பிள்ளையையும் கிள்ளி... தொட்டிலையும் ஆட்டி...

சட்டம் இயற்றுவதால் சட்டப்பேரவை என காரண பெயர் ஆயிற்று.

சட்டம் இயற்றுவதால் சட்டப்பேரவை என காரண பெயர் ஆயிற்று. ஆனால் இன்று உலகளாவிய பார்வையில் சட்டப்பேரவைகள் சப்த மன்றங்களாக தான் இருக்கின்றன. விவாதங்களில் தனி நபர் துதி பாடலும், வசை பாடலும் மிகுந்து இந்தியாவில் சட்டப்பேரவைகள் தங்கள் மாண்பை இழந்து வருகின்றன.
இன்று இயற்றப்படும் சட்டங்கள் ஆளும் அதிகார வர்கத்தின் எண்ண வெளிப்பாடாகவே இருக்கிறதே தவிர மக்கள் நலம் சார்ந்த வெளிப்பாடாக இல்லை என்பது வேதனையான விஷயம். அண்மையில், தமிழ்நாடு நீதிமன்ற முத்திரைக் கட்டணம் மற்றும் வழக்கு மதிப்பு சட்டம், 1955-இல் செய்யப்பட்ட திருத்தம் அதற்கு ஒரு சான்று.
ஆங்கிலேயர்கள் இந்தியர்களை ஆளத் தொடங்கி அவர்களுடைய பூசல்களைத் தீர்க்க சிவில் நீதிமன்றங்களை ஏற்படுத்தினார்கள். அங்கே நீதி வழங்க ஆகும் செலவை வசூலிக்க நீதிமன்ற முத்திரைக் கட்டணங்களை ஏற்படுத்தினர்.
அதுவரை மன்னர் மூலமாக மக்களுக்கு இலவசமாக கிடைத்த நீதியை நீதிமன்றக் கட்டணம் செலுத்திப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.
1955-இல் கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு நீதிமன்ற முத்திரைக் கட்டணம் மற்றும் வழக்கு மதிப்பு சட்டம், வழக்கின் மதிப்பின் மேல் முத்திரை கட்டணத்தை 7.5 சதவீதமாக நிர்ணயித்தது. மனுக்களுக்கும் கட்டணங்கள் உண்டு. ஆனால் 7.5% கட்டணம் என்பது தமிழ் சமுதாயத்தை பிடித்த ஏழரை சனியாகவே இருந்தது என்றால் மிகையில்லை.
ஒருவன் மற்றவனுக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் கொடுக்க வேண்டுமென்றால் அதை மற்றவன் வட்டியுடன் வசூலிக்க மொத்த தொகைக்கு 7.5% முத்திரை கட்டணம் செலுத்த வேண்டும்.
இது தவிர வழக்குரைஞர் கட்டணம், ஏனைய வழக்கு செலவுகள் என செலவுகள் விண்ணைத்தொடும். ஏற்கனவே வாங்கிய கடனை கொடுக்க முடியாத நபர் அசல் வட்டியுடன் கிட்டத்தட்ட 25% கூடுதல் கட்டணம் செலுத்தி கடனை அடைக்க நேரிடும்.
இதை எதிர்த்து நீதிமன்றங்களும், சமூக ஆர்வலர்களும் குரல் கொடுத்ததால் சென்னை உயர்நீதிமன்றம் 2014-இல் நீதியரசர் சம்பத் தலைமையில் ஒரு குழு அமைத்து நீதிமன்ற கட்டணங்களை முறைப்படுத்த கேட்டுக் கொண்டது. இந்த அறிக்கையில் நீதிமன்ற கட்டண மாற்றங்களை பற்றி பல அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டிருந்தன.
தமிழ்நாட்டில் ஒரே நீதித்துறை இருந்தாலும், இரண்டு விதமான முத்திரைக் கட்டணங்கள் இருந்தன. அதாவது சென்னை நகரில் இயங்கும் உயர்நீதிமன்றத்தின் ஆளுகை, அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் குறைந்த கட்டணமும், சென்னையை நீக்கி தமிழ்நாடு முழுவதற்கும் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்கு ஒருவிதமான முத்திரை கட்டணமும் இருந்தது.
அதாவது சென்னை நீதிமன்ற வழக்குக்கு குறைந்த பட்சமாக ஒரு சதவிகிதமும் ஏனைய பகுதிகளுக்கு ஒரே கட்டணமாக 7.5% சதவீதமும் இருந்தது. இதனால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிவாழ் மக்கள், முத்திரைக் கட்டணத்தை குறைக்க சொல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது வழக்கமாக இருந்தது.
சென்னை மாநகரின் அதிகார எல்லை வரம்பு மாநகராட்சியின் அளவில் விஸ்தரிக்கப்பட்ட பொழுதும், உயர்நீதிமன்றத்தின் எல்லை வரம்பு அதற்கு ஈடாக விஸ்தரிக்கப்படவில்லை. இந்த மாறுபாட்டால் சென்னையில் இருந்து கொண்டு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைமைக்கு சிலர் தள்ளப்பட்டது வாஸ்தவம். இது போன்ற பிரச்னைகளையெல்லாம் முடிவுக்கு கொண்டு வரத்தான் நீதியரசர் சம்பத் கமிட்டி உயர்நீதிமன்றத்தால் ஏற்
படுத்தப்பட்டது.
இந்த கமிட்டி 02.09.2016-இல் ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில் 20 மாநிலங்களிலும் உள்ள முத்திரை கட்டணங்களின் ஒப்பு நோக்கு தரப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற மேல்முறையீடுகளுக்கு ஒரே கட்டணமாக ரூ.250 இருந்தது. 2013-ஆம் ஆண்டு ஏற்பட்ட திருத்தத்தின் படி குறைந்த பட்சம் ரூ.2,500 ஆகவும் உச்சபட்சம் வழக்கின் தன்மையை பொருத்தும் நிர்ணயிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஒரே உச்சமான 7.5% என்பது பண வழக்குகள், ஒத்தி, அடமான வழக்குகளுக்கு அதிகமாக இருந்தது. இதே கட்டணங்கள் விவசாய நிலங்களுக்கு வரும் போது பிரிவு 7ன் கீழ் சந்தை மதிப்பு என்பது குறைவாக இருந்தது.
ஒருவர் தன்னுடைய ஒரு ஏக்கர் சம்பந்தமாக ஒரு வழக்கு தொடர வேண்டுமென்றால் ஒரு ஏக்கர் நிலத்தின் மதிப்பு அந்த நிலத்தின் தீர்வையின் முப்பது மடங்கு அல்லது ஆயிரம் ரூபாய் என இருந்தது.
அதாவது ஒரு ஏக்கர் நிலத்தின் தீர்வை முப்பது ரூபாய் என வைத்துக் கொண்டால் அதன் முப்பது மடங்கு தொள்ளாயிரம் ரூபாய். ஆகவே சந்தை மதிப்பு ரூ.1,000 என மக்களுக்கு அந்த சட்டம் இருந்தது. ஆகவே முத்திரைக் கட்டணம் ரூ.75.50 ஆகும்.
ஆனால் இப்பொழுது திருத்தப்பட்ட சட்டத்தில் சந்தை மதிப்பு என்று சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள சந்தை மதிப்பு அல்லது ரூ.5,000 எது அதிகமோ அது என்று மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் ஒரு செண்ட் விளைநிலத்தின் மதிப்பு ரூ.10,000-த்திற்கு கீழ் கிடையாது. ஆகவே மேற்கண்ட உதாரணத்தில் பழைய சட்டத்தின் படி முத்திரை கட்டணம் ரூ.75.50 பைசா. ஆனால் இப்பொழுது செய்யப்பட்டிருக்கும் திருத்தத்தின் அடிப்படையில் செண்டுக்கு ரூ.10,000 என்றால் ஏக்கர் மதிப்பு ரூ.10,00,000 ஆகும். குறைக்கப்பட்ட முத்திரைக் கட்டணம் 3% என்றாலும் ரூ.10,00,000க்கு முத்திரைக் கட்டணம் ரூ.30,000 வருகிறது.
அதாவது ஏற்கனவே பல சிக்கலில் இருக்கும் ஒரு விவசாயி தன்னுடைய ஒரு ஏக்கர் நிலத்தைக் காப்பாற்ற வழக்குத் தொடர ரூ.30,000 முத்திரை கட்டணம் கட்ட வேண்டும். வழக்கின் மொத்த செலவே அவ்வளவு ஆகாது. முத்திரை கட்டணமே ரூ.30,000 ஆகிவிட்டால் வழக்குரைஞர் கட்டணத்திலிருந்து அனைத்து செலவுகளும் எகிறி விடும். இது கட்டணங்களை குறைக்க வேண்டும் என்ற நீதிமன்ற பரிந்துரைக்கே விரோதமானது.

மாநிலம் - முத்திரை கட்டணம்  - உச்சம்

ஆந்திரா 1.0
கேரளா 1.0
அஸ்ஸாம் 1.1 11,000
மத்திய பிரதேசம் 3.0 18,000
பிகார் 1.6 50,000
மஹாராஷ்டிரம் 1.5 3,00,000
பஞ்சாப் 1.0
மணிப்பூர் 0.75 10,000
சட்டீஸ்கர் 3.0
மேகாலயா 15.0 11,000
தில்லி 3.0
ஓடிஸா 2.0
குஜராத் 2.0 75,000
ராஜஸ்தான் 0.5
ஹிமாசல பிரதேசம் 1.0
தமிழ்நாடு 7.5
காஷ்மீர் 0.5 75,000
உத்த. பிரதேசம் 7.5
கர்நாடகா 0.5


ஒரு மாவட்ட முன்சீப்பின் அதிகார வரம்பு ரூ.1,00,000. ஒரு சார்பு நீதிமன்றத்தின் அதிகார வரம்பு ரூ.10,00,000. சென்னை மாவட்டம் நீங்கிய அனைத்து பிற மாவட்ட நீதிமன்றங்களிலும் அதிகார வரம்பு ரூ.10,00,000-த்துக்கு மேல். சென்னை மாநகரத்தில் மாவட்ட நீதிமன்றத்தின் உச்ச வரம்பு ரூ.25,00,000. அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள வழக்குகளை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
இதன்படி ஒரு ஏக்கர் வைத்துள்ள விவசாயி தன்னுடைய நிலத்தின் சந்தை மதிப்பை வரி அடிப்படையில் ஆயிரமாக மதித்து முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம். ஆனால் மாற்றப்படும் சந்தை மதிப்பு விதியின் அடிப்படையில் அந்த சொத்தின் மதிப்பு ரூ.10,00,000 என மாறினால் அவர் நேரிடையாக மாவட்ட நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும். அவருக்கு ஒரு மேல்முறையீடு வாய்ப்பு மறுக்கப்படும்.
இதனால் முன்சீப் நீதிமன்றத்திலும் சார்பு நீதிமன்றத்திலும் தாக்கலாகும் வழக்குகள் குறைந்து விடும். இதனால் பொதுமக்களும் நீதிமன்றங்களும் கடுமையாக பாதிக்கப்படுவர். உடனடியாக அரசு தலையிட்டு இந்த பிரிவு 7-இன் சட்ட திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும்.
இதற்கு மாற்றாக 5,000 என உச்ச மதிப்பை ஏற்படுத்தினால் இப்போது 75 ரூபாயாக இருக்கும் முத்திரைக்கட்டணத்தை ரூ.150-ஆக மாற்றலாம். அதுபோல் சார்பு நீதிமன்ற வழக்குகளுக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.300-ம் மாவட்ட நீதிமன்ற வழக்குகளுக்கு குறைந்த பட்ச கட்டணமாக ரூ.1,000-ம் நிர்ணயிக்கலாம். இதுவே உயர்நீதிமன்ற வழக்குக்கு ரூ.5,000 முத்திரை கட்டணம் என்றால் இதே கட்டண விகிதத்தை நகர்புற வீடுகளுக்கும் விஸ்தரிக்கலாம்.
புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள பிரிவு 69ஏஏ-இன் சட்டத் திருத்தத்தின்படி ஒரு வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பினாலே நீதிமன்ற கட்டணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என்று சொல்லியிருப்பது சரியல்ல. வழக்கு சமரச தீர்வு மையத்தில் முடித்து வைக்கப்பட்டால் மட்டுமே முத்திரை கட்டணம் திருப்பி தரப்பட வேண்டும்.
முத்திரைக் கட்டணத்தை 7.5%-இல் இருந்து 3% குறைத்து விட்டோம் என சொல்லி விட்டு சந்தை மதிப்பை 30 மடங்கு வரி மதிப்பு என்று இப்போது இருப்பதை மாற்றி பல ஆயிரம் மடங்காக மாற்றியிருப்பது என்பது பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுவது போலாகும்.

கட்டுரையாளர்: முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com