விவாத ஜனநாயகம் தேவை

மக்களாட்சி நடைபெறுகின்ற நாடுகளில், அதுவும் குறிப்பாக பிரதிநிதித்துவ மக்களாட்சி நடைபெறுகின்ற நாடுகளில் விவாத ஜனநாயகத்தை பிரபலப்படுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன.

மக்களாட்சி நடைபெறுகின்ற நாடுகளில், அதுவும் குறிப்பாக பிரதிநிதித்துவ மக்களாட்சி நடைபெறுகின்ற நாடுகளில் விவாத ஜனநாயகத்தை பிரபலப்படுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன.
மக்களாட்சியை விளக்கும்போது, ஜான் ஸ்டூவர்ட் மில், அரண்ட் லிஸ்ட்பார்ட், எட்மண்ட் பர்க் இவர்கள் அனைவரும் "மக்களாட்சியின் அடிப்படை, அறிவுசார்ந்த விவாதமும் அதன்மேல் எடுக்கப்படும் முடிகளும்தான்' என்பதை சுட்டிக்காட்டி உள்ளனர்.
அது மட்டுமல்ல, மக்களை உயர்நிலைச் சிந்தனைக்கு அழைத்துச் சென்று கருத்துகளின் அடிப்படையில் விவாதத்தை நடத்தி, உயர்ந்த நிலையில் எண்ணிக்கையைத் தவிர்த்து, எண்ண எழுச்சியின் உன்னதத் தன்மையில் முடிவெடுக்க வேண்டும். அதற்கு விஞ்ஞானம், தொழில் நுட்பம், அறிவு, உண்மை இவைதான் அடிப்படை.
காலப்போக்கில் இந்த மக்களாட்சியில் முடிவுகள் எடுப்பதற்காக உருவாக்கப்பட்ட மாமன்றங்கள் அதாவது நாடாளுமன்றம், சட்டப்பேரவை, உள்ளாட்சி மன்றங்கள் அனைத்திலும் எண்ணிக்கை முன் தள்ளப்பட்டு விவாதம் என்பதும், அறிவுசார்ந்த உயர்நிலை விவாதம் என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன.
மக்களாட்சி மன்றங்கள் முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனவேயேன்றி விவாதங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. விவாதங்கள் அற்ற முடிவுகள் என்பது மக்களாட்சியை ஒரு குறுகிய பார்வையுடன் மக்களிடம் எடுத்துச் செல்வதாகும்.
இதற்கு முக்கியமான காரணமாக கூறப்படுவது, பொதுமக்களை பொறுப்புள்ள குடிமக்களாக வளர்த்தெடுப்பதற்குப் பதில் அவர்களை மக்களாட்சியில் வாக்காளர்களாகவும், பயனாளிகளாகவும், மனுதாரராகவும், அரசாங்கத்தின் கீழ் தாங்கள் இருப்பதாக ஓர் உணர்வினை ஏற்படுத்தி இருப்பதுதான்.
பல நாடுகளில் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றம் மக்களாட்சிக் கலாசாரத்தில் தென்பட்டாலும் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில்கூட மக்களாட்சி இன்னும் உன்னத இடத்திற்கு இதுவரை செல்லவில்லை. ஏனென்றால், மக்களாட்சியில் உன்னதம் அல்லது உயர்நிலை அடைய மக்களையும் அழைத்துச் செல்ல வேண்டும். இன்று அதுதான் மக்களாட்சியில் மிகப்பெரிய போராட்டமாக உள்ளது.
மானுடம் மிக முக்கியமாக இரண்டு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது. ஒன்று மக்களாட்சியின் விரிவுக்காகவும் உயர்வுக்காகவும். இரண்டு, சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காக. இந்த இரண்டையும் இணைத்து மக்களை உயர்நிலைக்கு எடுத்துச் செல்ல மக்களாட்சி நாடுகளில் செயல்படும் அரசியல் இயக்கங்களின் தலைவர்களுக்கு அளப்பரிய ஆற்றல் தேவை.
ஆனால் இன்று பல நாடுகளில் ஆற்றல் பெருக்கமற்ற தலைவர்கள் கையில் அதிகாரம் சிக்கித் தவிக்கின்றது. ஆகையால்தான் மக்களாட்சி என்பதை பெரும்பாலான நாடுகளில் தேர்தலுடன் நிற்கவைத்துவிட்டனர். தேர்தலைத்தாண்டி அதன் சிறப்பம்சங்களுக்குள் செல்ல மக்களுக்கு தலைவர்களால் வழிகாட்ட முடியவில்லை.
இதற்குத் தேவை தலைவர்களுக்கு தலைமைத்துவ வளர்ச்சி, நம் தலைவர்கள் தலைமைத்துவத்தில் மேலே செல்ல இயலாமல் தேங்கிவிடுகின்றனர். வாக்கு வாங்குவதற்குமேல் இவர்களால் உயர முடியவில்லை. நாடாளுமன்றங்களிலும், சட்டப்பேரவைகளிலும் அறிவுசார்ந்த விவாதம், அதன் அடிப்படையில் முடிவு என்பது, மக்களை உயர்நிலைக்கு இட்டுச் செல்லும். அதற்கான பக்குவத்தை அனைவரிடமும் குறிப்பாக மக்கள் பிரதிநிதிகளிடம் ஏற்படுத்த வேண்டும்.
பொதுவாக மக்களாட்சி சிறந்துவிளங்க மற்றும் செயல்பட சமூகத்தில் மக்களாட்சிப் பண்புகள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். குறிப்பாக ஒரு சமூகத்தில் அதிக சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றபோது ஆதிக்கம் செலுத்துகின்ற மனோபாவம் மக்கள் மத்தியில் வெளிப்படும்.
ஆகையால்தான் பெரும்பாலான மக்களாட்சிக் கோட்பாட்டாளர்கள், சமூக நிலையில் ஏற்றத்தாழ்வு நிலவுகின்ற சமுதாயத்தில் மக்களாட்சி அரசாங்கங்கள் சிறப்பாக செயல்படவே முடியாது என்று வாதிடுகின்றனர்.
மக்களாட்சி சிறப்பாகச் செயல்பட சமூகத்தில் பொருளாதார சமத்துவம் இருக்க வேண்டும் என்பது கோட்பாட்டாளர்களின் கருத்து. அடுத்து பொதுமக்களின் அரசியல் விழிப்புணர்வு என்பதும் இன்றியமையாதது. ஆனால் அந்தக் கருத்து இன்று சிதைந்து வருகிறது.
ஏனென்றால் மக்களாட்சியில் இந்த ஏற்றத்தாழ்வுகளை அகற்ற பாதிக்கப்பட்ட இனங்கள், மற்றும் சமூக குழுக்கள் தொடர்ந்து போராட ஆரம்பித்துவிட்டன. போராடி தேர்தலின்மூலம் மக்களாட்சியை பல நாடுகளில் தொடர்ந்து மக்கள் உருவாக்கி வருகின்றனர்.
மக்களாட்சி என்பது ஒரே நிலையில் எல்லா நாடுகளிலும் இருப்பதாக நாம் கருத முடியாது. மக்களாட்சி தேர்தலில்தான் ஆரம்பமாகும். அது படிப்படியாக மேம்பட்டு ஒரு உன்னத நிலையை அடைய வழிவகை காணும்.
பல நாடுகள் தேர்தலிலேயே சிக்குண்டு, அதிலிருந்து மேலே செல்ல இயலாமல் தேக்க நிலையில் இருப்பதையும் நாம் பார்த்து வருகிறோம். சில நாடுகள் மக்களாட்சியில் புதுமைகளைக் கொண்டுவந்த வண்ணம் இருக்கின்றன.
மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகளான சமத்துவம், நேர்மை, நியாயம், நீதி, எதிர்க்கருத்தை மதித்துப் போற்றுதல் ஆகியவை குடிமக்களின் அரசியல் செயல்பாடுகளில் பிரதிபலிக்குமாறு அவர்கள் சிந்தனை, நடத்தை இருக்க வேண்டும்.
அரசியல் ஜனநாயகம் என்பது சமூகத்தை மாற்ற வேண்டும். அதேபோல் அரசியல் ஜனநாயகத்தில் அடிப்படைகள் வலுவாக இருக்க வேண்டுமென்றால் சமூகத்தில் ஜனநாயகக் கூறுகள் மக்கள் செயல்பாடுகளில் பிரதிபலிக்க வேண்டும். இந்த மாற்றங்களைக் கொண்டு வருவதற்குத்தான் மக்களாட்சிக்கான அமைப்புகளை உருவாக்கி எல்லா நிலைகளிலும் செயல்படுத்தி வருகின்றோம்.
இந்த அமைப்புகளில் அது நாடாளுமன்றமாக இருந்தாலும்சரி, சட்டப்பேரவையாக அல்லது உள்ளாட்சி மன்றங்களாக இருந்தாலும்சரி மக்களாட்சியை ஆழப்படுத்துவதற்கு மக்களாட்சி மரபுகளையும், ஒழுக்கங்களையும் தங்களின் விவாதங்களின்மூலம் கொண்டுவர வேண்டும்.
விவாதங்கள் சிறியதானாலும்சரி, பெரியதானாலும்சரி முறைபடுத்தப்பட்ட விவாதங்கள் ஆதிக்க மனோபாவத்தை குறைக்கும். இன்று பல இடங்களில், அதாவது முடிவுகள் எடுக்கும் மன்றங்கள், அரசியல் கட்சிகளின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக்கள், பஞ்சாயத்து மன்றங்கள், நகரசபைகள், கிராம சபைகள் இவை அனைத்திலும் விவாதங்கள் நடத்த வேண்டும்.
விவாதம் என்பதை ஒரு கலாசாரமாக மாற்ற வேண்டும். அதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். பொதுவாக எல்லா முடிவெடுக்கும் மன்றங்களிலும் விவாதம் நடைபெற வேண்டும். அதற்கு அடிப்படையில் ஆதாரங்களுடன் கருத்துகள் கொண்டுவரப்பட்டு அதன் மேல் பெருவிவாதம் நடத்தப்படல் வேண்டும்.
இன்று அனைத்து மன்றங்களும், கருத்து பரிமாற்றத்திற்குப் பதில் முடிவுகளை ஆமோதிக்கும் மன்றங்களாகவும், ஒற்றைக் கருத்து மன்றங்களாகவும் மாறிவருவதைத்தான் நாம் பார்த்து வருகின்றோம்.
விவாதம் என்பது தலைமைக்கு எதிரானது என்ற பார்வையை உருவாக்கி, விவாதமின்றி ஒற்றைக்கருத்தை ஆமோதித்து வழிமொழிகின்ற ஒரு கலாசாரத்தை நாம் இன்று மக்களாட்சியில் உருவாக்கிவிட்டோம். இது முற்றிலும் மக்களாட்சிக்கு முரணான ஒன்று.
மக்களாட்சி வளர்ப்பு அல்லது பரவலாக்கல் அல்லது ஆழப்படுத்துதல் என்பது அனைத்தும் விவாதத்தை ஊக்குவிப்பதில்தான் இருக்கின்றது. அது தலைமையின் ஆற்றலை, சக்தியைக் குறைத்துவிடும் என்ற விவாதத்தை வைத்து முற்றிலுமாக விவாதமின்றி மாமன்றங்களை நடத்துகின்றனர்.
மக்களாட்சி வளர்வதற்கும், செழுமை பெறுவதற்கும் தலைமை மிக முக்கியம். ஆனால் நம் நாட்டில் தலைமைத்துவத்தை முரணான கருத்துக்களைக் கொண்டு விளக்கி வருகின்றனர். யார் ஒட்டுமொத்த நிறுவனத்தின் மீதும், அமைப்புக்களின் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றார்களோ, அவர்கள்தான் தலைமைத்துவம் நிறைந்தவர்கள் என்று விளக்கி வருகின்றார்கள். ஆகையால்தான் இன்று நம் அரசியல் கட்சிகள்கூட ஒரு சில தனிமனிதர்களிடம் சிக்கிச் செயல்பட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன.
மக்களாட்சியில் தலைமைத்துவம் என்பது மக்களுடன் பயணிப்பது, மக்களை மதிப்பது, மக்களை ஊக்கப்படுத்துவது, மக்களுடன் செயல்படுவது. ஆனால், மக்களை மேய்ப்பது அல்ல. இன்று நடப்பதெல்லாம் கட்சி மேய்ப்பு, ஆட்சி மேய்ப்பு, சட்டப்பேரவை மேய்ப்பு, நாடாளுமன்ற மேய்ப்பு.
மக்களாட்சியில் மக்களின் அரசியல் செயல்பாடுகள் உயர்நிலைக்குச் செல்வதற்குப் பதில், தாழ்நிலைக்குச் சென்றுகொண்டுள்ளன. இதனைத் தடுப்பதற்குத்தான் விவாத ஜனநாயகத்தைப் பற்றிப்பிடித்து இன்று உலகம் முழுவதும் விவாதித்து வருகின்றனர்.
இன்றைய நாடாளுமன்ற செயல்பாடுகளில் நடக்க வேண்டிய விவாதம் நடக்காததால் பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டிய அரசியல் அறிவு கிடைக்கவில்லை. விவாதம் என்பது மக்களைப் பண்படுத்தும், பக்குவப்படுத்தும். அதேபோல் சமூகத்தை ஒற்றுமைப்படுத்தி உயர்நிலைக்குக் கொண்டு செல்லும். முடிவுகள் எடுக்க நியாயமும், நேர்மையும் தேவை என்ற அடிப்படையில் முடிவுகள் எடுக்கும்போது, நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு அது கலாசாரமாக மாறும்.
அது மட்டுமல்ல, விவாத கலாசாரத்தை பின்பற்றும்போது முடிவுகளின் தரம் என்பதும் மிக உயர்வாக இருக்கும். அத்துடன் பொதுமக்கள் அரசியல், பொருளாதாரம், நிர்வாகம், சமூக மாற்றம், சமூக மேம்பாடு போன்ற பல்வேறு துறைகள் பற்றிய அறிவைப் பெற்று அரசியல்வாதிகளையும், அரசாங்கத்தையும், நிர்வாகத்தையும் புரிந்துகொண்டு அவை திறம்பட செயல்பட தங்கள் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்வார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com