரு சம்பவத்தை உங்களுக்குக் கூற வேண்டியது அவசியம். கடந்த 1973}ஆம் ஆண்டில் ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள வங்கியொன்றில் இரு கொள்ளையர்கள் அதிரடியாக நுழைந்தனர். 
அங்கிருந்த மூன்று பெண்கள் உள்பட நான்கு பேரை அவர்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்தனர். மொத்தம் 131 மணி நேரம் அவர்கள் அவ்வாறு சிறைவைக்கப்பட்டிருந்தனர்.
இறுதியாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அவர்களை மீட்டபோதுதான் ஓர் ஆச்சரியம் அரங்கேறியது. பிணைக் கைதிகளாக இருந்தவர்களில் ஒருவர் கூட அந்தக் கொள்ளையர்களைக் காட்டிக் கொடுக்க முன்வரவில்லை. அதிலும் ஒரு பெண்மணி, கொள்ளையர்களுக்கு சட்ட உதவியளிப்பதற்காக நிதி திரட்டும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டார். அனைவருக்கும் வியப்பு.
இதற்கெல்லாம் என்ன காரணம்? என ஆராய்ந்தபோதுதான் ஓர் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
அதாவது, உளவியல் ரீதியாக ஏற்பட்ட தாக்கங்களின் விளைவாகவே அவர்கள் அவ்வாறு நடந்துகொண்டார்கள் எனத் தெரிந்தது. துப்பாக்கி முனையில் சிறைபிடிக்கப்பட்டுள்ளவர்களைப் பொருத்தவரை, மாற்றானிடம் மண்டியிட்டாலும் பரவாயில்லை; மரணத்தில் இருந்து தப்பித்துவிட வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இருக்கும்.
அதுபோன்ற தருணத்தில் அவர்கள் உயிர் பிழைத்துவிட்டால், தங்களுக்கு மறுவாழ்வு கிடைத்ததாகவே உணருவார்கள். அந்த உணர்வு விசுவாசமாக மாறி, குற்றவாளிகளுக்கு அவர்கள் உதவவும் முன்வருவார்கள்.
இது அதீத பயத்தின் வெளிப்பாடு என்றே உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இதுமாதிரியான நிகழ்வுகள் சில நேரங்களில் காதலில் கூட முடியும் என்பதும் அவர்கள் கருத்து. இதற்குத்தான் "ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம்' எனப் பெயர்.
சரி, இப்போது விஷயத்துக்கு வருவோம். ஹாதியா விவகாரத்திலும் இந்த சின்ட்ரோமைத்தான் நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார். உளவியல் ரீதியாக நிர்பந்திக்கப்பட்டு அந்தப் பெண் காதலித்திருக்கலாம்; அதன் தொடர்ச்சியாக மதம் மாறியிருக்கலாம் என்பது நீதிபதியின் கருத்து.
ஆனால், உண்மை என்னவென்றால், ஹாதியாவை அவர் கணவர் கடத்தவும் இல்லை: சிறைப்பிடித்து பிணைக் கைதியாக அடைக்கவும் இல்லை. சொல்லப்போனால், இஸ்லாமிய மார்க்கத்தை அப்பெண் தழுவி ஓராண்டு ஆன பிறகே அவர்களது திருமணம் நடைபெற்றிருக்கிறது. 
அதன் பின்னர், அவர்கள் இருவருமே ஒருமித்து வாழ்க்கையில் பயணித்திருக்கின்றனர். இதையெல்லாம் உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ளவேயில்லை.
சரி, நீதிபதி சந்திரசூட் வாதம் ஏற்புடையது என்றே வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் கேரள உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 11 மாதங்கள் ஹாதியா அவரது தந்தையின் பாதுகாவலில் இருந்தாரே, அப்போது ஏன் "ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம்' வேலை செய்யவில்லை? 
நியாயப்படி அவர் தந்தையின் மீது ஹாதியாவுக்கு பற்று வந்திருக்க வேண்டுமல்லவா... மாறாக, தன் கணவரோடு மட்டும்தான் செல்வேன் என்று எதற்காக அவர் கூற வேண்டும்? 
இதற்குப் பெயர் உளவியல் மாற்றமா? நிச்சயமாக இல்லை. அது உணர்வு ரீதியான போராட்டம்.
இந்த இடத்தில் இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். ஹோமியோபதி மருத்துவப் படிப்பைத் தொடர ஹாதியாவுக்கு அண்மையில் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அப்போது, அவருக்குக் காப்பாளராக யாரை நியமிப்பது எனக் கேள்வி எழுந்தது. அதற்கு ஹாதியா, "என் கணவர் மட்டும்தான் எனக்கு காப்பாளர்' என்றார். 
அந்த நேரத்தில் நீதிபதி சந்திரசூட் மீண்டும் ஒரு கருத்தைக் கூறுகிறார். "மனைவி என்பவள் கணவருக்கு மட்டுமே சொந்தமானவர் கிடையாது; எனவே, கணவரையே காப்பாளராக நியமிக்க வேண்டியதில்லை' என்கிறார் அவர்.
ஏற்றுக் கொள்ள வேண்டிய கூற்றுதான். இப்போது மீண்டும் ஒரு கேள்வி. அப்படியானால் மகள் என்பவள் தந்தைக்கு மட்டுமே சொந்தமானவளா? இல்லை
யெனில், பிறகு எப்படி ஹாதியா, அவர் தந்தையோடு அனுப்பப்பட்டார்?
தனிநபர் உரிமையையும், சுதந்திரத்தையும் உயர்த்திப் பிடித்த அதே நீதிபதி சந்திரசூட்தான் ஹாதியா வழக்கை விசாரிக்கும்போது மட்டும் முரண்பட்ட கருத்தைத் தெரிவிக்கிறார். அதற்கான காரணம் விளங்கவில்லை. 
தங்களது வீட்டுப் பெண்கள் மதம் மாறி கலப்புத் திருமணம் செய்து கொள்வதை சமூகத்தில் பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்வதில்லை என்பது நிஜம்தான். அதற்கு முஸ்லிம்களும் விதிவிலக்கு அல்ல. அதேவேளையில், அவ்வாறு கலப்புத் திருமணம் செய்வதை மதத் தீவிரவாதம் என வரையறுப்பது எப்படி நியாயமாகும்? 
முதலாவது திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்த ஓர் ஆணோ அல்லது பெண்ணோ மதம் மாறி இரண்டாவதாக கலப்புத் திருமணம் புரியும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறுகின்றன. அத்தகைய முடிவை அவர்கள் எடுப்பதற்கு உணர்வுரீதியாக பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
அதற்காக, சொந்த பெற்றோர்கள் மீதே மதத் தீவிரவாதக் குற்றச்சாட்டை பிள்ளைகள் முன்வைத்தால் அவர்கள் சகித்துக் கொள்வார்களா? இந்தக் கேள்விக்கான விடையை எங்கு தேடுவது? 

கட்டுரையாளர்: துணைவேந்தர், ஹைதராபாத் தேசிய சட்டப் பல்கலைக்கழகம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com