தாய்மொழிக் கல்வி அடிப்படை உரிமை

தமிழகத்தில் தாய்மொழியில் கல்வி கற்பது குறைத்துக்கொண்டு வருவது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. ஒருவனது இதயத்தை தொடுவதற்கு அவனது தாய்மொழியில் பேச வேண்டும் என்றும்,
தாய்மொழிக் கல்வி அடிப்படை உரிமை

தமிழகத்தில் தாய்மொழியில் கல்வி கற்பது குறைத்துக்கொண்டு வருவது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. ஒருவனது இதயத்தை தொடுவதற்கு அவனது தாய்மொழியில் பேச வேண்டும் என்றும், பொது மொழியில் பேசினால் அவனது எண்ணத்தை மட்டுமே அறிய முடியும் என்றும் நெல்சன் மண்டேலா கூறியுள்ளார்.
மகாத்மா காந்தியும் தாய்மொழி கல்வியையே வலியுறுத்தினார். இளமையில் மற்ற மொழிகளில் கற்பதனால், குழந்தைகளுக்கு கற்கும் திறனும், ஆர்வமும் குறைக்கின்றது என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆரம்ப மற்றும் நடுநிலைக் கல்வியை தாய்மொழியில் பயிற்றுவித்தலே, சிறந்த சாதனையாளர்களை உருவாக்கும் என அண்மைக்கால ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தேசிய கல்வி வரைவு கொள்கை-2016, ஆரம்ப கல்வியை (5 ம் வகுப்பு வரை- அனைத்து பாடங்களையும்) தாய்மொழியில் கற்றுக் கொடுப்பதையே வலியுறுத்துகின்றது.
மேலும் தேசிய, உலக தேவைக்கேற்ப உயர்நிலை கல்வியிலிருந்து ஆங்கிலத்தை அறிமுகப்படுத்தலாமெனவும் அவ்வறிக்கை கூறுகின்றது. சாகிர் ஹுசைன் (1938-ஆம் ஆண்டு) குழு தாய்மொழியில் கற்றுக்கொடுத்தலையே வலியுறுத்தியது. பிறகு டி.எஸ். கோத்தாரி குழுவும் (1964 ல்) தேசிய கல்வி கொள்கையில் தாய்மொழி கல்வியையே வலியுறுத்தியது.
வரலாற்று படையெடுப்புகளினாலும், நாடு அடிமைப்பட்டதனாலும், அரசியல், பொருளாதார, வணிகக் காரணங்களினாலும் உலகில் பல்வேறு மொழிகளும், பண்பாடுகளும் அழிந்துக்கொண்டு வருகின்றன.
மேலும் இன்றைய சூழலில் மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு தேடி செல்வதாலும், உலகமயமாக்களினாலும், உள்நாட்டு சண்டை, பேரிடர்களால் இடம்பெயர்வதாலும் தாய்மொழியில் கற்கும் வாய்ப்பு குறைந்து வருகிறது.
உலகில் இன்று 40 % மக்கள் தாய்மொழியில் கற்கும் வாய்ப்பினை இழந்துள்ளார்கள். இது வளரும் நாடுகளிலே அதிகமாக உள்ளதாகவும் தெரிகின்றது. மேலும் மற்ற மொழிகளில் கற்பதினால் அறிவுத்திறனும், பாடங்களையும், கோட்பாடுகளையும் புரிந்து கொள்ளும் திறனும் குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை.
இதனால் குழந்தைகள் குறைந்த அறிவாற்றலுடன் மனப்பாடம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றார்கள்.
ஒவ்வொரு உயிரினமும் தம் மொழியை / ஒலியை பயன்படுத்தும் வழியை எப்படி தன் சந்ததிக்கு கற்றுக்கொடுத்து செல்கின்றதோ, அவ்வாறே மனித இனமும் தன் தாய்மொழியை அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுத்து செல்ல வேண்டும்.
அரசியல், பொருளாதார, வணிகக் காரணங்களால் ஒரு மொழி அழிவைத் தழுவக்கூடாது. இதனை தவிர்ப்பதற்கு ஒரே வழி தாய்மொழியில் கல்வி கற்பித்தலே ஆகும்.
அலிஸ் மாடோ ப்ரொவேர்பியோ - அறிவாற்றல் மின் உடலியங்கியல் துறை பேராசிரியர் (மிலன் பல்கலைக்கழகம்) காட்சி, ஓசை, உணர்ச்சிகள் மற்றும் மொழி சாரா தகவல் பரிமாற்றங்களையும், அறிவினையும் தாய்மொழியின் மூலமே மூளையானது இளமையில் உள்வாங்கிக் கொண்டு வளர்ச்சியடைந்த பின் பயன்படுத்துவதாக கூறுகின்றார்.
ஒவ்வொருவரும் தாய்மொழியிலே சிந்திக்கவும், கனவு காணவும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் முடியும் எனவும் அவர் கூறுகின்றார்.
பல்வேறு மனித இனங்கள் வாழும் நாடுகளில் அதிகாரமிக்க மொழியின் மூலம் தகவல் பரிமாற்றம், நிர்வாகம் நடந்தாலோ அல்லது அதற்கு சாதகமாக கல்வி கொள்கை வரையறுக்கப் பட்டாலோ அது சமுதாய, பண்பாட்டு ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தும். தாய்மொழியின் மூலமே ஒவ்வோர் இனத்தின் பெருமையையும், பண்பாட்டையும் பேணிப் பாதுகாக்க முடியும்.
எனவே கல்வி கொள்கையானது தாய்மொழியின் அடிப்படையில் அமைவது இன்றியமையாதது ஆகும். அனைவருக்கும் தாய்மொழியில் கற்கும் வாய்ப்பு இழக்கும் போது அரசியல், சமூக, பொருளாதார வேறுபாடுகள் அதிகரிக்கின்றன.
கிராமப்புற மக்களும், மலைவாழ் சமூகமும், பெண் குழந்தைகளும் தாய் மொழியில் பயிற்றுவிக்கும் போதுதான் அதிக எண்ணிக்கையில் பள்ளியில் சேர்வதாகவும், ஆர்வமாக படிப்பதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. இதனால் அனைவருக்கும் கல்வி வழங்கப்படுவது மட்டுமில்லாமல், கல்வியின் உரிமையும் நிலைநாட்டப்படுகின்றது.
பெற்றோர்களிடமும், உறவினர்களிடமும் குழந்தைகள் தாய்மொழியிலே உரையாட முடியும். தாய் மொழியில் சிறந்து விளங்கும் குழந்தைகளே பிற்காலத்தில் மற்ற மொழிகளிலும் சிறந்து விளங்குவார்கள் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. தாய் மொழியில் பயிலும் குழந்தைகளுக்கு படைப்பாற்றல் திறனும், ஆக்க சிந்தனைகளும் அதிகம் இருக்குமாம்.
பெற்றோர்களே குழந்தைகளுக்கு முதல் ஆசிரியர்களாக இருப்பதால், தாய்மொழியில் கல்வி கற்பதே சிறந்ததாக கருதப்படுகின்றது. மொழிக்கான அறிவு குழந்தைகளுக்கு குடும்பத்தில் இருந்தே ஊட்டப்படுகின்றது.
அதனால் குழந்தைகள் ஒலி மற்றும் சொல் வளத்தையும், மொழிக்கான அடிப்படை வாக்கிய அமைப்புகளையும் இயற்கையாகவே தாய் மொழியில் குடும்பத்திலிருந்தே கற்றுக்கொள்கின்றார்கள். அகப்பண்புகளுக்குப் புறவாழ்வுக் கூறுகளே காரணம்.
தாய்மொழியின் அடிப்படையில் உருவாகும் இருமொழி கொள்கையே குழந்தைகளுக்கு திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், கல்வியில் சிறந்து விளங்கவும், சுய நம்பிக்கையுடன் செயல்படவும் உதவும். உலக வங்கி அறிக்கையின் படி 50 %- க்கு மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் தாய்மொழியில் கற்கும் சூழலில் இல்லை. மற்ற மொழிகளில் கற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் கல்வி கற்கும் திறன் குறைவதுடன், பள்ளி படிப்பை இடையில் கைவிடும் போக்கும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இது தொடருமானால் அனைவருக்கும் கல்வி என்பது ஒரு சவாலாகவே அமையும். ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கோட்பாட்டின் படி, கல்வியின் உரிமை என்பது சொந்த மொழியிலே (தாய்மொழியிலே) பயிற்றுவித்தல் ஆகும்.
தாய்மொழியில் கற்றலே அடிப்படை உரிமை என யுனெஸ்கோ கூறுகின்றது. தாய்மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கான கருவி மட்டுமல்ல, அது ஒரு பண்பாட்டுச் சின்னமாகவும், ஒரு இனத்திற்கு கிடைக்கும் அதிகாரமாகவும் கருதப்படுகின்றது.
5 வயது வரை குழந்தைகளுக்கு மூளையின் அறிவாற்றல் திறன் மிகவும் அதிகமாக உள்ளது. எனவே குழந்தைகள் மொழியினை அன்றாட பேச்சு பரிமாற்றங்களில் எளிதில் கற்றுக்கொள்கின்றன. தாய்மொழியில் கற்கும்போது குழந்தைகள் அறிவாற்றல் திறனையும் வளர்த்துக் கொள்கின்றன.
மேலும் புரிதல் திறனும் அதிகமாக ஆகும். தாய்பால் குடித்து வளரும் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதுபோல், தாய்மொழியில் கல்வி கற்கும் குழந்தைகள் அறிவாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
மேலும் தாய்மொழியில் கற்கும் போது இலக்கியத் திறமைகளும், படித்தல், எழுதுதல், பேசும் மற்றும் கேட்கும் திறனும் அதிகரிப்பதாக ஆய்வில் கூறப்படுகின்றது.
இரண்டாவது மொழி கற்கும் போது, தாய்மொழியில் கற்ற, அறிவாற்றல் திறனும், புரிதல் திறனும் நன்கு புலப்படுகின்றது. தாய் மொழியில் கற்பதே இரண்டாவது மொழி கற்பதற்கும் ஒரு சரியான அடித்தளமாக அமையும்.
இன்று தமிழகம் ஆங்கில வழிக் கல்வி மோகத்தில் தள்ளாடுகின்றது. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசினால்தான் அறிவாளிகள் என்று எண்ணுகிறார்கள். அறிவுக்கும், மொழிக்கும் இடையே உள்ள வேறுபாடு அறியாமல் குழந்தைகள் மீது ஆங்கிலம் திணிக்கப்பட்டு, அவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்யும் திறன் மட்டும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மனப்பாடக் கல்வி முறை மாற்றம் பெற வேண்டும். சிறந்த அறிவாளிகளை உருவாக்க முடியாமல், ஒரு சராசரி கற்றறிந்த சமுதாயத்தையும், சிறந்த வேலையாட்களையும் நாம் உருவாக்கி உள்ளோம். இதனால் புதிய பொருளாதார, சமூக சிந்தனையாளர்களை இப்போதுள்ள கல்விமுறையால் உருவாக்க முடியவில்லை என்பது வருந்ததத்தக்க உண்மை.
உலகம் போற்றும் பொதுமறையும், மாபெரும் காப்பியங்களும், இலக்கியங்களும் நம் தாய்மொழியை கற்றறிந்தவர்களாலே உருவாக்கப்பட்டுள்ளன.
தாய்மொழியின் மூலமே வாழ்வியல் முறைகளையும், மனித நேயத்தையும் வளர்க்க முடியும். தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கும் ஜப்பான், தென் கொரியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் கல்வி தாய்மொழியிலே கற்பிக்கப்படுகிறது.
தாய்மொழியின் மூலமே சிறந்த பேச்சாளர்களும், எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும், சாதனையாளர்களும் உருவாகியுள்ளனர்.
இதுவரை நோபல் பரிசு பெற்றவர்களில் 60 % மேற்பட்டோர் தங்களது தாய்மொழியிலே கண்டுபிடிப்புகளையும், இலக்கியங்களையும் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுரையாளர்:
ஐ.ஏ.எஸ். அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com