சித்திரவதைக்கு முடிவு கட்டுவோம்!

உலக அளவில் பயங்கரவாதக் கொடுமைகளைப் போலவே உள்நாட்டில் அப்பாவி மக்களுக்கு எதிரான சித்திரவதை நடவடிக்கைகளும் பெருகி வருகின்றன. இந்தச் சித்திரவதைகளுக்கு எதிரான கோரிக்கைகளும்,
சித்திரவதைக்கு முடிவு கட்டுவோம்!

உலக அளவில் பயங்கரவாதக் கொடுமைகளைப் போலவே உள்நாட்டில் அப்பாவி மக்களுக்கு எதிரான சித்திரவதை நடவடிக்கைகளும் பெருகி வருகின்றன. இந்தச் சித்திரவதைகளுக்கு எதிரான கோரிக்கைகளும், போராட்டங்களும் அதிகரித்து வருகின்றன. நாகரிக சமுதாயம் இந்தச் சித்திரவதைகளை அனுமதிக்க முடியாது.
இந்தச் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான அகில உலக ஆதரவு நாளாக ஜூன் 26 ஐக்கிய நாடுகள் அவை பிரகடனப்படுத்தியுள்ளது. உலகெங்கும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவித்து இந்நாள் இந்த ஆண்டும் கடைபிடிக்கப்பட்டது இதனால் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கிடைக்கிறது. உளவியல் முறைப்படி தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இந்த நல்ல நோக்கத்தில்தான் இந்நாள் ஐ.நா. அவையால் பிரகடனப்படுத்தப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
ஐ.நா.வின் சித்திரவதைக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கை அறிவுச் சமூகத்தின் குரலாக ஒலிக்கிறது. சித்திரவதை என்பது என்ன?
ஒருவர் இன்னொருவர் மீது உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ கடுமையான வலியோடு கூடிய தாக்குதல் மற்றும் உள்நோக்கத்தோடு ஏற்படுத்தும் கொடூரமான மனிதத் தன்மையற்ற முறையில் நடக்கும் செயல்களே சித்திரவதையாகும் என்று இந்த உடன்படிக்கை கூறுகிறது.
இந்தச் சித்திரவதையில் பாதிக்கப்படுவோர் பெரும்பாலும் சமுதாயத்தில் நலிந்த பிரவினரான குழந்தைகள், பெண்கள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் மதச் சிறுபான்மையினர். குறிப்பாக ஏழை, எளிய விளிம்பு நிலை மக்களே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.
இவர்கள் அனைவரும் ஆதிக்கச் சக்திகளுக்கு அஞ்சியும், அடங்கியும் வாழ்பவர்கள். பாதிக்கப்பட்ட இவர்கள் பயம் காரணமாக மெளனம் காப்பதால், இதுபற்றிப் பொதுச் சமூகத்திற்குத் தெரிவதில்லை. இவர்களுக்கு உதவி செய்யவும் யாரும் முன் வராததால் சித்திரவதையில் ஈடுபடுவோருக்குச் சாதகமாக அமைந்து விடுகிறது.
தேசிய மனித உரிமை ஆணையம் அளித்துள்ள அறிக்கையின்படி இந்தியாவில் ஆண்டுதோறும் 1,203 காவல் மரணங்கள் நிகழ்கின்றன. இது தவிர சித்திரவதைத் தடுப்புச் தேசியத் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆண்டுதோறும் சித்திரவதை தொடர்பாக 1.8 மில்லியன் வழக்குகள் பதிவாகின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கானோர் மனிதத் தன்மையற்ற முறையில் காவல் சித்திரவதைகளாலும், போலியான மோதல் நடவடிக்கைகளாலும் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்படுகின்றனர். இந்தச் செயல்கள் எல்லாம் அடிப்படை மனித உரிமைகளையும், மனித மாண்பையும் சிதைக்கின்ற போக்குகளாகும்.
இதனால் மனிதத் தன்மையும், மனித உரிமையும் மீறப்படுகின்றன. மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும் என்பதை மறந்து விலங்குகளாக மாறி மனிதத் தன்மைக்கே இழுக்கினைத் தேடுகின்றன. இந்தச் செயலைத் தடுத்தே ஆக வேண்டும். இதற்குக் காவல்துறையும், அரசாங்கமும் துணை நிற்க வேண்டும்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே வாச்சாத்தி என்னும் சிற்றூர் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் இடமாகும். 20.6.1992 அன்று சந்தனக் கட்டைகள் உள்ளிட்ட வனப் பொருட்கள் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று அறிவதற்காக சோதனை இடப்பட்டது.
இச்சோதனையின் போது பெண்கள், குழந்தைகள் உள்பட கிராம மக்கள் தாக்குதலுக்கும், சித்திரவதைகளுக்கும் ஆளானார்கள். பெண்கள் பலர் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் தொடர்புடைய 4 ஐ.எப்.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் 269 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் 1995-ஆம் ஆண்டில் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
19 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்தது. 2011-இல் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 269 பேருமே குற்றவாளிகள் என்று தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் 54 பேர் இறந்து விட்டனர். இதில் இறந்துவிட்ட 54 பேரைத் தவிர, மற்ற 215 பேருக்கும் பல்வேறு பிரிவுகளில் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.
பாலியல் கொடுமை தொடர்பான புகாரில் 17 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவலும், இவர்களில் 12 பேருக்கு எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலும் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.
மீதமுள்ள 198 பேருக்கு 13 பிரிவுகளில் 3 ஆண்டு கடுங்காவல், 2 ஆண்டு கடுங்காவல், 1 ஆண்டு கடுங்காவல், 9 மாதம் கடுங்காவல் என அவரவருக்கான குற்றச்சாட்டுப் பிரிவுகளின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்பட்டு, ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.
தமிழ்நாட்டில் வறட்சி காரணமாகவும், வறுமை காரணமாகவும் கூலி வேலைக்காகச் செல்லும் தொழிலாளர்கள் செம்மரக் கடத்தல் என்ற பெயரால் கொடூரமாக சித்திரவதை செய்து படுகொலை செய்யும் போக்கு தொடர்கதையாகி விட்டது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. தலைநகர் தில்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் வன்முறைக்கு ஆளாகி சித்திரவதை செய்யப்பட்ட நிர்பயா வழக்கு மட்டுமே வெளிச்சத்துக்கு வந்தது. மற்ற ஏராளமான பெண்களின் பாலியல் வன்முறைகளும், சித்திரவதைப் படுகொலைகளும் வெளிச்சத்துக்கு வராமலேயே போய்விட்டன.
குழந்தைகளைக் கடத்தி பிச்சை எடுக்கச் செய்வதும், அவர்களின் உடல் உறுப்புகளைச் சிதைத்து முடமாக்கி, நிரந்தர அடிமைகளாக அவர்களை ஆக்கிக் கொள்வதும் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இல்லையென்று யாரும் மறுக்க முடியாது.
சமூக விரோதச் செயல்களான மணல் கொள்ளை, காட்டு மரங்களை வெட்டிக் கடத்துதல், ஏரி குளங்களை ஆக்கிரமித்தல் போன்றவற்றை எதிர்த்து மக்களைத் திரட்டும் சமூக ஆர்வலர்களை குண்டர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் பொய் வழக்கு போடுவதும் திட்டமிட்ட செயலாக நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மட்டும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் 500-க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முதியோர் புறக்கணிப்பு என்பதும் சமூகச் சீரழிவின் ஒரு பகுதியே ஆகும். பிள்ளைகளால் புறக்கணிக்கப்படும் முதியோர் அனைவரும் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுவதில்லை.
அன்றாடம் ஒருவேளை கஞ்சிக்கே அடுத்தவர்களிடம் கையேந்தும் அவல நிலையில் அனாதையாகத் திரியச் செய்வது சித்திரவதை இல்லாமல் வேறு என்ன? காவல் நிலையங்களில் மட்டுமல்லாமல், சிறைச்சாலைகளிலும் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு பெருகிக் கொண்டிருக்கிறது. இவர்களில் பெரும்பாலோர் எளிய பிரிவைச் சேர்ந்தவர்கள்.
இவர்களுக்காக நீதிமன்றத்தில் வாதாடுவதற்கும், பிணையில் எடுப்பதற்கும் யாரும் முன்வராத நிலையில் மன உளைச்சலால் நாளும் செத்துக் கொண்டிருப்பவர்கள். இவர்களுக்கு விடுதலை எப்போது என்று யாருக்கும் தெரியாது. இப்படி ஒரு சித்திரவதை!
இதனால் சித்திரவதைக்கெனத் தனிச்சட்டம் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. அப்படிப்பட்ட தனிச்சட்டம் இல்லாததால்தான் சித்திரவதைக் கொடுமை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
சித்திரவதைக்கு எதிராகத் தனிச்சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
ஐ.நா.வின் சித்திரவதைக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையில் 1997-இல் இந்தியா கையொப்பம் இட்டுள்ளது. ஆனால் 20 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை அதை ஏற்புறுதி செய்து இந்தியாவில் நடைமுறைப்படுத்திட முன்வரவில்லை என்பதுதான் பெரிய சோகம்.
கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திய அரசு (காங்கிரஸ் ஆட்சியில்) சித்திரவதைத் தடுப்பு மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தி மாநிலங்களவையில் ஒப்புதலுக்கு அனுப்பியது. மாநிலங்களவை தேர்வு நிலைக் குழுவுக்கு அனுப்பி பரிந்துரைகளை முன் வைத்த போதும் இம்மசோதா மாநிலங்களவையில் நிறைவேறவில்லை.
குறிப்பாக இந்தியாவில் பாதிக்கப்பட்டோரையும் சாட்சி அளிப்போரையும் பாதுகாக்கும் சட்டம் இதுவரை இயற்றப்படவில்லை. மேலும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு அல்லது மறுவாழ்வு அளிப்பதற்கான நெறிமுறைகள் அல்லது வழிகாட்டுதல்கள் இதுவரை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம் மனிதநேயத்துக்கே எதிரானது.
2017 மே 4 அன்று ஜெனிவாவில் நடைபெற்ற உலகளாவிய காலமுறை மீளாய்வு (Universal Periodical Review) கூட்டத்தில் பங்கேற்ற நாடுகள் இந்தியாவில் மனித உரிமை பற்றிப் பல்வேறு கேள்விகளை முன்வைத்தன.
சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கையை இந்தியா ஏற்புறுதி செய்யாமை, உள்நாட்டில் சட்டம் இயற்றாமை, ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதி இந்தியா வருவதற்கு அனுமதி ஆகிய கேள்விகளை முன்வைத்து அழுத்தம் கொடுத்தனர். இதற்கு பதிலளித்த இந்தியா இதற்கான செயற்பாடுகள் சட்ட ஆணையத்தின் பரிசீலனையில் உள்ளது என்று கூறியுள்ளது.
இதுபற்றி மத்திய அரசு உடனடியாக முடிவெடுத்து உள்நாட்டுச் சித்திரவதைகளுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இதுவே ஒரு மக்கள் அரசுக்கான கடமையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com