தாழ்நிலை நீக்கிச் சரிநிகர் எய்துக!

வரலாற்றுக் காலந்தொட்டு இமயம் முதல் குமரி வரையுமான இந்தியத் துணைக் கண்டம் முழுமையும் பல்வேறு மொழியினப் பகுதிகளாகவும், பலநூறு ஆட்சிப் பகுதிகளாகவும் இருந்த நிலையை மாற்றி
தாழ்நிலை நீக்கிச் சரிநிகர் எய்துக!

வரலாற்றுக் காலந்தொட்டு இமயம் முதல் குமரி வரையுமான இந்தியத் துணைக் கண்டம் முழுமையும் பல்வேறு மொழியினப் பகுதிகளாகவும், பலநூறு ஆட்சிப் பகுதிகளாகவும் இருந்த நிலையை மாற்றி ஒரே அரசுக்குட்பட்ட ஒரு நாடு என்றாக்கிய ஆங்கிலேயர் இந்தியர் அனைவருக்கும் உலகளாவிய கல்வியளிக்க முற்பட்டு, அதனை ஆங்கில மொழி வழியாக அளித்தனர். அதன் விளைவாக இந்தியாவின் பல்வேறு மொழியின மக்களுக்கிடையே ஆங்கில மொழியே தொடர்பு மொழியாயிற்று.
ஆங்கிலேயரின் இந்தச் சாதனையே அவர்களுக்கு வேதனையாகவும் முடிந்தது. காஷ்மீர் முதல் குமரிமுனை வரையும் பல்வேறு மொழியினத்தாரான இந்தியர் அனைவரும் ஏக காலத்தில் ஒருங்கிணைந்து ஆங்கிலேயருக்கெதிரான விடுதலைப் போராட்டம் நடத்துதல் ஆங்கிலம் எனும் தொடர்பு மொழி வழியாகவே சாத்தியமாயிற்று.
அங்ஙனமாக ஆங்கில மொழி வழியாக ஒருங்கிணைந்து போராடியவர்களிடையே, இந்திய விடுதலைக்குப் பின்னரும் ஆங்கிலமே தொடர்பு மொழியாக நீடிக்குமாயின் இந்தியரின் அடிமைநிலை நீடிப்பதாக அமையுமாதலால் இந்திய மொழியொன்று இந்தியரின் தொடர்பு மொழியாக வேண்டுமெனும் உணர்வு எழலாயிற்று. அவர்களில் முதன்மையானவர் காந்தியார்.
ஆனால் அவர் விரும்பிய மொழி இன்றைய இந்தி மொழியல்ல. எந்தப் பிரச்னையையும் இந்து } முஸ்லிம் ஒற்றுமைக் கண்ணோட்டத்திலேயே சிந்தித்துப் பழகிய காந்தியார் இந்தியரின் பொது மொழி குறித்தும் அதே கண்ணோட்டத்தில், வடமொழிக் கலப்பான இந்தி, பாரசீகக் கலப்பான உருது இரண்டையுமொதுக்கி, உருது இந்தி இரண்டின் கலப்பான இந்துஸ்தானி மொழியைப் பரிந்துரை செய்தார்.
காந்தியார் கருத்திற்கேற்ப, 1925-இல் காங்கிரசுக் கட்சி அமைப்பின் 25-ஆவது விதி, கூடியவரை காங்கிரசுக் கட்சியின் நடவடிக்கைகள் இந்துஸ்தானியிலேயே நடைபெற வேண்டும். இந்துஸ்தானி தெரியாதவர்கள் ஆங்கிலம் அல்லது தமது மாநில மொழியைப் பயன்படுத்தலாம். மாநில அளவில் கட்சி நடவடிக்கைகள் மாநில மொழியில் நடைபெற வேண்டும். இந்துஸ்தானியும் பயன்படுத்தப்படலாம் எனத் திருத்தியமைக்கப்பட்டது.
ஆனாலும் பாபு இராசேந்திர பிரசாத் உள்ளிட்ட இந்தி ஆதரவாளர்கள் காந்தியாரின் பரிந்துரையையும், காங்கிரசுக் கட்சியின் விதிமுறையையும் புறக்கணித்து வடமொழிக்கலப்பான இந்தி மொழியை இந்திய அரசு மொழியாக்குவதில் வெற்றி பெற்றார்கள்.
இந்தியெதிர்ப்பைத் திசை திருப்பும் முறையில் நேரு பெருமகனார் 1956-இல் நாடாளுமன்றத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். இந்தியல்லாப் பிறமொழியாளர் விரும்பும் வரையும் இந்தியுடன் இந்திய அரசுப் பயன்பாட்டில் ஆங்கிலமும் தொடரும் என்பதுதான் அந்த அறிவிப்பு.
அதன்படியே 1963-இல் ஆட்சி மொழிகள் சட்டம் என்பதன் வாயிலாக, 1965-க்குப் பின்னரும் இந்திய அரசுப் பயன்பாட்டில் குறிப்பிட்ட அமையங்களில் குறிப்பிட்ட நடவடிக்கைகளில் இந்தியுடன் ஆங்கிலமும் பயன்படுத்தப்படலாம் என்னும் முறையில் ஆங்கில ஆதரவாளர்களான இந்தியெதிர்ப்பாளர்கள் சமாதானப்படுத்தப்பட்டனர்.
இந்தி பேசக்கூடிய மக்களின் தாய்மொழி இந்தியென்ற காரணத்தாலேயே அவர்கள் முதல் தரக் குடிமக்களாக்கப்படுகின்றனர். மற்ற மொழி பேசுவோர் நிரந்தரமாக முடமாக்கப்படுகின்றனர். அவர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக்கப்படுகின்றனர் - என வங்க மொழியாளரும், பன்மொழி வல்லுநருமான சுனித்குமார் சட்டர்ஜி கூறியதில் இன்றளவும் எந்த மாற்றமுமில்லை.
எப்படி? இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர், இந்திய அரசுடன் தொடர்பு கொள்ள நேர்ந்தாலும், எனக்கு அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் வேண்டாம் இந்தியாவில், இந்திய அரசுப் பணியே போதுமென அவர் நினைத்தாலும் தமது தாய்மொழியான இந்தி மட்டுமே படித்து அதன் வழியாகவே தமது எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
ஆனால், இந்தியல்லாப் பிற மொழியாளர் தமது தாய்மொழியல்லாத இந்தி அல்லது ஆங்கிலம் கற்று அதன் வழியாகவே இந்தியாவில் வாழவும், இந்திய அரசுடன் தொடர்பு கொள்ளவுமான கூடுதல் சுமைக்கு ஆளாகிறார். அதாவது, இந்தி மொழியாளர் முதல்நிலைக் குடிமகனாகவும், பிறமொழியாளரான இந்தியர் அனைவரும் இரண்டாம் நிலைக் குடிமகனாவும் ஆகிறார்கள்.
இனி, இந்தி ஆதரவாளர்கள் கூறும் சமாதானங்களைக் கவனிப்போம். முதலாவது, தமிழகம் தவிர்த்துப் பிற மாநிலங்களெல்லாம் இந்தியை ஏற்றுக் கொண்டுவிட்டனவாகையால் தமிழகம் தனித்து நிற்றல் பயனற்றதென்கிறார்கள்.
மைனர் பெண்ணின் சம்மதத்துடன் கொள்ளுகின்ற உறவும் பாலியல் வன்முறைக் குற்றமாதல் போல, பிறமொழியாளர் விரும்பி ஏற்றுக் கொண்டாலும், இந்திய மொழிகளில் இந்தி மட்டுமே இந்திய ஆட்சிமொழியெனும் அடாவடித்தனம் வன்முறைக் குற்றமன்றி நன்முறைச் செயலாகாது. பிற மாநிலத்தார் ஏற்றுக்கொண்டதாலேயே இந்திக்கு மட்டும் தனியுரிமை என்பது எவ்வகையிலும் நியாயமாகாது.
இரண்டாவதாக, இந்திய அரசுப் பயன்பாட்டில் இந்தியுடன் ஆங்கிலமும் தொடரும் நிலையில், தாய்மொழி ஆங்கிலம் இரண்டு போதுமே என்றால், இந்தியா முழுதும் சென்று வென்று வர இந்தியும், அனைத்துலகும் சென்று வென்று வர ஆங்கிலமும் அவசியமாகின்றன என்கிறார்கள். அனைத்துலகத் தொடர்புக்குப் பயன்படும் ஆங்கிலம் இந்திய தொடர்புக்குப் பயன்படாதா?
நம்மவர்கள் வடபுலம் செல்லும் போது சாமான்ய மக்களுடன் பேசிப் பழகுதல் எளிதாகும் என்கிறார்கள். வடபுலத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் அனைவரும் அவரவர் ஊர்ப் பள்ளியில் தமிழ் படித்து தேர்ச்சிச் சான்றிதழுடன் தான் தமிழ்நாட்டிற்குள் நுழைகிறார்களா?
இப்போது தேவை இருமொழிக் கொள்கையா மும்மொழிக் கொள்கையா என்று பரவலாக பேசப்படுகிறது. இருமொழிக் கொள்கையா மும்மொழிக் கொள்கையா என்பதல்ல பிரச்னை. இருமொழிக் கொள்கைப்படியே, முதற்பாகம், தமிழ் மொழி கட்டாய பாடம். இரண்டாம் பாகம் ஆங்கிலம் அல்லது தாய்மொழி விருப்பப்பாடம் எனலே போதுமானது, முறையானது.
ஆனால் தமிழ்-தமிழர் எனப் பேசி ஆட்சியைப் பிடித்த திராவிடக் கட்சியார் தமிழ்நாட்டில் தமிழை விருப்பப் பாடமாகவும், ஆங்கிலத்தைக் கட்டாய பாடமாகவும் ஆக்கியது உலகமகாக் கொடுமை.
இவ்வாறாகும் தவறான நிலைமை ஏற்பட என்ன காரணம்? தமிழ்நாட்டுத் திராவிடக் கட்சியாருட்பட இந்தியெதிர்ப்பாளர் அனைவரும் இந்திக்கு எதிராக மாநில மொழிகளை முன்னிறுத்தாமல் ஆங்கிலத்தை முன்னிறுத்தியதே.
இந்தியாவில் இந்தியல்லாப் பிற மாநில மொழியாளர் இரண்டாம் நிலைக்குடிமக்களாதல் நியாயமா? சரி, இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு? "நமது அரசியல் தலைவர்கள் தமது எண்ணங்களைத் திருத்திக் கொண்டு, மொழிவாரி மாநில மக்களின் மொழியுரிமையை மதித்து நடப்பதன் மூலமே இந்தியாவின் ஒற்றுமையை உறுதி செய்ய முடியும்' எனத் தமிழக முன்னாள் ஆளுநரும், உத்தரப் பிரதேசத்தவருமான, சிறிபிரகாசா கூறியதே பிரச்னைக்கு நிலையான தீர்வாகும்.
அதாவது, இந்தியத் தேசிய மொழிகள் அனைத்தையும் சம உரிமையுடன் இந்திய ஆட்சிமொழிகளாக்கி, இந்தியர் எவரும் தாய்மொழியல்லாப் பிறமொழிகளைக் கற்றல் அவரவர் விருப்பஞ் சார்ந்ததன்றி எத்தகைய கட்டாயத்திற்காகவும் பிறமொழி கற்கத் தேவையில்லை என்றாக்குதலே மொழி சார்ந்த பூசலைத் தீர்த்து, உணர்வுபூர்வமான இந்திய ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தும்.
சென்னை மாநகரை விடவும் சிறியதான சிங்கப்பூர் அரசு நான்கு மொழிகளை ஆட்சிமொழிகளாக நடைமுறைப்படுத்தும்போது, அதைப்போல் நூறு மடங்காகும் இந்தியாவின் அரசால் இருபத்து மூன்று மொழிகளை ஆட்சிமொழிகளாக நடைமுறைப்படுத்துதல் இயலாதா?
பேசுபவர் தமது மொழியிற் பேச, கேட்பவர் தமது மொழியில் புரிந்து கொள்ளும் வசதி ஏற்கனவே இந்திய நாடாளுமன்றத்தில் இருக்கிறது.
ஒருமுனையிலிருந்து ஒருவர் ஒரு செய்தியைத் தமது மொழியிலனுப்ப, மறுமுனையிலிருப்பவர் அதனைத் தமது மொழியில் பெற்றுக் கொள்ளும் கணினித் தொழில்நுட்பக் காலத்தில் அய்ம்பத்திரண்டு மொழிகளை ஆட்சி மொழிகளாக்கினாலும் ஆட்பற்றாக்குறையுமாகாது. இடப்பற்றாக்குறையுமேற்படாது.
இதற்குக் காரணம் நுண்படப்பதிவு microfilm   முறைமையும் புழக்கத்திலுள்ளதே. பேசுபவர் தமது மொழியிற் பேச, கேட்பவர் தமது மொழியிற் புரிந்து கொள்ளும் படியான microphone  என்பதும் சாத்தியமற்றதல்ல.
எனவே, இந்திய மொழிகள் அனைத்தையும் ஆட்சிமொழிகளாக்கும் முயற்சி ஆகாத செயலல்ல. இதற்குத் துணையாக இன்னொன்றும் நடைபெற வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் அனைத்துப் பள்ளிகளிலும் அந்தந்த மாநில மொழி கட்டாய பாடமாக வேண்டும். அதற்கேற்றவாறு அரசியலமைப்பில் இருந்தபடிக் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும்.
இந்த இரண்டு ஒருங்கிணைவான முயற்சியே நிலையான தீர்வுக்கு வழியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com