பச்சையப்பர் பெயரால் பல்கலைக்கழகம்

கல்விக்காக அறக்கொடை நிறுவிய முதல் இந்தியர் பச்சையப்பரே. அவருக்குப்பின் அவர் காட்டிய வழியில் பலரும் கல்விக்காகப் பெருஞ்செல்வம் கொடையளிக்க முற்பட்டனர்.

கல்விக்காக அறக்கொடை நிறுவிய முதல் இந்தியர் பச்சையப்பரே. அவருக்குப்பின் அவர் காட்டிய வழியில் பலரும் கல்விக்காகப் பெருஞ்செல்வம் கொடையளிக்க முற்பட்டனர். பச்சையப்பர் ஆழ்ந்த தெய்வ நம்பிக்கையும், கல்வியில் பெரும் பற்றும், வாணிகத்தில் பெரும் வன்மையும் பெற்றிருந்தார்.
"தமக்குக் கிடைத்த செல்வமனைத்தும் கடவுளால் கொடுக்கப்பட்டதென்று எண்ணி அச்செல்வமனைத்தும் கடவுளுக்காகவும் கல்விக்காகவும் செலவிடப்படவேண்டுமென்று விரும்பிய பச்சையப்பரின் உயர்ந்த எண்ணம் போற்றுதற்கும் பிறரால் பின்பற்றுதற்குமுரியதாகும்' என குடியரசுத் தலைவராக இருந்த முனைவர் எஸ். இராதாகிருஷ்ணன் 5-1-1963-இல் சென்னை பச்சையப்பர் கல்லூரியில் வள்ளல் பச்சையப்பரின் உருவச்சிலையைத் திறந்து வைத்தபோது கூறினார்.
வள்ளல் பச்சையப்பர் அளித்த பெருநிதியை நிருவகிக்க அறக்கட்டளை ஒன்று ஏற்படுத்தப்பட்டது. விலைமதிக்க முடியாத 32க்கும் மேற்பட்ட சொத்துகள் அந்த அறக்கட்டளைக்கு சொந்தமானவை.
சென்னை பந்தர் தெரு, பத்திரியன் தெரு, தாயார் சாகிப் தெரு ஆகியவற்றில் உள்ள கட்டடங்கள் அனைத்தும் அறக்கட்டளைக்குச் சொந்தமானவை. திருவொற்றியூர் நெடுஞ்சாலையிலும் மாதவரம் நெடுஞ்சாலையிலும் பல நூறு கோடி ரூபாய் பெறுமான நிலமும் கட்டடங்களும் உள்ளன.
அண்ணா சாலையிலும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையிலும் விலை மதிப்புமிக்க கட்டடங்கள் உள்ளன. காஞ்சிபுரம், கும்பகோணம், சிதம்பரம் ஆகிய நகரங்களில் கட்டடங்களும், நிலங்களும் உள்ளன. திருவையாறு, திருவாரூர், திருவாவடுதுறை ஆகிய ஊர்களில் சத்திரங்கள் உள்ளன.
சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி 36 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தில் அமைந்துள்ளது. இங்கு ஒரு சென்ட் நிலத்தின் விலை தற்போது ரூ.1 கோடியாகும். மொத்த நிலத்தின் விலை ரூ.3,600 கோடியாகும். இது தவிர கல்லூரிக் கட்டடங்கள் உள்ளன. இதைப் போல மற்ற ஐந்து கல்லூரிகளும் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் பெறுமான சொத்துகளுடன் அமைந்துள்ளன.
கந்தசாமி நாயுடு, மயிலை செல்லம்மாள் போன்ற ஈகை உள்ளம் படைத்த பலரும் தமது திரண்ட செல்வத்தை பச்சையப்பர் அறக்கட்டளைக்கு அளித்துள்ளனர்.
வள்ளல் பச்சையப்பர் அளித்த பெருங்கொடையின் உதவியால் ஏழு மேல் நிலைப் பள்ளிகளும் ஆறு கலை-அறிவியல் கல்லூரிகளும் உருவாக்கப்பட்டன. இதில் மூன்று கல்லூரிகள் மகளிர் கல்லூரிகளாகும். ஒவ்வொரு கல்லூரியிலும் மாலை நேர வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. ஆறு கல்லூரிகளிலும் சுமார் 15 ஆயிரம் மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.
இந்த அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்துகளையும், கல்லூரிகள், பள்ளிகள் ஆகியவற்றையும் நிருவகிக்க அறங்காவலர்கள் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் 12-2-1909ஆம் ஆண்டில் இதற்கானத் திட்டத்தை வகுத்தளித்தது. 19-7-1920 மற்றும் 14-12-1920 ஆகிய ஆண்டுகளில் உயர்நீதிமன்றம் இத்திட்டத்தில் சில மாறுதல்களை செய்தது.
அறக்கட்டளைக்குச் சொந்தமான கல்லூரிகளில் படித்துப் பட்டம் பெற்ற பட்டதாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுபவர், அறக்கட்டளைக்குச் சொந்தமான கல்லூரி ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர், அறக்கட்டளை கல்லூரிகளின் முதல்வர்கள், துறை தலைவர்கள், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ஆகியோரைக் கொண்ட கல்லூரி குழுவினால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிக்குழுவினால் தேர்ந்தெடுக்கப்படுபவர், சென்னை மாநகராட்சியினால் தேர்ந்தெடுக்கப்படுபவர் என இப்படி பலவகையிலும் ஒன்பது அறங்காவலர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டு காலமாகும்.
அறக்கட்டளை அமைக்கப்பட்டதிலிருந்து கடந்த 108 ஆண்டுகளாக இதுவரை அறங்காவலராக பெண்மணி ஒருவர்கூட நியமிக்கப்படவில்லை.
ஏழை மாணவ-மாணவிகள் கல்வி கற்று சமுதாயத்தில் உயரவேண்டும் என்பதற்காக தனது பெரும் செல்வத்தை வள்ளல் பச்சையப்பர் அளித்தார். ஆனால், பச்சையப்பர் அறக்கட்டளைக் கல்லூரிகளில் இன்று நிலவும் நிலைமையைப் பார்த்தால் பச்சையப்பரின் ஆவி பதறித் துடிக்கும்.
ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் சேரவே இயலாது. பெரும்பாலும் பணம் கொடுக்கும் மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படும் அவல நிலை, ஆசிரியர்கள் நியமனத்திற்குப் பணம், குறைந்த ஊதியமாக ரூ.10,000/- பெறும் இடைக்கால ஆசிரியர்கள் நியமனத்திற்கும் பணம் வாங்கப்படுகிறது.
5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை இடைக்கால ஆசிரியர்களாகவே பணியாற்றுபவர்கள் நிரந்தரம் செய்யப்படுவதில்லை. காலியாகும் ஆசிரியர் பணியிடங்களுக்கு அவர்கள் நியமிக்கப்பட வேண்டுமானால் மீண்டும் பணம் கொடுத்தே பெறவேண்டும். முறையான பதவி உயர்வுக்கும் பணம் கொடுத்தே ஆகவேண்டும். இவ்வாறு பணம் கொடுப்பவர்கள் மட்டுமே ஆசிரியராக நியமிக்கப்படுவார்கள்.
ஆராய்ச்சிப்பட்டம் மற்றும் கல்வித் தகுதி உள்ள பலருக்கு வேலை கிடைக்கவில்லை. இலட்சக் கணக்கில் பணம் தருபவர்களுக்கு மட்டுமே பணிகள் வழங்கப்படுகின்றன.
சொத்துகளின் நிருவாகத்தில் ஊழல், கல்லூரிகளில் கட்டடங்கள் கட்டுவதில் ஊழல் என அறக்கட்டளைச் சொத்துகள் சூறையாடப்படுகின்றன. பல ஆண்டு காலமாக இத்தகைய முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன.
1976 - ஆம் ஆண்டில் பச்சையப்பர் அறக்கட்டளை நிருவாகத்தில் உள்ள கல்லூரிகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து அப்போதைய ஆளுநரின் ஆலோசகர் ஆர்.வி. சுப்பிரமணியத்திடம் நேரடியாகப் புகார் ஒன்றினை ஆதாரங்களுடன் அளித்தேன். அது குறித்து அவர் விசாரணை நடத்தி அவை யாவும் உண்மை என்பதைக் கண்டறிந்தார்.
தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என அஞ்சிய அப்போதைய அறக்கட்டளை உறுப்பினர்கள் பதவி விலகி வெளியேறினர். பிறகு உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர். சதாசிவம் தலைமையில் மணலி இராமகிருஷ்ண முதலியார், டி.எம்.பி. மகாதேவன், ஜி.ஆர். தாமோதரன், எம்.ஏ.எம். இராமசாமி, ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட அறங்காவலர்கள் குழு அமைக்கப்பட்டது. இக்குழு நிருவாகத்தைச் செம்மையாக்கிற்று.
36 ஆண்டுகளுக்குப் பிறகு 2012 - ஆம் ஆண்டு செப்டம்பரில் பச்சையப்பர் அறக்கட்டளையைச் சேர்ந்த ஆறு கல்லூரிகளின் ஆசிரியர்களும் கூடி அறங்காவலர் குழுவை உடனடியாகக் கலைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றதிற்கு வேண்டுகோள் விடுத்தனர்.
அறங்காவலர் குழுவின் நிருவாகத்தில் ஊழல் மலிந்துவிட்டதாகவும் அதனுடைய சொத்துகள் சூறையாடப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். எனவே உடனடியாக உயர்நீதிமன்றம் தலையிட்டு நேர்மையான நிருவாக அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என வற்புறுத்தினர். பச்சையப்பர் அறக்கட்டளையையும் அதற்கான விதிமுறைகளையும் உயர்நீதிமன்றமே வகுத்தக் காரணத்தினால் அத்தகு வேண்டுகோள் விடுத்தனர்.
அதற்குப் பின்னர் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறங்காவலர் குழுவை கலைத்துவிட்டு முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என். சேஷனை சிறப்பதிகாரியாக நியமித்தார். நிருவாகத்தை அவர் ஒரு ஒழுங்கிற்குள் கொண்டு வந்தார். ஆனாலும், சில மாதங்களில் அவர் பதவி விலக நேர்ந்தது.
அதற்குப் பின்னால் அறக்கட்டளை நிருவாகத்தில் மீண்டும் ஊழலும் முறைகேடுகளும் தாண்டவமாடி வருகின்றன.
அண்ணாமலை அரசர் அளித்த பெருங்கொடையால் உருவான அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிருவாக ஊழல் மலிந்தபோது தமிழக அரசு தலையிட்டு அதன் நிருவாகத்தை தன்வசம் எடுத்துக்கொண்டு சீர்திருத்தி வருகிறது. இதை முன்மாதிரியாகக் கொண்டு பச்சையப்பர் அறக்கட்டளையின் நிருவாகத்தையும் அரசே மேற்கொள்ள வேண்டும்.
ஆறு கல்லூரிகளையும் ஏழு உயர்நிலைப் பள்ளிகளையும் பராமரிப்பதற்காக வள்ளல் பச்சையப்பர் அளித்த பல்லாயிரம் கோடி ரூபாய் பெறுமான சொத்துகள் முறையாகவும் நேர்மையாகவும் நிருவாகிக்கப்பட வேண்டும். இவ்வளவு திரண்ட சொத்துகள் இருப்பதால் அவற்றைக் கொண்டு வள்ளல் பச்சையப்பர் பெயரால் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைக்கவேண்டும்.
அதற்குத் தேவையான நிதி ஆதாரம் பச்சையப்பர் அறக்கட்டளையிடம் உள்ளது. ஆறு சிறந்த கல்லூரிகள் அதன் கட்டுப்பாட்டில் உள்ளன.
இவற்றை இணைத்துத் தனியான ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்குவது மிக எளிதான செயலாகும். இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
வள்ளல் பச்சையப்பர் எத்தகைய உயர்ந்த நோக்கத்திற்காக தான் திரட்டிய செல்வம் அத்தனையும் அளித்தாரோ அந்த நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டும்.

கட்டுரையாளர்: தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com