மக்களுக்காக, மக்கள் துணையோடு..!

தமிழகத்தில் குறிப்பாக, கடலோரப் பகுதிகளில் மிகக் கடுமையான மழை ஒரே நேரத்தில் பெய்து அனைவரையும் மிரள வைத்துவிட்டது.

தமிழகத்தில் குறிப்பாக, கடலோரப் பகுதிகளில் மிகக் கடுமையான மழை ஒரே நேரத்தில் பெய்து அனைவரையும் மிரள வைத்துவிட்டது. தற்போது புயல் வீசி கன்னியாகுமரியை சிதைத்துவிட்டிருக்கிறது. 2004-ஆம் ஆண்டு சுனாமிக்குப் பிறகு இயற்கைப் பேரிடர்கள் தொடரும் என்பதைத் தொடர்ந்து சர்வதேச ஆய்வு நிறுவனங்கள் அறிவித்துக்கொண்டே இருக்கின்றன. அந்த அறிவிப்புகள் நம் காதில் ஏறவில்லை என்பதை நாம் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கும் இழப்புகளைப் பார்க்கும்போது புலப்படுகிறது.
இன்று கன்னியாகுமரியில் நடந்த இயற்கைப் பேரிடருக்குப் பின் நம் ஊடகங்கள், அரசியல் கட்சிகள் பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து அரசுக்கு எதிரான விமர்சனங்களைத் தொடுக்கின்றனர். விமர்சனங்கள் இயல்பானதே, பாதிக்கப்பட்டவர்கள் அப்படித்தான் விமர்சனம் செய்வார்கள், பாதிக்கப்பட்டவர்கள் சார்பாகத்தான் அரசியல் கட்சிகளும் விமர்சனம் செய்யும்.
இன்று பொதுத்தளங்களில் இந்த இயற்கைப் பேரிடர் பற்றி வைக்கப்பட்டுள்ள கருத்துகளில் பெரும்பாலானவை பிரச்னையின் மூலத்தைத் தொடவில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இன்றைய இழப்புகளை நோக்கும்போது அறிவியல்பூர்வமான பேரிடர் முன் தயாரிப்பு (ஈண்ள்ஹள்ற்ங்ழ் டழ்ங்ல்ஹழ்ங்க்ய்ங்ள்ள்) பணிகள் செய்யப்படவில்லை என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
நம் அரசாங்கச் செயல்பாடுகளில் பேரிடர் மேலாண்மை என்பதை எல்லா வளர்ச்சிச் செயல்பாடுகளிலும் மையப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அது நடைபெற்றிருந்தால் இந்தப் பேரிடரால் வந்த இழப்பைக் குறைத்திருக்கலாம், பாதிப்பைக் குறைத்திருக்கலாம். இப்படி வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று கூறுவது விஞ்ஞான உலகில் ஏற்க இயலாது, இனிமேலும் இப்படி கூறக்கூடாது. 
பருவநிலை மாற்றத்தின் அடிப்படையில் பேரிடர் மேலாண்மைக்கான கொள்கை என்பது எப்போதோ மத்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு விட்டது. பேரிடர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து நிர்வாகக் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது மத்திய அரசு.
மேலும், பேரிடர் மேலாண்மைக்கான சட்டமும் இயற்றப்பட்டுவிட்டது. அந்தச் சட்டத்தின் அடிப்படையில் பேரிடர் தயார் நிலைக்கு அரசும், நிர்வாகமும், மக்களும் தயார்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்தப் பணிகளில் உள்ளாட்சிக்கு மிகப்பெரும் பொறுப்பும் பணிகளும் உள்ளன. தேர்தல் நடத்தப்படாததால், உள்ளாட்சி அமைப்புகளே இப்போது தமிழகத்தில் இல்லை என்பதால் "பேரிடர் முன் தயாரிப்பு' இங்கு நடைபெறவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இன்றைய நெருக்கடிகள் நமக்குத் தெளிவுபடுத்துவது, பேரிடர் தயாரிப்புக்கான பார்வை நம்மிடம் இல்லை என்பதைத்தான். இதற்கான பார்வை நமக்கு வர வேண்டுமென்றால் சூழலியல், பருவநிலை மாற்றம், பல்லுயிர்ப் பெருக்கம், வெப்பமயமாதல் பற்றிய புரிதலும் பார்வையும் நம் ஆட்சியாளர்களுக்கும் நம் குடிமை சமூகத்திற்கும் இருக்க வேண்டும்.
இனிமேலாவது நாம் இன்று சந்திக்கின்ற பிரச்னைகளை மீண்டும் சந்திக்காமல் இருக்க வேண்டும் என்று நினைத்தால், பல அடிப்படைப் பணிகளைச் செய்தாக வேண்டும். அது மிகவும் கடினமான பணி. முதலில் நம் நகரங்களில் இந்தப் பணிகளைத் தொடங்க வேண்டும். ஏனென்றால், நகரங்கள்தான் பொருளாதார வளர்ச்சி மையங்களாகவும், மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களாகவும் இருக்கின்றன. இதற்கு மிக முக்கியப் பணியாக நம் நகர கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்ய முனைய வேண்டும். இந்த நகர மறுசீரமைப்பு என்பது ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில்தான் தொடங்க வேண்டும். 
ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்றவுடன் குடிசைப் பகுதிகளைப் பெயர்த்து எறிவது என்றுதான் பலர் எண்ணிச் செயல்படுகின்றனர். இன்றைக்கு நாம் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்குப் பதில் அவற்றை முறைப்படுத்தி விட்டோம். செய்த தவறுகளைத் திருத்துவதற்கு பதில் நியாயப்படுத்திக் கொண்டோம். அங்குதான் தவறு தொடங்குகிறது. எதோ அரசுக்கு அல்லது உள்ளாட்சிக்கு வரவேண்டிய வருவாயைக் கொண்டு வந்துவிட்டோம் என்று எண்ணி நாம் செய்து வந்த முறைகேடுகளை நியாயப்படுத்திக் கொண்டோம். இதில், ஆக்கிரமிப்பு செய்த பெரு நிறுவனங்கள், பெரும் செல்வந்தர்கள், அரசாங்க அமைப்புகள் என அத்தனை பேருக்கும் பங்குண்டு. இதில் மிகப்பெரிய வணிகமே நடந்தேறியது.
ஆக்கிரமிப்பு என்றவுடன் அனைவர் மனதிலும் பதிவது ஏழைகள் வாழும் குடிசைப் பகுதிகள்தான். குடிசைகள் ஆக்கிரமிப்பால் பேரிடர் ஏற்படும்போது நகரங்களுக்குப் பெரிய அழிவு ஏற்படாது, குடிசைகளுக்குத்தான் இழப்பு ஏற்படும். ஆனால், குடிசைகளால் ஏதோ இழப்பு ஏற்படுவதுபோல் நாம் ஒரு பார்வையை உருவாக்கி வைத்துள்ளோம்.
பெரிய நிறுவனங்கள், அரசுத்துறைகள், பெரும் செல்வந்தர்கள், அரசியல்வாதிகள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து பெரிய அளவில் பொதுச்சொத்துகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அது பொதுச்சொத்துகளாக இருக்கலாம், நீர்வழிகளாக இருக்கலாம், கால்வாய்களாக இருக்கலாம், ஏரிகளாக இருக்கலாம், குளங்களாக இருக்கலாம், சிறிய குட்டைகளாக இருக்கலாம், சதுப்பு நிலங்களாக இருக்கலாம், இவை அனைத்தையும் ஆக்கிரமித்துவிட்டு, அதை தங்களின் பண பலத்தால், அரசியல் செல்வாக்கால் முறைப்படுத்திக் கொண்டுவிட்டனர்.
இந்த வெள்ளப் பேரிடர், வறட்சிப் பேரிடர், புயல் பேரிடர், சுனாமிப் பேரிடர் என்று வரும்போதெல்லாம் நாம் அதிகமாகச் சிந்திப்பது நிவாரணம். பேரிடர் நிவாரணம்தான் நம் சிந்தையில் இருக்கும். பேரிடர் தயாரிப்பு நிலையோ, பேரிடர் மேலாண்மையோ, பேரிடர் சேத தவிர்ப்புத் திட்டமிடுதலோ நம் சிந்தனையில் வருவதே இல்லை. இவை பற்றிய விஞ்ஞானப்பூர்வ அணுகுமுறையோ, ஆக்கப்பூர்வ செயல்பாடுகளோ இல்லை என்பதுதான் நாம் இன்று எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குக் காரணம். இன்னும் நமக்கு மக்கள் மூலதனம் என்பதே தெரியவில்லை. அவர்களை ஒரு பயனாளி என்பதற்குமேல் அல்லது மனுதாரர் என்பதற்கு மேல் அல்லது வாக்காளர் என்பதற்கு மேல் அவர்கள் அரசாங்கத்தில் ஒரு பங்காளி, அவர்களுக்கும் பொறுப்புண்டு, அறிவுண்டு, ஆற்றல் உண்டு, சதியுண்டு, மற்றும் பொதுச் சிந்தனையுண்டு என்று எண்ணி பொதுமக்களைத் தயார் செய்வதில்லை.
பேரிடர் தயாரிப்புக்கு மக்கள் தயாரிப்புத்தான் மிக முக்கியமானது. அடுத்து பேரிடர் காலங்களில் சமூக மூலதனத்தை பயன்படுத்த அரசு கற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் அரசாங்கம் அனைவருடனும் சேர்ந்து பணி செய்ய முயற்சிக்க வேண்டும். பேரிடர் முன் தயாரிப்பில், பேரிடர் மேலாண்மையில், நிவாரணத்தில் யாரையும் தவிர்க்கக் கூடாது. அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட நம் அரசு பழக வேண்டும். 
அரசியல் கட்சிகள், அரசுடன் சேர்ந்து பணி செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். கேரளத்தில் மீனவர்களை மீட்புப் பணியில் அரசுப் பணியாளர்களுடன் சேர்ந்து அரசியல் கட்சியினர் பணியாற்றுகிறார்கள். 
அதேபோல் ஆறுகளுடன் கால்வாய்களை இணைக்கும் மிகப்பெரிய தூர்வாரும் பணி கேரளத்தில் நடந்து வருகிறது. இதில் அரசாங்கம் மக்களுடன் பணியாற்றுகிறது. இந்தப் பணியை அரசின் பணத்தில் அரசாங்க அலுவலர்கள் செய்யவில்லை. பொதுமக்களிடம் நிதி திரட்டி, அனைத்துக் கட்சிக்காரர்களும் ஒன்று சேர்ந்து நவ கேரளத்தை உருவாக்க அனைவரும் செயல்பட்டு வருகின்றனர்.
மழைக்காலப் பேரிடரிலிருந்து நாம் மீள வேண்டுமென்றால், மிகத் தீர்க்கமான முடிவினைத் தமிழக அரசு எடுக்கத் துணிய வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நீர் நிலைகளைப் புதுப்பித்தல், நீர் வழித்தடங்களைக் கண்டுபிடித்து அவற்றை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்தல் ஆகியவற்றை, மக்களின் துணையுடன், எல்லா அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்டால்தான் தமிழகம் பேரழிவுகளை எதிர்கொள்வதிலிருந்து தப்ப முடியும்.
அடுத்து, இனிமேல் பொருளாதார வளர்ச்சி, மேம்பாடு, முன்னேற்றம் என்ற எல்லாச் செயல்பாட்டுத் திட்டங்களையும் வடிவமைத்து முடிவு எடுக்கும்போது அதன் பின்புலத்தில் பருவநிலை மாற்றம், சூழலியல், பல்லுயிர்ப் பெருக்கம், இயற்கைவளப் பாதுகாப்பு என்ற கருத்தாக்கங்களை வைத்து செயல்படவில்லை என்றால், நாம் ஆண்டுதோறும் இப்படிப்பட்ட அவல நிலையைச் சந்திக்க வேண்டி வரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com