வங்கிகளுக்கு உதவுமா புதிய சட்டம்?

ரிசர்வ் வங்கியின் மிக முக்கியமான அறிக்கையான நிதி ஸ்திரத்தன்மை அறிக்கை (Financial Stability Report) சமீபத்தில் வெளிவந்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் மிக முக்கியமான அறிக்கையான நிதி ஸ்திரத்தன்மை அறிக்கை (Financial Stability Report) சமீபத்தில் வெளிவந்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள சில தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன.
வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக் கடன் அளவு படிப்படியாக குறைவதற்கு பதில் 2018}ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பத்து முதல் பதினொன்று சதவீதமாக உயரக் கூடும் என்பதே அது. ஏற்கெனவே 2017 மார்ச் மாத நிலவரப்படி, 9.6 சதவீதமாக அது உள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, பொதுத்துறை வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்
களுக்கு வழங்கும் கடன் தொகை வளர்ச்சி தேய்ந்து, 2017 மார்ச் மாதம் அது வெறும் 0.8 சதவீதமாக மட்டுமே அதிகரித்துள்ளது. வங்கிகள் 1969}இல் தேசியமயமாக்கப்பட்ட பிறகு, வங்கிக் கடன் வளர்ச்சியில் வரலாறு கண்டிராத வீழ்ச்சி இது.
ரிசர்வ் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையில் சற்று ஆறுதல் அளிக்கும் விஷயம் வாராக்கடன் அளவு அதிகரித்தபோதிலும், அதிகரிப்பு விகிதம் சிறிதளவு குறைந்துள்ளது என்பதே.
ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டும் மற்றொரு கவலை தரும் அம்சம் வங்கிக் கடன் சரிந்திருப்பதன் விளைவாக, வங்கிகள் வைத்திருக்க வேண்டிய "நிர்ணயிக்கப்பட்ட மூலதன விகிதம்' (Capital Adequacy Ratio)) பல வங்கிகளில் அடுத்த அடுத்த ஆண்டுகளில் வெகுவாக குறையும் என்பது.
குறைந்தபட்சம் 12 பொதுத் துறை வங்கிகளில் "நிர்ணயிக்கப்பட்ட மூலதன விகிதம் 9 சதவீதத்துக்கு கீழே சரியக் கூடிய சாத்தியம் இருக்கிறது என்று ரிசர்வ் வங்கி கருத்து தெரிவித்துள்ளது.
அது மட்டுமல்லாமல், எந்த ஒரு பொதுத்துறை வங்கியை எடுத்துக் கொண்டாலும் அந்த வங்கியின் மிகப்பெரிய கடன்தாரர்களில் ஒருவர், வாங்கிய கடனுக்கான வட்டியை செலுத்தத் தவறினால், அந்த குறிப்பிட்ட வங்கியின் அந்த ஆண்டுக்கான லாபம் பூஜ்யமாக இருக்கும் என்கிறது ரிசர்வ் வங்கியின் ஆய்வு. அந்த அளவுக்கு ஒவ்வொரு வங்கியிலும் பெரும் கடன்கள் சிலரது கைகளில் முடங்கி
யுள்ளன.
அதேபோல், அனைத்து வங்கிகளிலும் அதிகபட்ச கடன்தொகை பெற்றிருக்கும் நிறுவனங்கள் உள் கட்டமைப்புத் துறையைச் சேர்ந்தவையாக உள்ளன. துல்லியமாகச் சொல்வதென்றால் மின் உற்பத்தி, உருக்கு உள்ளிட்ட உலோகங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத் தொழில், சிமெண்ட், போக்குவரத்துச் சாதனங்கள், கட்டுமானத் துறை ஆகியவை வாராக்கடன் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.
பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பது ஆரோக்கியமான வங்கிகள். அதேநேரம் வங்கிகளை வாராக் கடன் என்னும் கடும் பிணி பீடித்துள்ளது. இந்த பிணியிலிருந்து வங்கிகளை மீட்டெடுப்பதற்காகவே, புதிய திவால் சட்டம் (இன்ஸால்வென்ஸி மற்றும் பேங்க்ரப்ட்ஸி சட்டம்) மற்றும் அண்மையில் மத்திய அரசு நிறைவேற்றிய அவசரச் சட்டம் ஆகியவை கொண்டு வரப்பட்டுள்ளன.
"சர்ஃபாஸி' சட்டம் உள்ளிட்ட பழைய சட்டங்கள் பயனற்றுப்போன நிலையில்தான் மேற்கூறிய புதிய சட்டங்கள் புதிய முயற்சியாகப் பார்க்கப்படுகின்றன.
இதன்படி, நீதிமன்ற வழக்குகளில் நேரக்கூடிய காலதாமதம் தவிர்க்கப்படும். ஒரு நிறுவனத்துக்கு கடன் வழங்கிய வங்கி, வாராக்கடனை வசூலிக்க, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது திவால் நடவடிக்கையை தொடங்கலாம்.
இதைக் கையாளுவதற்கு தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயம் (நேஷனல் கம்பெனி லா டிரிபியூனல் - NCLT) என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திவால் நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு திவால் நிபுணர் (Insolvency Professional)) தீர்வு நிபுணர் (Resolution Professional) மற்றும் திவால் அறங்காவலர் (Bankruptcy Trustee) ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். எனவே அரசு அதிகாரிகளைவிட துறை சார்ந்த நிபுணர்களின் பங்கு இந்த அமைப்பில் அதிகம்.
கடன் பெற்றவருக்கு உடனடியாக ஆறு மாத கால அவகாசம் தரப்படுகிறது. ஆறு மாதங்களில் முடிவுக்குக் கொண்டு வர இயலாத பட்சத்தில் மேலும் மூன்று மாதங்கள் அவகாசம் தரப்படும். இந்த கால அவகாசத்தின்போது எவ்வித நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது. சர்ஃபாஸி சட்டப்படியான நடவடிக்கை ஏதேனும் நிலுவையில் இருந்தால் அது நிறுத்தி வைக்கப்படும்.
அதேபோல், கடன் வாங்கியவர் தன் சொத்துகளை விற்று பணமாக்குவது, கையிருப்பு பணத்தை வேறு ஒருவருக்கு மாற்றுவது, புதிதாகக் கடன் வாங்குவது போன்வற்றில் ஈடுபட முடியாது.
முக்கியமாக நிறுவனத்தின் இயக்குனர் குழுவின் அதிகாரம் முடக்கி வைக்கப்படும். நிர்வாக அதிகாரங்களை தீர்வு நிபுணர் மேற்கொள்வார்.
இரு தரப்பினருக்கும் சுமுகமான தீர்வு காண்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும். அந்த முயற்சி தோல்வியுற்றால், முறைப்படி சொத்துகள் விற்கப்பட்டு, அந்த தொகையை கொண்டு வங்கிக்கு பணம் பட்டுவாடா செய்யப்படும்.
இந்த சட்டத்தில் ஒரு பிரச்னை என்னவெனில், இந்தியாவில் நிலுவையில் உள்ள பெரும் எண்ணிக்கையிலான வாராக் கடன் கணக்குகளை புதிய திவால் சட்டத்தின் மூலம் தீர்வு காண்பதற்குத் தேவையான எண்ணிக்கையில் திவால் நிபுணர்கள், தீர்வு நிபுணர்கள் ஆகியோர் கிடைப்பார்களா என்பதுதான்.
ஏற்கெனவே இது ஒரு சோதனை முயற்சி எனப் பார்க்கப்பட்ட இந்த சட்டத்துக்கு ஒரு புதிய சோதனை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் ரிசர்வ் வங்கி ஒரு நடவடிக்கை மேற்கொண்டது. நீண்டகாலமாக திரும்பிச் செலுத்தாத கடனாளிகளின் பட்டியலை தயார் செய்தது. முதல் கட்டமாக மிக மோசமான வாராக்கடன் என அடையாளம் காணப்பட்ட 12 நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க ரிசர்வ் வங்கி முடிவு மேற்கொண்டது.
அதன்படி அவற்றுக்கு எதிராக திவால் சட்டத்தின் கீழ் சட்டப்படி வாராக் கடனை வசூலிக்க தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயத்தில் செயல்பாடுகளைத் தொடங்குமாறு வங்கிகளுக்கு ஆணை பிறப்பித்தது. இந்த கணக்கு ஒவ்வொன்றிலும் நிலுவையில் உள்ள வாராக்கடன் பல்லாயிரம் கோடி ரூபாய் ஆகும்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை முதன்முறையாக ரிசர்வ் வங்கி மேற்கொண்டபோது, பொருளாதார நிபுணர்கள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரும் ரிசர்வ் வங்கியைப் பாராட்டினார்கள். வாராக் கடன் வசூலில் இந்த நடவடிக்கை ஒரு புதிய திருப்பமாக பார்க்கப்பட்டது.
மேற்கூறிய 12 நிறுவனங்களில் ஒன்றான எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனம் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு எதிராக குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதன் பேரில் குஜராத் உயர்நீதிமன்றம்
எஸ்ஸார் ஸ்டீலுக்கு சாதகமாக இடைக்கால தடை வழங்கியுள்ளது.
ரிசர்வ் வங்கி, இந்த வழக்கை உரிய முறையில் எதிர்கொண்டு நிறுவனத்தின் நிலைப்பாட்டை சட்டரீதியில் முறியடித்து, தனது நியாயமான இன்சால்வென்ஸி நடவடிக்கையை நிலைநாட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஒருவேளை, வழக்கை ஏதேனும் ஒரு காரணம் காட்டி காலதாமதம் செய்வதற்கு எஸ்ஸார் ஸ்டீல் (வாராக்கடன் ரூ.37,284 கோடி) முற்பட்டால், 12 நிறுவனங்கள் அடங்கிய பட்டியலில் உள்ள இதர நிறுவனங்களான பூஷன் ஸ்டீல் (வாராக்கடன் ரூ.44,478 கோடி), பூஷன் பவர் (ரூ.37,248 கோடி), அலோக் இண்டஸ்டிரீஸ் (ரூ.22,075 கோடி), அம்டெக் ஆட்டோ (ரூ.14,074 கோடி), மோனெட் இஸ்பட் (ரூ.12,115 கோடி), லான்கோ இன்ஃரா (ரூ.44,364 கோடி), எலக்ட்ரோஸ்டீல் ஸ்டீல்ஸ் (ரூ.10,273 கோடி), இரா இன்ஃப்ரா (ரூ.10,065 கோடி),
ஜேபி இன்ஃப்ரா டெக் (ரூ.9,635 கோடி), ஏ.பி.ஜி. ஷிப்யார்டு (ரூ.6,953 கோடி),
ஜோதி ஸ்ட்ரக்ட்ச்சர்ஸ் (ரூ.5,165 கோடி) ஆகிய வையும் நீதிமன்றங்களை அணுகி இடைக்காலத் தடை கோரி திவால் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடுவதற்கு முயற்சி மேற்கொள்ள வாய்ப்பிருக்கிறது.
எந்த நோக்கத்திற்காக, புதிய திவால் சட்டமும், மத்திய அரசின் அவசரச் சட்டமும் நிறைவேற்றப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறாமல் போகக்கூடும்.
அதேநேரம், புதிய திவால் நடவடிக்கைக்கு வங்கிகள் எந்த அளவு தயார் நிலையில் உள்ளன? இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் பாரத ஸ்டேட் வங்கி ஜூலை 11}ஆம் தேதி தெரிவித்துள்ள கருத்து நினைவுகூரத்தக்கது.
"பாரத ஸ்டேட் வங்கியைப் பொருத்தவரை இந்த 12 வாராக்கடன்களுக்கான தொகைக்கு ஏற்ப, ஏற்கெனவே ஸ்டேட் வங்கி போதுமான அளவு தொகையைத் தங்களது இந்த ஆண்டு கணக்குகளில் இருந்து ஒதுக்கீடு (ச்ஹஸ்ரீற்ர்ழ்ங்க்) செய்துள்ளது என்றும் தேவையானால் கூடுதல் தொகையானது இதற்காக ஒதுக்கீடு செய்யப்படும்' என்றும் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா கருத்து தெரிவித்துள்ளார்.
எது எப்படி இருந்தாலும், வங்கிகளின் ஆரோக்கியத்தைப் பேணிக் காத்து, அவற்றை மேலும் வலுப்படுத்துவதற்கும், அதன் வாயிலாக நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்
படுத்துவதற்கான முயற்சிக்கு பின்னடைவு ஏற்படாமல் பாரத ரிசர்வ் வங்கி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் எல்லோரது எதிர்பார்ப்பு.

கட்டுரையாளர்:
வங்கி அதிகாரி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com