ஜி.எஸ்.டி. எனும் அநீதி!

பல முனைகளிலான மத்திய - மாநில மறைமுக வரிகளை இணைத்து ஒரு முனைவரியாக மாற்றுவதுதான் ஜி.எஸ்.டி. என்றும், இதனால் ஏற்கெனவே

பல முனைகளிலான மத்திய - மாநில மறைமுக வரிகளை இணைத்து ஒரு முனைவரியாக மாற்றுவதுதான் ஜி.எஸ்.டி. என்றும், இதனால் ஏற்கெனவே நுகர்வோர் செலுத்திவந்த 25 முதல் 30 சதவீத வரிச்சுமை குறையும் என்றும் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதனை அடிப்படையாக வைத்துத்தான், ஜூன் 30, நள்ளிரவில் நடந்த நாடாளுமன்ற அமர்வில் ஜி.எஸ்.டி. ஏழை, எளிய மக்களுக்கு நலன் தரும் என்று பிரதமர் மோடி பேசினார். ஆனால், நடப்பதென்னவோ நேர்மாறாகவே இருக்கிறது.
மதிப்புக் கூட்டு வரி, கலால் வரி, சேவை வரி போன்ற பலவிதமான மறைமுக வரிகள் ரத்துச் செய்யப்பட்டு தற்போது மத்திய அரசின் ஜி.எஸ்.டி, மாநில அரசின் ஜி.எஸ்.டி. மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. (மத்திய - மாநில அரசுகள் இணைந்த வரி) என வரிவிதிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வகையிலான வரிகட்டிவந்த நிலைமையில் மாற்றம் செய்யப்பட்டு ஒரே முனையாக்கப்பட்டுள்ளது.
ஆனால், பலமுனை வரியை விட, தற்போது விதிக்கப்பட்டுள்ள ஒருமுனை ஜி.எஸ்.டி. வரி, கூடுதலாக உள்ளதால் பொருட்களின் விலைகள், முன்பிருந்ததை விட அதிகரித்துள்ளன.
ஜி.எஸ்.டி. அமலாக்கத்தின் மறுநாளே, மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.32 அதிகரித்தது. வீட்டு உபயோகக் குடிநீர் கேன்களின் விலை ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. நோட்டுப் புத்தகங்கள், சானிட்டரி நாப்கின்கள் மீது 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கருவிகள் உள்ளிட்ட இதுவரை வரிவிதிப்பு இல்லாத 509 பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
இதுவரையில் 4 சதவீத வரி செலுத்திவந்த கிரைண்டர்களுக்கு வரி விகிதம் 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 4 சதவீத வரி செலுத்தி வந்த பம்புகளுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு, தீப்பெட்டி, திரையரங்கங்கள் உள்ளிட்டவற்றிற்குக் கடந்த காலங்களில் விதிக்கப் பட்டிருந்த வரி விகிதங்கள் தற்போது உயர்த்தப்பட்டுள்ளன.
சாயமேற்றுதல், தையல், காஜா எடுத்தல் போன்ற சில்லறை வேலைகளில் ஈடுபடும் கடைகளும், நிறுவனங்களும் வரிவிதிப்பு வரம்பில் இல்லை. தற்போது இத்தகைய பணிகளுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆண்டுக்கு ரூ.1.5 கோடி வர்த்தகம் செய்துவந்தவர்கள் கலால் வரி வரம்பிற்குள் வரவேண்டும் என்றிருந்ததை மாற்றி, ரூ.20 லட்சம் வர்த்தகம் செய்தாலே ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டிருப்பதன் மூலம் வரிச்சுமை ஏற்றப்பட்டுள்ளது.
'ஒரே நாடு ஒரே வரி' என்ற அறிவிப்பு பகட்டாக இருந்தாலும் உண்மையில் ஜி.எஸ்.டி.யிலேயே பல்வேறு மாறுபட்ட வரி விகிதங்கள் உள்ளன. மேலும், பெட்ரோல் விலையில் 57 சதவீதமும், டீசல் விலையில் 55 சதவீதமும் வரிகள் என்பதை மாற்றவில்லை. அடக்க விலையைவிட அதிகமான வரிபோட்டு உறிஞ்சுவது தொடர்கிறது. நிலத்தில் பாதிக்கும் மேல் கிணறு என்ற நிலைமைதான் தொடர்கிறது. பெட்ரோல், டீசல் மீதான வரிவிதிப்பை ஏன் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவரவில்லை?
உரம் உள்ளிட்ட சில பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விகிதங்களால் விலை குறையும் என்றாலும் அதன் பலன்கள் சாமானியர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ஜி.எஸ்.டி. சட்டத்தில் விதிகள் உருவாக்கப்படவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி இதுபற்றி வலியுறுத்தியபோதும், மோடி அரசாங்கம் அதனை துச்சமாகக் கருதியது. சுமார் ரூ.1 லட்சம் கோடிகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபமாக மாற்றப்படும் சூழல் இதனால் எழுந்திருக்கிறது.
சிறு குறுந்தொழில் முனைவோர், சில்லறை வேலைகளில் ஈடுபடும் நிறுவனங்கள் ஜூலை 21-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். மத்திய - மாநில அரசுகள் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பைக் குறைக்காவிட்டால், சிறு குறுந்தொழில்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகும். இது மறுபுறத்தில் கார்பரேட் நிறுவனங்களுக்கே சாதகமாக அமைந்திடும்.
மத்திய அரசு மேற்கொண்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கையினால் உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜி.டி.பி.) வளர்ச்சி விகிதத்தில் ஏற்கெனவே 1 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட சிறு, குறுந்தொழில்கள் மீண்டு எழ முயல்கின்றபோது ஜி.எஸ்.டி. அவர்கள் தலைகளில் பேரிடியாக விழுந்திருக்கிறது.
ஜி.எஸ்.டி. முறையால் ஜி.டி.பி. வளர்ச்சி விகிதம் 1% முதல் 2% வரை கூடும் என்பதெல்லாம் வெறும் பித்தலாட்டமே என்று மத்திய அரசின் அமைப்பான நீதி ஆயோக் உறுப்பினர் ஒருவரே கூறியுள்ளார். அகவிலை குறையும் என்ற அரசின் கூற்றை ஒரு வாதத்திற்காக ஏற்றுக்கொண்டாலும் வளர்ச்சி மக்களின் வாங்கும் சக்தியைப் பொருத்தது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அறிமுகத்தால் விலைவாசி உயர்ந்து மக்களை பாதிப்புக்குள்ளாக்கும். இதனால் வளர்ச்சியும் பாதிக்கும்.
யாருக்காக ஜி.எஸ்.டி. என்ற கேள்விக்கு விடை காண மத்திய அரசின் வளர்ச்சி தொடர்பான கொள்கைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு சில பெரிய நிறுவனங்களுக்கு மேலும் மேலும் வரிச்சலுகைகளும் இதர சலுகைகளும் கொடுத்து அவர்கள் செய்யும் முதலீடுகள் மூலம் மட்டுமே நாட்டின் வளர்ச்சியை சாதிக்க முடியும் என்ற பா.ஜ.க. அரசின் தாராளமயக் கொள்கையின் ஒரு வெளிப்பாடுதான் இது.
நிகழும் மறைமுக வரி உயர்வு விலையேற்றத்தை ஏற்படுத்தும். இது ஏழை, எளிய, நடுத்தர மக்களைக் கடுமையாக பாதிக்கும். ஒரு பொருளையோ, சேவையோ வாங்கும் அனைவர் மீதும் ஒரே வரி விகிதம் என்பதுதான் மறைமுகவரி. ஆனால் ஜி.எஸ்.டி., ஏழை மக்களுக்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும். இது அவர்களின் குறைந்த வருமானத்தின்மீது தொடுக்கப்படுகின்ற பெரும் தாக்குதலாகும்.
நமது நாட்டின் வரிவிதிப்புக் கொள்கைகள் நீண்டகாலமாகவே ஏழை மக்களுக்கு எதிராக இருந்துவருகின்றன. ஏற்கெனவே மத்திய, மாநில அரசுகளுக்கு வரக்கூடிய மொத்த வரி வருவாயில் 33.6 சதவீதம் நேர்முக வரியாகவும், 66.4 சதவீதம் மறைமுக வரியாகவும் 2015-16இல் உள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபோது நேர்முக வரி சதவீதம் 34.1%-ஆக இருந்தது. மறைமுக வரி 65.9%-ஆக இருந்தது. 2015-16ஆம் ஆண்டில் மறைமுகவரியின் பங்கு அதிகரித்து நேர்முக வரியின் பங்கு மேலும் குறைந்திருக்கிறது.
பா.ஜ.க. அரசின் கொள்கையே, பெரும் செல்வந்தர்கள் மற்றும் கார்ப்பரேட்டுகள் மீது வரிச்சுமையைக் குறைத்து, சாமானிய மக்களின் மீது வரிச்சுமையை அதிகரிப்பதாக இருப்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.
செல்வங்களின் மீதான வரியை (ஜ்ங்ஹப்ற்ட் ற்ஹஷ்) பா.ஜ.க. அரசு ஒழித்துக்கட்டியது. ஒவ்வோர் ஆண்டும் 'ஊக்குவிப்பு' என்ற பெயரில் பல லட்சம் கோடி ரூபாய்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி சலுகையாகத் தரப்படுகின்றன.
மேலும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட கார்ப்பரேட் கடன்கள் பல லட்சம் கோடிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது ஏழைகளை மேலும் ஏழைகளாக்கி, பணக்காரர்களை மென்மேலும் செல்வச் செழிப்பாளர்களாக்கும் கொள்கையே ஆகும்.
கடந்த 2000-ஆம் ஆண்டில் இந்திய மக்கள்தொகையில் மேல் தட்டில் உள்ள ஒரு சதவீதக் குடும்பங்களுக்கு நாட்டின் மொத்த சொத்தில் 36.8 சதவீதம் உடமையாக இருந்தது.
நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும்போது, ஒரு சதவீத பணக்காரர்களின் சொத்து 49 சதவீதமாக உயர்ந்திருந்தது. பா.ஜ.க. ஆட்சியின் முதல் இரண்டாண்டு ஆட்சிக்குப் பின் இது 58.4 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. ஜி.எஸ்.டி. அமலாக்கம் துவங்கிய கடந்த சில நாட்களில் பங்குச் சந்தைகளில் கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு புள்ளிகள் அதிகரித்திருப்பதையும் இதோடு இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.
ஜி.எஸ்.டி. தொடர்பான சட்டம் மாநிலங்களின் வரி நிர்ணய உரிமைகளை முற்றிலும் பறித்து, ஜி.எஸ்.டி. கவுன்சிலிடம் வரி விதிப்பு அதிகாரங்களை ஒப்படைத்துள்ளது. சட்டப்பேரவைகளையும் நாடாளுமன்றத்தையும் பலவீனப்படுத்தும் ஜனநாயக விரோதத் தன்மையும் இதில் உள்ளது.
வரிகளை நிர்ணயிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்தின், சட்டப்பேரவைகளின் வரம்பில் இருந்து தற்போது ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இந்த முடிவுகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும், இறுதி முடிவுக்கு உட்படுத்தவும் வழியில்லாமலாக்கியிருப்பது ஜனநாயக விரோதமாகும்.
ஜி.எஸ்.டி. அமலாக்கத்திற்கு பிறகு விலை குறையும் என்று பேசியதை, நடைமுறையில் உறுதி செய்திட மத்திய அரசும் மாநில அரசும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். புதிய வரிவிதிப்பை வெளிப்படைத்தன்மையோடு அமலாக்கிட, பழைய வரிவிகிதம் புதிய வரி விகிதம் கொண்ட பட்டியலை மத்திய - மாநில அரசுகள் மக்களுக்கு வெளியிட வேண்டும்.
நாடாளுமன்றத்தின் ஜூன் 30, ஜூலை 1 நள்ளிரவுக் கூட்டத்தில் ஜி.எஸ்.டி., வரிவிதிப்புமுறை அமலாக்கலுக்கு வருவதைப் பகட்டான விழாவாகக் கொண்டாடினர். 1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவில் நேரு ஆற்றிய உரை, விடுதலைப் பிரகடனம். ஆனால் மோடியின் நள்ளிரவு உரை மக்களுக்கு சுமையேற்றும் சாசனம்.

கட்டுரையாளர்:
மாநிலச் செயலாளர்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com