மாற்றுக்கருத்தை மதிப்போம்

நமது நாடு ஒரு ஜனநாயக நாடு. பல்வேறு கொள்கைகளும், நம்பிக்கைகளும் கொண்ட கோடிக்கணக்கான குடிமக்கள் இணைந்து வாழும் பூமி.

நமது நாடு ஒரு ஜனநாயக நாடு. பல்வேறு கொள்கைகளும், நம்பிக்கைகளும் கொண்ட கோடிக்கணக்கான குடிமக்கள் இணைந்து வாழும் பூமி.
நமது நாட்டின் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெரும்பான்மை பலம் பெற்ற ஆளும் கட்சிகள் கோலோச்சுகின்ற போதிலும், பலத்தில் குறைந்த எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கும் அந்த அவைகளில் இடம் அளிக்கப்படுகின்றது.
இவ்வளவு ஏன், ஒற்றை உறுப்பினரைக் கொண்ட கட்சிகளுக்கும், கட்சி சார்பின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட சுயேச்சை உறுப்பினர்களுக்கும் கூட அங்கே கேள்வி கேட்கும் உரிமை இருக்கின்றது.
எண்ணிக்கை குறைவாக உள்ள கட்சிகள் அல்லது சுயேச்சைகளின் கருத்துக்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படாவிடினும், குறைந்த பட்சம் தங்களது எண்ணங்களை அவையில் பதிவுசெய்ய ஒரு வாய்ப்பாவது கிடைக்கிறது. எதிர்த்தரப்பினரின் விமரிசனங்களைச் சற்றே காதுகொடுத்துக் கேட்கும் சகிப்புத்தன்மையாவது இருக்கிறது.
ஆனால், அதிகரித்து வருகின்ற காட்சி ஊடகங்களிலும், முகநூல் உள்ளிட்டவற்றிலும் இத்தகைய சகிப்புத் தன்மை கொஞ்சம்கூட இல்லை.
பொதுப் பிரச்னை ஒன்று முன்னுக்கு வரும்போதெல்லாம் அது தொடர்பான இருவிதக் கருத்தோட்டங்கள் தோன்றுவது இயல்பு. வேண்டும் என்று கூற ஒரு சாரார் இருக்கும்போது, வேண்டாம் என்று சொல்ல இன்னொரு சாரார் கிளம்புவதைத் தவிர்க்கமுடியாது. ஒவ்வொரு கருத்துக்கும் சரி தவறு என்ற இரு வாதங்கள் இருக்கத்தான் செய்யும்.
ஆனால், சமுதாயத்தில் திடீரென்று ஒரு விஷயம் தீவிரம் கொள்கின்றபோது, அதன் சார்பாளர்களும் எதிர்ப்பாளர்களும் பரஸ்பரம் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கக் கூடாது.
எதிர்த்தரப்பு அப்படி என்னதான் கூறுகிறது என்று ஒரு கணம் பொறுமையுடன் அதற்குக் காது கொடுக்க வேண்டும். அதுதான் அறிவுடைமை.
பண மதிப்பிழப்பு விவகாரம், ஜல்லிக்கட்டுப் போராட்டம், காவிரிப் பிரச்சினை, கட்சிப் பிளவு போன்ற எந்தப் பிரச்னை
யிலும் எதிர்க்கருத்தைக் காது கொடுத்துக் கேட்கின்ற சகிப்புத்தன்மை அறவே
இல்லாமல் போயிருப்பதைப் பார்க்க முடிகிறது.
அதுவும், இருபத்துநான்கு மணிநேரமும் பரபரப்பே குறி என்று இயங்கும் காட்சி ஊடகங்களும், எல்லோரும் தத்தமது கருத்தை அரங்கேற்ற உதவும் முகநூல் போன்ற சமூக ஊடகங்களும் பெருகி இருக்கின்ற இந்நேரத்தில், கருத்துப் பரிமாறங்களுக்கு பதிலாக, விதண்டாவாதங்களே முன்னிறுத்தப் படுகின்றன.
மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள் என்று கூறுபவர்களை தேசபக்தி இல்லாதவர்கள் என்று சாடுகிறார்கள்.
ஜல்லிக்கட்டினால் காயமடைந்து எதிர்காலத்தை இழக்கும் இளைஞர்களைப் பற்றிப் பேசினால் தமிழின விரோதி என்று முத்திரை குத்திவிடுகிறார்கள்.
காவிரிப் பிரச்னைக்குக் கர்நாடக அரசைக் குறை சொல்வதைப்போலவே, நமது மாநிலத்தில் மணல் கொள்ளையில் ஈடுபடுவோரைக் கட்டுப்படுத்துவது பற்றிக் கவலைப் படுவது ஒரு சிலரே.
தமிழகத்தினுள் இருக்கும் நீர்நிலைகளைச் சுரண்டாமலும், தூர்வாரியும் நீர்வளத்தைத் தக்கவைத்துக் கொள்ள பெரிய முயற்சிகள் எடுக்கப்படுவதில்லை. மாறாக முக்கிய அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியே காலத்தை ஓட்டிவிடுகின்றனர்.
ஒரே கட்சிக்குள் பிளவு ஏற்பட்டாலோ, தாங்கள் ஒட்டி உறவாடிய கடந்த காலங்களை அப்படியே குப்பையில் போட்டுவிட்டு, பரஸ்பரம் ஏசிக் கொள்கிறார்கள். இப்போது ஏசிக் கொள்பவர்கள் எதிர்காலத்தில் மறுபடியும் ஒன்று கூடிக் குலாவ வாய்ப்புள்ளதையும் மறுப்பதற்கில்லை. அவ்விதம் கூடும் போடு, இப்போது பரிமாறிக்கொள்ளும் ஏச்சுப்பேச்சுக்களை என்ன செய்யப் போகிறார்கள்.
முன்பொரு காலம் இருந்தது. புலவர்களும், ஆன்மிகச் சான்றோர்களும் பலர்நிறைந்த சபைகளில் வாதப்பிரதிவாதங்கள் செய்து வெற்றி தோல்விகளை நிர்ணயம் செய்தனர்.
வெற்றி பெற்றவர்களும் உண்டு. தோல்வியுற்றவர்களும் உண்டு. வாதங்களை எடுத்துவைப்பதில் தோற்றாலும், வாதிட்டவர் அனைவரும் அறிஞர்களே.
இவ்வளவு ஏன்? நமது தேச விடுதலைக்குப் போராடிய காங்கிரஸ் கட்சியில் இல்லாத கருத்து வேறுபாடுகளா?
மிதவாத, தீவிரவாதத் தரப்புகள் இரண்டையும் வைத்துக்கொண்டுதான் மகாத்மாவும் மற்ற தேசத்தலைவர்களும் தமது தியாக வாழ்வையும் சுதந்திரப் போராட்டத்தையும் முன்னெடுத்துச் சென்றனர்.
அந்நியர் ஆட்சிக் காலத்தில் நம்முடைய சுதந்திரப் போராட்டத்தியாகிகளிடையே நிலவிய சகிப்புத் தன்மை, இன்றைய சமூகத்தில் இல்லாமல் போனது ஏனோ?
செய்தி ஊடகங்களில் ஓயாமல் வாதம் புரிபவர்களும் சரி, முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் கருத்துப்பதியும் அன்பர்களும் சரி, தங்களின் எதிர்த்தரப்பினரை கடுமையாக விமர்சனம் செய்யத் தயங்குவதே இல்லை.
தங்கள் கருத்துக்கு எதிர்க்கருத்து இருக்கக் கூடாது. இருந்தாலும், அந்த எதிர்க்கருத்தை கூறுபவர்கள் இயங்கக் கூடாது என்ற ஒரு மனப்பான்மை எப்படியோ வேரூன்றிவிட்டதே இதற்கெல்லாம் காரணம்.
ஒரு சில உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்திலேயே, எந்த ஒரு கருத்துக்கும் எதிர்க்கருத்து இருக்கிறது என்னும்போது, கோடிக்கணக்கான மக்களைக்கொண்ட ஒரு சமுதாயத்தில் மாற்றுத் தரப்பும் மாற்றுக் கருத்தும் எப்படி இல்லாமல் போகும்.
மாற்றுக்கருத்தை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதுதான். அப்படி ஏற்றுக் கொண்டால், நமது கருத்துக்கு அவசியம் ஏது ஆனால், மாற்றுக் கருத்தையும் மதித்துப் பரிசீலிக்கலாம் அல்லவா குறைந்தபட்சம் மாற்றுத்தரப்பினரை மனிதர்களாக மதிக்கலாம் அல்லவா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com