திரிபுராவும் திரிணமூல் கட்சியும்

மேற்கு வங்கத்துக்கும், திரிபுரா மாநிலத்துக்கும் சில பொருத்தங்கள் உள்ளன. மேற்கு வங்கத்தில் பெரும்பான்மையாகப் பேசப்படுவது வங்க மொழி. திரிபுராவிலும் வங்க மொழியே பேசப்படுகிறது.

மேற்கு வங்கத்துக்கும், திரிபுரா மாநிலத்துக்கும் சில பொருத்தங்கள் உள்ளன. மேற்கு வங்கத்தில் பெரும்பான்மையாகப் பேசப்படுவது வங்க மொழி. திரிபுராவிலும் வங்க மொழியே பேசப்படுகிறது. இரண்டு மாநிலங்களும் அண்டை நாடான வங்கதேசத்தின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளன.
இரண்டு மாநிலங்களிலும் ஹிந்துகள் பெரும்பான்மையானவர்களும், அதற்கு அடுத்தபடியாக முஸ்லிம்கள் கணிசமான அளவும் உள்ளனர்.
இதுமட்டுமல்ல. அரசியல் ரீதியாகவும் சில விஷயங்களில் இரு மாநிலங்களும் ஒத்துப்போகும். அதாவது, சுதந்திரத்துக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் ஆட்சி புரிந்து வந்த காங்கிரஸையும், வங்காள காங்கிரஸையும் தோற்கடித்து 1977-ஆம் ஆண்டில் ஆட்சியைக் கைப்பற்றியது இடது முன்னணி தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அப்போது முதல்வர் நாற்காலியில் அமர்ந்தவர் ஜோதிபாசு.
இதற்கு அடுத்த ஆண்டே திரிபுராவில் காங்கிரஸ் கட்சியை ஓரங்கட்டி ஆட்சியைக் கைப்பற்றியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.
மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 33 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்தது போல் அல்லாமல், திரிபுராவில் கடந்த 1988-இல் ஆட்சியை காங்கிரஸிடம் இழந்தது மார்க்சிஸ்ட். பிறகு 1993-ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சியைப் பிடித்தது தனிக்கதை.
அப்போதுமுதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக விளங்கி வருகிறது திரிபுரா.
அந்த மாநிலத்தின் நீண்ட கால (18 ஆண்டுகள்) முதல்வராக மாணிக் சர்கார் தற்போது வரை பதவி வகித்து வருகிறார்.
மேற்கு வங்கத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வருவது திரிணமூல் காங்கிரஸ் கட்சி. கடந்த 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை மார்க்சிஸ்ட் கோட்டை மேற்கு வங்கம் என்றிருந்த எண்ணத்தை தகர்த்தெறிந்து அபார வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தார் அக்கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி.
1970-களில் தன் அரசியல் வாழ்வை காங்கிரஸில் தொடங்கினார் மம்தா பானர்ஜி. கட்சியில் படிப்படியாக முன்னேறி 1976 முதல் 1980 வரை மேற்கு வங்க மகளிர் காங்கிரசின் பொது செயலரானார்.
1984-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் மூத்த தலைவரான சோம்நாத் சாட்டர்ஜியை ஜாதவ்பூர் நாடாளுமன்ற தொகுதியில் வென்று இந்தியாவில் மிகச் சிறிய வயதில் நாடாளுமன்றம் சென்ற பெருமையைப் பெற்றார்.
1997-இல் காங்கிரஸை விட்டு பிரிந்து திரிணமூல் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை தொடங்கி யாரும் எதிர்பார்க்காத சக்தியாக வளர்ந்து நின்றார். கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து வெற்றி வாகை சூடி முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார்.
அரசியலில் பால பாடத்தைக் கற்றுக் கொடுத்த காங்கிரஸை விட்டு தைரியாக விலகி தனிக்கட்சி தொடங்கி, பிறகு அக்கட்சியுடன் கூட்டணி வைத்து, அந்த மாநிலத்தில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்த மார்க்சிஸ்ட் கட்சியையே வென்றவர்தான் மம்தா.
அப்படிப்பட்டவர் தனது கட்சியை தேசியக் கட்சியாக அங்கீகரிக்க ஆசைப்பட்டார். குறைந்தபட்சம் 4 மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக இருக்க வேண்டும் என்பது தேசிய கட்சி அங்கீகாரம் பெறுவதற்கான தகுதிகளில் ஒன்றாகும்.
அதைத் தொடர்ந்து, மணிப்பூர், திரிபுரா, அருணாசலப் பிரதேசம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் தனது கட்சியின் வேர்களை பரப்பினார் மம்தா.
அந்த மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு தன் கட்சிக்கு 2 சதவீத வாக்கு வங்கியை மம்தா தக்க வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றைத் தொடர்ந்து, 7-ஆவது தேசிய கட்சியாக திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இப்படித்தான் திரிபுராவில் முதல் முறையாக தடம் பதித்தார் மம்தா.
இத்தகைய சூழ்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு திரிபுரா மாநிலத் தலைநகர் அகர்தலாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை திரிபுராவிலும் தோற்கடிப்பேன் என்று சூளுரைத்தார்.
திரிபுராவில் கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 60 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 49 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது. ஒரு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வென்றது. எஞ்சியுள்ள 10 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
காங்கிரஸ் கட்சியிலிருந்து 7 எம்எல்ஏக்கள் சில மாதங்களுக்கு முன்பு விலகினர். அவர்களில் 6 பேர் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தனர். திரிபுரா மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த சுதீப் ராய் வர்மனும் திரிணமூல் கட்சியில் இணைந்தவர்களில் ஒருவர்.
இதையடுத்து, அந்த மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக திரிணமூல் உருவெடுத்துள்ளது.
அதுமட்டுமல்ல மாணிக் சர்கார் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும் திரிணமூல் முன்னெடுத்து வருகிறது.
அடுத்த ஆண்டு திரிபுராவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
ஒருவேளை அந்தத் தேர்தலில் போட்டியிட மாணிக் சர்கார் விரும்பவில்லை எனில் திரிணமூல் போன்ற கட்சிகளை சமாளிக்க மார்க்சிஸ்ட் என்ன நடவடிக்கை எடுக்கும்?
மேற்கு வங்கத்தில் தோல்வியைத் தழுவியது போன்று மம்தாவிடம் திரிபுராவை தாரை வார்த்துக் கொடுக்குமா?
மேற்கு வங்கத்தில் இருந்து திரிபுரா மண்ணில் ஊன்றப்பட்ட திரிணமூல் என்னும் விதை விருட்சமாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com