அலங்கார பொம்மையல்ல அதிபர் பதவி!

நம் நாட்டில் மன்னர் ஆட்சிக் காலத்தில் நிலவிய பழம் பெருமையையும், இன்றைய நவீன மக்கள் ஆட்சியின் மாண்பையும் இணைக்கும் அடையாளச் சின்னம்தான் குடியரசுத் தலைவர் பதவி.

நம் நாட்டில் மன்னர் ஆட்சிக் காலத்தில் நிலவிய பழம் பெருமையையும், இன்றைய நவீன மக்கள் ஆட்சியின் மாண்பையும் இணைக்கும் அடையாளச் சின்னம்தான் குடியரசுத் தலைவர் பதவி.
இப்பதவி எப்படி உருவானது? 69 ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட (1947) அரசியல் நிர்ணய சபையில் அங்கம் வகித்தவர்கள் 271 பெருமக்கள். அவர்களில் பெரும்பான்மையினர் காங்கிரஸ்காரர்களே ஆனாலும் காலமெல்லாம் காங்கிரஸை எதிர்த்த அம்பேத்கர், காங்கிரஸை விட்டுப் பிரிந்துபோன கே.எம். முன்ஷி, இந்து மகாசபைத் தலைவர் ஸ்யாம் பிரசாத் முகர்ஜி, அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், புகழ்பெற்ற நிர்வாகி என். கோபாலசாமி ஐயங்கார், சிறந்த கல்வியளாளர் ஜெரோம் டிசௌசா - போன்ற மேதைகளோடு, பண்டித நேரு, சர்தார் பட்டேல், அபுல்கலாம் ஆசாத், ராஜேந்திர பிரசாத் போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்களும் இணைந்து இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கினார்கள்.
அரசியல் அமைப்பு சட்ட வரைவுக் குழுத் தலைவர் அம்பேத்கர், ஒரு லட்சிய ஜனநாயகத்திற்கு இரண்டு அம்சங்கள் இருக்க வேண்டும். அவற்றில் ஒன்று ஸ்திரத்தன்மை (Stability) இன்னொன்று மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்புடைமை(Accountability).. இவை இரண்டும் இணைந்த ஜனநாயக அமைப்பு முறை உலகில் எங்கும் இல்லையே எனக் கவலையோடு தெரிவித்தார்.
அதுசமயம் ஒரு தனி மனிதரிடம் அதிகாரத்தைக் குவிப்பதில் ஒருவேளை ஆபத்து நேரிடலாம். ஆகவே அதிகாரத்தைப் பரவலாக்கும் ஓர் அமைப்பு முறை தான் நல்லது என்றார் பண்டித ஜவாஹர்லால் நேரு.
அமெரிக்காவின் அதிபர் ஆட்சி முறையை நாம் ஏற்றிருந்தால், தொங்கு நாடாளுமன்றப் பிரச்னை (Hung Parliament) எழுந்திருக்காது. கூட்டணி ஆட்சியால் ஏற்படும் நிர்ப்பந்தங்களையும், நெருக்கடிகளையும் தவிர்த்திருக்கலாம். இன்று நாம் அடிக்கடி எதிர்கொள்ளும் நம்பிக்கையில்லாத் தீர்மானங்களையும் சந்திக்க வேணடியதில்லை. அதன் மூலம் அரசின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்திருக்கலாம்.
ஆனால் ஸ்திரத்தன்மையை நாம் விட்டுக் கொடுத்தாலும் பரவாயில்லை. மக்களுக்குப் பதில் சொல்லும் கடமையைக் கட்டாயப்படுத்தும் நாடாளுமன்ற ஜனநாயக முறையே நல்லது என்ற இறுதி முடிவை அரசியல் நிர்ணய சபை எடுத்தது. அதன்படி தான் அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் ஆட்சி முறை தவிர்க்கப்பட்டது. பிரிட்டனின் நாடாளுமன்ற ஜனநாயக முறை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
குடியரசுத் தலைவர் இந்திய அரசின் மற்றும் நம் நாட்டின் தலைவரும் ஆவார். முப்படைகளின் தலைவரும் இவரே. இவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் அல்ல. நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை என்ற இரு அவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாலும், அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்களாலும் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் பற்றி ஆரம்ப காலத்திலேயே சர்ச்சகைள் எழத்தான் செய்தன.
தேசத்தின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத்தும், முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவும் அப்பழுக்கற்ற தேசபக்தர்கள். தேர்ந்த சட்ட மேதைகள். அவர்களுக்கிடையே கூட, குடியரசுத் தலைவரின் அதிகாரம்(Powers of the President)   பற்றி கருத்து மாறுபாடு முளைத்தது.
பிரசாத், நேருவுக்கு 18.09.1951 அன்று ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் கீழ்க்காணும் வினாக்களை எழுப்புகிறார். குடியரசுத் தலைவர் நாடாளுமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்தி வைக்கலாம். அமைச்சரவையை பதவி நீக்கம் செய்யலாம். அமைச்சரவையைக் கலைத்து விட்டு பொதுத் தேர்தல் நடத்துவதற்கு ஆணையும் பிறப்பிக்கலாம். அதற்குரிய அதிகாரங்கள் அதிபருக்கு உண்டு என்று வாதிடுகிறார்.
அதன்பின் நேருவின் முயற்சியால் அட்டர்னி ஜெனரல் செட்டல்வார்டு-ன் கருத்தையும் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயரின் அபிப்பிராயத்தையும் கேட்கிறார்கள். இருவரும் அமைச்சரவையின் ஆலோசனை, பரிந்துரைப்படி தான் அதிபர் செயல்பட முடியும் என்ற கருத்தை உறுதி செய்கின்றனர். அதன் பின்புதான் அமைச்சரவையின் ஆலோசனை அதிபரைக் கட்டுப்படுத்தும் என்ற அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
அமைச்சரவையின் ஆலோசனையை அப்படியே ஏற்பது என்றால் அதிபர் பதவி ஓர் அலங்கார பொம்மையா? இல்லவே இல்லை. இவருக்கென்று சில அரிய கடமைகளும், பொறுப்புகளும் உள்ளன.
அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, அவருக்கு நான்கு வகையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை:-
1. செயலாக்க அதிகாரம்: இதன்படி மத்திய அரசின் முடிவுகள் அனைத்தும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று, அவரது பெயரிலேயே வெளியிடப்பட வேண்டும் என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின் 77(1) ஆவது விதியாகும்.
இவ்விதியின் கீழ்தான் - பிரதமர், உச்சநீதிமன்ற நீதிபதிகள், மாநில கவர்னர்கள், நிதிக்கமிஷன் தலைவர், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் உறுப்பினர்கள், அயல்நாட்டுத் தூதர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், இதர பிற்பட்ட வகுப்பினர்களுக்கான ஆணையத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் போன்ற முக்கிய பதவிக்கான நபர்களை நியமனம் செய்கிறார் இவர். முப்படைகளின் தலைவர் இவர். அவர்களுக்கு ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் படைத்தவரும் இவரே.
2. சட்ட அதிகாரங்கள்: அரசியல் அமைப்புச் சட்டத்தின் 85-ஆவது விதிப்படி நாடாளுமன்றதைக் கூட்டவும், மக்களவையைக் கலைக்கவும் அதிபருக்கு அதிகாரம் உள்ளது. நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டும் அதிகாரமும் இவருடையதே. மாநிலங்களவைக்கு 12 பேரையும், மக்களவைக்கு 2 பேரையும் நியமன உறுப்பினர்களாக நியமிக்கும் அதிகாரமும் இவருக்கு உண்டு.
3. அவசர நிலைப்பிரகடன அதிகாரம்: நாடாளுமன்றதின் இரு அவைகளும் நடப்பில் இல்லாத கால கட்டங்களில், அவசரம், அவசியம், முக்கியத்துவம் கருதி அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கும் அதிகாரம் அதிபருக்கு உள்ளது.
ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு, அரசியல் அமைப்புப்படி நிர்வாகம் நடைபெற இயலாத சூழல் எழுமானால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆணையிட்டு, தான் அல்லது தனது பிரதிநிதியான கவர்னர் மூலம் அம்மாநில ஆட்சியை நடத்தும் அதிகாரம் படைத்தவர் இவர் (பிரிவு 356).
போர், வெளிநாட்டின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை, உள்நாட்டில் ஆயுதப் புரட்சி - போன்றவற்றால் தேசம் அல்லது அதன் ஒரு பகுதியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலும் அபாயமும் ஏற்படும் சூழல் நிலவுவதாக குடியரசுத் தலைவர் கருதினால், தேசிய அவசர நிலைப்பிரகடனம் செய்யும் அதிகாரம் அவருக்கே உண்டு (பிரிவு 352).
நாட்டில் பொருளாதார அவசரநிலைப்பிரகடனம் செய்பவரும் குடியரசுத் தலைவரே (பிரிவு 360).
4. பிற அதிகாரங்கள்: ஒருவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை நிறுத்தி வைக்கவும், ரத்து செய்து கருணை காட்டவும், தண்டனையைக் குறைக்கவும் அரசியல் சட்டத்தின் 72-ஆவது பிரிவுப்படி சிறப்பு அதிகாரம் படைத்தவர் அதிபர்.
அடுத்து முக்கியமானது நாடாளுமன்றம் நிறைவேற்றும் மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பின்புதான் சட்டமாகின்றன. அமலுக்கு வருகின்றன. ஒரு மசோதாவின் நோக்கமும் அதன் விதிகளும் தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால், நாட்டு நலனுக்கு உகந்தது அல்ல எனக் கருதினால், அம்மசோதாவை திருப்பி அனுப்பலாம்; மறு பரிசீலனை செய்யுமாறு அதிபர் கேட்கலாம்.
இந்து நெறிச் சட்ட மசோதா 1950-இல் நிறைவேற்றப்பட்ட போது, இருமுறையும் திருப்பி அனுப்பி, அதற்கு ஒப்புதல் தர மறுத்தார் ராஜேந்திர பிரசாத். ஆதாயம் தரும் இரு பதவிகளை ஒருவர் ஒரே நேரத்தில் வகிப்பது தொடர்பான மசோதாவை ஏற்க மறுத்து, திருப்பி அனுப்பினார் அப்துல் கலாம். இரண்டாவது முறையும் அம் மசோதா அவருக்கு வந்தபோது, அதற்கு ஒப்புதல் அளிக்க நேர்ந்தது.
மிகவும் விமர்சனத்துக்கு உள்ளான இந்திய போஸ்டல் மசோதாவுக்கு தன் பதவிக் காலத்தில் ஒப்புதல் தருவதையே தவிர்த்து விட்டார் ஆர். வெங்கட்ராமன். அவசரநிலைப் பிரகடனப் பரிந்துரையை அப்படியே ஏற்று ஒப்புதல் வழங்கினார் பக்ருதீன் அலி அஹமது.
அரசுக்கும் அமைச்சர்களுக்கும் ஆலோசனை கூறுவதற்கும் நல்ல முடிவுகளைப் பாராட்டி ஊக்கப்படுத்துவதற்கும், தவறான முடிவு எடுப்பதாகத் தெரிந்தால் எச்சரிக்கை செய்வதற்கும் குடியரசுத் தலைவருக்கு உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றதின் ஒரு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி வெளியுறவு, பொருளாதார நிலை போன்ற பிரச்னைகளில், பிரதமர்களுக்கு தான் ஆலோசனைகளை வழங்கியதாக ஆர். வெங்கட்ராமன் தன் சுயசரிதையில் பதிவு செய்துள்ளார்.
பிகார் அரசைக் கலைத்துவிட்டு, அதிபர் ஆட்சிக்கு உட்படுத்த வேண்டும் என்ற வாஜ்பாய் அரசின் பரிந்துரையை கே.ஆர். நாராயணன் ஏற்காமல் திருப்பி அனுப்பியது மட்டுமல்லாமல், இதனை மறுபரிசீலனை செய்யுங்கள் என்ற அறிவுரையும் வழங்கினார்.
ஆகவே, ஆய்வு செய்து பார்த்தால் குடியரசுத் தலைவர் பதவியை ஓர் அலங்கார பொம்மை என்பதும், நீட்டிய இடத்தில் கையெழுத்திடும் ரப்பர் ஸ்டாம்ப் பதவி என்பதும் சரியல்ல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com