ஒரு வீரத்துறவியின் தேச பக்தி!

ஒரு வைரத்தைக் கொண்டு இன்னொரு வைரத்தைத் தீட்டுகின்றபோது, இரண்டு வைரங்களும் கூர்மை பெறும். அதுபோல சுவாமிஜி விவேகானந்தர் தெய்வீகத்தை நெஞ்சில் ஏந்தியபொழுது தேசபக்தி பெருமை பெற்றது
ஒரு வீரத்துறவியின் தேச பக்தி!

ஒரு வைரத்தைக் கொண்டு இன்னொரு வைரத்தைத் தீட்டுகின்றபோது, இரண்டு வைரங்களும் கூர்மை பெறும். அதுபோல சுவாமிஜி விவேகானந்தர் தெய்வீகத்தை நெஞ்சில் ஏந்தியபொழுது தேசபக்தி பெருமை பெற்றது. அவர் தேசியத்தை நெஞ்சில் ஏந்தியபோது, தெய்வீகம் மகிமை பெற்றது. குடும்பத்தை விட்டு வெளியேறுபவர்கள்தாம் துறவிகள். ஆனால், சுவாமிஜி இந்தியா என்ற குடும்பத்தையே ஒரு கட்டுக்கோப்பிற்குள் கொண்டு வந்தவர்.
இராமகிருஷ்ண மடத்தைத் தோற்றுவித்த சுவாமிஜி, அதற்கொரு சட்ட திட்டத்தையும் வகுத்தார். மிஷினின் நோக்கங்களும் இலட்சியங்களும் முற்றிலும் ஆன்மிகத்தன்மையும் மனிதாபிமானத்தன்மையும் மிக்கவையே. அதற்கு அரசியலோடு எந்தச் சம்பந்தமும் கிடையாது என வரையறுத்தவரும் சுவாமிஜியே.
ஒரு மலரில் தேனை எடுக்கத்தான் வண்டு செல்கிறது ஆனால், அது அறியாமலேயே அதன்மேல் மகரந்தங்கள் ஒட்டிக் கொள்வதைப் போல், விடுதலை வேட்கை அவருடைய நெஞ்சில் நீறு பூத்த நெருப்பாயிற்று. என்றாலும், அவருடைய முகத்திலும் அகத்திலும் படிந்திருந்தது, சந்நியாசி எனும் கோட்பாடே.
1893-ஆம் ஆண்டு சுவாமிஜி அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்பு, உலகப் படத்தில் இந்தியா இருந்தது. சுவாமிஜி சிகாகோவில் ஆற்றிய சொற்பொழிவுகளுக்குப் பின்னர் இந்தியாவுக்குள் உலகம் வந்தது. விவேகானந்தருக்கு முன்பு 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், முதன் முதலாக வேதாந்தப் பிரசங்கங்கள் செய்வதற்குச் சென்றவர் விபின் சந்திர பாலர்.
அமெரிக்காவில் விபின் சந்திரபாலர் பேச்சைத் தொடங்கியவுடன், சில அமெரிக்கர்கள் இடைமறித்து, "நீங்கள் அடிமை நாட்டிலிருந்து வந்து இங்கு ஆன்மீக விடுதலை பற்றிப் பேச என்ன யோக்கியதை இருக்கிறது முதலில் உங்கள் நாடு விடுதலை பெறட்டும். பிறகு நீங்கள் வந்து உங்கள் சமயத்தின் தத்துவத்தையும், ஆன்மீக விடுதலையைப் பற்றியும் பேசுங்கள்' எனக்கூறி, அவரைத் திகைக்கச் செய்துவிட்டனர். ஆனால், சுவாமிஜி அமெரிக்காவில் வேதாந்த வித்துக்களை அள்ளி வீசியபொழுது, அத்தனை அமெரிக்கர்களும் மீண்டுமொருமுறை நயாகரா அருவியில் நீராடியது போன்ற ஆனந்தத்தைப் பெற்றனர்.
விபின் சந்திர பாலருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை எண்ணியே, சுவாமிஜி, தெய்வீகத்தை ஒரு கண்ணாகவும், தேசியத்தை மறு கண்ணாகவும் ஏற்றுக் கொண்டார் போலும். தெய்வீகம் எனும் பாலில் தேசபக்தி எனும் தேன் கலந்தாற்போல் அமைந்தது, சுவாமிஜியின் வாழ்வு. சான்றாக ஒரு நிகழ்ச்சியைச் சுட்டலாம். 1896-ஆம் ஆண்டு இலண்டன் மாநகரத்தில் சுவாமிஜி, ஒரு சமயச் சொற்பொழிவை நிகழ்த்தினார்.
ஆங்கிலேயர் ஆட்சியில் அதிகாரிகளாக இருந்து ஓய்வு பெற்ற சில ஆங்கிலேயர்கள், தகராறு செய்வதென்றே திட்டமிட்டு, அக்கூட்டத்திற்கு வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் சுவாமிஜி பேசிக்கொண்டிருந்தபொழுது, இடை இடையே குறுக்கிட்டு, இந்திய மண்ணின் மகான்களைத் தரக்குறைவாகப் பேசினார். அதுவரை அமைதியாகக் பேசிக்கொண்டிருந்த சுவாமிஜி, அந்த ஆங்கிலேயனை நோக்கி ஓர் உக்கிரப் பார்வை பார்த்தார். அவருடைய கூரிய பார்வையைக் கூர்ந்து கவனித்த ஆங்கிலேயர் அதிர்ச்சி அடைந்தார்.
சுவாமிஜிக்கு அப்பொழுது தேச பக்தி நரசிங்க அவதாரமாய் எழுந்தது. பேச்சைத் தொடங்கிய சுவாமிஜி, உலக நாடுகளை எல்லாம் அடிமைப்படுத்தி, அராஜகம் செய்து வரும் ஆங்கிலேயர்களின் கொடுங்கோன்மையை ஒரு பெரிய பட்டியலிட்டார். அதைக்கேட்ட அந்த ஆங்கிலேயன் கண்களில் கண்ணீர் கசியத் தொடங்கியது.
அவனை வெளியே துரத்துவதற்கு அவையினர் முயன்றபோது, சுவாமிஜி தடுத்து நிறுத்தி, "அவரைத் தொந்தரவு செய்யாதீர்கள், அவனும் நாராயணனே' என்றவுடன் அனைவரும் மகுடியின் நாதம் கேட்ட நாகங்களாய் அடங்கினர். இந்நிகழ்ச்சியிலிருந்து சுவாமிஜியின் வாழ்க்கையில் தேசியமும் தெய்வீகமும் எவ்வாறு கைகோத்து நடந்தன என்பதை அறியலாம்.
சுவாமிஜியின் நைட்டிக பிரம்மச்சரியத்திற்கும், புலனழுக்கற்ற துறவித்தன்மைக்கும், ஹாங்காங்கை அடுத்திருந்த கான்டன் நகரில் நடந்த ஒரு நிகழ்வைச் சான்றாகச் சொல்லலாம். கான்டன் நகரில் இருந்த மக்கள் பூனை, நாய் போன்றவற்றின் இறைச்சியை உண்பவர்கள்.
ஆனால், அவர்களுக்கென்று ஒரு புத்த பகவான் கோயில் இருந்தது. ஆனால், அந்த புத்த விஹாரைக்குள் சீனர்களைத் தவிர வேறு மதத்தினர், நாட்டவர் உள்ளே நுழைந்தால், கத்தி, கம்பு, கழிகளை எடுத்துக்கொண்டு தாக்க வந்துவிடுவர். அந்தக் கோயிலுக்குள் நுழைய விரும்பிய சுவாமிஜியிடம், மொழி பெயர்ப்பாளர் இத்தகவலைச் சொன்னார். அதற்குச் சுவாமிஜி, "அடிக்கத்தானே செய்வார்கள் கொன்றுவிடமாட்டார்களே' எனக்கூறி உள்ளே நுழைந்தார்.
உடனே அங்கிருந்த முரடர்கள் உருட்டுக் கட்டைகளை ஏந்திக்கொண்டு, சுவாமிஜியைத் தாக்குவதற்கு ஓடிவந்தனர். அதைக்கண்ட மொழி பெயர்ப்பாளர் ஓட ஆரம்பித்தார். சுவாமிஜி, "ஓடாதே நில் நான் ஒரு சந்நியாசி. இந்திய யோகி என்பதை அவர்களிடம் சீன மொழியில் மொழிபெயர்த்துச் சொல்' என்றவுடன், அவரும் அப்படியே செய்தார். மொழிபெயர்ப்பாளரின் சீன வார்ததைகளை உள்வாங்கிக்கொண்ட சுவாமிஜி, "நான் ஓர் இந்திய யோகி' என ஓங்கி ஒலித்தார். உடனே முரடர்கள் தங்கள் கையிலிருந்த உருட்டுக்கட்டைகளைக் கீழே போட்டுவிட்டு, சுவாமிஜியின் காலில் வீழ்ந்தனர்.
சுவாமிஜி ஒரு ஆன்மீகவாதி என்றாலும், அடிப்படையில் ஓர் இந்தியர். திலகர், சுப்பிரமணிய சிவா, வ.உ.சி. போன்ற தீவிரவாதிகள் ஊட்டிய விடுதலையுணர்வை, விவேகானந்தரும் பேணி வளர்த்திருக்கிறார். காந்தியடிகள், "விவேகானந்தரின் இலக்கியத்தை ஆழ்ந்து படித்திருக்கிறேன். அவருடைய படைப்புகளைப் படித்த பிறகுதான், எனக்குத் தாய்நாட்டின் மீதுள்ள பற்று, ஆயிரம் மடங்கு பெருகியுள்ளது' என்று கூறியுள்ளார்.
அவரைத் தொடர்ந்து பண்டித நேரு, "சாதாரணமாக நாம் எடுத்துக்கொள்ளும் பொருளில் உள்ள அரசியல்வாதி அன்று விவேகானந்தர். புதிய இந்தியாவின் தேசிய இயக்கத்தை ஆரம்பித்த முன்னோடிகளில், அவரும் ஒருவர்' என எழுதுகிறார்.
ரெளலட் சட்டம் எனும் கருப்புச் சட்டம் சுவாமிஜியினுடைய மனத்தை வெகுவாக வேக வைத்துவிட்டது. அந்நிலையில், சுவாமிஜி தம்முடைய அந்தியந்த சீடராகிய நிவேதிதா தேவியிடம், "எனது பணி ராமகிருஷ்ணரின் போதனைகளையோ, வேதாந்தத்தையோ பரப்புவதன்று, மாறாக மக்களுக்கு ஆண்மையூட்டுவதுதான்.
நாம் அணிந்துள்ள இந்த மஞ்சள் நிறத் துறவியாடை, போர்க்களத்தில் அணியப்படும் மரண உடை ஆகும். இலட்சியத்திற்காக மரணம் அடைவதே நமது குறிக்கோள்' எனத் தெரிவித்திருக்கிறார். ரெளலட் சட்டத்தின் பின்விளைவுகளை ஆராய ஆங்கில அரசு ஒரு குழுவை நியமித்தது. அந்த அறிக்கை, விவேகானந்தர் சந்நியாசி உடையில் இருந்த மூர்க்கமான அரசியல்வாதி எனக் குறிக்கிறது.
நிவேதிதா தேவி, இந்தியாவைப் பற்றிய சிந்தனை அவருக்கு மூச்சுக்காற்றைப் போல் இருந்ததெனத் தம் அமெரிக்கத் தோழிக்கு எழுதுகிறார். சுவாமிஜி அமரத்துவம் அடைந்தபின், அவரைப் பற்றி எழுத வந்த மகாகவி பாரதி, "காலஞ்சென்ற விவேகானந்த பரமஹம்ச மூர்த்தியே, இந்த சுயாதீனக் கிளர்ச்சிக்கு அஸ்திவாரம் இட்டவர் என்பதை உலகறியும்' எனப் பத்திரிகையில் எழுதினார்.
சுவாமிஜியின் வீரம் கொப்பளிக்கும் பேச்சுக்களைச் செவிமடுத்த சுப்பிரமணிய சிவா, தமது பெயரைச் சுதந்திரானந்தர் என மாற்றிக்கொள்ளும் அளவுக்குச் சென்றிருக்கிறார்.
சுவாமிஜியின் தேசபக்தி, நாட்டு விடுதலையோடு நிற்கவில்லை, விடுதலைக்குப் பின்னரான நாட்டு வளத்தைப் பற்றியும் சிந்தித்தது. சுவாமிஜி ஜப்பான் சென்ற நேரத்தில், அங்குத் தீப்பெட்டிகளை மொத்த கொள்முதல் செய்ய வந்திருந்த ஸர் ஜாம்ஷெட்ஜி டாட்டாவைச் சந்திக்கிறார்.
அந்நிலையில் ஜாம்ஷெட்ஜி டாடாவிடம், நீங்கள் இந்தத் தொழிற்சாலைகளை இந்தியாவில் தொடங்கினால், நீங்கள் இங்கிருந்து தீப்பெட்டிகளை இந்தியாவில் இறக்குமதி செய்ய வேண்டியது இருக்காதே இந்தியச் செல்வ வளமும் ஜப்பானுக்குச் செல்லாமல் இருக்குமே வேலையின்றித் தவிக்கும் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பும் கிட்டுமே எனக் கூறியதிலிருந்து, சுவாமிஜியின் எதிர்காலக் கனவும் வெளிப்படுகிறது.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை விரிவாக எழுதிய ஆர்.ஜி. பிரதான், "இளம் இந்தியா தேசத் தன்மை பெற்றது. அதன் தேசியம் தன் உண்மை இயல்பை உணர்ந்தது. எனவே, சுவாமி விவேகானந்தரை இந்தியத் தேசியத்தின் தந்தை என்றே கூறிவிடலாம். அவரே அதனைப் பெரிதும் உருவாக்கினார். அதன் மிக உயர்ந்த, மிக உன்னதமான அம்சங்களை எல்லாம் அவர்தம் சொந்த வாழ்க்கையிலே கொண்டிருந்தார்' என எழுதியிருப்பது, சுவாமிஜியின் தேசபக்தி புடம்போட்ட தங்கமாய் மிளிர்வதைக் காட்டுகிறது.
சுவாமிஜியின் தியாகத் தழும்புகளை எண்ணிப் பார்த்த அந்த மண்ணின் மைந்தர் நேதாஜி, "சுவாமிஜி ஓர் அபூர்வமான மனிதர். நாடி நரம்புகளில் இரத்தம் கொதித்துப் பாய்கின்ற ஆண் மகன் அவர். எதற்கும் சளைக்காமல் போராடுகின்ற போராளி. நாட்டு மக்களை முன்னேற்றுவதற்காக வேதாந்தத்திற்குச் செயல் வடிவம் கொடுத்தவர் அவர்' எனப் பாராட்டியிருப்பது, அரசாங்க மடலில் பதிக்கப்பெற்ற இராஜமுத்திரை ஆகும்.
பொற்கொல்லர் வீடுகளில் நகை செய்வதற்காக ஒரு நெருப்புக்குடம் (உமியோடு) வைத்திருப்பார்கள். அதில் காலையில் ஒருவர் உமியைக் கொட்டி, அதன்மேல் கரித்துண்டுகளை அடுக்கி, தீக்குச்சியைத் தீட்டி பற்ற வைத்துவிடுவார்களேயானால், அது நாள் முழுதும் கனன்று கொண்டேயிருக்கும். அடுத்தடுத்து வருபவர்கள் தீக்குச்சியை எடுக்க வேண்டிய அவசியமில்லை. ஊதுகுழாயை எடுத்து நீறுபூத்த நெருப்பில் ஊதுவார்களேயானால், மீண்டும் சுடர்விட்டு எரியும்.
முதலில் தீக்குச்சியை எடுத்துப் பற்ற வைத்தவர் தாதாபாய் நெளரோஜியாக இருக்கலாம் அல்லது லாலா லஜபதிராயாக இருக்கலாம். ஆனால், பற்ற வைத்த நெருப்புக் குடத்தை அடிக்கடி ஊதுகுழல் கொண்டு ஊதி, நகை செய்து கொடுத்தவர் சுவாமி விவேகானந்தரே ஆவார்.

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com