அடையாளத்தை அழிக்கலாமா?

வெற்றுக் காலங்களால் நடந்தால் நோய்த் தொற்று உண்டாகிவிடும் என்பதால் வீட்டிற்குள் கூட காலணிகள் அணிந்து பூமியின் தொடர்பை அறுத்தக் கொண்டு வாழ்ந்து கொண்டிருருக்கிறது சமூகம்.
அடையாளத்தை அழிக்கலாமா?

வெற்றுக் காலங்களால் நடந்தால் நோய்த் தொற்று உண்டாகிவிடும் என்பதால் வீட்டிற்குள் கூட காலணிகள் அணிந்து பூமியின் தொடர்பை அறுத்தக் கொண்டு வாழ்ந்து கொண்டிருருக்கிறது சமூகம்.
அதே சமூகத்தில்தான் நான்கு முழ வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, கலங்கலாக இருக்கும் கண்மாயில் இடுப்பளவு தண்ணீரில் நின்றுகொண்டு தான் வளர்க்கும் மாடுகளை வைக்கோலை தேய்த்து குளிப்பாட்டிவிட்டு, தானும் அந்த தண்ணீரில் குளித்துவிட்டு வருகிறான் விவசாயி. அவன் நோய்த் தொற்றுக்கு கவலைப்படவில்லை. தான் வளர்க்கும் மாடுகளையும் தன்னைப்போல் நேசிக்கின்றான் என்பதுதான் உண்மை.
ஒரு விவசாயியின் குடும்பத்தில் உடன் பிறக்காத பிறப்புகள்தான் மாடுகள். குடும்பத்தில் ஒரு உயிராகத் தான் மாடுகள் நடத்தப் படுகின்றன. பத்து கிலோமீட்டர் தூரம் கடந்து நீங்கள் பிரியமாக நேசிக்கும் ஒரு நாயையும், ஒரு மாட்டையும் அவிழ்த்து விட்டுவிட்டு வாருங்கள். எந்த பிராணி வீடு வந்து சேர்கிறது என்று பாருங்கள். மாடுகள் உடனே வீட்டிற்கு வந்துவிடும்.
மாடுகள் துன்பறுத்தப்படுகிறது என்றால் அவிழ்த்து விட்ட அடுத்த நிமிடம் அது புதிய போக்கிடம் தேடிப் போய்விடாதா?
எவ்வளவுதான் ரத்த சம்பந்தமான உறவுகள் இருந்தாலும் அவை தூரத்தில் இருந்தால் எந்த மனிதனுக்கும் தூரத்து உறவுதான். பக்கத்து வீட்டில் இருக்கும் மனிதன்தான் நெருக்கமான உறவு. அதைப்போலத்தான் விவசாய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் மாடுகளுடனேயே தன் வாழ்வைக் கழிக்கும் விவசாயிக்கு மாடுகளும் உறவுதான். அவற்றோடு கொஞ்சி விளையாடும் ஒரு விளையாட்டுதான் மஞ்சு விரட்டு. இரு ஒரு கிராமக் கோயில் திருவிழா.
தமிழ்நாட்டில் சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் மஞ்சு விரட்டு நிகழ்வைக் காணலாம். தைமாத அறுவடைக்குப்பின் மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி மாதம் வரை ஒவ்வொரு ஊரிலும் இந்த மஞ்சுவிரட்டு நடைபெறும்.
ஒவ்வொரு கிராமத்திலும் பெண் தெய்வங்களுக்கு கோயில் இருக்கும். இதை கிராம தேவதைகள் என்று சொல்வார்கள். இந்த தெய்வத்திற்கு ஆண்டிற்கு ஒருமுறை அந்தந்த கிராமத்தினர் பாரம்பரிய அடிப்படையில் பத்து நாட்கள் விழா எடுப்பார்கள். இந்த திருக்கோயில் விழாவாகிய கரக உற்சவம், முளைப்பாரி, புரவி எடுப்பு என்று அந்தந்த கிராமத்துக்குத் தகுந்தவாறு திருவிழாக்கள் அமையும்.
ஒன்பது நாட்கள் ஒட்டு மொத்த கிராமமும் விரதம் இருந்து ஒன்பதாம் நாள் பால்குடங்கள் எடுத்து வழிபடுவார்கள். நிறைவு நாளான பத்தாம் நாளன்று பிற்பகலில் இந்த மஞ்சுவிரட்டு விழாவினை கொண்டாடுவார்கள். ஒன்பதாம் நாளும், பத்தாம் நாளும் உறவுகளையெல்லாம் தங்கள் வீட்டிற்கு வரச்சொல்லி விருந்து கொடுத்து மகிழ்வார்கள். ஒன்பதாம் நாள் சைவ விருந்து, பத்தாம் நாள் அசைவ விருந்து.
ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் திருமணமாகிச் சென்ற பெண்கள் பிறந்த வீட்டில் வந்து கொண்டாடும் விழா.
மதிய விருந்திற்குப் பிறகு இந்த மஞ்சு விரட்டு நடைபெறும். பிற்பகல் இரண்டு மணியிலிருந்து நான்கு மணிவரை இரண்டு மணிநேரம் தான் நடைபெறும். இதற்கென்று அந்தக் கிராமத்தின் கண்மாய் பகுதியில் பெரிய பொட்டல் ஒன்று எதற்கும் பயன்படுத்தாமலேயே வைத்திருப்பார்கள்.
இரண்டு முழத் துண்டை (குற்றாலம் துண்டு) காளை மாட்டின் கழுத்தில் கட்டியிருப்பார்கள். காளை மாட்டுடன் அதன் போக்கிலேயே ஓடி அந்த மாட்டை நிறுத்தி கழுத்தில் கட்டியிருக்கும் அந்தத்துண்டை அவிழ்த்து விட்டால் அவன் வீரன். அந்த வீரனுக்கு வேறொன்றும் பெரிய பரிசு கிடைக்கப்போவதில்லை.
இந்த வீரர்கள் கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து ஓட்டப்பந்தயம் போன்ற விளையாட்டுக்களைப்போல பயிற்சி எடுத்துக் கொண்டு வந்து காளை மாட்டுடன் விளையாடமாட்டார்கள். காளை மாட்டைத் தொட்டு ஓடிக்கொண்டிருக்கும் வீரன் விவசாயக் குடும்பத்தில் பிறந்து மாடுகளுடனேயே வாழ்ந்து மாடுகளின் வாழ்க்கைப் போக்கை அறிந்தவனாகவே இருப்பான். மாடுகளோடு பழகாத எவன் ஒருவனும் மஞ்சுவிரட்டில் கலந்து கொள்ள முடியாது.
மஞ்சி விரட்டு என்பதுதான் மஞ்சுவிரடடு என்றாகியிருக்கிறது. சோற்றுக்கற்றாழை நாரில் வண்ணச்சாயம் பூசி காளை மாடுகளின் கழுத்தில் கட்டி விரட்டப்படும் பண்டைய விழா.
கிராமத்தின் பொதுவில் மஞ்சு விரட்டில் கலந்து கொள்ளும் காளை மாடுகளை சதுர வடிவில் கட்டப்பட்டிருக்கும் காம்பவுண்ட் சுவருக்குள் அடைத்து வைப்பார்கள். அதற்கு "தொழு' என்று பெயர்.
கிராமத்தின் மூத்த அங்கத்தினர்கள், தலைவர்கள் காளைமாடுகளுக்கு கழுத்தில் கட்டக்கூடிய துண்டுகளை மொத்தமாக எடுத்துக் கொண்டு கிராமக்கோயிலுக்குச் சென்று அம்மனின் திருவடிகளில் வைத்து வழிபாடு நடத்துவார்கள். இரண்டு முழ துண்டுதான். அதற்கான சடங்கு சம்பிரதாயங்கள் ஏராளம்.
மாடுகளுக்கு கட்டப்படும் துண்டுகள் வாங்குவதற்கு கூட கிராமத்திலிருந்து ஒரு குழு அமைத்துக்கொண்டு திருமணப் பட்டு எடுக்கச்செல்வார்களே அதைப்போல செல்வார்கள். அந்த துண்டுகளையும் மஞ்சுவிரட்டு அன்று பத்து பத்து துண்டுகளாக வைத்து மூட்டைகளாக கட்டிக்கொண்டு ஒவ்வொருவரின் தலையிலும் வைத்துக்கொண்டு தாரைத் தப்பட்டைகள் முழங்க கிராமத்து அம்மன் கோவிலுக்குச் செல்வார்கள்.
பிறகு அங்கிருந்து தாரை தப்பட்டைகள் முழங்க தொழுவுக்குச் சென்று ஒவ்வொரு மாட்டிற்கும் கிராமத் தலைவர் துண்டு வழங்க அதை மாடுகளுக்கு அணிவித்து விரட்டுவார்கள். வீரர்கள் அந்த மாடுகளை ஓடிச் சென்று பிடித்து துண்டை அவிழ்த்து வீரத்தை நிரூபிப்பார்கள். மாடுகள் விரைந்து ஓடி அந்தமைதானத்தின் எல்லையை கடந்து விட்டால் அந்த மாட்டை பின்தொடர்ந்து எந்த வீரனும் செல்லக்கூடாது என்பது விதி.
இன்றும் கிராமக் கோயில்களில் கோயிலுக்கென்று தனியாக காளை மாடு ஒன்று ஊர்ப்பொது பராமரிப்பில் வளர்க்கப்படுகிறது. இந்த கோயில் மாடு விளைந்து நிற்கும் வயலில் இறங்கி மேய்ந்தால் அடித்து விரட்டமாட்டார்கள். வாய் வார்த்தைகளால் அதட்டி விரட்டுவார்கள். கோயில் மாடு வயலில் மேய்ந்தான் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்று நம்புவார்கள்.
மற்ற கிராமங்களில் நடக்கும் மஞ்சு விரட்டிற்கு தங்கள் கோயில் காளைகளை கலந்து கொள்ளச் சொல்லி தேங்காய் பழத்தட்டோடு பாக்கு வைத்து மஞ்சுவிரட்டு நடத்தும் கிராமத்தார்கள் இன்றும் அழைப்பது உண்டு.
மஞ்சுவிரட்டில் இந்த கோயில் காளையை யாராவது வீரர்கள் பின் பற்றி ஓடினால் அது இந்த ஊர் கோயில் மாடு என்று யாராவது சொன்னால் அந்த மாட்டையாரும் தொடமாட்டார்கள்.
மாட்டுப் பொங்கல் அன்று கோயில் வாசலில் கட்டியிருக்கும் கோயில் மாட்டிற்கு ஒவ்வொரு வீட்டிலிருந்தும் துண்டு அல்லது வேட்டிகளை கொண்டு வந்து கழுத்தில் கட்டி வழிபட்டுச் செல்வார்கள் அதற்கென்று ஒரு நேரம் வைத்து ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்து கிராமமே கூடிநின்று வழிபடுவார்கள்.
கோயில் மாடு நோய்வாய்ப்பட்டு இறந்து போனால் அந்தக் கிராமமே துக்கத்தில் ஆழ்ந்து விடும். ஒரு அரச மரியாதையைப் போன்று மலர்களால் அலங்கரிக்கப்ட்ட வண்டியில் அந்த மாட்டின் உடலை வைத்து, கிராமம் முழுவதும் சுற்றிவந்து அடக்கம் செய்வார்கள்.
மஞ்சுவிரட்டில் மாடுகளை அவிழ்த்து விட்டபின்பு மாட்டுக்குரியவர்கள் வீடு திரும்பி விடுவார்கள். ஆனால் அந்த மாடு அன்றோ அல்லது மறுநாளோ வீடு திரும்பிவிடும். அவ்வாறு திரும்பி வரும் காளைகளை வீட்டிலுள்ள பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள்.
மஞ்சுவிரட்டு என்பது திருக்கோயில் சார்ந்த விழா. இதை மற்ற மதத்தினர் எவரும் கொண்டாடுவதில்லை. இந்துக்கள் மட்டுமே மஞ்சுவிரட்டு நடத்துகிறார்கள். பிள்ளைகளோடு பண்டிகைகாலங்களில் கொண்டாடி மகிழும் குடும்பத்தினர் போலத்தான் ஆண்டிற்கொருமுறை தன்னுடைய விவசாய வாழ்க்கையின் தோழனாக இருக்கும் மாடுகளோடு அன்பாக ஓடிப்பிடித்து விளையாடுகிறான் விவசாயி.
மஞ்சுவிரட்டு முடிந்தபின் அங்கு விற்கப்படும் கரும்புகளை வாங்கித் தோளிலும், வாழைப் பழங்களை நாரில் கட்டி தோளில் தொங்கப் போட்டுக்கொண்டு வருபவர்களையும், மதுரையிலிருந்து வரும் மரிக்கொழுந்துகளை கட்டுக்கட்டாக வீட்டுக்கு வாங்கிக்கொண்டு வரும் நிகழ்வுகளையும், மாட்டைப் பிடித்ததன் அடையாளமாக கிடைத்த துண்டை வலது கையின் மணிக்கட்டு பகுதியில் கட்டிக்கொண்டு வரும் இளைஞர்களையும் கடந்த சில ஆண்டுகளாக கிராமங்கள் காணமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றன. இனம் புரியாத சோகத்தில் மூழ்கியுள்ளன.
இந்த மஞ்சுவிரட்டு விழா முழுக்க முழுக்க கல்வியறிவு குறைந்த விவசாய மக்களால் ஊர் மக்களுக்காக நடத்தப்படும் கிராம விழா. கல்வியறிவு பெற்றவர்கள் இந்த விழாவில் பெரும்பாலும் ஈடுபாடு காட்டுவதில்லை. அதனாலேயே திருக்கோயில் சார்ந்த இந்த வரலாற்றை எடுத்துச்சொல்லி முறையான அங்கீகாரம் பெறமுடியாமல் "மாடுகள் துன்புறுத்தல்' என்ற ஒரே பார்வையில் இன்று இந்த விழா தடைபட்டு கிடக்கிறது.
மஞ்சு விரட்டு என்பது கிராமங்களின் வயல் வெளிகளில் ஆண்டு முழுவதும் உழைத்துச் சலித்தவன் உற்சாகம் காணும் வழிபாட்டுத் திருவிழா. இந்த விழா தடைகள் தாண்டி வருமா?
விவசாயிகளின் வாழ்க்கையில் வானம் தான் பொழிய மறந்துவிட்டது. கொண்டாட்டங்கள்கூட மறுக்கப்படலாமா?

கட்டுரையாளர்:
எழுத்தாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com