சனநாயகத்திற்கு சாவு மணி!

தமிழகச் சட்டப்பேரவை (முந்தைய சென்னை மாகாண சட்டப்பேரவை உட்பட) இந்தியாவின் பிற மாநில சட்டப்பேரவைகளுக்கு முன் மாதிரியாகத் திகழ்ந்தது. சட்ட அறிவும், நிர்வாகத் திறமையும் நிறைந்த பலர்
சனநாயகத்திற்கு சாவு மணி!

தமிழகச் சட்டப்பேரவை (முந்தைய சென்னை மாகாண சட்டப்பேரவை உட்பட) இந்தியாவின் பிற மாநில சட்டப்பேரவைகளுக்கு முன் மாதிரியாகத் திகழ்ந்தது. சட்ட அறிவும், நிர்வாகத் திறமையும் நிறைந்த பலர் இச்சட்டப்பேரவையில் முதலமைச்சர்களாகவும், அமைச்சர்களாகவும், எதிர்க்கட்சிகளின் தலைவர்களாகவும் வீற்றிருந்து கருத்துச் செறிந்த விவாதங்களை நடத்தி சட்டப்பேரவைக்கு பெருமை தேடித் தந்துள்ளனர்.
இச்சட்டப்பேரவையில் அங்கம் வகித்த இராஜாஜி பிற்காலத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் - ஜெனரலாகப் பதவி வகித்தார். அதைப்போல இச்சட்டப்பேரவையில் அங்கம் வகித்த வி.வி. கிரி, சஞ்சீவரெட்டி, ஆர். வெங்கட்ராமன் போன்றவர்கள் இந்தியக் குடியரசுத் தலைவர்களாக பிற்காலத்தில் பதவிவகித்தனர்.
இச்சட்டப்பேரவையில் அங்கம் வகித்த காமராசர், அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும், முகமது இசுமாயில் இந்திய ஒன்றிய முசுலீம் லீக் தலைவராகவும், உ. முத்துராமலிங்கத் தேவர், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவராகவும், என். சிவராஜ் அகில இந்திய குடியரசுக் கட்சியின் தலைவராகவும் உயர்ந்து, அப்பதவிகளுக்கும், தமிழர்களுக்கும் பெருமை தேடித் தந்தனர்.
இத்தகைய பெருமை வாய்ந்தவர்கள் வீற்றிருந்த சட்டப்பேரவையில் 18-2-2017 அன்று நடைபெற்ற நிகழ்ச்சிகள் வரலாற்றில் என்றும் மாறாத தலைகுனிவை தமிழகத்திற்கு ஏற்படுத்திவிட்டன.
பேரவைத் தலைவரைச் சூழ்ந்துகொண்டு அவர் முன்னால் இருந்த ஒலி பெருக்கியை பறித்தும், மேசையைக் கீழே சாய்த்தும், கையைப் பிடித்து இழுத்தும், சட்டையைக் கிழித்தும் அவரது இருக்கையில் அமர்ந்தும் தி.மு.க. உறுப்பினர்கள் நடத்திய ரகளை ஏற்க முடியாததாகும். அவைக் காவலர்கள் முன்வந்து பேரவைத் தலைவரைக் காப்பாற்றி வெளியே கொண்டு சென்றிராவிட்டால் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டிருப்பார் என்பதில் ஐயமில்லை.
எதற்காக இந்த ரகளை? வாக்கெடுப்பை ஒத்திவைக்க வேண்டும். இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் அவர்களின் கோரிக்கையாகும். இவற்றை ஏற்க பேரவைத் தலைவர் மறுத்த காரணத்தினால் தி.மு.க. உறுப்பினர்கள் அத்துமீறி முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு என்பது சனநாயகத்தில் மிகவும் மதிக்கத் தக்கப் பொறுப்பாகும். அவையின் சட்டவிதிகளை எதிர்க்கட்சித் தலைவர் நன்கு அறிந்திருக்க வேண்டும். ஆனால், ஸ்டாலின் தனது பொறுப்பை உணர்ந்திருப்பதாகவோ, சட்டவிதிகளை அறிந்திருப்பதாகவோ தெரியவில்லை.
பேரவையின் சட்டவிதி 72-2 கீழ்க்காணுமாறு கூறுகிறது:
அமைச்சரவைமீது கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் முறைப்படி அமைந்திருக்கிறது என பேரவைத் தலைவர் கருதுவாரானால். அவர் அவையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். குரல் வாக்கெடுப்பு நடத்தலாம். அதற்கு யாரேனும் எதிர்ப்புத் தெரிவித்தால், பகுதி வாரியாக அமர்ந்திருக்கும் உறுப்பினர்களை எழுந்து நிற்கச் செய்தோ அல்லது கரங்களை உயர்த்தச் சொல்லியோ வாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் ஆதரவானவர்களை முதலிலும், எதிரானவர்களை அடுத்தபடியாகவும் எழுந்து நிற்க வைத்து அவர்களின் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளும் பணியைச் சட்டப்பேரவைச் செயலாளர் மேற்கொள்ளுவார்.
பேரவை சட்டவிதி 99-6 பிரிவின்படி வாக்கெடுப்பின் முடிவை பேரவைத் தலைவர் அறிவிக்க வேண்டும். அதை யாரும் எதிர்த்துக் கேள்விக் கேட்க முடியாது எனக் கூறுகிறது.
சட்டப்பேரவையிலோ, நாடாளுமன்றங்களிலேயோ இரகசிய வாக்கெடுப்பு என்பது எப்போது என்பதையும் விதிகள் தெளிவாகக் கூறுகின்றன. பேரவை விதி 7-4 பிரிவின் கீழ் பேரவைத் தலைவர் தேர்தலில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும்.
குடியரசுத் தலைவர் தேர்தலிலும், சட்டப்பேரவையிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும்போதும் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும். இது தேர்தல் ஆணையத்தினால் நடத்தப்படுவதாகும்.
சட்டப்பேரவைகளில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மட்டும் அல்ல. மற்ற அனைத்துத் தீர்மானங்களும் குரல் வாக்கெடுப்பு அல்லது பிரிவு வாரியாக வாக்கெடுப்பு மூலம்தான் முடிவு செய்யப்படுகிறதே தவிர, இரகசிய வாக்கெடுப்பு முறை அறவே கிடையாது.
இரகசிய வாக்கெடுப்பு முறையை ஒவ்வொரு தீர்மானத்திலும் பின்பற்றுவதானால் சட்டப்பேரவையே செயலற்றுப் போகும். இதெல்லாம் நன்கு தெரிந்திருந்தும்கூட தி.மு.க.வினர் திட்டமிட்டுக் கலவர சூழ்நிலையை ஏற்படுத்தியது ஏன்?
14-2-17 அன்று தி.மு.க.வின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் தற்போதைய நிலையில் ஆட்சி அமைக்கும் இடத்தில் தி.மு.க. இல்லை. அதைப்போல வேறு யாரையும் ஆதரிக்கும் எண்ணமும் இல்லை என அறிவித்தார்.
மீண்டும் 16-2-17 அன்று திருப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தி.மு.க. யாருக்கும் ஆதரவளிக்காது. எடப்பாடி பழனிச்சாமி அல்லது ஓ. பன்னீர்செல்வம் என முதல்வராக யார் வருவதற்கும் ஆதரவு கிடையாது என திட்டவட்டமாக அறிவித்தார்.
ஆனால், மறுநாளே 17-2-17 அன்று ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்திற்குப் பின் தி.மு.க.வின் நிலைப்பாடு மாறுகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. இதற்கு ஒட்டுமொத்த எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தி.மு.க. உறுப்பினர்கள் நம்பிக்கைத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிப்பார்கள் என ஸ்டாலின் அறிவிக்கிறார்.
இரவோடு இரவாக தி.மு.க.வின் முடிவு மாற்றப்பட்டதன் பின்னணி என்ன?
சட்டப்பேரவையில் தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து கலவர சூழ்நிலையை ஏற்படுத்தியது ஏன்?
இந்த இரண்டு கேள்விகளுக்கும் உரிய விடை ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு 19-2-17 அன்று எழுதிய கடிதத்தில் அம்பலமாகியுள்ளது.
சட்டப்பேரவை விதிகளின்படி ஒருமுறை நம்பிக்கைக் கோரும் தீர்மானம் முன்மொழியப்பட்டு அதன் மீது வாக்கெடுப்பு நடத்த முடியாமல் ஒத்திவைக்கப்பட்டால், மீண்டும் அதை முன்மொழிய ஆறு மாத அவகாசம் வேண்டும். ஆனால், பிப்ரவரி 18-ஆம் தேதி சட்டப்பேரவையில் இரண்டுமுறை அந்தத் தீர்மானத்தை முதல்வர் முன்மொழிந்தார்.
இதுவே சட்டமீறலாகும். பேரவை விதிகளின்படி இந்தத் தீர்மானம் செல்லாது. செல்லாத தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பும் செல்லத்தக்கது அல்ல என்று கூறியுள்ளார்.
பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்ற பழமொழிக்கேற்ப ஸ்டாலினின் வாயாலேயே உண்மை வெளிவந்துவிட்டது. பகல் ஒரு மணிக்கு சட்டப்பேரவையில் முதல்வர் நம்பிக்கைத் தீர்மானத்தை முன்மொழிகிறார். உடனடியாக தி.மு.க.வினர் கலவரத்தில் ஈடுபட்டு அவை நடத்த முடியாதபடி செய்கிறார்கள். பேரவைத் தலைவர் அவையை பிற்பகல் மூன்று மணி வரை ஒத்திவைக்கிறார்.
மீண்டும் அவை கூடும்போது தி.மு.க.வினர். மறுபடியும் கலவரம் செய்கிறார்கள். ஆக அவர்களின் நோக்கம் என்பது சட்டப்பேரவை நடைபெற முடியாமல் தடுத்துவிட்டால், நம்பிக்கைத் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது. ஆறு மாதம் கழித்துத்தான் சட்டப்பேரவையில் நம்பிக்கைத் தீர்மானம் கொண்டுவரமுடியும். எனவே அதற்கிடையில் சட்டப்பேரவையைத் தாற்காலிகமாக நிறுத்திவைக்க ஆளுநர் உத்தரவிட முடியும். இதற்காகத்தான் இவர்கள் திட்டமிட்டுக் கலவரம் செய்திருக்கிறார்கள் என்பது அம்பலமாகிறது.
தி.மு.க. அதன் ஆதரவு கட்சியான முசுலீம் லீக், காங்கிரஸ் மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஆகிய அனைவரையும் கூட்டிப்பார்த்தாலும் 109 உறுப்பினர்களே உள்ளனர். இந்தச் சூழ்நிலையில் தங்களால் ஒருபோதும் நம்பிக்கைத் தீர்மானத்தைத் தோற்கடிக்க முடியாது என்பதை நன்கு தெரிந்திருந்தும் திட்டமிட்டே கலவரச் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.
1957-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தி.மு.க. முதன் முதலாகப் போட்டியிட்டு 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தி.மு.க. கட்சித் தலைவரான அண்ணா அவர்கள் சட்டப்பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட யு. கிருஷ்ணாராவ் அவர்களை பாராட்டிப் பேசும் போது பின்வருமாறு குறிப்பிட்டார்.
சட்டப்பேரவைத் தலைவர் அவர்களே தங்களுடைய கட்டளைக்கு அடங்கி நல்ல முறையில் தங்களுடன் ஒத்துழைத்து இந்த சபையின் கண்ணியத்தைக் காப்பாற்றுவதில் எங்களுக்கு உண்மையிலே நல்ல நம்பிக்கையும் இதிலே பிறருக்கு நம்பிக்கை ஏற்படச் செய்ய வேண்டுமென்ற உறுதிப்பாடும் இருப்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன் என முதலில் தொடங்கி பின்னர் எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கிற நாங்கள் ஆளுங்கட்சி செய்கின்ற காரியங்கள் அத்தனையும் எதிர்ப்போம் என்று அல்ல.
ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் உள்ள உறவு மாப்பிள்ளைக்கும் மாப்பிள்ளைத் தோழர்களுக்கும் உள்ள உறவுபோல இருக்க வேண்டுமென்று கருதிக் கொண்டிருப்பவர்கள் நாங்கள். சிற்சில நேரங்களில் மாப்பிள்ளை, தம்முடைய தோழர்களின் குறும்புகளை வெறுப்பதுபோல ஆளும் கட்சியில் உள்ளவர்கள் எங்களைக் கருதக்கூடும். அப்படிப்பட்ட நேரத்தில் நாங்கள் மிகவும் சோர்ந்து போகாமல் இருக்க, தாங்கள் அருள் கூர்ந்து தங்களுடைய நியாயமான தீர்ப்புக்களை வழங்க வேண்டுமென்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என வேண்டிக்கொண்டார்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவை நிறைந்த அண்ணா பேரவைத் தலைவருக்கு கொடுத்த மதிப்பையும் அவருடைய தம்பிகள் என தங்களைக் கூறிக்கொள்வோர் பேரவைத் தலைவரை எவ்வாறு அவமதித்தார்கள் என்பதையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள் என்பதை தி.மு.க.வினர் எண்ணிப் பார்க்கவில்லை. அண்ணாவின் பாதைக்கு நேர் எதிர் பாதை அமைக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கும் அவர்கள் இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கப் போவதில்லை.

கட்டுரையாளர்:
தலைவர்,
உலகத் தமிழர் பேரமைப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com