மது அரக்கனை விரட்டுவோம்

சமுதாயத்தில் மதியை மயக்கும் மதுவால் சீரழிந்த, சிதைந்துபோன குடும்பங்கள் நாளும் பெருகி வருகின்றன. உயர்மட்ட வகுப்பினரினும்,

சமுதாயத்தில் மதியை மயக்கும் மதுவால் சீரழிந்த, சிதைந்துபோன குடும்பங்கள் நாளும் பெருகி வருகின்றன. உயர்மட்ட வகுப்பினரினும், வறுமைக் கோட்டின் கீழ்வாழும் பொருளாதாரத்தில் கீழ்மட்ட நிலையில் உள்ள பிரிவினர் மதுப்பழக்கத்தால் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்.
மாண்புடைய மனித உயிரின் பகுத்தறிவை மயக்கிக் கெடுத்து விலங்கினும் கீழ்நிலைக்குக் கொண்டு செல்லும் மதுவும் கள்ளும் தள்ளத்தக்கன என்பதை அறியாத மக்களை எங்ஙனம் திருத்துவது?
மதுவின் தயாரிப்பு, விநியோகம் மற்றும் விற்பனையைத் தடைசெய்யும் சட்ட நடவடிக்கையாகிய மதுவிலக்குக் கொள்கைகள் அரசுகளால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஆனால், அந்த நேரத்தில் சட்டத்திற்குப் புறம்பான மதுபானத் தயாரிப்பும், விற்பனையும் அதிகரிப்பது வழக்கமாகி விட்டது.
இந்தியாவில் மதுவிலக்கை நடைமுறைப் படுத்தக்கோரி 1930-ஆம் ஆண்டில் மக்கள் போராட்டம் நடத்தினர். பல சாராயக் கடைகள் அடைக்கப்பட்டன. கிராமங்களில் மது குடிப்பவர்களைப் புறக்கணித்தனர்.
இந்தியாவில் தமிழ்நாடு மதுவிலக்குக் கொள்கையைக் கைவிட்டு அரசே மதுவிற்பனை செய்யும் மாநிலமாக மாற தொடங்கியதும் மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகமாகி ஆங்காங்கே, ஊரின் நெடுஞ்சாலைகளின் குடித்துவிட்டுப் படுத்திருப்பதும், வன்செயல்கட்கு உட்படுவதும், தன் குடும்பத்தின் எதிர்காலத்தைக் கருத்திற்கொள்ளாது கைப்பொருளைக் குடியில் செலவழித்து, பின்னர் இல்லம் திரும்பி, மனைவி, மக்களைத் துன்புறுத்துவதும் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சியாகிவிட்டது.
குடிகாரக் கணவனால் கொடுமையாகத் தாக்கப்பட்டு, அடிதாங்காமல் வீங்கிய கன்னங்களுடன், தம் பச்சிளம் குழந்தைகளின் அரைவயிற்று உணவுக்காக, பல வீடுகட்குச் சென்று வீட்டு வேலைகள் செய்து குடும்பத்தைக் காப்பாற்றும் பெண்கள் படும் அல்லல்கள் கொஞ்சநஞ்சமல்ல.
ஒரு கட்டத்தில் எதுவும் செய்ய இயலாமல் தன் குழந்தைகளை நஞ்சூட்டிக் கொன்று, தன்னுயிரையும் மாய்த்துக் கொள்ளும் பெண்களைப் பற்றி நாளும் இதழ்களில் படிக்கிறோம். ஒளிமயமான எதிர்காலம், உயர்ந்த சமுதாயம் இன்றைய இளைஞர்கள் கைகளில்தான் உள்ளது.
தமிழ்நாட்டில் மதுவிலக்குக் கொள்கையானது வருவாயைக் கருத்திற் கொண்டு வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விதமாக அரசுகளால் கையாளப்பட்டு வருகிறது. விடுதலை பெற்று 23 ஆண்டுகள் தமிழகத்தில் மதுவிலக்கு நடப்பில் இருந்ததாகக் கருத்துக் கணிப்பு இருக்கிறது.
சில காலங்களைத் தவிர விஸ்கி போன்ற வெளிநாட்டு மதுவகைகளும், கள், சாராயம் போன்ற உள்நாட்டு வகைகளும் தடை செய்யப்பட்டிருந்தன. 2001-இல் மதுவிலக்கு நீக்கப்பட்டபோது டாஸ்மாக் நிறுவனத்தை மொத்த விற்பனை நிறுவனமாக மாநில அரசு பயன்படுத்தியது.
தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தின் ஏகபோக மது விற்பனையால் அரசுக்கு அதிக வருவாய் கிடைத்தது. இம்முடிவை மாற்ற இயலாமல் அரசு தொடர்ந்து செயற்பட்டதால் அதன் தனியுரிமை தொடர்கிறது.
2015-இல் மதுவிலக்குப் போராட்டங்களில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. டாஸ்மாக் நிறுவனத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வந்த போதிலும் காந்தியவழி சசிபெருமாளின் மறைவுக்குப் பிறகு போராட்டங்கள் வலுவடைந்தன.
மதுவுக்கு எதிராகத் தமிழகத்தில் வரலாறு காணாத எழுச்சி ஏற்பட்டிருப்பதும், நாடு முழுவதும் மதுக்கடைகட்கு எதிராகப் பாதிக்கப்படும் மகளிர் போர்க்கோலம் பூண்டிருக்கும் நிலைகளைக் கண்டு வருகிறோம்.
மதுக்கடைகள் மூடப்படுவதற்கு உயர்நீதிமன்ற உத்தரவு கிடைத்தும், சட்ட விரோதமாக, மது விற்பனை பல கடைகளில் நடைபெற்று வருவதும் வருந்தத்தக்கது. அண்மையில் கோவையில் பொது மக்களே மதுபாட்டில்களைச் சாலையில் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதைப் பார்த்தோம். மதுக் கடைகளைச் சூறையாடுதலும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களை உடைத்து எறிதலும், குற்றங்கள்தான்.
எனினும், மதுவெனும் பேயை ஒழிக்க மக்களால் எடுக்கப்படும் ஒரு தீவிரச் செயல் என்று எடுத்துக் கொண்டால் ஓரளவு மனம் ஆறுதல் கொள்கிறது. அண்மையில் கூட திருப்பூரில் டாஸ்மாக் கடைகட்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதையும், அதில் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டதையும், உடனடியாக அக்கடைகளை மூட உத்தரவிட்டதையும் அறியும் போது மக்கள் எழுச்சியை உணர முடிகிறது.
பள்ளிகள், கோவில்கள், தேவாலயங்கள், மருத்துவமனைகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் இருக்கக் கூடிய கடைகளை மூட வேண்டுமென்று பெண்கள் போராடி வருகின்றனர். ஒரு சிறந்த முடிவு வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பனபோல் தெரிகிறது.
குடிமக்களைப் பிறர் துன்புறுத்தாமல் பாதுகாக்க துன்பம் செய்தவர்களைத் தண்டிப்பது நாடாள்வோருக்குப் பழியன்று. கடமை என்கிறது வள்ளுவம்
குடிபுறங் காத்துஓம்பிக் குற்றம் கடிதல்
வடுஅன்று வேந்தன் தொழில்.
ஆட்சியாளன் கடமையைத் தெளிவுறுத்துகிற வள்ளுவர், அவன் நாட்டுமக்களின் தேவைகளை நிறைவேற்ற பல்வேறு திட்டங்கள் தீட்ட வேண்டியுள்ளதையும் குறிப்பிடுகிறார்.
பிறர்க்கு நன்மை செய்து தனக்கும் இன்பத்தைக் கொடுக்கும் பொருள் இன்றியமையாதது. உள்நாட்டு வரி, வெளி நாட்டுவரி, சுங்கவரி தண்டனை விதித்தல் இம்மூன்று வகையாய் வரும் பொருள் நாடாள்வோர்க்கு வருவாய் என்கிறார் வள்ளுவர்.
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com