அவர்களும் ஆசிரியர்களே!

உடலும் உயிரும் ஒருசேர இயங்கும் வாழ்க்கை உலக நடைமுறை. இது எவ்வுயிர்க்கும் பொதுவானது.

உடலும் உயிரும் ஒருசேர இயங்கும் வாழ்க்கை உலக நடைமுறை. இது எவ்வுயிர்க்கும் பொதுவானது. உடலுக்கும் உயிருக்கும் இடையில் உள்ளத்தை நிலைநிறுத்தி வாழும் வாழ்க்கை மனிதத்திற்கு உரியது. மன் என்ற சொல்லை அடியாகக் கொண்டு மனமும் மனிதமும் உருக்கொள்கின்றன. இங்கே மனிதர்க்கு உருவத்தால் தோன்றும் உயரம் ஒரு பொருட்டல்ல. உள்ளத்தால் எழும் உயர்வே உண்மையான உயர்வு.
"வெள்ளத்தின் மட்டம் எவ்வளவு உயருமோ, அந்த அளவிற்கு அந்நீரில் வாழும் மலர்களின் உயரமும் அமையும். அதுபோல், உள்ளத்தின் உயரம் எவ்வளவோ, அந்த அளவிற்கு அந்த உள்ளம் உடைய மனிதரின் உயரமும் உயரும்' என்பது வள்ளுவம் காட்டும் வரையறை.
புறவளர்ச்சிக்கு நிகராகவும், அதற்கு மேலானதாகவும் அக வளர்ச்சி அவசியமானது என்பதை மனிதம் உணரத் தலைப்படத்தொடங்கியதில் இருந்து அதன் தனித்துவம் மேலோங்கத் தொடங்கியது. அது அறிவின் துணைகொள்ளத் தொடங்கியது. காலங்காலமாய்த் தன் வாழ்வியல் அனுபவத்தில் கண்ட உண்மைகளை நடைமுறைப்படுத்தித் தத்தம் வாழ்க்கையை உயர்வுபடுத்தக் கற்றுக் கொண்டது.
எது உயர்ந்தது, எது அவசியமானது, எது தவிர்க்க வேண்டியது என்றெல்லாம் கண்டு களைந்து கைக்கொண்டு வளர்ந்துகொள்ள, அனுபவம் மிக்கவரைத் துணைக் கொள்ள முயன்றது. நடைமுறை வாழ்வில் தவறுகளைத் திருத்தி நல்வழிப்படுத்திடத் துணைசெய்பவரை ஆசிரியராக அடையாளம் கண்டுகொண்டது. ஆசு என்றால் குற்றம். இரிதல் என்றால் போக்குதல். குற்றங்கள் இவையென்று அடையாளங்கண்டு, அவற்றின் வசமாகாமல் வளரும் உள்ளங்களைக் காக்கும் கடப்பாடு உடையவர்கள் ஆசிரியர்கள்.
அதாவது, நடைமுறை வாழ்வில் ஒன்றைச் செயற்படுத்திப் பார்க்கும்போது தவறுதல் இயல்பு. இது தவறு. இத்தவறு திரும்பத்திரும்பச் செய்யப்படுகிறபோது, தவறுகள் ஒருங்கு திரண்டு குற்றங்கள் ஆகிவிடுகின்றன. தவறுகள் திருத்தப்படலாம் மன்னிக்கப்படலாம். ஆனால், குற்றங்கள் தண்டனைக்குரியவை. தவறுகள் குற்றங்கள் ஆகிவிடலாகாது. அவ்வாறு ஆகாமல் காப்பவர்கள்தாம் ஆசிரியர்கள்.
எழுத்துவழி அறிவிக்கும் ஆசானைத் தமிழ்மொழி இறைவன் ஆக்கிப்பார்க்கிறது. முன்னறி தெய்வங்களாகிய அன்னையும் பிதாவும் காட்டிய நன்னெறிகள் வீட்டளவில் பயன்படும்; ஓரளவு நாட்டளவிற்கும் துணைவரும். ஆனால், ஆசிரியன் காட்டும் நன்னெறி உலகு சார்ந்தது. உலக நடைமுறைக்கேற்ற ஒழுகலாறுகளைக் கற்பித்து உயர்த்தும் உன்னதப்பணி ஆசிரியப்பணி.
அறிவின்வழி ஒவ்வொரு மனித உயிரும் தனக்குள்ள ஆற்றலை அடையாளம் கண்டு, தனக்கும் உலகுக்கும் பயன்பட வாழும் முறைமையைக் கல்வி தர வேண்டும். தனக்குப் பயன் கொள்ள வேண்டும் என்பதற்காகப் பிறவுயிர்களுக்கு இன்னல் விளைத்தல் தகாது. அது தவறுதலாகிக் குற்றங்களாகி மனித ஆன்மாவைக் கறைப்படுத்திவிடும். இந்த இடத்தில்தான் ஆசிரியன் தோன்றாத்துணையாகச் செயல்படுகிறான்.
பசுமரத்தாணிபோல் இளநெஞ்சில் ஆசிரியனால் ஊன்றப்பட்ட அறநெறிகள் நடைமுறை வாழ்வின் இலக்கணங்களாகித் துணைசெய்கிறபோது மானுடம் அறம்பிறழ்வதில்லை; உலகு தடம் மாறுவதில்லை. உயர்வை நோக்கி முன்னேகிச் செல்லும் மானுட வாழ்வு மற்ற உயிர்களினும் மேம்பட்டுச் சிறப்பது இந்த நடைமுறையால்தான்.
ஆனால், இந்த நடைமுறை ஏன் இன்னும் செழுமைப்படவில்லை? குற்றங்கள் இல்லாத மனித வாழ்க்கை ஏன் இன்னும் சாத்தியம் ஆகவில்லை என்றெல்லாம் ஆய்ந்து தெளிந்து கல்விமுறைகளில் பல்வேறு மாறுபாடுகளையும் வளர்ச்சிகளையும் செய்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். போதாமைகளுடன்தான் வளர்கிறது கல்வி.
இந்த இடத்தில்தான் ஆசிரியத்துறையின் இன்னொரு பரிமாணத் தேவையும் புலனாகத் தொடங்குகிறது.
பள்ளிக்கல்வியைப் பயிற்றுவிக்கும் ஆசானை ஆசிரியராக அறிமுகப்படுத்தும் நம்மரபு இன்னும் இருவரை ஆசிரியர்களாக நம்முன் நிலைநிறுத்துகிறது. அவர்கள் பத்திரிகை ஆசிரியர், நூலாசிரியர் ஆகியோர்.
அன்றாட நிகழ்வில் இருந்து இதழாசிரியர்களாகிய பத்திரிகை ஆசிரியர்கள் திரட்டித் தருகிற செய்திகள்தாம் பின்னர் வரலாறுகள் ஆகின்றன. வாழ்வியல் அனுபவங்களாகச் செழுமைபெறுகின்றன. குற்றங்கள் இவையென்றும் அவற்றுக்குரிய தண்டனைகள் இவையென்றும் காலதேச வர்த்தமானங்களால் கண்டுகொள்ள வேண்டிய நடைமுறை உண்மைகளை உடனுக்குடன் காட்டி, நெறிப்படுத்துகின்றன.
எல்லாச் செய்திகளும் எல்லாருக்கும் ஏதோ ஒருவழியில் பயன்படத்தான் செய்கின்றன என்பதால் இதழை நெறிப்படுத்துகிற பொறுப்பாளி ஆசிரியப்பதவிக்கு அணி செய்துவிடுகிறார். நேர்முகமாக இருந்து வகுப்பறையில் கற்பிக்கும் ஆசிரியரைப்போலன்றி, ஊடகவழியாக உணர்வுபூர்வமான உண்மைகளை எடுத்துரைத்துத் தத்தம் வாழ்வைத் தகவமைத்துக் கொள்ள இதழாசிரியர் துணைசெய்கிறார்.
வகுப்பறையில் கற்பிக்கும் ஆசியருக்கு முன்னதாக இருப்பவர்களின் எண்ணிக்கையைவிடவும், மானசீகமாக, இதழாசிரியரின் முன்னிற்போரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தது. வகுப்பாசிரியரின் இதழ்களில் இருந்து உச்சரிப்பு ஒலியலைகளாய் வெளிவரும் கருத்துக்களைவிடவும் வலிமையானவை, அச்சடிக்கப்
பெற்ற இதழ்களில் இருந்து புலனாகும் கருத்துகள்.
நச்சுத்தன்மை போக்கி நன்னெறிப்படுத்தும் எழுத்தாக அதனை ஆக்கி, இந்திய நாட்டை மேம்படுத்திய பலரும் மகாகவிகளாக, மாமேதைகளாக உலகில் நிலைகொண்டிருக்கிறார்கள். எழுதப்படுவதால் மட்டுமா அது எழுத்து? உள்ளிருந்து எழுவதாலும் அல்லவா அது எழுத்து என்று பெயர் பெறுகிறது.
இதற்கு உள்ளத்தில் இருந்து ஒளி உண்டாக வேண்டும். அது உயர்ந்ததாக இருக்க வேண்டும். அதுதான் பள்ளத்தில் இருப்போரை மேம்படுத்தி விழி தந்து பதவியிலும் அமர்த்திப்பார்க்கும் என்கிறார் பாரதி. இங்கே "வெள்ளத்தின் பெருக்கைப்போல் கவிப்பெருக்கும் கலைப்பெருக்கும் மேவவேண்டும்' என்பது அவர்தம்
கட்டளை.
"உள்ளத்தனையது உயர்வு' என்ற வள்ளுவர் வாக்கையும், "வெள்ளத்தின் பெருக்கைப்போல் கவிப்பெருக்கும் கலைப்பெருக்கும் மேவுமாயின்' என்ற பாரதியார் வாக்கையும் ஒருசேர உணர்ந்து தெளிந்தால் இப்போது துலக்கம் ஆகும் திருவுருவம் நூலாசிரியர் என்பதாகும்.
பஞ்சில் இருந்து உருவாகும் நூல் பயன்தரும் ஆடையாகப் புறவாழ்வில் மானம் காப்பதுபோல், நெஞ்சில் இருந்து உருவாகும் சிந்தனை, சொல் ஆக உருக்கொண்டு, அறமுணர்த்தும் நூலாக ஆக்கம் பெறும்போது, அகவாழ்விற்கு அணிசேர்த்து
விடுகிறது.
ஆடை செய்வதற்குமட்டும் அணிநூல் துணையாவதில்லை. நூல் இழை அளவுகூடப் பிழை நேராதிருப்பதற்காகச் சீர்மையுடன் செயல்பட, இந்தப் பஞ்சுதரு நூல் பயன்படுகிறது இல்லையா? இறுக்கி நெசவுசெய்த இழை பிரிந்தபோது இணைத்து ஒருங்கிணைக்க இந்த நூல்தானே துணை! சதுரமாகவோ செவ்வகமாகவோ மட்டும் நீள நெய்யப்படும் துணியை அணிந்துகொள்ள ஏதுவாய் எவ்வடிவிலும் உருப்படுத்திக் கொள்ள உதவுவது இந்த நூல் தான். மணம் வீசிய மலர்களை ஒருசேரத்தொடுத்து மாலையாக்க உதவுவதும் இதுதானே.
கட்டடப்பணி செய்யும் கொத்தனார், தான் எழுப்பிவரும் கட்டடச் சுவர் வளையாமல் நெளியாமல் சரியாக இருக்கிô என்பதற்கும் நூல் இட்டுப் பார்ப்பது உண்டு. இந்த இடத்தில் தான் நன்னூல் ஆசிரியர் நுண்ணியதாக ஓர் உண்மையை உணர்த்துகிறார், "மனக்கோட்டம் தீர்க்கும் நூல் மாண்பு' என்று.
மனம் கோடி (வளைந்து) விட்டால் குற்றம் நேர்ந்துவிட்டது என்று பொருள். "ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி' என்று வள்ளுவர் உணர்த்துகிறாரே. கோவலனுக்கு அளித்த தண்டனையால், வளையாத செங்கோல் வளைந்தது. அதனை நிமிர்த்த தன் இன்னுயிர் அளித்தான் பாண்டியன் என்று பாடியதன்மூலம் நேரிய உண்மையை நெறியெனக் காட்டுகிறாரே இளங்கோவடிகள்.
இப்படி எண்ணிலா இலக்கியவாதிகள் எழுதித்தந்த நுண்ணிய நூல்களால் மனவளர்ச்சி பெற்ற மனிதர்கள் எத்தனையோ பேர். அவற்றால் மாண்புற்ற மாந்தர்களின் வரலாறுகளும் தனித்துவமிக்க நூல்களாகத் தரணியில் வெளிவந்திருக்கின்றனவே.
வகுப்பறைக்குள் நுழையமுடியாதவர்களையும் நுண்மாண் நுழைபுலம் உடையவர்களாய் ஆக்கி உயர்த்தியவர்கள் இத்தகைய இதழாசிரியர்களும் நூலாசிரியர்களும். இன்னும் சொல்லப்போனால், வகுப்பறையில் கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கும் இன்துணையாகிறவர்கள் இவ்விரு ஆசிரியர்களும் என்பதில் மறுப்பிருக்க முடியாது அல்லவா?
பள்ளி ஆசிரியராகப் பணி தொடங்கிப் பத்திரிகை ஆசிரியராகப் பரிணமித்து நூலாசிரியராகவும் உயர்ந்த பாரதி வாழ்வில் இந்த ஆசிரியப்பரிமாணங்கள் அதிசயமாக அமைந்து நேரிய உண்மை ஒன்றை இங்கே நிலைபெற உணர்த்துகின்றது. அது இதுதான்.
வகுப்பறைகளுக்கு வெளியே வாழ்க்கைக் கல்வியைக் கற்றுக் கொடுக்கும்
இதழாசிரியர்களையும், நூலாசிரியர்
களையும் பெற்ற சமூகம் பெரிதும் உயரும். அதற்குப் பள்ளிப் பருவத்திலேயே பயிற்சி அளிக்க வேண்டியது இன்றியமையாத் தேவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com