மகாத்மா போற்றிய மகான்!

ஆன்மீகத்தில் நம்பிக்கை இழந்து, கோயிலுக்குப் போவதை மறுதலித்திருந்த மகாத்மா காந்தியடிகள்

ஆன்மீகத்தில் நம்பிக்கை இழந்து, கோயிலுக்குப் போவதை மறுதலித்திருந்த மகாத்மா காந்தியடிகள், ஸ்ரீமத் ராய்ச்சந்திரா எனும் சமணத் துறவியைச் சந்தித்த பிறகு, முழுமையான ஆன்மீகவாதியாக மாறிவிட்டார். காந்தியடிகளைப் பழைய பாதையில் திருப்பிப் போட்டவர் குருஜி ராய்ச்சந்திரா ஆவார்.
சென்ற சுதந்திரத் திருநாள் அன்று பேருரையாற்றிய பாரதப் பிரதமர் மோடி "இவ்வாண்டு ஸ்ரீமத் ராய்ச்சந்திரருடைய 150-ஆம் ஆண்டு. அதனைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
அவர் அறிவித்தவாறே 19.06.2017 அன்று ஸ்ரீமத் ராய்ச்சந்திரருயை அஞ்சல் தலையையும் அவர் பெயரில் நாணயத்தையும் வெளியிட்டதோடு, "குஜராத்திகள் குறிப்பாக ஜைனர்கள் ராய்ச்சந்திரரைக் குருவாகக் கும்பிட வேண்டும். ஏனென்றால், அவர்தான் காந்தியடிகளுடைய ஆன்மீகக் குரு' எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது, அவருக்கு நெருக்கமான கிறித்தவர்களும் இசுலாமியரும் அவரை மதம் மாறும்படி அடிக்கடி வற்புறுத்தி வந்தனர். சித்தம் பேதலித்த காந்தியடிகள் தமக்கு அணுக்கமான டாக்டர் மேத்தாவை அணுகி தப்பிப்பதற்குரிய வழியைக் கேட்டார். டாக்டர் மேத்தா, ஸ்ரீமத் ராய்ச்சந்திராவைத் தொடர்பு கொள்ளும்படிக் கூறினார்.
காந்தியடிகள் தமக்கேற்பட்ட மனச் சஞ்சலங்களையெல்லாம் 27 கேள்விகளாக்கி, அவற்றிற்குப் பதில் தருமாறு ராய்ச்சந்திராவை வேண்டினார். அந்த 27 கேள்விகளுக்கும் ஸ்ரீமத் ராய்ச்சந்திரா தந்த பதில்கள், இருட்டிலிருந்த காந்தியடிகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தன. மரபு வழி வந்த மார்க்கமே உயர்ந்ததென்று அங்கேயே தங்கிவிட்டார்.
தம் தாயார் இறந்த துக்கத்தினால் தென் ஆப்பிரிக்காவிலிருந்து தாய்நாடு திரும்பிய காந்தியடிகள், ஸ்ரீமத் ராய்ச்சந்திராவைச் சந்திக்கின்றார். ராய்ச்சந்திரருடைய பற்றற்ற வாழ்க்கையையும் புலமைச் செருக்கையும் கண்ட காந்தியடிகள், அவருக்குச் சரணாகதி ஆனார். குருஜி "சதாவதானி' எனவும் பெயர் பெற்றிருந்தார். நூறுபேர்கள் கேட்கும் கேள்விகளுக்கு வரிசை தவறாமல் சதாவதானி பதில் சொல்லுவார்.
குருவைச் சோதிக்க ஐரோப்பிய மொழிகளிலுள்ள அத்தனைச் சொற்களையும் பயன்படுத்திக் கேள்விமேல் கேள்வி கேட்டார், காந்தியடிகள். அதற்கு ஸ்ரீமத் குருஜி, காந்தியடிகள் கேட்ட கேள்விகளின் வரிசை மாறாமல் பதில் சொல்லிக்கொண்டே வந்தார்.
ஞான மார்க்கத்தில் ராய்ச்சந்திரருக்கு இருந்த அபார ஞானமும், அப்பழுக்கற்ற அவருடைய ஒழுக்க வாழ்வும், ஆத்மானுபூதியை அடைய வேண்டும் என்பதில் அவருக்கு இருந்த ஆர்வமும் காந்தியடிகளைக் கட்டிப் போட்டன.
காந்தியடிகள் ராய்ச்சந்திரரைப் பற்றி தமது சுயசரிதையில் எழுதும்போது, "நான் பல மதத்தலைவர்களையும் குருமார்களையும் சந்தித்திருக்கின்றேன். ஆனால், ராய்ச்சந்திரரைப் போல என் மனத்தில் யாரும் பதிவுகளை ஏற்படுத்தவில்லை. அவருடைய சொற்கள் என் மனத்தில் நேரே சென்று பதிந்தன. என்னுடைய ஆன்மீகத் தேடலில் அவரையே அடைக்கலம் அடைந்தேன். பல நேரங்களில் அவர் எனக்கு வழிகாட்டியாகவும் உதவும் கரமாகவும் இருந்திருக்கிறார்.
என் வாழ்க்கையில் ஆழ்ந்த சுவடுகளை விட்டுச் சென்றவர்கள் மூவர். ஒருவர் தமது ஞானத்தேடலால் என்னைக் கவர்ந்த ராய்ச்சந்திரர், இரண்டாமவர், "ஆண்டவனின் ராஜ்யம் உனக்குள்ளே' எனும் நூலை எழுதிய டால்ஸ்டாய், மூன்றாமவர், "கடையனுக்கும் கடைத்தேற்றம்' நூலை எழுதிய ஜான் ரஸ்கின்' என்றெழுதுகிறார்.
மகாத்மாவாலேயே போற்றப்பட்ட மகான் ராய்ச்சந்திரா, 1867-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 9-ஆம் நாள், சுவேதாம்பரா ஜைன சமயத்தைச் சார்ந்த தாய்க்கும் (தேவ் பாய்) இந்து மதத்தில் வைணவ சமயத்தைச் சார்ந்த தந்தைக்கும் (ராங்ஜிபாய்க்கும்) மகனாக குஜராத்திலுள்ள வவனியாவில் பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் லெஷ்மிநந்தன் என்பதாகும்.
அவருக்குச் சென்ற பிறவியில் நிகழ்ந்தவை எல்லாம், அவருடைய ஏழாவது வயதில் மனத் தடத்தில் நிழலாடத் தொடங்கின. அவற்றை மற்றவர்களுக்கும் சொல்லத் தொடங்கினார். அவர் தம்முடைய எட்டாவது வயதில் 5000 அடிகள் கவிதை எழுதக்கூடிய ஆற்றலைப் பெற்றிருந்தார். அவர் இயற்றிய "ஆத்ம சித்தி' எனும் தத்துவப் பாடல் எல்லோராலும் போற்றப்படுகிறது.
ராய்ச்சந்திரா 1887-ஆம் ஆண்டு ஷபாக்கான் எனும் பெண்ணை மணந்தார். அவருக்கு நான்குப் பிள்ளைகள் பிறந்தனர். இந்திய விடுதலைக்குப் பெண் கல்வி முதன்மையானது என்பதை வற்புறுத்தி, "ஸ்திரீ நிதி போதகா' எனும் நூலை இயற்றினார். இளைஞர்கள் அடிமைத்தளைகளிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதற்காக "மோட்சமாலா' எனும் நூலை எழுதினார்.
மேலும், "பாவனா போத்' எனும் நூலில் பற்றற்ற வாழ்வு வாழ்வதற்குரிய 12 அம்சங்களைக் கோடிட்டுக் காட்டி எழுதியுள்ளார். மற்றும் நான்கு புருஷார்த்தங்களையும், அவற்றின் இயல்புகளையும் 5,000 பாடல்களில் "நமிராஜா' எனும் பெயரில் வடித்துள்ளார்.
தமக்கு அந்திமம் நெருங்குவதைத் தம்முடைய 33-ஆவது வயதிலேயே ராய்ச்சந்திரா உணர்ந்தார் அவர் 09.04.1901 அன்று குஜராத்திலிருக்கின்ற ராஜ்காட்டில் இறையடி எய்தினார்.
அவர் குஜராத்திலுள்ள 'இடார் மலைக்குன்றில் 35 நாட்கள் தனிமைத் தவம் இருந்தார். சில நேரங்களில் சுடுகாட்டுப் பகுதிகளிலும் காட்டுப்பகுதிகளிலும் சுற்றி, அங்கிருந்த மக்களுக்கு நன்மார்க்கத்தைப் புகட்டியிருக்கிறார். குருஜி 1900-ஆம் ஆண்டு எந்தக் கோலத்தில் இருந்து தவம் செய்தாரோ, அந்த கோலத்திலேயே அவருக்கு விக்கிரகம் வடித்துள்ளனர்.
குருஜி ராய்ச்சந்திரா பரிபூரணம் அடைந்த பிறகு அவருடைய கொள்கைகளையும் குறிக்கோள்களையும் பரப்புவதற்கென்று "ஸ்ரீமத் ராய்ச்சந்திரா நற்பணி மன்றம்' எனும் இயக்கத்தைத் தொடங்கினர். ஜைன சமயத்தில் கற்றுத்துறைபோகிய அறிஞர் ராகேஷ் ஜாவேரி என்பவர் முன்னின்று அவ்வியக்கத்தைத் தொடங்கினார். குஜராத்திலுள்ள பெரும்பாலான பள்ளிகளில் குருஜியின் போதனைகள் போதிக்கப்பட்டு வருகின்றன.
உலகத் தொடர்புக்கான ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கு ஆசிரமத்தை அமைக்க முயன்ற நேரத்தில், அவர் தவம் செய்த "மோகன்காட்' பகுதியையே தேர்ந்தெடுத்தனர். 223 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு புனிதமான ஆசிரமத்தை அமைக்க முடிவு செய்தனர்.
அப்பகுதி, மலைவாசிகள் அதிகமாக வாழுகின்ற பகுதியாகவும் அமைந்ததால், தொண்டு செய்வதற்குச் சிறந்த இடம் என அதனைத் தேர்ந்தெடுத்தனர். இங்கு ஒரு பள்ளிக்கூடத்தையும் ஒரு கல்லூரியையும் நடத்தி வருகின்றனர். பள்ளிப் படிப்பை விட்டுவிட்ட மாணவர்களுக்கும் கல்வியைத் தர, தனி வகுப்பறைகளையும் கட்டி நடத்தி வருகின்றனர். இன்னும், மாற்றுத் திறனாளிகள் கைத்தொழில்களைக் கற்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கும், வறுமைக்கோட்டிற்குக் கீழேயுள்ள மக்களுக்கும் நல்வாழ்வைத் தருவதற்காக 60 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையும் அங்கு செயல்பட்டு வருகிறது. ராய்ச்சந்திரா ஆசிரமத்துக்கும் பல்துறை வல்லுநர்கள் சென்று தம் சேவையை ஆற்றி வருகிறார்கள்.
ஒவ்வொரு நாளும் காலையில் யோகா, தியானம், பிரார்த்தனை, ஆன்மீக வகுப்புகள் நடந்தேறி வருகின்றன. ஆசிரமம் "மேன்' நதிக்கரையில் அமைந்திருப்பதால். செடிகொடிகளோடு இயற்கை வளம் கொஞ்சும் பகுதியாக, ஆசிரமச் சூழல் அமைந்திருக்கிறது.
மலைவாழ் மக்களும் பழங்குடி மக்களும் வாழ்கின்ற பகுதியாகையால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பத் தொடக்கத்தில் மறுத்தனர். காரணம் அந்தப் பிள்ளைகள் காட்டுக்கும், வயல்களுக்கும் போய் சம்பாதித்து வந்தால், குடும்பத்திற்கு ஆகுமே என்ற எண்ணமே.
அதனால், ஆசிரமத் தொண்டர்கள் அவர்களிடம் போய் எடுத்துச் சொல்லி, அப்பிள்ளைகளுக்குக் கல்வியை வழங்குவதோடு, பிற்பகலில் சிறு சிறுத் தொழில்களைச் செய்து, வருவாய் ஈட்டுவதற்கும் வழி வகுத்துள்ளனர். அந்த வட்டாரத்தில் இருக்கின்ற அறிவியல் கல்லூரி, ஆசிரமக்கல்லூரி ஒன்றுதான்!
கைத்தொழில் சார்ந்த ஆறு மாத பட்டய வகுப்பையும் நடத்தி வருகின்றனர். ஒரு செல்லிடப்பேசியைப் பிரித்துப் பழுது பார்த்தல், கம்ப்யூட்டர் பயிற்சி, செவிலியர் - தாதியர் போன்ற பணிக்குரிய பயிற்சிகளையும் தந்து வருகின்றனர்.
மேலும், ஆதிவாசிகளும் மலைவாசிகளும் உழைத்துச் சம்பாதிப்பதற்குரிய வழியைக் காட்டி, அவர்கள் இன்று மாதம் ரூ.10,000 சம்பாதிக்கும்படியும் ஆசிரமம் செய்துள்ளது.
ஆசிரமத்தின் மருத்துவமனை, மகாராட்டிரமே வியக்கும் வகையில் பணியாற்றி வருகின்றது. மருத்துவமனையின் தலைவர் டாக்டர் கிரிஜ் ஹட், "விரைவில் 200 படுக்கைகள் கொண்ட, பல்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்ட, முதல்தரமான மருத்துவமனையாக ஆக்கிவிடுவோம் என உறுதி அளித்திருக்கிறார்.
குருஜி ராய்ச்சந்திராவின் 150-ஆம் ஆண்டு விழாவை மத்திய அரசு, 29.06.2017 அன்று சபர்மதி ஆசிரமத்தில் மிகப்பெரிய விழாவைக் கொண்டாடியிருக்கிறது. மகாத்மா காந்தியின் குருவாகத் திகழ்ந்த ஸ்ரீமத் ராய்ச்சந்திரா விக்கிரக வடிவில் இருந்து, பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணியாகவும், பரமபத வாயிலைக் காட்டும் பார்வைக்காரராகவும் ஆசீர்வதித்து வருகின்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com