போலிகள் ஜாக்கிரதை

மனிதன் மனசாட்சி என்ற அரிய உணர்வைப் பெற்றிருக்கிறான். சிலர் இந்த மனசாட்சியைக் கொன்று விடுகிறார்கள்.

மனிதன் மனசாட்சி என்ற அரிய உணர்வைப் பெற்றிருக்கிறான். சிலர் இந்த மனசாட்சியைக் கொன்று விடுகிறார்கள். போலி மருத்துவராகத் தொழில் புரிந்து மற்ற மனிதரைக்கொலை செய்கிறார்கள். இந்தப் போலி மருத்துவர்கள் இனிமையாகப் பேசுகிறார்கள். நல்லவராக நடிக்கிறார்கள். இவர்கள் கயவர்கள்.
போலி மருத்துவர்களில் பல நிலையினர் உள்ளனர். தகுதி பெற்ற உண்மையான மருத்துவரிடம், சிலஆண்டுகள் உதவியாளராகப் பணி செய்த பின்பு, அடிப்படை மருத்துவ முறைகளை ஓரளவு அறிந்து கொண்ட பின்பு, இவர்கள் வெளியேறுகிறார்கள். வேறோர் இடத்தில் மருத்துவராகத் தொழில் தொடங்குகிறார்கள்.
மருத்துவமனையில் ஆண் செவிலியராகச் சிலர் பணி புரிகிறார்கள். பட்டறிவு பெறுகிறார்கள். மனப் பலம் பெறுகிறார்கள். தனியாக வந்து மருத்துவராகத் தொழில் புரிகிறார்கள். சித்த மருத்துவ நூல்களைச் சிலர் சேகரிக்கிறார்கள். அவற்றைப் படிக்கிறார்கள். சித்த மருத்துவர்களாக மருத்துவம் செய்ய முற்படுகிறார்கள்.
மருத்துவத்தின் ஒரு துறையில் படித்துப் பட்டம் பெற்றவர்கள், தமக்குத் தெரியாத மற்றொரு மருத்துவத் துறையிலும் தொழில் செய்கிறார்கள். இவர்களும் போலி மருத்துவர்கள் என்றே கூறலாம்.
அடிப்படை மருத்துவ அறிவைப் பெற்ற உடல் தசைப் பிடிப்பாளரும் (பிசியோதெரப்பிஸ்டும்) போலி மருத்துவராக உலவியதும் உண்டு.
இந்தப் போலி மருத்துவர்கள் பெரும்பாலும் சிற்றூர்களிலேயே தொழில் புரிகிறார்கள். போலி மருத்துவர்கள் நோயாளியைச் சோதிக்கிறார்கள். அவர்களின் நாடி பிடித்துப் பார்க்கிறார்கள்.
முறையாகப் படித்துத் தகுதிபெற்ற மருத்துவர் போல், தாளில் மருந்து எழுதித் தருகிறார்கள். சாதாரண காய்ச்சலுக்கும் மருந்துச் சீட்டு தருகிறார்கள். அரிய நோய்களுக்கும் மருந்து குறிப்பிடுகிறார்கள். இதய நோய்க்கும் மருந்து எழுதித் தருகிறார்கள். அரசின் தடையை மீறியும் செயல்படுகிறார்கள்.
பெண்ணின் வயிற்றில் உள்ள கரு ஆணா அல்லது பெண்ணா என்பதை மருத்துவர் அறிவிக்கக் கூடாது என்பது அரசாணை. ஆனால் சில பெண்கள் தமக்குப் பிறக்கப் போகும் குழந்தை என்ன பாலாக இருக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள விரும்புவார்கள். அவர்கள் போலி மருத்துவரை நாடுகிறார்கள். அதிக பணம் தருகிறார்கள்.
அந்த மருத்துவர்கள் இந்தக் குற்றச் செயலுக்குத் துணை புரிகிறார்கள். நுண்ணொளி (ஸ்கேனிங்) முறையால் கரு ஆணா, பெண்ணா என்பதைக் கண்டுணர்த்துகிறார்கள்.
போலி மருத்துவர்களில் சிலர் மற்றொரு முறையிலும் செயல்படுகிறார்கள். அவர்கள் பயிற்சி நிலையமும் நடத்துகிறார்கள். கவர்ச்சிகரமான பெயரை வைத்து இயங்கும் அந்த நிலையத்தில் ஏமாளிகள் சேர்கிறார்கள்.அரைகுறையாகப் பயிற்சி பெறுகிறார்கள்.
பிடிபடுபவர்கள் துயரப்படுகிறார்கள். தப்பிப் பிழைத்தவர்கள் தழைக்கிறார்கள்.
இன்னொரு முறையிலும் போலி மருத்துவர்கள் உருவாகிறார்கள். ஒரு பெண் மருத்துவக் கல்லூரியில்படித்து வந்தார். அவர் எதிர்பாராத நிலையில், திடீரென்று இறந்தார். அவளுடைய பெயரை வேறு ஒரு பெண் ஏற்றுக் கொண்டார். போலி மருத்துவர் ஆனார்.
போலி மருத்துவர்கள் தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக யூகிக்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 200 போலி மருத்துவர்கள் இருக்கிறார்கள்.
தமிழ்நாடு முழுதும் ஏறத்தாழ மூவாயிரம் போலி மருத்துவர்கள் இருப்பதாகத் தமிழ்நாடு மருத்துவக் குழு (தமிழ்நாடு மெடிகல் கவுன்சில்) அறிவித்துள்ளது. இவர்களில் அலோபதி மருத்துவர் மட்டுமன்றி, சித்த மருத்துவரும் அடங்குவார்கள்.
இவர்கள் மக்களைத் தம்பால் ஈர்ப்பதற்குச் சில வழிமுறைகளைக் கையாளுகின்றார்கள். நோயாளிகளை அழைத்துக் கொண்டு வருவதற்கு முகவர்களை அமைத்திருக்கிறார்கள். கைராசிக்காரர் என்ற பரப்புரை செய்யப்படும் முறையும் மேற்கொள்ளப்படுகிறது.
பெயர்ப் பலகைகளில் பல பட்டங்கள் எழுதப்படுகின்றன. அந்தப் பட்டங்கள் யாரால் தரப்பட்டவை, அவை உண்மையானவையா என்று யாரும் கேட்பதில்லை.
போலி மருத்துவரால் பாதிப்பு அடைந்தவர் அதை வெளியே சொல்வதில்லை. பாதிக்கப்பட்ட சிலர் காவல் துறையை நாடுகிறார்கள். காவல் துறை போலி மருத்துவரைக் கைது செய்து வழக்கு போடும் நல்ல நிலையும் இருக்கிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் இப்படிப்பட்ட 768 வழக்குகள் நடைபெற்றன. 2014-16 ஆண்டுக் காலக் கட்டத்தில் மட்டும் 162 போலி மருத்துவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். ஆனால் அந்தத் தண்டனை போதுமானதாக இல்லை. அவர்களுக்கு ஓர் ஆண்டுச் சிறைவாசம். அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் என்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
கைதான குற்றவாளிகள் ஜாமீனில் வெளி வருகிறார்கள். வழக்கம் போல் தொழில் புரிகிறார்கள். பணம் சம்பாதிக்கிறார்கள். அரசு போலி மருத்துவர்கள் பிடிபட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும். தண்டனை மட்டுமே இவர்களைத் திருத்தும்.
சமுதாயம் என்ற விளைநிலத்தைக் காக்கும் வேலி போன்றவர்கள் மருத்துவர்கள். மெய் வருத்தம் பார்க்காமல் கண்துஞ்சாமல் மனித உயிரைக் காப்பாற்ற வேண்டிய மேன்மையான கடமையைச் செய்ய வேண்டியவர்கள். மனித உயிரான பயிரைக் காப்பாற்ற வேண்டிய அவர்களே பயிரை மேயும் வேலியாக மாறிவிடுகின்றனர்.
எனவே, இந்தப் போலிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். அப்படிச் செய்தால்தான் சமுதாயம் நலமாக வாழும். நன்மைகள் வளரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com