மன நலம் காப்போம்

பொதுவாக மனநோய் பற்றி மக்களிடையே சரியான புரிதல் இல்லை.
மன நலம் காப்போம்

பொதுவாக மனநோய் பற்றி மக்களிடையே சரியான புரிதல் இல்லை. குடும்பத்தில் யாராவது மனநோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் அது ஒரு பெரிய களங்கமாகக் கருதப்படுகிறது. குடும்பத்தினரும் அதை ஓர் அவமானமாகக் கருதுகிறார்கள். மனநலப் பிரச்னைகளைப் பற்றி விழிப்புணர்வு உண்டாக்கவும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆதரவைத் திரட்டுவதற்காகவும் உலக சுகாதார நிறுவனம் அக்டோபர் 10-ஆம் தேதியை உலக மனநல தினமாக அறிவித்துள்ளது.
மனச்சிதைவு (Schizophrenia), இருமனக் குழப்பம் (bipolar) போன்ற தீவிர மனநிலை பாதிப்பிற்குள்ளானவர்கள், மன அழுத்தம், மனச் சோர்வு, மனப்பதற்றம், கவலை, அச்சக்கோளாறு போன்ற பொதுவாகக் காணப்படும் மன நோய்களுக்குள்ளானவர்கள் மற்றும் மது, புகையிலை, போதைப் பொருட்கள் போன்றவற்றை உட்கொள்வதன் காரணமாக மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல வகை மனநோயாளிகள் உள்ளனர்.
2015 -16இல் பெங்களூருவில் உள்ள தேசிய மனநல மற்றும் நரம்பியல் நிறுவனம் (National Institute of Mental Health and Neuro Sciences, NIMHANS) நடத்திய தேசிய மனநல கணக்கெடுப்பு, நமது நாட்டில், 18 வயதிற்கு மேல் உள்ளவர்களில் சுமார் 10.6 விழுக்காட்டினர் ஏதாவது ஒரு விதத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக உள்ளார்கள் என்று கணித்துள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 15 கோடி பேர்களுக்கு சிகிச்சை, ஆலோசனை தேவை என்றும், ஆனால் இவர்களில் 80 விழுக்காட்டினர் எந்த விதமான சிகிச்சையும் பெறுவதில்லை என்ற தகவலையும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இவர்கள் ஆலோசனையோ சிகிச்சையோ பெறாததற்கு பொருளாதார நிலை, கல்வியறிவு இல்லாமை, அறியாமை, சமூகச் சூழ்நிலை, தகுந்த சிகிச்சை அல்லது ஆலோசனை வழங்கக் கூடிய வசதிகள் இல்லாமை போன்ற பல காரணங்கள் உள்ளன.
மன நோயாளிகளின் மேல் உள்ள களங்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்நோயை ரகசியமாக வைத்துக்கொள்ளவே முயல்கிறார்கள். அதனால்தான் மன நோய் மருத்துவரை நாடி ஆலோசனை, சிகிச்சை பெறுவதையும் தவிர்க்கிறார்கள்.
மனநோய் சம்பந்தமாக உள்ள மூட நம்பிக்கையின் காரணமாக, கல்வியறிவு படைத்தவர்கள்கூட மனநல மருத்துவர்களை நாடுவதை விடுத்து, பேய் விரட்டுவது, வேப்பிலையடிப்பது என்று திசைமாறிப் போய்விடுகிறார்கள். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை அவர்கள் குடும்பத்தினரே பல விதமான கொடுமைகளுக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்குகிறார்கள்.
மன நோயாளிகள் சரியான ஆலோசனை மற்றும் சிகிச்சைபெற நமது நாட்டில் போதுமான வசதி இல்லை என்பதும் பலர் சிகிச்சை பெறாததற்கு முக்கிய காரணம். பெரு நகரங்களில் ஓரளவு வசதிகள் இருந்தாலும், சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் வசிப்போர்களின் பாடு திண்டாட்டமே.
ஒரு லட்சம் மக்களுக்கு ஒரு மனநோய் மருத்துவர் இருக்க வேண்டும். ஆனால் நமது நாட்டில் நான்கு லட்சம் மக்களுக்கு ஒரு மருத்துவரே உள்ளார். மேலும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அளிக்கும் புள்ளிவிவரங்களின்படி நமது நாட்டில் 3,827 மனோதத்துவ நிபுணர்களே உள்ளனர். ஆனால், நமக்குத் தேவை குறைந்த பட்சம் 13,500 நிபுணர்கள்.
அதுமட்டுமல்ல, மருத்துவப் படிப்பில் இந்தத் துறையை அதிகமாக யாரும் தேர்ந்தெடுப்பதில்லை என்பதும், இந்தத் துறையில் பணியாற்ற செவிலியர் மற்றும் சமூக சேவகர்களும் அதிகம் முன்வருவதில்லை என்பதும் கசப்பான உண்மைகள்.
2020-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் 20 விழுக்காட்டை எட்டிவிடும் என்றும், அப்படிப்பட்ட ஒரு நிலைமையைச் சமாளிக்க நமது நாட்டில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தைத் தவிர்த்து மற்ற எல்லா மாநிலங்களிலும் அரசு நடத்தும் மனநல மருத்துவமனைகள் உள்ளன என்றாலும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இவை போதுமானதாக இல்லை. அதனால் பெரும்பாலும் மனநல பாதிப்புள்ளவர்களை கவனித்துக் கொள்ளும் சுமை குடும்பத்தினர் மேல் விழுகிறது. வீட்டில் வைத்து கவனித்துக் கொள்ள வசதியில்லாதவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அநாதையாகத் தெருவில் திரிய விட்டு விடுகிறார்கள்.
தற்பொழுது நமது நாட்டில் 35 லட்சம் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மனநல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய நிலையில் உள்ளார்கள். ஆனால், நாட்டில் மொத்தம் 40 மனநல மருத்துவமனைகள் (26,000 படுக்கை வசதிகள்) மட்டுமே உள்ளன.
மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நமது நாட்டின் மனநல மருத்துவமனைகள் மிகவும் அவல நிலையில் உள்ளன. ஆதரவற்றோர்கள் இல்லம் போல் இயங்கும் இந்த மருத்துவமனைகளில் மனநிலை சரியில்லாதவர்கள் மனிதத் தன்மையற்ற விதத்தில் நடத்தப்படுகிறார்கள்.
பல இடங்களில் நவீன சிகிச்சை முறைகளைப் பின்பற்றாமல், மின் அதிர்ச்சி கொடுப்பது, சங்கிலியால் கட்டிப்போடுவது போன்ற கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். போதிய இடவசதி இல்லாமல் ஆட்டுமந்தைகள் போல் அடைக்கப்படுகிறார்கள். இந்த விவரங்களை அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
மனநிலை சரியில்லாதவரை மருத்துவமனையில் சேர்த்த பிறகு, பெரும்பாலும் அவர்கள் குடும்பத்தினர் அவரைத் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். சிகிச்சை பெற்று இயல்பு நிலைக்கு வந்த பிறகும் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு, செல்வதற்கு இடம் இல்லாமல் அவதிப்படுவோர் பலர்.
சமீபத்தில் உச்சநீதிமன்றம் இவர்களைப் போன்றோருக்காக பாதி வழி வீடுகள்(half way homes) அமைக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளது.
நமது நாட்டில் 20 பேர்களில் ஒருவர் மன அழுத்தம் மனச் சோர்வு நோயினால் (mental depression)  பாதிக்கப்பட்டுள்ளார் என்கிறது, தேசிய மனநல மற்றும் நரம்பியல் நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பு. மன அழுத்தம் பிரச்னையையே, இந்த ஆண்டு ஏப்ரல் 7 உலக சுகாதார தினத்தின் கருத்தாக, உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கும் அளவிற்கு உலகளவில் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நமது நாட்டிலும் மன அழுத்தத்திற்காக மனநல மருத்துவர்கள் 2016-ஆம் ஆண்டில் 3.46 கோடி புதிய மருந்துச் சீட்டுகள் எழுதியுள்ளார்கள் என்றும், 2015-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் புதிதாக மருத்துவ ஆலோசனை பெற்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
மனஅழுத்தத்தை கருத்தாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'கசாவ்' எனும் மராத்தி திரைப்படம் சென்ற ஆண்டிற்கான சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய விருதைப் பெற்றது. இது மனஅழுத்தம் எந்த அளவிற்கு ஒரு பரவலான பிரச்னையாக ஆகிவிட்டது என்பதை எடுத்துக் காட்டுகிறது.
எதிலும் நாட்டம் இல்லாமை, அதிகமாக கவலைப் படுவது, எதிலும் கவனம் செலுத்த முடியாமை, தான் எதற்கும் லாயக்கில்லை என்ற நினைப்பு, வாழ்க்கையில் நம்பிக்கையின்மை, வீண் பதற்றம், பசி உணர்வில் மாற்றம், அதிகமாக அல்லது குறைவாகத் தூங்குவது, குற்றவுணர்வு, தன்னை துன்புறுத்திக் கொள்ளலாம் அல்லது தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம், உடல் சோர்வு போன்றவை பொதுவாக மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிடம் காணப்படும் அறிகுறிகள்.
மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களது நோயை வெளியில் தெரிவித்தால் அவமானம் என்று கருதி யாரிடமும் அதைப்பற்றி மனம் விட்டுப் பேசுவதில்லை. பாதிக்கப்பட்டவர்களில் பலர் எங்கே போவது, யாரிடம் ஆலோசனை கேட்பது என்று தெரியாமலும் தவிக்கிறார்கள்.
இவர்கள் மனஅழுத்தத்திலிருந்து மீண்டு வர வேண்டுமென்றால் குடும்பத்தினரின் ஆதரவு இவர்களுக்கு முழுமையாகத் தேவை. மன அழுத்தத்திற்கு ஆளான பிரபல இந்தி திரைப்பட நடிகை தீபிகா படுகோன், சிகிச்சை பெற்றதோடல்லாமல், அதிலிருந்து மீண்டு வந்து தனது அனுபவத்தை வெளிப்படையாக ஊடகங்களின் மூலம் பகிர்ந்து கொண்டு மற்றவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக விளங்கியுள்ளார்.
2016-ஆம் ஆண்டு உலக மன நல தினத்தன்று 'மனஅழுத்தம் - நாம் (அதைப்) பேசுவோம்' என்ற வாசகம் உலக சுகாதார நிறுவனத்தின் முழக்கமாக அறிவிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியும், தனது சமீபத்திய 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் மன அழுத்தத்தைப்பற்றி பேசியதோடல்லாமல், அதை பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இந்த ஆண்டு நாடாளுமன்றதில் நிறைவேற்றப்பட்ட மனநல சுகாதார மசோதா 2016 (Mental Health Care Bill, , 2016) கடும் மன அழுத்தத்தின் காரணமாக எடுக்கப்படும் தற்கொலை முயற்சிகளை குற்றப்பிரிவிலிருந்து நீக்க வழி செய்துள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும், நவீன சிகிச்சை முறையையும் பரிந்துரைக்கும் இந்த மசோதா மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வில் நல்ல மாற்றதைக் கொண்டு வரும் என்று எதிர்பார்ப்போமாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com