கட்சித் தாவல்களுக்குக் கடிவாளம்

நாடாளுமன்ற மாநிலங்களவையின் உறுப்பினர் பதவியிலிருந்து சரத் யாதவ், அலி அன்வர் அன்சாரி ஆகியோரை நீக்கி அண்மையில் உத்தரவு பிறப்பித்தார்

நாடாளுமன்ற மாநிலங்களவையின் உறுப்பினர் பதவியிலிருந்து சரத் யாதவ், அலி அன்வர் அன்சாரி ஆகியோரை நீக்கி அண்மையில் உத்தரவு பிறப்பித்தார் குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு. அதற்கு அவர் குறிப்பிட்ட காரணங்கள், கட்சித் தாவல் தடைச் சட்டத்தை வலுப்படுத்துபவையாகவும், அதற்கு புதிய கோணம் தருபவையாகவும் அமைந்துள்ளன.
மாநிலங்களவையின் உறுப்பினர் பதவியிலிருந்து 'தாமாகவே பதவி விலகுவது' தொடர்பான விவகாரங்களில் வரும் காலத்தில் அவைத்தலைவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான உதாரணத்தை அவரது முடிவு உருவாக்கியிருக்கிறது.
அதுமட்டுமல்ல, இத்தகைய விவகாரங்களைத் தேவையின்றி நீண்ட காலம் இழுத்தடிக்காமல், மூன்று மாதங்களுக்குள் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்ற நிலையும் அவரது முடிவால் ஏற்பட்டிருக்கிறது. 
இவ்விரு எம்.பி.க்களின் பதவிப் பறிப்புக்குப் பின்புலத்தில் கட்சிக்கு எதிரான அவர்களது நிலைப்பாடு காரணமாக இருந்துள்ளது. பிகார் சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சி- லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுடன் மகா கூட்டணி அமைத்து, வென்று, ஆட்சியைப் பிடித்தது. ஆனால், குறுகிய காலத்தில் கூட்டணியில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால், மகா கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக ஐக்கிய ஜனதாதளத்தின் தலைவரும் பிகார் முதல்வருமான நிதீஷ்குமார் அறிவித்தார். மேலும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியையும் தக்கவைத்துக் கொண்டார். ஆனால், நிதீஷ்குமாரின் முடிவை கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களான சரத் யாதவும் அலி அன்வர் அன்சாரியும் எதிர்த்தனர்.
எனினும், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்குள் பிளவு ஏற்படுவதை தனது செல்வாக்கால் தடுத்த நிதீஷ்குமார், கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்களின் பெருவாரியான ஆதரவை உறுதிப்படுத்தினார். தவிர, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவராக இருந்த சரத் யாதவையும், உறுப்பினர் அலி அன்வர் அன்சாரியையும் நீக்குமாறு மாநிலங்களவைத் தலைவருக்கு ஐக்கிய ஜனதா தளம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 
அரசியல் சாஸனத்தின் பத்தாவது அட்டவணையின் 2(ஏ) பத்தி, கட்சித் தாவல் தடைச்சட்டம் குறித்து தெளிவான விளக்கம் அளித்திருக்கிறது. தான் சார்ந்த கட்சிக்கு எதிராக அவையில் வாக்களித்தாலோ, கட்சித் தலைமையின் ஆணைக்கு எதிராகச் செயல்பட்டாலோ, கட்சியிலிருந்து அவர் 'தாமாகவே விலகியதாகக் கருதி', அவரது உறுப்பினர் பதவியைப் பறிக்கலாம் என்பது விதியாகும். 
ஆயினும், தற்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து இவ்விருவரும் நீக்கப்பட்டுள்ள விவகாரத்தில், அவர்களது செயல்பாடுகளை கட்சியிலிருந்து தாமாகவே விலகுவதற்கான நடத்தையாகக் கொள்ளலாமா என்ற கேள்வி எழுந்தது. 
ஆனால், சரத் யாதவும், அலி அன்வரும் ஐக்கிய ஜனதாதளத்திலிருந்து தாங்கள் விலகவில்லை என்று வாதிட்டனர். உண்மையில், தேர்தலுக்கு முன் அமைத்த கூட்டணியிலிருந்து விலகியதன் மூலமாக மக்களின் தீர்ப்புக்கு விரோதமாக நிதீஷ்குமார் செயல்படுவதாகவும், கட்சியின் ஆதாரக் கொள்கைகளுக்கு மாறாக அவரது செயல்பாடுகள் இருப்பதாகவும் அவர்கள் குறை கூறினர். கூட்டணியிலிருந்து விலகி பாஜகவுடன் நிதீஷ்குமார் கைகோத்ததே கட்சிப் பிளவுக்கு வித்திட்டது என்று அவர்கள் குற்றம் சாட்டினர். 
அதுமட்டுமல்ல, தேர்தலுக்கு முந்தைய கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் விலக முடியாது என்றும் அவர்கள் கூறினர். ஆனால், மகா கூட்டணியையும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியையும் சமமாகக் கருதும் அவர்களது வாதம் ஏற்கக் கூடியதாக இல்லை. 
தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை மாற்றக் கூடாது என்று கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு, இரண்டாவது நிர்வாக சீர்திருத்த ஆணையம் ஏற்கெனவே பரிந்துரைத்துள்ளது. தற்போதைய சூழலில் கூட்டணி அரசியல் தவிர்க்க இயலாததாக உள்ளதால், தேர்தலுக்கு முந்தைய கூட்டணியின் உறுப்புக் கட்சிகள் தேர்தலுக்குப் பின் கூட்டணி மாறுவதைத் தடுப்பது சட்டப்படி அவசியம் என்று அந்த ஆணையம் கூறியது.
ஆனால், அந்தப் பரிந்துரையை நாடாளுமன்றம் ஏற்கவில்லை. எனவே, தற்போது நடைமுறையிலுள்ள கட்சித் தாவல் தடைச் சட்டமே பரிசீலிக்கப்பட வேண்டும். அது கட்சிகளை மட்டுமே கட்டுப்படுத்துகிறது. கட்சி மாறும் மக்கள் பிரதிநிதிகள் புதிதாக தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்றே, அரசியல் சாஸன மறுசீரமைப்பு ஆணையமும் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், மாநிலங்களவையில் ஐக்கிய ஜனதாதளக் குழுவுக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சரத் யாதவ், அலி அன்வர் ஆகியோரின் கருத்துகளை நிராகரித்த அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, ''நான் ஜனநாயகத்தின் அடிப்படை அம்சத்தைக் கடைப்பிடித்தாக வேண்டும். ஜனநாயகத்தின்படி, பெரும்பான்மை யாருக்கு உள்ளதோ அவர்களது கருத்தே ஏற்கப்பட வேண்டும்'' என்று விளக்கம் அளித்தார். 
சரத் யாதவ் , அலி அன்வர் ஆகிய இருவரைப் பொருத்த வரை, அவர்களுக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்குள் பெரும்பான்மை ஆதரவில்லை. தவிர மகா கூட்டணியிலிருந்து விலகிய நிதீஷ்குமாரை விமர்சித்து, ஐக்கிய ஜனதா தளத்தின் எதிரிகளுடைய மேடையில் இவ்விருவரும் பங்கேற்றுள்ளனர். இதுவே கட்சித் தாவல் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போதுமானது என்று வெங்கய்ய நாயுடு அறிவித்தார்.
எனினும், இவ்விருவரும் ஐக்கிய ஜனதாதளத்திலிருந்து 'தாங்களாகவே விலகியதாக' பொருள் கொள்ள முடியுமா என்பது இந்த விவகாரத்தின் மையக்கேள்வியாக உள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த இருவேறு தீர்ப்புகளைச் சார்ந்து மாநிலங்களவைத் தலைவர் செயல்பட்டுள்ளார்.
ராம் நாயக் (எதிர்) மத்திய அரசு என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு குறிப்பிட்டது: ''உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதும், 'தாமாகவே பதவி இழப்பதும்' ஒன்றல்ல. அவற்றினிடையே விரிவான உட்பொருள் வேறுபாடு உள்ளது. கட்சியிலிருந்து முறைப்படி விலகாதபட்சத்திலும், ஒருவரது செயல்பாட்டின் அடிப்படையில் அவர் கட்சி உறுப்பினர் பதவியை தாமாகவே இழப்பதாக அனுமானிக்கலாம்'' என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மற்றொரு வழக்கிலும், ''கட்சி உறுப்பினர் பதவியை தாமாகவே இழப்பது என்னும் நடவடிக்கை, விளக்கமாகவோ, குறிப்பாகவோ கூறப்படலாம்'' என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ராம் நாயக் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு முன்னர், எட்டாவது நாடாளுமன்றத்தின் உரிமைக்குழு, 'தாமாகவே உறுப்பினர் பதவியை இழப்பது' என்றால் என்ன என ஆராய்ந்தது. அரசியல் சாஸனத்தின் அந்தப் பிரிவுக்கு ஒரே விளக்கத்தை அளிக்க முடியாது என்று அது கூறியது. 
''சட்டத்தை உருவாக்கியவர்களின் நோக்கம் தெளிவாகவே உள்ளது. கட்சியிலிருந்து உறுப்பினர் வெளிப்படையாக விலகுவது மட்டுமின்றி, அவரது நடத்தையாலும் கட்சி உறுப்பினர் பதவியை தாமாகவே இழக்கலாம். ஒருவர் கட்சிக்கு எதிரான நடவடிக்கையை வெளிப்படுத்துவாரேயானால், அதற்குரிய விலையை பதவியிழப்பாக அவர் கொடுத்தாக வேண்டும்'' என்பது நாடாளுமன்ற உரிமைக்குழுவின் விளக்கம்.
அதுமட்டுமல்ல, தனக்கு முன் மாநிலங்களவைத் தலைவராக இருந்த சிலர் இத்தகைய வழக்குகளில் முடிவெடுக்க நீண்ட நாட்கள், தேவையின்றித் தாமதித்துப் பரவலான விமர்சனத்தை எதிர்கொண்டதையும் வெங்கய்ய நாயுடு தனது உத்தரவில் பதிவு செய்துள்ளார்.
எனவே, மூன்று மாதங்களுக்குள் இத்தகைய வழக்குகளில் முடிவெடுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய நடவடிக்கைகள் மூலமாகவே கட்சித் தாவல் பிரச்னைகளைத் தடுக்க முடியும்.

கட்டுரையாளர்:
தலைவர், பிரஸார் பாரதி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com