தேக்கம் வளர்ச்சிக்கு எதிரி!

இந்திய அரசியலில் ஒரு சில தலைவர்களும், ஒரு சில கட்சிகளும்தான் முனைப்போடு, துடிப்போடு செயல்படுவதாக நமக்குத் தெரிகிறது.

இந்திய அரசியலில் ஒரு சில தலைவர்களும், ஒரு சில கட்சிகளும்தான் முனைப்போடு, துடிப்போடு செயல்படுவதாக நமக்குத் தெரிகிறது. மற்ற கட்சிகளுக்கு, தலைவர்களுக்கு மிகப்பெரிய தேக்க நிலை வந்துவிட்டது. அந்தக் கட்சிகளும், தலைவர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் சேர்த்து வைத்த பணத்தில் கட்சிகளை நடத்திச் செல்கின்றனர்.
ஒரு காலத்தில் பிரகாசித்த கட்சிகள் இன்று குப்பைக்குள் ஆழ்ந்து கிடக்கின்றன. அதேபோல் ஒரு காலத்தில் வரலாறு படைக்கும் தலைவர் என போற்றப்பட்டவர் இன்று மக்களால் நிராகரிக்கப்பட்டவராகவும், அந்தக் கட்சிக்காரர்களாலேயே புறக்கணிக்கப்பட்டுக் கொண்டிருப்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது.
கட்சியின் எதிர்காலம் என்று சொல்லிக்கொண்டு இயங்கும் தலைவர்கள் பின் செல்லும் கட்சிக்காரர்கள் "எவ்வளவு நாள் இவர் தாக்குப் பிடிப்பார், இவரை நம்பி நாம் கட்சியில் எங்கே போகப்போகிறோம், இவரிடம் என்ன ஆற்றல் இருக்கிறது' என சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் சூழ்நிலையையும் நாம் பார்த்து வருகின்றோம்.
இந்தத் தேக்க நிலையால் கட்சிகளை மேலெடுத்துச் செல்ல புதிய மக்கள் தொடர்பு வணிக நிறுவனங்களிடம் சென்று நிற்கின்றன நம் கட்சிகள். இந்தக் கம்பெனிகள் சொல்வதைக் கேட்டு நடை, உடை, பாவனை, பேச்சு அனைத்தையும் மாற்றி தனக்கென ஒரு பிம்பத்தை உருவாக்கி மக்களைக் கவர்ந்து வாக்குகளை வாங்கிட வேண்டும் என படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள் பல தலைவர்கள். பெரும் பணத்தை அதற்காகச் செலவிட்டு தோல்வியையும் தழுவி இருக்கின்றன ஒரு சில கட்சிகள்.
இன்று எங்கு நோக்கினும் திகைப்புக்களும், மலைப்புக்களும், தேக்கமும் தென்படுகின்றனவே தவிர தெளிவு கிடைக்கவில்லை பல அரசியல் கட்சிகளுக்கு. ஆனால் நாட்டில் ஒருவருக்கு தெளிவு இருக்கிறது, திருவாளர் சாமானியருக்கு.
"ஐந்து வருடம் தேர்ந்தெடுத்தவரை எங்களால் எதுவும் செய்ய இயலாது, ஆனால் ஐந்தாண்டு முடிந்து மீண்டும் எங்களிடம் வரும்போது அவர்கள் தலைவிதியை மாற்றும் சக்தி எங்களிடம் இருக்கின்றது' என்பதை நம் திருவாளர் பொதுஜனம் நன்கு தெரிந்து தெளிவான முடிவெடுக்கும் பார்வையை உருவாக்கி வைத்திருக்கின்றார்.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் எனக்கு என்ன பலன் கிட்டும், எப்படிப்பட்ட பலன் எனக்கு வேண்டும், அதை நிறைவேற்ற எந்தக் கட்சிக்கு தகுதியிருக்கிறது என்று ஆய்வு செய்து பார்த்து தீர்மானிக்கும் பார்வையையும், சக்தியையும் பெற்று இருக்கின்றார்.
எல்லாக் கட்சிகளும் திருவாளர் பொதுஜனத்தைப் பார்த்து மிரண்டுபோய் இருக்கின்றார்கள். நம்மிடம் பேச்சாற்றல் இருக்கிறது, மக்களைக் கவர்ந்துவிடலாம், நம்மிடம் நிறைய பணம் இருக்கிறது, அதைக் கொடுத்து அவர்களை வாங்கிவிடலாம் என்று யாரும் நம் திருவாளர் பொதுஜனத்தை எடைபோட முடியாது. அந்த அளவிற்கு அரசியல் கட்சிகளுக்கு திகில் கொடுக்கும் திறன் பெற்றவர்களாக பொதுஜனங்கள் வந்துவிட்டனர்.
ஏனென்றால் நம் அரசியல் கட்சிகளும், தலைவர்களும் தாங்கள் தலைமை ஏற்க வந்தபோது இருந்த அரசியல் கட்டமைப்புக்குமேல் ஒரு அடிகூட எடுத்து புதுமைகள் அரசியலில் புகுத்தாமல் அரசியல் நடத்திக் கொண்டிருப்பதால், மக்கள் அலுப்படைந்து, "எனக்கு என்ன செய்வாய் என்று சொல் நான் பார்க்கிறேன்' என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள்.
"நீங்கள் பேசிய சித்தாந்தங்கள், கொள்கைகள், கோட்பாடுகள், மதம், சாதி, மொழி, அரசியல் இவைகள் அனைத்தும் என் வாழ்க்கையை மாற்றியமைக்கவில்லை, இனிமேல் அதை நம்பி உனக்கு வாக்களிக்க முடியாது' என திருவாளர் பொதுஜனம் சொல்வதைப் புரிந்துகொண்டுதான் பிரதானக் கட்சிகள் பணம் சேர்ப்பது, அதை அரசியலுக்கு, தேர்தலுக்கு செலவு செய்வது என்று பணத்திற்கானப் பயணத்தை துவங்கின.
அதிலும் ஒரு தேக்க நிலை வந்து
விட்டது. இந்தப் பணத்தை உருவாக்குவது, பாதுகாப்பது, பட்டுவாடா செய்வது அனைத்திலும் நம் அரசியல் கட்சிகள்
சந்திக்கின்ற சவால்களும், ஆபத்துக்களும் ஏராளம்.
இந்த நிலையை ஒரு முறை ஜெர்மனியில் ஒரு பேராசிரியரிடம் விவாதித்தேன். அவர் அந்தப் பல்கலைக்கழகத்தில் மேலாண்மைத்துறைப் பேராசிரியர். அவர் என்னைப்போல் 30 ஆண்டு ஆசிரியப்பணி அனுபவம் பெற்றவர் அல்ல. அவர் மூன்று பெரும் நிறுவனங்களை நடத்தி, அவற்றை விற்றுப் பெரும் பணம் சேர்த்துக்கொண்டு நாலாவது நிறுவனத்தில் 50 பங்குகளை வைத்துக்கொண்டு ஆசிரியப்பணிக்கு வந்தவர். எனவே அவர் ஒரு மாபெரும் சாதனையாளர்.
நான் நம் இந்திய அரசியலைப் பற்றி பேசியபோது, அவர் உடனே என்னிடம் தன் அனுபவத்தைச் சொன்னார்.
""நான் முதலில் ஒரு தொழிலைத் தொடங்கினேன், ஒரு நிலைவரை அந்தத் தொழிலை வளர்த்தேன். அதற்குமேல் என்னால் அந்தத் தொழிலை மேலே எடுத்துச் செல்ல முடியவில்லை. அந்த நேரத்தில் ஒரு இளைஞன் என்னிடம் அந்தத் தொழிலை எப்படி மேலே எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஆலோசனை கூறினான். ஆனால் அது எனக்கு தெளிவாக விளங்கவில்லை. அதற்கு உடனே நான் அவனிடம் "என்னுடைய நிறுவனத்தை நீயே வாங்கிக்கொள்' என்றேன். உடனே அவன் சம்மதித்தான். சிறிய லாபத்துடன் அந்த நிறுவனத்தை விற்றுவிட்டேன்.
என்னிடம் வாங்கிய நிறுவனம் நான்கு ஆண்டுகளில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று மிகப்பெரிய நிறுவனமாக மாறியது. முதல் நிறுவனம் விற்ற பணத்தில் இரண்டாவது தொழிலைத் தொடங்கி ஒரு நிலை வரை வளர்த்தேன், லாபம் ஈட்டினேன். ஆனால் அதற்குமேல் கொண்டு செல்ல இயலவில்லை.
அந்த நேரத்தில் இன்னொரு நிறுவனத்தை நடத்திக்கொண்டிருந்தவன் என்னிடம் வந்து, எப்படி என் தொழிலை மேம்படுத்துவது என்று ஆலோசனை கூறினான். அதைக் கேட்டவுடன் அவனிடம், "நீயே இந்தக் நிறுவனத்தை எடுத்து உன் நிறுவனத்துடன் சேர்த்து நடத்தினால் என்ன' என்று கேட்டேன். அவன் மறுக்கவில்லை, நல்ல லாபத்திற்கு அவனிடம் என் நிறுவனத்தை விற்றுவிட்டேன்.
அதே நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் மிகப்பிரபலமான நிறுவனமாக மாறியது. கடைசியாக மூன்றாவது நிறுவனம் ஆரம்பித்த உடனேயே அதை ஒருவன் அதிக விலைக்குக் கேட்டான், அதை அவனிடம் விற்றுவிட்டு 50 பங்குகளை நானே வைத்துக்கொண்டேன்.
அதன் பிறகு நிறுவனங்களை வளர்த்தெடுப்பது பற்றிய என் அனுபவங்களை புத்தகமாக எழுதி மிகப்பெரிய அளவில் பணம் ஈட்டினேன். ஆனால் வாழ்க்கையில் ஒரு வெறுமை வந்தது. உடனே என் தொழிலை ஆசிரியப் பணியாக மாற்றினேன். இப்பொழுது எனக்கு நிறைவு, மன அமைதி எல்லாம் கிடைக்கிறது. எனக்கு வேலை இருக்கிறது. மீண்டும் சந்திப்போம்'' என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.
நான் கேட்ட கேள்வி வேறு, அவர் சொன்ன பதில் வேறு. ஒரு கணம் சிந்தித்தேன். அப்பொழுதுதான் புரிந்தது அவர் கூறிய அனுபவங்களில் நான் கேட்ட கேள்விக்கு பதில் இருப்பதை. நம் கட்சித்தலைவர்கள் கட்சிகளை ஒரு நிலை வரை வளர்த்தார்கள். அந்த நிலைவரை அவர்களால் கட்சிகளை மேலே எடுத்துச் செல்ல முடிந்தது. அதற்குமேல் அவர்களால் மேலே கொண்டு செல்ல இயலவில்லை.
அதே நேரத்தில் தான் வளர்த்த கட்சியை விட்டு வெளியேறவும் மனமில்லை. ஏனென்றால் அது தனக்கு ஒரு பெரும் பிம்பத்தை உருவாக்கி அதில் வாழ வைத்துள்ளது. ஆனால் அமைதி கிடையாது, நிம்மதி கிடையாது.
ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு தியாக வரலாறும், ஒரு சோக வரலாறும் உரு
வாகிக் கொண்டுள்ளது. வரலாற்றில் தியாகத்தில் வாழ வேண்டியவர்கள், சோகத்திற்கு ஆட்பட்ட நிலையும் பதிவு செய்யப்பட்டுக்கொண்டுள்ளது. இதன் விளைவு கட்சிகள் உயர முடியவில்லை, தேங்கி நிற்கின்றன.
எந்த இடத்திலும் தேக்கம் என்பது துர்நாற்றத்தையும், வியாதியையும்தான் கொண்டுவரும். அது ஆபத்தானது. அது உடலாக இருந்தாலும் அல்லது அரசியலாக இருந்தாலும், பொருளாதாரமாக இருந்தாலும் தேக்க நிலை என்பது ஆபத்தில் கொண்டுபோய் விடும். அரசியலில் இன்று நாம் பார்ப்பது ஒரு தேக்க நிலை.÷
புதுமைகளைப் புகுத்த முடியாததால்தான், இன்று கட்சிகள் நிறுவனங்களைப் போல் வாக்குகளைப் பொருள்களாக மாற்றி, வாங்குவது, விற்பது என்ற நிலைக்கு கொண்டுவந்து ஆளுகை, நிர்வாகம், ஆட்சி, அரசியல் எல்லாவற்றையும் வணிகமாக மாற்றிவிட்டு, பதவிகளில் அமர்ந்து பரிதவித்துக் கொண்டுள்ளன பல தலைவர்கள்; பரிதவித்துக்கொண்டுள்ளன பல கட்சிகள்.
பாவம் நம் அரசியல் தலைவர்கள். மக்களின் நன்மைக்காகவும், அரசியலில் மாற்றம் கொண்டு வரவும், தங்கள் கட்சிகளை உயர் நிலைக்கு இட்டுச் செல்வதற்காகவும், தாங்கள் அமைதியுடன் வாழவும் நம் தலைவர்களுக்கு இப்போது வேண்டும் ஓய்வு.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒருவர் சிறு குழந்தைகளுக்கு பைபிள் சொல்லிக்கொடுத்து வாழ்க்கையை மகிழ்ச்சியோடு கழிப்பதை ஏன் நமக்குப் பாடமாக எடுத்துக்கொள்ளக் கூடாது?
முதியவர்களே ஓய்வெடுங்கள், நீங்கள் உழைத்து களைத்துவிட்டீர்கள். இளையவர்கள், புதியவர்கள் பார்த்துக்கொள்ளட்டும். உங்களுக்கு அமைதி தேவை, நாட்டிற்கு நல்ல ஆரோக்கியமான அரசியல் தேவை.

கட்டுரையாளர்: பேராசிரியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com