ஆபத்தில்லா வாகனம்

இருசக்கர மோட்டார் வாகனங்கள் பெருகி வருகின்ற இந்தக் காலகட்டத்தில் நாம் சைக்கிள் குறித்து சற்றே சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இருசக்கர மோட்டார் வாகனங்கள் பெருகி வருகின்ற இந்தக் காலகட்டத்தில் நாம் சைக்கிள் குறித்து சற்றே சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். சைக்கிள் மனித சக்தியால் இயங்குவதால் ஓட்டுபவருக்குப் பயிற்சியும் அதன் மூலம் நல்ல உடல் நலமும் கிடைக்க ஏதுவாகிறது.
சைக்கிளில் புகை இல்லை, சப்தம் இல்லை, எரிபொருள் தேவை இல்லை, சுற்றுச்சூழலை மாசு படுத்தாது, பராமரிப்பது எளிது, கையாள்வதும் எளிது, விபத்துகளும் குறைவு. இன்னும் எத்தனையோ நன்மைகளைப் பட்டியலிடலாம்.
தற்காலத்தில் நகரங்களில் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் ஒருவரைப் பார்த்து ஒருவர் புதிது புதிதாக இருசக்கர மோட்டார் வாகனங்களை வாங்கி ஓட்டி அழகு பார்க்கின்றனர். இயந்திரத்தில் இயங்குவதால் தேவையின்றி அதனை எடுத்துக் கொண்டு நண்பர்களுடன் சுற்றுகின்ற நிலையையும் காண முடிகிறது. எவ்வளவு விலை உயர்ந்த வாகனமாயினும் எரிபொருள் இன்றி ஓடுமா? ஓட்டத்தான் முடியுமா?
இருசக்கர மோட்டார் வாகனமே ஓட்டிப் பழகியவர்களுக்கு சைக்கிள் ஓட்டுவதென்பது முதலில் சற்று கடினமாகத்தான் இருக்கும். சைக்கிள் ஓட்டுவதைப் பழக்கமாக்கினால் படிப்படியாக எளிதாகி புதுத்தெம்பும், புத்துணர்வும் நிச்சயமாகக் கிடைக்கும்.
வகை வகையான இருசக்கர மோட்டார் வாகனங்களை ஓட்டுவதென்பது அந்தஸ்தின் அடையாளம் என நினைப்பது மிகப்பெரிய அறியாமை.
தற்காலத்தில் அனைத்தும் இயந்திரமாகி உடலுக்கு எந்தப் பயிற்சியுமே இல்லாத சூழ்நிலையில் உடல் நோயுற்று, நலிவுற்ற பின், மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகே நடைப்பயிற்சி மேற்கொள்வதையும், சைக்கிளில் பயணிப்பதையும் பழக்கமாக்குகின்றனர்.
மிகச் சிறு வயதிலேயே ஓட்டுநர் உரிமம்கூடப் பெறாமல் எத்தனையோ பேர் இருசக்கர வாகனங்களில் அளவுக்கதிகமான வேகத்தில் சென்று அடிக்கடி விபத்துக்குள்ளாவதையும் அன்றாடம் காண்கிறோம்.
பெற்றோரே சைக்கிள் ஓட்டுவதைப் பழக்கமாக்கி குழந்தைகளுக்கு வழிகாட்டலாம். உலகிலேயே சீன நாட்டில்தான் சைக்கிள் உபயோகிப்போர் அதிக அளவில் இருக்கின்றனர்.
அங்கு சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், வயதானவர்கள் என அனைத்துத் தரப்பினரும் அன்றாடம் பல மைல் தூரம் சைக்கிளில் பயணம் செய்கின்றனர். சைக்கிள் வைத்திருப்பதையும், அதை ஓட்டுவதையும் சீனர்கள் கவுரவமாகக் கருதுகின்றனர்.
உலகிலேயே மகிழ்ச்சியான நாடு என்று டென்மார்க்கைச் சொல்வார்கள். அந்நாட்டு மக்கள் குறைந்த தூரப்பயணத்துக்கு எப்போதும் சைக்கிளைத்தான் பயன்படுத்துகிறார்கள். நெதர்லாந்தில் 99 சதவீதம் பேரிடம் சைக்கிள் இருக்கிறதாம்.
ஜெர்மனி, ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, ஜப்பான், சுவிட்சர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் சைக்கிளை விரும்பி உபயோகிக்கின்றனர்.
உலகிலேயே சைக்கிள் அதிகம் பயன்படுத்தும் முதல் 10 நாடுகள் பட்டியலில் 50 கோடி சைக்கிள்கள் பயன்படுத்தி சீனா முதலிடம் வகிக்கிறது. இந்தியா பத்து நாடுகள் பட்டியலில் இடம் பெறவில்லை.
தமிழக அரசு சில ஆண்டுகளாகப் பள்ளி மாணவ - மாணவியருக்கு இலவசமாக சைக்கிள் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்திச் செயல்படுத்தி வருகிறது. இது வரவேற்க வேண்டிய நல்ல திட்டம்தான்.
ஆனால் சிறிது தூரம் செல்ல வேண்டி மாணவ - மாணவியர்கூட இலவச பஸ் பாஸைக் கையில் வைத்துக்கொண்டு மணிக்கணக்கில் பேருந்துக்காகக் காத்துக்கிடப்பதையும், பேருந்து வந்ததும் முண்டி அடித்துக்கொண்டு பேருந்தில் ஏறுவதும், கூட்டநெரிசலில் சிக்கித் தவித்து சில நிமிடங்களில் இறங்கி விடுவதும் வழக்கமாகிவிட்டது.
ஐந்து கி.மீட்டருக்கு மேல் சென்று வரும் மாணவர்களுக்கு மட்டுமே பஸ்பாஸ் வழங்கியும், மற்றவர்கள் நடந்தோ அல்லது சைக்கிளில் செல்வதையோ அரசு ஊக்கப்படுத்தலாம்.
ஒரு சில மேலை நாடுகளில் சைக்கிள் உபயோகிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் நகரின் பல முக்கியமான இடங்களில் தேவையான அளவு சைக்கிள்களை வாடகைக்கு வைத்திருக்கின்றனர். எடுத்த இடத்திலேயே திரும்பக்கொண்டு போய் விட வேண்டிய அவசியமில்லாமல் அவர்கள் சென்றடைய வேண்டிய இடத்திற்கு அருகிலேயே அந்த சைக்கிளை ஒப்படைத்து உரிய வாடகையைச் செலுத்தி விட்டுச் செல்ல வசதி இருக்கிறதாம்.
அத்துடன் சில நாடுகளில் சைக்கிளில் செல்வோரின் வசதிக்காகச் சாலைகளில் தனிப் பாதையும் ஒதுக்கப்பட்டுள்ளதாம். இந்த மாதிரியான ஏற்பாடுகளை நம் நாட்டிலும் அனைத்து நகர்ப்புறங்களிலும் செயல்படுத்தினால் சுற்றுச்சூழல் மாசுபடுவதிலிருந்து காத்துக்கொள்ளலாம். எரிபொருளையும் மிச்சப்படுத்தலாம்.
அரசாங்கம் சைக்கிள் உற்பத்திக்கு முழுமையான வரிவிலக்கு அளித்து குறைந்த விலையில் சைக்கிள் கிடைக்கச் செய்யலாம். அத்தோடு உற்பத்தியாளர்களும் இலகுவாகவும், விரைவாகவும் செல்லக்கூடிய வகையில் சைக்கிள்களைப் புதிது புதிதாக வடிவமைத்து இளைஞர்கள் விரும்பி வாங்கிப் பயன்படுத்திடச் செய்யலாம்.
இன்சூரன்ஸ், ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு, வாகன ஆயுள்வரி, தலைக்கவசம் இவை எதுவும் இன்றி சிறுவர் முதல் பெரியவர் வரை ஆண்கள் - பெண்கள் என அனைவரும் எளிதாகப் பயன்படுத்திடக் கூடிய சைக்கிள் மனித சமுதாயத்திற்குக் கிடைத்திருக்கும் மிகச்சிறந்த வரமாகும். அதனைப் பயன்படுத்திப் பயன் பெறுவோமாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com