சுதந்திரமும் சுகாதாரமும்

இந்தியாவை தூய்மையாக்க, தூய்மை இந்தியா திட்டத்தை 2014-இல் மத்திய அரசு துவக்கியது. இதன் குறிக்கோள் மகாத்மா காந்திஜியின் 150-ஆவது ஆண்டு விழாவை 2019-இல் கொண்டாடும் போது இந்தியா முழுவதும் தூய்மையாக

இந்தியாவை தூய்மையாக்க, தூய்மை இந்தியா திட்டத்தை 2014-இல் மத்திய அரசு துவக்கியது. இதன் குறிக்கோள் மகாத்மா காந்திஜியின் 150-ஆவது ஆண்டு விழாவை 2019-இல் கொண்டாடும் போது இந்தியா முழுவதும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது தான்.
ஆனால், மக்கள் தொகைப் பெருக்கத்தால், நகரங்கள் விரிவடையும் போது இந்தக் குப்பைப் பிரச்சினையும் விரிவடைந்து பல்வேறு நோய்களுக்கு வித்திட்டுச் செல்கிறது.
கடந்த ஆண்டு மத்திய அரசு வெளியிட்டுள்ள மிகத் தூய்மையான நகரங்கள் பட்டியலில் மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி நகரம் 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்னை மாநகரம் 235-ஆவது இடத்திலுள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் குவியும் குப்பைகளில் அளவு 14,000 மெட்ரிக் டன். சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட நகரங்களில் 1991-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தினமும் கொட்டப்படும் குப்பைகளின் அளவு 600 டன்.
ஆனால், இன்றோ தினமும் 5,000 டன் குப்பைகள் சேருகின்றன. அதாவது, தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஒருவர் கொட்டுகிற குப்பையின் அளவு 200-லிருந்து 600 கிராம் வரை. இந்தியாவில் மட்டும் சேரும் குப்பைகளின் எடை ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 200 லட்சம் டன்.
இந்தக் குப்பைகள் நோய் உற்பத்தி கேந்திரங்களாக மாறி மக்களின் இயல்பு வாழ்க்கையையே மாற்றி விடுகின்றன. ஒரு நாள் இதை அப்புறப்படுத்தாமல் விட்டு வைத்தாலும் நகரங்கள் நரகமாக மாறி விடும்.
பொது இடங்களில் புகைபிடித்தல், குப்பைகளை கண்ட இடங்களில் போடுதல், எச்சில், சளி துப்புதல், இயற்கை உபாதைகளைக் கழித்தல், போன்ற விரும்பத் தகாத செயல்களில் ஈடுபடுவதால் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகள் அசுத்தமாகி, அதனால் நோய் கிருமிகள் உருவாகி நம்மைப் பாதிக்கின்றன.
சாக்கடைகளில் கொட்டப்படும் குப்பைகளால், கழிவு நீர் மழைக் காலங்களில் சாலைகளில் பரவி, தாழ்வான இடங்களில் அமைந்துள்ள குடியிருப்புகளிலும் புகுந்து விதவிதமான நோய்களை உருவாக்குகின்றன. கொசு உற்பத்தி பண்ணைகளும் அங்கு தோன்றி விடுகின்றன.
சாலையோரங்களில் கடை வைத்திருப்போர் குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் போடாமல் அதற்கு அருகிலேயே கொட்டுவதும், சாலைகளில் வீசியெறிவதும் வாடிக்கையாகி விட்டது.
கோயில்கள், ரயில் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், சந்தைகள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் குப்பை சேருவதைத் தவிர்த்தாலே சாலையோரங்களில் சேரும் குப்பைகள் வெகுவாகக் குறையும்.
குப்பைகளில் உணவு, மருத்துவம், மின்னணுக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள், கட்டடக் கழிவுகள் என பல வகைகள் உள்ளன. இவற்றை மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரண்டாகப் பிரிக்கலாம்.
மக்கும் குப்பைகள் என்பது உணவுக் கழிவுகள், தாள்கள், துணிகள் போன்றவை. நெகிழி எனப்படும் பிளாஸ்டிக், ரப்பர், கண்ணாடி, உலோகங்கள், மின்னணுக் கழிவுகள், வேதிப் பொருள்கள், மருத்துவக் கழிவுகள் போன்றவைகள் மக்காத குப்பைகள்.
தமிழ்நாடு முழுக்க கொட்டப்படும் குப்பைகளில் 80 சதவீதம் மட்டுமே உள்ளாட்சி அமைப்புகளால் அள்ள முடிகிறது.
மக்கும் குப்பைகளில் உண்டாகும் கிருமிகளால் தொற்று நோய்களும், சுகாதாரக் கேடும் ஏற்படுகின்றன. மக்கும் குப்பைகளிலிருந்து உருவாகும் மீத்தேன் வாயுவை தொடர்ந்து சுவாசிக்கும் மக்களுக்கு சுவாசக் கேடு ஏற்பட்டு, புற்று நோய் கூட உண்டாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும், மின்னணு கழிவுகள் நச்சுத் தன்மை கொண்டவை. பாதரசம், காரீயம் போன்ற நச்சு வேதி பொருள்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. இந்தக் குப்பைகளால் உண்டாகும் டயாக்ஸின் எனும் வாயு காற்றில் பரவி பயணிக்கும் ஆற்றல் கொண்டவை.
குப்பை கொட்டப்படும் பகுதியின் அருகே குடியிருப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கருச்சிதைவு, சுவாசக் கோளாறு, கல்லீரல், நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் எனவும், கொடிய நச்சுப் புகையால் கருவில் இருக்கும் குழந்தைக்கும்கூட புற்று நோய் உண்டாகக் கூடும் எனவும் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அரசு குப்பை மேலாண்மைக்காக டன்னுக்கு 1,000 ரூபாய் முதல் 2,000 ருபாய் வரை செலவு செய்கிறது. மேலும், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளிலுள்ள உணவகங்கள், திருமண மண்டபங்களில் சேரும் உணவு, காய்கறிகள், தாவரக் கழிவுகளை குப்பை மேட்டுக்கு அனுப்பாமல் அங்கேயே சாண எரிவாயு (பயோகேஸ்) அமைப்பையும் அரசு உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால் குப்பை சேருவது குறையும்.
ஆனால், இது குறித்து போதிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லை. தூய்மை என்பது மக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் கேள்வி குறியாகவே உள்ளது. இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து அதற்காக வழங்கப்பட்ட கூடைகளில் போட்டு துப்புரவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என நகராட்சிகள் அறிவுறுத்தி வருகின்றன.
மக்குகின்ற உணவு மற்றும் காய்கறிகளோடு மக்காத குப்பைகளையும் மொத்தமாகப் போட்டு, அதை பிளாஸ்டிக் பையிலிட்டு வீதியில் எறிகிறபோது, அது பிரிக்க முடியாமல் போய் சுகாதாரக் கேட்டிற்கு வழி வகுக்கிறது. அதையே இரண்டு வகையாக பிரிக்கின்றபோது, குப்பைகளை சுத்தம் செய்கின்ற பணி வெகுவாக எளிதாகின்றது.
சுதந்திரமும் சுகாதாரமும் ஒன்றோ டொன்று தொடர்புடையது என்றார் காந்திஜி. உடல் தூய்மை மட்டும் தூய்மையல்ல. வீடும் வீதியும் தூய்மையடைந்தால்தான் நாடு தூய்மையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com