கடுகில் புதிய தொழில்நுட்பம்

விஞ்ஞானம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு துறையிலும் பற்பல புதுமைகள் புகுந்துவிட்டன.
கடுகில் புதிய தொழில்நுட்பம்

விஞ்ஞானம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு துறையிலும் பற்பல புதுமைகள் புகுந்துவிட்டன. தொழில் துறையில் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த தொழில்நுட்பம் இன்று பழசாகிவிட்டது.
விவசாயத்தைப் பொருத்தவரை நெல், கோதுமை போன்ற உணவு தானியங்களில் வீரியரக விதைகள் அறிமுகமானதைத் தொடர்ந்து பாரம்பரிய நெல் சாகுபடி வழக்கொழிந்தது. தங்களுடைய விதைகளைத் தாங்களே சேமித்துக் கொள்ளும் ஒரு நல்ல மரபு அழிந்துவிட்டது.
இந்தியாவில் பசுமைப் புரட்சி அறிமுகமான சூழ்நிலையையும் நாம் மறப்பதற்கில்லை. பாரம்பரிய நெல் கொண்டு இயற்கை விவசாயத்தின் மூலம் ஏற்பட்ட சில தனிப்பட்ட சாதனைகள் போற்றத்தக்கவை. அதேசமயம், எல்லா விவசாயிகளாலும் இதனைக் கடைப்பிடிப்பது சுலபமல்ல.
பசுமைப் புரட்சி வழங்கிய வீரியரக விதைகளும், ரசாயன உரங்களும் உணவு உற்பத்தியை உயர்த்தி, உணவு இறக்குமதியை நிறுத்தி, உணவு ஏற்றுமதி நாடாக இந்தியாவை உயர்த்தியுள்ள உண்மையையும் மறுக்க முடியாது.
நாம் நெல்லுக்கும் கோதுமைக்கும் பயன்படுத்தும் வீரியரக விதைகளும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளே. ஐந்தாண்டு ஆராய்ச்சியின் பலனாக நார்மன் பார்லாக், ஜப்பானியக் குள்ள ரகத்தை நாட்டு ரகத்தில் ஒட்டுக்கட்டி மெக்சிகன் வெள்ளை என்ற வீரியரக கோதுமையை உருவாக்கியதைப்போல் நெல்லிலும் ஐ.ஆர்.8 உருவானது. ஐ.ஆர்.8-ஐயும் மெக்சிகன் வெள்ளையையும் ஆதாரமாகக் கொண்டு இந்தியாவில் ஏராளமான தேற்ற விதைகள் (Improved Seeds) உருவாயின. உதாரணம் ஏ.டி.27, ஐ.ஆர்.20 போன்றவை.
ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிறுவனம் தொடர்ந்து வீரியமான தேற்றவிதைகளை ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. கோதுமையிலும் தில்லி - புசா ஆய்வு நிலையம் ஏராளமான கோதுமை ரகங்களையும், பாசுமதியால் புதிய பல தேர்வு ரகங்களையும் வெளியிட்டு வருகிறது.
அதே சமயம், பாரம்பரிய நெல் ரகங்களின் தேடுதலும் அண்மைக்காலமாக நிகழ்ந்து வருகிறது. ஆங்காங்கே விதைத்திருவிழா நிகழ்கிறது. இருப்பினும் ஒரு சராசரி விவசாயியின் தேவையை மீட்டெடுத்த பாரம்பரிய ரகத்திற்கு ஈடாகுமா என்பது கேள்விக்குறி.
தவிரவும் பாரம்பரிய விதை என்று வழங்கப்படும் நெல்ரகங்களின் தரம் போற்றும்படி இல்லை. தரச்சான்றிதழ் இல்லாமல் நிறைய விளையும் என்ற எண்ணத்தில் வாங்குவது ஆபத்து. முளைப்புத்திறன் சரியில்லை என்றும், சரியாகத் தூர் கட்டுவதில்லை என்றும் புகார்கள் உண்டு.
எனினும், ஐ.ஆர்.20 ரகத்தில் அதன் வீரியத்தன்மை இழந்து கிச்சலிச்சம்பா குணம் வந்துள்ளது. கிச்சலிச்சம்பா, பெருங்கார், ஜீரகச்சம்பா, மாப்பிள்ளைச்சம்பா ஆகிய ரகங்களை பசுமைப்புரட்சி காலத்திலிருந்தே சிலர் சாகுபடி செய்து வருவதால் நம்பலாம். எனினும் ஆடுதுறை ரகங்களுக்கு இணையான விளைச்சல் பெற முடியும் என்று தோன்றவில்லை.
மரபணு மாற்றம் செய்து புதிய விதை ரகங்களைத் தேர்வு செய்வது காலத்தின் தேவை. புதிய விதைகளையும் இயற்கை விவசாயம் செய்து நல்ல விளைச்சல் பெறலாம். இயற்கையா செயற்கையா என்பது அவரவர் இடுபொருளை அடிப்படையாக வைத்து முடிவு செய்யலாம்.
மரபணு மாற்றம் செய்யும்போது தாவர இனங்களைத் தாவரத்தோடு ஒட்டுக்கட்டுவது சிறப்பு. விஷமான பாக்டீரியாக்களை விதைக்குள் ஏற்றி மரபணு மாற்றம் செய்வதும், தாவர இனத்திற்குள் விலங்கினக் கூறுகளை செலுத்துவதும் சரியல்ல. ஜெனிட்டிக்ஸ் தத்துவத்திற்கு முரணாக விஞ்ஞான நியதியை மாற்றாத வரையில் மரபணு மாற்ற தொழில்நுட்பம் வரவேற்கத்தக்கதே.
மான்சென்டோவின் ஏகபோகமாக விளங்கிய பி.டி. பருத்தி பற்றி ஏராளமாகப் பேச்சுகள் இருந்தன. பருத்தி விதைக்குள் 'பாசில்லஸ் துருஞ்சியன்சஸ்' என்ற பாக்டீரிய விஷத்தை ஏற்றிக் காய்ப்புழுத் தாக்குதலுக்கு வழி தேடினர். காலம் செல்லச் செல்ல அம்முயற்சி தோற்றதால் காப்புரிமைக்குரிய தொகை நிறுத்தப்பட்டது.
பருத்தி சாகுபடி நிலப்பரப்பும் குறைந்துவிட்டதால் மான்சென்டோ நஷ்டத்தை ஈடுகட்ட முடியாமல் தன் பங்குகளை பேயருக்கு விற்றுவிட்டு வெளியேறியது. இப்போது கடுகு ஒரு புதிய பிரச்னையை உருவாக்கியுள்ளது.
தில்லி பல்கலைக்கழகத்தில் ஜெனிடிக்ஸ் பேராசிரியரும், முன்னாள் துணைவேந்தருமான தீபக் பெந்தால்(Deepak Pental). சிலர் இந்திய அறிவியல் கழகத்தின் முதுநிலை விஞ்ஞானியும் ஆவார்.
இவர் தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மத்திய அரசின் உயிரித் தொழில்நுட்பத்துறை உதவியுடன் நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் டி.எம்.எச்-1, டி.எம்.எச்-2 என்று இரண்டு வீரிய ஒட்டுக் கடுகு விதைகளைக் கண்டு பிடித்துள்ளார்.
இந்த விதைகளுக்கு மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் உயிரித் தொழில்நுட்பக் கமிட்டி ஒப்புதல் தெரிவித்துவிட்டது. இனி இந்த வீரிய ஒட்டுக் கடுகை விவசாயிகள் பயன்படுத்தலாம் என்ற நிலையில், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த சூழலியல் விரும்பிகள் எதிர்ப்புக்குரல் கிளப்பியுள்ளனர்.
அருணா ரோட்ரிக் என்பவர், இந்த வீரியரகக் கடுகை தடை செய்ய வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். கடுகு சாகுபடி செய்யாத தமிழ்நாட்டிலிருந்தும்கூட இப்புதிய கடுகு விதை அறிமுகத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது புரியாத புதிராக உள்ளது.
டி.ஆர்.எச். என்பது (DHARA MUSTARD HYBRID) பி.டி. அல்ல. ஏறத்தாழ நாம் பயன்படுத்தும் வீரியரக நெல் போன்றது. டி.ஆர்.எச். கடுகின் விதை தொழில்நுட்பம் பற்றிய பெந்தாலின் விளக்கம் கவனிக்கத்தக்கது.
பாரம்பரியமான கடுகு விதை மற்றும் நெல்லைப்போல் சுய மகரந்தச் சேர்க்கையின் மூலம் பூ எடுக்கும். சுய மகரந்தச் சேர்க்கையில்லாமல் அயல் மகரந்தச் சேர்க்கைக்குத் தூண்டும் வழியில் சில பாக்டீரியாக்களின் துணைகொண்டு மரபணு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
பெந்தால் வழங்கியுள்ள விளக்கம் சரியென்றால், கடுகு விதை பற்றிய கருத்து வேற்றுமைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டுப் புதிய அறிவியல் மாற்றங்களை வரவேற்பது நன்று.
விதைகளில் அதிகமான மகசூல் வழங்கக்கூடிய வீரியரக ஒட்டு - மரபணு மாற்றம் பெற்ற விதைகளின் தேவை ஐரோப்பிய நாடுகளுக்கு இல்லை. உணவுப் பயிர் விளை நிலங்களின் விஸ்தீரணம் பற்றிய விசாரங்களும் அங்கு இல்லை. அவர்கள் உணவு ஏற்றுமதி செய்வதும் இல்லை.
இந்திய எதார்த்தங்களை மறந்துவிட்டு ஐரோப்பிய விவசாயத்தை ஒப்பிட்டு இந்திய முறைகளை மதிப்பிடுவது தவறு என்று மரபணு மாற்ற விதைத் தொழில்நுட்பத்தையே எதிர்க்கும் அருணா ரோட்ரிக்கிற்கு தீபக் பெந்தால் பதிலடி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தீபக் பெந்தாலின் கூற்றுப்படி பி.டி. பருத்தியுடன் ஒப்பிடாமல் நெல்லைப் போல் கடுகின் வீரிய விதை ரகங்களை வரவேற்கலாம். பாரம்பரிய கடுகைவிட வீரியரக கடுகு விதை, டி.எம்.எச். ரகங்கள் 25 சதவீதம் விளைச்சலை அதிகப்படுத்தும் என்று ஆணித்தரமாக அவர் எடுத்துரைப்பதை கவனத்தில் கொள்ளலாம்.
1986-இல் ராஜீவ் காந்தி பிரதமராகயிருந்தபோது உருவாக்கப்பட்ட எண்ணெய் வித்துகளின் தொழில்நுட்ப வளர்ச்சித்திட்டத்தில் (Technology Mission on Oil Seeds) எண்ணெய் வித்துகளிலிருந்து எண்ணெய் பிழிவதில் புதிய இயந்திரங்கள் (சால்வென்ட் எக்ஸ்ட்ராக்ஷன்) அறிமுகமானது. இம்முறையில் பிண்ணாக்கில் உள்ள புரதத்தைத் தனியாகப் பிரித்தெடுக்கலாம்.
குறைந்த அளவு எண்ணெய் உள்ள சோயாபீன், அரிசித் தவிடு போன்றவற்றிலிருந்தும் புரதத்தையும் எண்ணெயையும் வீணாக்காமல் பிரித்துப் புரதச் சத்துள்ள பிண்ணாக்கை ஏற்றுமதி செய்யலாம். ஆனால், அடிப்படையான எண்ணெய் வித்து உற்பத்தித்திறன், உற்பத்தி உயர்வுக்குரிய அடித்தளம் அமைக்கப்படவில்லை. புதிய கடுகுவிதை - தாரா மஸ்டர்ட் ஹை பிரிட்.
இதில் 'தாரா' என்ற சொல் அப்போது எண்ணெய் வித்து வளர்ச்சித்திட்டம் தேசியப் பால் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் டாக்டர் குரியனின் கலப்படமில்லாத 'தாரா' பிராண்ட் சமையல் எண்ணெய் அறிமுகத்தை நினைவுபடுத்துகிறது. இந்த தாரா வீரியரகக் கடுகு ராஜீவ் திட்டமாக இருந்து இன்று மோடி திட்டமாகப் புத்துருவம் பெற்றுள்ளது.
இன்று கடலெண்ணெயைவிடக் கடுகு எண்ணெய் பயன்பாடே இந்தியாவில் அதிகம். பொதுவாகத் தென்னிந்தியர்கள் கடுகு எண்ணெயில் சமைப்பது இல்லை. ஆனால் வட மாநிலங்களில் கடுகு எண்ணெய்தான் முக்கிய சமையல் எண்ணெய். பாமாயில் போல் கடுகு எண்ணெயும் இறக்குமதி செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் எவ்வாறு மக்கள் கடலை எண்ணெய்க்கு மாற்றாகப் பாமாயிலைப் பயன்படுத்துகிறார்களோ, அவ்வாறே வட இந்தியர்களும் கடுகு எண்ணெய்க்கு மாற்றாக இறக்குமதி செய்யப்படும் பாமாயிலைப் பயன்படுத்துகிறார்கள். நாம் ஆண்டுதோறும் 10 மில்லியன் டாலர் மதிப்புள்ள சமையல் எண்ணெயை இறக்குமதி செய்கிறோம்.
ஆண்டுதோறும் சராசரியாக 14 மில்லியன் டன் அளவில் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதால், அதை ஓரளவுக்குப் புதிய வீரியரக தாரா கடுகுகால் ஈடு செய்ய முடியும் என்றால் அந்த இனிய முயற்சியை நாம் வரவேற்றுப் பாராட்ட வேண்டும். முட்டுக்கட்டை போடுவது இந்திய நலனுக்கு விரோதமானதாகும்.

கட்டுரையாளர்:
இயற்கை விஞ்ஞானி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com