சட்டத்திருத்தம் தேவை

மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கருப்புப் பணத்தை ஒழிக்க ரூபாய் நோட்டு வாபஸ் என்ற துல்லியத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையமும் வேட்பாளர்கள் தேர்தல் செலவுகளுக்கு

மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கருப்புப் பணத்தை ஒழிக்க ரூபாய் நோட்டு வாபஸ் என்ற துல்லியத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையமும் வேட்பாளர்கள் தேர்தல் செலவுகளுக்கு என தனி வங்கிக்கணக்குத் தொடங்க வேண்டும் என்று துல்லியத் தாக்குதலை நடத்தியுள்ளது.
நாட்டில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகண்ட், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் பிப்ரவரி 11-இல் தொடங்கி மார்ச் 8-ஆம் தேதி வரை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
5 மாநிலங்களில் 690 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் சுமார் 16 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய உள்ளனர். அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளன. இந்தச் சூழ்நிலையில்தான் இப்படியொரு அதிரடி உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.
ஏற்கெனவே ரூ.20,000-த்துக்கு அதிகமான வரவுகள் காசோலை மூலம்தான் நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் இப்போது இந்த புதிய உத்தரவும் சேர்ந்துகொண்டுள்ளது.
இது போதாது என்று அரசியல் கட்சிகள் ரொக்கமாக நன்கொடைபெறும் அளவை ரூ.20,000-த்திலிருந்து ரூ.2,000-மாகக் குறைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. மேலும், அரசியல் கட்சிகளிடம் ஏராளமாக கருப்புப் பணம் குவிவதைத் தடுக்க நாட்டில் உள்ள 225 பதிவு செய்யப்படாத ஆனால், அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளின் வரவு-செலவுகள் குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் விசாரணை நடத்த வேண்டும் கேட்டுக்கொண்டுள்ளது.
இருபதாயிரம் ரூபாய்க்கு குறைவாக ரொக்கமாக நன்கொடை பெறலாம் என்பதால் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதுடன் அவற்றுக்கு முறையாக கணக்கு வைத்துக்கொள்வதில்லை என்றும் சொல்லப்படுகிறது. அரசியல்கட்சிகளிடம் ஏராளமாக கருப்புப் பணம் புழங்குவதாக தேர்தல் ஆணையம் கருதுகிறது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தனிக் கணக்கு தொடங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சொன்னதுடன் நில்லாமல் தேர்தலில் ஒரு வேட்பாளர் விளம்பரத்துக்காகச் செலவிடும் தொகை, மற்றும் கட்சியினர் செய்யும் தேர்தல் பிரசார செலவு, விளம்பரச் செலவு, டி.வி. மூலம் நடைபெறும் பிரசார செலவு ஆகியவையும் வேட்பாளருடைய கணக்கில் கொண்டுவரப்படும் என்றும், தேர்தல் ஆணையம் இதை கண்காணிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
அதாவது, வேட்பாளர், அவரது ஏஜெண்டு, மூத்த தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் ஆகியோரின் பயணச் செலவு, தங்கும் செலவு, பிரசாரச் செலவு உள்ளிட்ட அனைத்து செலவினங்களும் வேட்பாளரின் கணக்கில் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.
வாக்குச்சாவடிகளுக்கு அருகில் அரசியல்கட்சிகள் சார்பில் நிறுவப்படும் தேர்தல் பூத்துக்கான செலவும் இந்தக் கணக்கில் சேர்க்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் செலவினங்கள் பற்றி இப்படியொரு அதிரடி தாக்குதலை நடத்தினாலும் செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்று அரசியல் கட்சிகளுக்குத் தெரியாதா என்ன? அவர்கள்தான் இந்த விஷயத்தில் கைதேர்ந்தவர்களாயிற்றே!
நேர்மையாகவும் ஊழலற்ற முறையிலும் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கமாகும். கடந்த காலத்தில் வாகனச் சோதனையின் போது கோடிக்கணக்கான ரூபாய் பிடிபட்டன, ஏராளமான மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது, வாக்காளர்களுக்கு கொடுக்க இருந்த பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தேர்தலுக்குத் தேர்தல் இவை அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது பணபல ஆதிக்கம் செலுத்தியது தெரியவந்ததை அடுத்து தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டு பின்னர் நடைபெற்றது அனைவரும் அறிந்ததே.
இவ்வாறு பண பலம் மற்றும் ஆதிக்க பலம் மூலம் ஒருவர் தேர்தலில் வெற்றிபெற்றால் அவரின் வெற்றியை முடக்கி வைக்கும் அதிகாரம் தங்களுக்கு வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது.
அரசியல் கட்சிகள் ரொக்கமாக நன்கொடை பெற அனுமதிக்கக்கூடாது. அப்படி நன்கொடை பெற்றால் காசோலை மூலமோ, வரைவோலை மூலமோ அல்லது டிஜிட்டல் பணபரிமாற்றம் மூலமாகவோதான் பெற வேண்டும்.
இதற்குத் தகுந்தாற்போல் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாகும்.
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு ஊழல் மற்றும் கருப்புப்பணத்தை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதற்கு மக்களின் ஆதரவும் உள்ளது. இதேபோல அரசியலைத் தூய்மைப்படுத்தவும், அரசியல்கட்சிகள் நேர்மையைக் கடைபிடிக்கும் வகையிலும் இதற்கான சட்டத்திருத்தத்தை கொண்டுவர முன்வர பா.ஜ.க. அரசு முன்வரவேண்டும்.
பா.ஜ.க. அரசுக்கு மக்களவையில் போதிய பலம் இருப்பதால் இதற்கான சட்டத்திருத்த மசோதாவை கொண்டுவந்தாலும் ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மையில்லாத மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இம் மசோதா நிறைவேற ஒத்துழைக்குமா என்பது கேள்விக்குறியே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com