சூழ்ந்து வரும் போர் மேகம்

ஆசியக்கண்டத்தில் சக்தி படைத்த நாடுகள் இரண்டு. ஒன்று, பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் ஆசியாவில்முதலிடம் வகிக்கும் சீனா.

ஆசியக்கண்டத்தில் சக்தி படைத்த நாடுகள் இரண்டு. ஒன்று, பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் ஆசியாவில்முதலிடம் வகிக்கும் சீனா. மற்றொன்று நமது பாரத நாடு. பாரத நாட்டிற்கும் சீன நாட்டிற்கும் நெடுங்காலமாகவே கலாசார ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும், பூகோள ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் பாரம்பரியமான உறவு உண்டு. பாரத நாடு சுதந்திரம் பெற்ற பிறகு சீனாவிடமிருந்து தனது எல்லைகளைக் காத்திட சமாதானமாகவும், அமைதியாகவும், ஆக்கபூர்வமாகவும் முயற்சிகளைமேற்கொண்டு வருகின்றது.
ஆனால் 1959-ல் சீனநாடு திபெத்தை கபளீகரம் செய்த பிறகு திபெத் நாட்டின் புத்தமத குரு தலாய் லாமாவிற்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது. அதன் பிறகு சீனா நமது நாட்டை எதிரிநாடாகக் கருதி செயல்படத் தொடங்கியது.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு சீனாவுடன் பஞ்சசீலக் கொள்கைகளின்அடிப்படையில் ஒப்பந்தம் செய்துகொண்டார். ஆனால் சீனா 1962 -இல் இந்தியாவின் எல்லைப்பகுதிகளைஆக்கிரமித்து, இந்தியாவிற்குள் நுழைந்தது. இந்திய - சீன யுத்தம் தொடங்கியது.
பண்டித நேரு, சீனாவால் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தார். சீனா தன்னை வஞ்சித்து முதுகில் குத்திவிட்டதாகஅறிவித்தார். உலக சமாதானத்திற்காகவும், இந்திய - சீனா நட்புறவைப் பேணுவதில் நேரு அதிக கவனம் செலுத்தி வந்ததாலும், அப்போது யுத்தத்தை எதிர்பாராததாலும் நம்முடைய ராணுவத்தை பலப்படுத்த நாம் தவறிவிட்டோம். இந்திய ராணுவத்தை ஆயத்த நிலையில் நாம் வைத்திருக்கவில்லை.
மேலும், அப்போது இடதுசாரி சிந்தனையாளர்கள் நேருவை சூழ்ந்திருந்த காரணத்தினாலும், அப்போதைய ராணுவ மந்திரியாக இடதுசாரி சிந்தனையாளரான கிருஷ்ண மேனன்இருந்த காரணத்தினாலும் நம்மால் சீன ராணுவத்தை சமாளிக்க முடியவில்லை. அந்தப்போரில் நாம் தோல்விஅடையக்கூடிய சூழல் ஏறப்பட்டது.
போரின்விளைவாக, நமது நாட்டிற்குச் சொந்தமான 47,000 சதுர மைல் பரப்பளவை சீனா ஆக்கிரமித்துக் கொண்டது. இந்தப் பகுதியில், பாரத மக்களின் புனிதத் தலமாகவும் சிவபெருமாள் வாழும் இடமாகவும் கருதப்படுகின்ற திருக்கைலாய மலை மற்றும் புனிதமான மானசரோவர் ஏரியும் அடக்கம்.
நேருவின் கம்யூனிச, சோஷலிச நண்பர்கள் அவரை ஏமாற்றினர். குறிப்பாக, சோவியத் ரஷியா இந்தியாவிற்கு உதவ மறுத்தது. அது சீனாவின்அத்துமீறலை ஆதரித்தது. ரஷியா நடுநிலை வகிப்பதாகவும் சொன்னது. நல்ல வேளையாக அப்போதைய அமெரிக்க அரசும், அமெரிக்க அதிபர் ஜான் கென்னடியும் இந்தியாவை ஆதரித்து உதவ முன்வந்தனர். எனவே, சீனா பின்வாங்கியது. ஆனாலும், இன்றளவும் நமது திருக்கைலாய மலையை நாம் மீட்க முடியவில்லை. கைலாய யாத்திரை செல்ல நாம் சீனாவிடம் அனுமதி பெற வேண்டிய அவலநிலை உள்ளது.
1962 போரின் விளைவாக, இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தது. இந்திய தேசிய உணர்வுடைய தமிழகத்தைச் சார்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் ப. ஜீவானந்தம் போன்றவர்கள் தேசபக்தியின்அடிப்படையில் ஒன்று கூடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினர். அதாவது வலது கம்யூனிஸ்ட்கட்சி உருவானது.
ஆனால், இன்றும் இடது கம்யூனிஸ்ட் கட்சி கேரள மாநிலத்திலும், திரிபுராவிலும்ஆட்சி ஆதிகாரத்தில் உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் அது எதிர்க்கட்சியாக உள்ளது. 1962 க்குபிறகு, சீனா நமக்குப் பகை நாடாகவும் எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற அடிப்படையில் பாகிஸ்தானுக்கு நட்பு நாடாகவும் திகழ்கின்றது.
இந்திய - பாகிஸ்தான் எல்லையில் காஷ்மீரத்தின்அக்சய் சீன் எனும் பகுதியை பாகிஸ்தான் துணையோடு சீனா ஆக்கிரமித்துள்ளது. காஷ்மீரத்தின் லடாக் மற்றும் லே பகுதிகளில் சீனா ஆக்ரமிப்பு செய்துள்ளது. அருணாசலப் பிரதேசத்தை சீனா தனக்குச் சொந்தம் கொண்டாடி வருகிறது. சீன நாட்டின் வரைபடத்தில் அருணாசலப் பிரதேசத்தையும் இணைத்து வெளியிட்டு வருகிறது.
அவ்வப்போது இந்தியாவின் இமாச்சல பிரதேச மாநில எல்லைப் பகுதிகளில் ஊடுருவி வருகிறது. இலங்கையில் சிங்கள அரசுடன் இணைந்து ராணுவத் துறைமுகங்களை அமைத்து வருகிறது. இப்படி பாரத நாட்டின்அனைத்து எல்லைப்பகுதிகளிலும் சீனாவின் இந்தியாவுக்கெதிரான விரோதப் போக்கு தொடர்கிறது.
இந்திய - பாகிஸ்தான் எல்லையிலும், இந்திய - வங்க தேச எல்லையிலும் இந்திய விரோத சக்திகளை உருவாக்கி, அவர்களோடு கைகோத்துக்கொண்டு சீனா செயல்பட்டு வருகிறது. நேபாளத்தை கம்யூனிச நாடாக மாற்றியதன் மூலம் நேபாள மக்களிடையே இந்திய விரோத மனப்பான்மையை வளர்த்து வருகிறது.
பர்மாவிலும் (மியான்மர்) இந்திய விரோத மனப்பான்மையை உருவாக்கி வருகிறது. அங்கும் இந்திய விரோத சக்திகளுடன் இணைந்து செயல்படுகிறது.
சீனா தனது 'ஆபரேஷன் முத்துமாலை' நடவடிக்கை மூலம், அதாவது இந்தியாவைச் சூழ்ந்து கொண்டு வீழ்த்துவது எனும் ரகசியத் திட்டத்தின் மூலம் ஆசியப் பகுதியில் உள்ள வங்க தேசம், நேபாளம், மலேசியா,சிங்கப்பூர், கம்போடியா, வியத்நாம், இலங்கை ஆகிய நாடுகளில் இந்திய விரோதிகளை உருவாக்கியும், தனது ராணுவத் தளங்களை அமைத்தும், துறைமுகங்களை அமைத்தும் சதி திட்டம் தீட்டி வருகிறது.
சர்வதேச அரசியலில் ஐக்கிய நாடுகள் சபையில் 'வீட்டோ' அதிகாரம் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா இடம் பெற சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்திய நாடு சர்வதேச அரசியலில் சக்திபடைத்த நாடாக உருவாகி வருவதை சீனா நேரடியாகவும், மறைமுகமாகவும் தடுத்து வருகிறது.
மேலும், நமது பாரத நாட்டின் உள் பகுதிகளில் அமைந்துள்ள பல மாநிலங்களில் நக்சல், மாவோயிஸ்ட் இயக்கங்களுக்குஆயுதங்கள் மற்றும் பண உதவிகளைச் செய்து வன்முறையை தூண்டி வருகிறது. பிரிவினைவாதத்தையும், பயங்கரவதத்தையும் இந்தியாவில் விதைத்து வருகிறது. 1962 -இல் இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் பெரும்பாலானோர் சீனப் படையெடுப்பை நியாயப்படுத்தினர்.
தற்போது சிக்கிம் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருக்கின்ற டோக்கா லா பகுதியும் பூட்டான் நாட்டின் யோகிலாங் பகுதியும் ஒரு முனையில் சந்திக்கின்றன. இப்பகுதியை சீனா தனது பகுதி என்றுஅறிவித்து பூட்டான் நாட்டில் ஆக்கிரமிப்பு செய்கிறது. திபெத்தைக் கபளீகரம் செய்தது போல பூட்டான் நாட்டை ஆக்கிரமிக்க சீனா முயற்சிகளை மேற்கொள்கிறது.
சிக்கிம் மாநிலத்திற்கு உட்பட்ட பகுதியில் சீன ராணுவம் ஊடுருவி இந்திய ராணுவ நிலைகளை அழித்துள்ளது. மேலும், பூட்டான் பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் உள்ள சீனா, அங்கு சாலைகளையும், ராணுவ முகாம்களையும் அமைத்து வருகின்றது.
இதனைத் தொடர்ந்து, பூட்டான் நாட்டை ப் பாதுகாக்கவும், சிக்கிம் மாநிலத்தில்உள்ள இந்திய எல்லையை காக்கவும் இப்பகுதியில் இந்திய இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் அதிகாரபூர்வ சீன செய்தி தாள்களின் மூலம் இந்தியா மீண்டும் 1962ம் வருடத்தை சந்திக்க நேரிடும் என சீனா இந்தியாவை மிரட்டுகின்றது. தற்போது இந்திய - சீனப் போர் உருவாகக்கூடிய பதற்றம் சூழ்ந்துள்ளது.
பாரத நாட்டில், குறிப்பாக தமிழகத்தில் சில நக்சலைட்டுகள் தங்களின் சமூக வலைதளங்கள் மூலம் சீனா இந்தியாவைக் கைப்பற்ற வேண்டும் என்றும், தமிழகத்தைத் தனி நாடாக மாற்ற வேண்டும் என்றும் எழுதி வருகின்றனர்.
பொதுவாக, இந்திய எல்லைகளைத் தனது ராணுவம் மூலம் அத்துமீறி ஆக்கிரமிக்கின்ற சீனா, பாரத நாட்டிற்குள் நக்சல், மாவோ பயங்கரவாத இயக்கங்களுக்குஆதரவு தருவதன் மூலம் இந்தியாவின் உட்பகுதிகளிலும் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றது.
நதிநீர்ப் பங்கீடு, வர்த்தகம், தொழில் ஆகியவற்றிலும் சீனா நேர்மையான அணுகு முறையைக் கடைப்பிடிப்பது இல்லை. பிரம்மபுத்திரா நதிநீர்ப் பங்கீட்டிலும், இந்தியாவின் நீர்மின் உற்பத்தித் திட்டங்களிலும் இந்திய மக்களுக்கு எதிராகவே சீனா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
மேலும், ஜவுளி வர்த்தகம், மின்னணுப் பொருள்கள், பொம்மைகள், பட்டாசுகள், உணவு வகைகள் ஆகிய தொழில்களில் தொழில் தர்மத்துடன் நேர்மையாக சீனா செயல்படுவது இல்லை. சதிச் செயல்கள் செய்தும், இந்தியாவின் பெயரில் போலியான தயாரிப்புக்களையும் பொருட்களையும் உற்பத்தி செய்து இந்தியாவின் பெயரை சீனா கெடுத்துவருகிறது.
1962 - இல் நடந்த இந்திய - சீன யுத்தத்தில் இந்தியா பெரும் பின்னடைவைச் சந்தித்தது. ஆனால் தற்போது அப்படி நடப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. நமது நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதும், சீனாவின்துரோக நடவடிக்கைகளை முறியடிப்பதும் ஆட்சியாளர்களின் கடமை மட்டுமல்ல, பாரத நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனின் கடமையுமாகும்.
கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ப. ஜீவானந்தம் இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனாவை எதிர்த்தார். 'சீனா இந்தியாவை ஆக்கிரமித்துவிட்டால் இந்திய வரைபடத்தை எங்கே கொண்டு போய் ஆணி அடித்து மாட்டுவது? எனவே நாம் இந்தியாவை ஆதரிப்போம்' என்று முழங்கினார்.
நம்மைச் சூழ்ந்து கொண்டு வீழ்த்த நினைக்கும் சீனாவை முறியடிக்க, தற்போது நாம் அனைவரும் ஒன்றிணைந்து சீனப் பொருள்களைமுற்றாகப் புறக்கணிப்போம்!
கட்டுரையாளர்:
தலைவர், இந்து மக்கள் கட்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com