அந்த நெருக்கடிநிலை நாள்கள்...

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் சுயசரிதையை எழுதியவரான புபுல் ஜெயகர், நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட 1975 ஜூன் 25-இல் நிலவிய பதற்றான சூழலைத் தனது நூலில் பதிவு செய்திருக்கிறார்.

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் சுயசரிதையை எழுதியவரான புபுல் ஜெயகர், நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட 1975 ஜூன் 25-இல் நிலவிய பதற்றான சூழலைத் தனது நூலில் பதிவு செய்திருக்கிறார். அவரது நூலிலிருந்து..
அப்போது அதிகாலை 3 மணி இருக்கும். தனது உரைக்கான அறிக்கையை இறுதி செய்துவிட்டு இந்திரா காந்தி தனது அறைக்குச் சென்றார். அப்போது அங்கிருந்த சித்தார்த்த சங்கர் ராய் (அப்போதைய மேற்கு வங்க முதல்வர்), தாழ்வாரத்தில் சோகமாக நடந்துவந்த நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் ஓம் மேத்தாவைக் கண்டார்.
அவருடன் பேசியபோது, "நாளை காலை அனைத்து பத்திரிகை அலுவலகங்களுக்கும் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது. நாளை எந்தப் பத்திரிகையும் வெளிவராமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது' என்றார்.
இதைக் கேட்டவுடன் ராய் அதிர்ச்சி அடைந்தார். "இது பிரதமரின் கருத்து அல்லவே. இது அபத்தமாக இருக்கிறதே' என்றார். ஆனால், ஓம் மேத்தா தனது தகவலை உறுதிப்படுத்தினார். அது மட்டுமல்ல, "நாளை உயர்நீதிமன்றங்களும் பூட்டப்பட உள்ளன' என்றார். அதனால் திகைப்படைந்த ராய், உடனே பிரதமரிடம் இதுகுறித்து கேட்பதாகக் கூறிச் சென்றார்.
பிரதமரின் உதவியாளர்களோ, அம்மையார் உறக்கத்தில் இருப்பதாகவும், அவரை தொந்தரவு செய்யக் கூடாது என்றும் தடுத்தனர். அப்போது அங்கு வந்த பிரதமரின் இளைய மகன் சஞ்சய் காந்தி, ""இந்த நாட்டை எப்படி ஆள்வது என்றே உங்கள் யாருக்கும் தெரியவில்லை'' என்று கடிந்துகொண்டார். இந்திரா காந்தி வரும் சப்தம் கேட்டவுடன் அங்கிருந்து அவர் கிளம்பிவிட்டார்.
இந்திரா காந்தி வந்தவுடன், அவரிடம் ஓம் மேத்தா சொன்ன தகவலைக் கூறினார். உடனே சில நிமிடங்கள் காத்திருக்குமாறு சொல்லிவிட்டு தனது அறைக்குள் சென்றார் அவர். இருபது நிமிடங்கள் கழித்து இந்திரா காந்தி திரும்பியபோது, அவரது கண்கள் அழுததால் சிவந்திருந்தன. நடக்கக் கூடாத ஏதோ நடந்துவிட்டது ராய்க்குப் புரிந்தது. ""சித்தார்த்தா, பத்திரிகைகளுக்கு நாளை மின்சாரம் துண்டிக்கப்படாது. அதேபோல, உயர் நீதிமன்றங்களும் நாளை இயங்கும்'' என்றார் அவர்.
மறுநாள் காலையில் அனைத்து உயர் நீதிமன்றங்களும் இயங்கின. ஆனால், பல பத்திரிகைகளுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை. "ஸ்டேட்ஸ்மேன்', "ஹிந்துஸ்தான் டைம்ஸ்' ஆகிய பத்திரிகைகள் மட்டுமே முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டதால் வெளிவந்தன.
ருக்கடி நிலைக் காலத்தில் அப்பாவிகள் பலர் எந்தக் காரணமுமின்றி பல மாதங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அப்போது ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராக திரிபாதி இருந்தார். இந்திரா காந்தியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அவர் பல்கலைக்கழக வகுப்புகளைப் புறக்கணிக்குமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அதே பல்கலைக்கழகத்தில்தான் பிரதமரின் மருமகள் மேனகா காந்தியும் படித்து வந்தார். மேனகா பல்கலைக்கழகத்துக்கு வந்தபோது, வகுப்புகளைப் புறக்கணிக்குமாறு திரிபாதி பிரசாரம் செய்வதைக் கண்டார். உடனே தகவல் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சென்றது.
இந்திரா காந்தியின் வீட்டில் ஆலோசனை நடந்தது. அப்போது, உடனடியாக திரிபாதியை கைது செய்து மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கத் தீர்மானிக்கப்பட்டது. அந்தப் பணியை நிறைவேற்ற முன்வந்தார், தில்லி காவல் துறை டி.ஐ.ஜி.யாக இருந்த பி.எஸ்.பிந்தர்.
பல்கலைக்கழகத்துக்கு காவலர்களை அனுப்பினார் பிந்தர். அவர்கள் அங்கு சென்று திரிபாதியைத் தேடினர். அப்போது யாரோ சொன்னதைக் கேட்டு பிரபீர் என்ற வேறொரு மாணவரை போலீஸார் கைது செய்துவிட்டனர். தான் திரிபாதி அல்ல என்று அவர் எவ்வளவோ கெஞ்சியும் விளக்கியும் பிந்தர் காதில் விழவில்லை.
மிசா சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார் அவர். தனக்கு அளிக்கப்பட்ட பணியை சிறப்பாக நிறைவேற்றிவிட்டதாக பிரதமருக்கு தகவலும் அளித்துவிட்டார் டி.ஐ.ஜி. பிந்தர்.
இந்தத் தவறு சில மாதங்கள் கழித்துத் தான் போலீஸாருக்குத் தெரியவந்தது.
சில மாதங்கள் கழித்து, உண்மையான திரிபாதி கைது செய்யப்பட்டார். அப்போதும், தில்லி போலீஸார் தங்கள் தவறைத் திருத்திக்கொள்ள தயாராக இல்லை. பிரபீர் வெளிவந்தால் அவர்களின் குட்டு வெளிப்பட்டுவிடுமே!
பிறகு, பிரபீர் மீது புதிய வழக்கு ஜோடிக்கப்பட்டது. ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களைப் போராடத் தூண்டியதாக பிரபீர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 1975, செப்டம்பர் 25}இல் மிசா சட்டத்தின் கீழ், மாவட்ட நீதிபதி பி.கோஷின் உத்தரவுப்படி பிரபீர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் கூறினர்.
ருக்கடி நிலைக் காலத்தில் அரசின் முதன்மை தகவல் அலுவலராக இருந்த ஏ.ஆர்.பாஜி, பத்திரிகைகளை தர நிர்ணயம் செய்ததற்கான ஆவணத்தை, பின்னாளில் ஷா ஆணையம் கண்டறிந்தது. அவரது மதிப்பீட்டின்படி, பத்திரிகைகள் ஒன்பது வகைப்பாடுகளில் தரநிர்ணயம் செய்யப்பட்டிருந்தன. அவை வருமாறு:
ஏ (நட்பானது), ஏ+ (முழுமையான ஆதரவு), ஏ} (நட்பானது எனினும் கண்காணிப்புக்கு உரியது), பி (பகைமை பாரட்டுவது), பி+ (தொடர்ந்து எதிர்ப்பது), பி} (முன்னரை விட எதிர்ப்பு குறைந்துள்ளது), சி (நடுநிலைமையானது), சி+ (நடுநிலையிலிருந்து ஆதரவாக மாறுகிறது), சி} (நடுநிலையிலிருந்து எதிரியாக மாறுகிறது).
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (ஆங்கிலம்), கன்னட பிரபா (கன்னடம்), சந்தேஷ் (குஜராத்தி), தைனிக் அசோம் (அசாமி) ஆகியவை தொடர்ந்து பி+ வகைப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தன. சி, சி} வகைப்பாடுகளில் குஜராத் சமாச்சார் (குஜராத்தி), ராஜஸ்தான் பத்திரிகா (ஹிந்தி), பிரஜாவாணி (கன்னடம்), தி பயனீர் (ஆங்கிலம்), ஆந்திர பூமி (தெலுங்கு) ஆகி பத்திரிகைகள் இடம் பெற்றிருந்தன.
ந்திய அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ உள்ளதை முன்கூட்டியே கணித்தவர்களும் இருந்தனர். அவர்களுள் ஒருவர், பிரதமர் அலுவலக அதிகாரியாக இருந்த பி.என்.தாண்டன். அவர் தனது நாட்குறிப்பேட்டில் 1974, டிசம்பர் 12}இல் இவ்வாறு எழுதி இருக்கிறார்:
நாட்டில் மெல்ல நெருக்கடி வளர்ந்து வருகிறது. இது பின்னால் வரும் தீமையை உணர்த்துவதாகவே நான் அனுமானிக்கிறேன். பல விஷயங்களில் அரசு தொடர்ந்து திணறுகிறது. இந்த நிலையில் மாற்றம் இல்லாவிட்டால் நெருக்கடி முற்றும்.
அரசில் அவரது (பிரதமரின்) ஆதிக்கம் பூதாகரமாகப் பெருகி வருகிறது. ஜெயபிரகாஷ் நாராயணனும் மொரார்ஜி தேசாயும் வேறு பல விஷயங்களில் தவறிழைத்திருக்கலாம். ஆனால், அவரது (இந்திராவின்) சர்வாதிகாரதன்மையையும் ஃபாசிஸத் தன்மையையும் அவர்கள் முன்கூட்டியே உணர்ந்து எச்சரித்தனர். அது பிழையானதல்ல.
ருக்கடி நிலையின்போது பத்திரிகைகள் சில அரசுக்கு எதிராக மறைமுகமாக செயல்பட்டன. எனவே, அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்தது. அதில் ஒன்று, அரசு தலைமை தணிக்கையாளராக ஹெச்.ஜே.டி.பென்ஹா நியமிக்கப்பட்டதாகும்.
அவருக்கு தணிக்கை விதிமுறைகள் அப்போதைய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்த வி.சி.சுக்லாவால் வடிவமைக்கப்பட்டு அனுப்பப்பட்டது. அவை, அரசியல் சாசன விதி}48}ஐ அப்பட்டமாக மீறுபவை.
அந்த விதிகள், பத்திரிகைகளின் ஆசிரியர்கள் தலையங்கப்பக்கத்தில் காலியிடம் விடுவதை தடை செய்தன. அதுவரை, எதேச்சதிகாரத்துக்கும் செய்தித் தணிக்கைக்கும் எதிர்ப்பு தெரிவித்து முதுகெலும்புள்ள சில பத்திரிகை ஆசிரியர்கள் தங்கள் பத்திரிகைகளில் தலையங்கம் இடம்பெறும் இடத்தை காலியாக விட்டு, அரசின் அராஜகத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
அதையும் சில பத்திரிகை ஆசிரியர்கள் சமயோசிதமாகக் கையாண்டனர். மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர் போன்ற தேசியத் தலைவர்களின் பொன்மொழிகளை தலையங்க இடத்தில் வெளியிட்டனர் சில ஆசிரியர்கள். அவை ஜனநாயகம், பேச்சு சுதந்திரம் ஆகிய உன்னத உரிமைகள் குறித்தனவாகவும் இருந்தன.
உடனடியாக, அரசு தனது விதிமுறைகளை மீண்டும் திருத்தியது. இத்தகைய பொன்மொழிகள், பத்திரிகைகளின் தலையங்க இடத்தில் இடம் பெறக் கூடாது என்றது புதிய திருத்தம்!
ஆனாலும் கூட, உரிமைப் போராளிகள் தளரவில்லை. மும்பையிலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில் ஜனநாயக விரும்பி ஒருவர் மறைமுகமாக அளித்திருந்த "காலமானார்' விளம்பரம், ஜனநாயகம் சாகாது என்பதை நிலைநாட்டியது. ஆங்கிலத்தில் பூடகமாக வெளியிடப்பட்ட அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த விஷயம் இதுதான்:
நம்பிக்கை, விசுவாசம், நீதி ஆகியவற்றின் சகோதரரும், சுதந்திரத்தின் அன்புக்குரிய தந்தையும், உண்மையின் அன்புக்குரிய கணவருமான ஜனநாயகம் 1975 ஜூன் 26-இல் காலமானார்.
(மூத்த பத்திரிகையாளரும் பிரஸார் பாரதி தலைவருமான ஏ. சூரியபிரகாஷ், நாட்டை உலுக்கிய நெருக்கடி நிலையின் நினைவலைகளை தனது 'Emergency - The Indian Democracy's Darkest Hour' என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார். விரைவில் வெளிவர உள்ள அந்நூலின் சில பகுதிகள் இங்கே வழங்கப்பட்டிருக்கிறது.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com