உலகம் உய்ய வழி காண்போம்!

இங்கிலாந்தில் உருப்பெற்ற தொழில்புரட்சியின் பின்விளைவுகளை கண்முன் நிறுத்துவதற்கு முன்பாக, உலகில் அரேபிய அகிலம் கடல் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தது.

இங்கிலாந்தில் உருப்பெற்ற தொழில்புரட்சியின் பின்விளைவுகளை கண்முன் நிறுத்துவதற்கு முன்பாக, உலகில் அரேபிய அகிலம் கடல் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தது.
குறிப்பாக, இந்து மகா சமுத்திரத்தின் கடற்கரை நகரங்களில்  -  எகிப்து, கிழக்கு ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இந்தியா, பர்மா, ஸ்ரீலங்கா, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் இஸ்லாமியர்கள் காலூன்றியிருந்தாலும், அரேபியர்களின் கடல் வணிகத்தை டச்சுக்காரர்கள் முறியடித்தனர். படிப்படியாக கிழக்கிந்தியக் கம்பெனிக்காரர்களான பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு ஆதிக்கமும் தலைதூக்கியது.
கடல்வழி அந்நிய வர்த்தக வரலாற்றில், மான்ஹாட்டன் (நியூயார்க்கை ஒட்டிய தீவு) டச்சு வசம் இருந்தது. பிரிட்டிஷார் இந்தோனேசியாவை டச்சுக்காரர்களுக்கு விட்டுக்கொடுத்து மான்ஹாட்டனைப் பிடித்துக்கொண்டு அமெரிக்காவுடன், பசிபிக் தீவு வழியே சீனா, ஜப்பான் வர்த்தகத்தைப் பிடித்தனர்.
உலக வர்த்தகத்தை இவ்வாறு விரிவுபடுத்திய காலகட்டத்தில் இங்கிலாந்து தொழில்புரட்சி பிரிட்டனை வல்லரசாக்கியது. இங்கிலாந்தைத் தொடர்ந்து எல்லா ஐரோப்பிய நாடுகளும் தங்கள் தொழில்  -  வணிக பலத்தால் ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா, கிழக்காசியா, சீனா போன்ற நாடுகளைக் காலனி ஆதிக்கம் மூலம் அடிமைப்படுத்தின. தொழிலில் முன்னேறிய ஜெர்மனிக்கு புதிய காலனிகள் கிடைக்கவில்லை.
ஆப்பிரிக்க நாட்டைக் கூறுபோட ஐரோப்பிய நாடுகளிடையே போட்டி. டுனிசியாவை ஆக்கிரமிக்க பிரான்ஸýம், இத்தாலியும் சண்டையிட்டன. எகிப்தையும் சூடானையும் ஆக்கிரமிக்க இங்கிலாந்தும் பிரான்ஸýம் சண்டையிட்டன. மொராக்கோவைக் கைப்பற்ற ஜெர்மனியும் இங்கிலாந்தும் சண்டையிட்டன.
இப்படிப்பட்ட சண்டைகளினால் இரு கூட்டணிகள் உருப்பெற்றன. முதல் கூட்டணி ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ். இரண்டாவது கூட்டணி ஜெர்மனி, ஆஸ்திரியா, துருக்கி. விளைந்தது முதல் உலகப்போர். காலனி ஆதிக்கத்தில் நிகழ்ந்த போட்டாப் போட்டியில் ஆயுத உற்பத்தியுடன் குறுகிய தேசப்பற்றும் உரம் பெற்றது. குறுகிய தேசப்பற்று காரணமாக ஒவ்வோர் ஐரோப்பிய நாடும் அடுத்த நாட்டைப் பரிகசித்தது.
இதன் விளைவு நாசிசம், ஸ்லாவிசம். ஜெர்மனியின் நாசிசத்தின் பொருள், தாமே உண்மையான ஆரியர்கள் என்றும், ஆளப்பிறந்தவர்கள் என்றும், ஆரியரல்லா மொழி பேசும் செமிடிக்குகளை  -  அதாவது யூதர்களை ஒழிக்க திட்டமிடுவது. ரஷியாவிலும், சோவியத் நாடுகளிலும் ஸ்லாவிசம் என்ற விஷ உணர்வு பரவியது.
ஆரிய மொழிக் கூட்டத்தில் ஜெர்மனி, ஆங்கிலம், பிரெஞ்சுடன் ரஷிய மொழியும் அடக்கம். ரஷியாவிலும் யூதர்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்டது. ரஷியாவில் வாழ்ந்த யூதர்களுக்கு நிலமோ, கட்டடம் போன்ற சொத்துகளோ வாங்க உரிமையில்லை.
ஒரு பிரெஞ்சுப் புரட்சியாலும், ஒரு ரஷியப் புரட்சியாலும் முடியாட்சிகள் வெல்லப்பட்டனவே தவிர, நிறம், இனம், மொழி அடிப்படையில் எழுந்த குறுகிய தேசப்பற்று வெல்லவில்லை. ஒவ்வொரு நாட்டிலும் தங்கள் நாட்டுக் கொடி பறக்க வேண்டுமென்ற நாடு பிடிக்கும் வேட்கைக்கு இந்த குறுகிய தேசப்பற்று தேவையாயிருந்தது. இருப்பினும் ஜெர்மனியின் நாசிசமே மேலோங்கியிருந்தது.
நாடு பிடிக்கும் வேட்கையில் இரண்டு உலகப்போர்கள் மூண்டு அடங்கின. முதல் உலகப்போரில் அமெரிக்கா பங்கேற்கவில்லை. இரண்டாவது உலகப்போர் அமெரிக்காவால் முடிவுக்கு வந்தது. ஹிட்லரிடமிருந்து மீட்ட நாடுகளை ரஷியா அரவணைத்து உருப்பெற்ற சோவியத் யூனியன் அமெரிக்க எழுச்சிக்கு முட்டுக்கட்டை போட்டதுடன், நீயா  -  நானா என்று இரு வல்லரசுகளும் பனிப்போர் நிகழ்த்தின. எனினும் முதல் இரண்டு உலகப் போர்களிலும் ஏறத்தாழ 10 கோடி மக்கள் பலியாயினர்.
ஒவ்வொரு நாடும் இனி சண்டை வேண்டாம், சமாதானமாகவே வாழ்வோம் என்ற நல்லெண்ண அடிப்படையில் உலகப்போருக்குப் பின் உருவான "லீக் ஆஃப் நேஷன்ஸ்' செயலிழந்தாலும், இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த சூட்டோடு 1945 - இல் நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்டு யு.என்.ஓ. என்ற ஐக்கிய நாடுகளின் சபை உருவானது.
உலகப்போர்களுக்குக் காரணமான நாசிசம், பாசிசம், தேசிசம், கம்யூனிசம், கேபிட்டலிசம் எல்லாவற்றையும் உண்டியலில் போட்டுக் குலுக்கி இனி வேண்டுவதெல்லாம் மகாத்மா காந்தி கற்பித்த அமைதியிசமே என்ற முடிவுடன் 185 நாடுகள் கையொப்பம் இட்டதிலிருந்து சீரும் சிறப்புமாக ஐ.நா. சபை வளர்ந்து வருகிறது.
உலக சமாதான நல்லுறவுடன், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய குறிக்கோளுடன் ஏழைநாடுகளை மேலே உயர்த்த வேண்டும் என்ற நல்லெண்ண அடிப்படையில் உணவு, விவசாயம், கல்வி, மருத்துவம், சுகாதாரம், சுற்றுச்சூழல் என ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக கிளை அமைப்புகளையும் உருவாக்கி ஏழை நாடுகளை வளர்ச்சியுறச் செய்யும் ஆக்கப் பணிகளையும் செய்து வருகிறது.
இவற்றில் முக்கியமாக ஐ.நா.வில் சுற்றுச்சூழல் அமைப்பு நிகழ்த்தும் வருடாந்திர புவி மகாநாட்டுத் தீர்மானங்கள் சிறப்பானவை. உலகம் அழிய இரண்டு காரணிகள் உள்ளன. முதலாவதாக, புவி வெப்பமாகும் இயற்கை நியதிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும்போது வடதுருவம், தென்துருவம் தாங்கி நிற்கும் பனிமலைகள் உருகி ஏற்படக்
கூடிய பிரளயம் யுகச்சுழற்சியின் முடிவுக்கு வழி வகுத்துவிடலாம்.
இரண்டாவது காரணி அணுஆயுத உடன்படிக்கை எல்லை மீறி ஒரு அற்ப காரணத்திற்காக மூன்றாவது உலகப்போர் ஏற்படுமானால், பாதுகாப்புக்காக உலகநாடுகளிடம் உள்ள அணுஆயுதங்கள் மனித குலத்தையே புல்பூண்டுகூட முளைக்க முடியாதபடி அழித்துவிடும்.
ஐ.நா. சாராத சில உலக அமைப்புகள் பொருளாதார வளர்ச்சிக்கு ஏழை நாடுகளுக்கு உதவுகின்றன. முதலாவது உலக வங்கி. குறிப்பாக, இந்தியா போன்ற வளரும் நாடுகளின் அடித்தளக் கட்டமைப்பு வசதிகளுக்கு வழங்கப்பட்ட முதலீடுகள் உலக வங்கியின் உபயம். இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள், புதிய நகர்ப்புற வசதிகள், வீட்டு வசதிகள் ஆகிவை அடித்தளக் கட்டமைப்புத் துறைக்கானவை.
அடுத்து ஐ.எம்.எஃப். என்ற அனைத்துலக நாணயச் சந்தை நிதியம். ஏற்றுமதி  -  இறக்குமதி வியாபாரத்தில் டாலர் இருப்பு பூஜ்ஜியமாகி, நாடு திவால் ஆகாமல் பாதுகாக்கும் இந்த அமைப்பு அந்நியச் செலாவணியாக கடன் வழங்கி வர்த்தகச் சமன்பாட்டுக்கு உதவுகிறது. மூன்றாவதாக, உலக வர்த்தக அமைப்பு.
1948 - இல் உருவான "காட்' ஒப்பந்தம், அயல் வர்த்தகம், இறக்குமதி வரி தொடர்பான பொது உடன்படிக்கை 1994 - இல் உலக வர்த்தக அமைப்பாக மாறியது. அதுவரை இருநாட்டு ஒப்பந்தமே (ஆஐ கஅபஉதஅகஐநங) செயல்பட்டது. வல்லரசு உலகில் 1980 காலகட்டத்திலிருந்து கம்யூனிஸ, சோஷலிச நாடுகளில் பொதுத்துறை பலவீனமுற்றது. புதிய தொழில் வளர்ச்சிக்கு மூலதனப் பற்றாக்குறை நிலவியது. இறக்குமதி வரி காரணமாக உலக வர்த்தகம் படுபாதாளத்திற்குப் போய்விட்டது.
"வாழு வாழவிடு' என்ற அடிப்படையில் ஏழை நாடுகளும், பணக்கார நாடுகளும் பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் பன்முக முதலீடுகள் பற்றிய யோசனைகளுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் உலகமயமாக்கலின் முன்னோட்டமாக ஒப்பந்த அடிப்படையில், பன்னாட்டு வர்த்தக உறவுடன் (ஙமகபஐ கஅபஉதஅகஐநங) உலக வர்த்தக அமைப்பு உருவானது. இறக்குமதி வரி நீக்கப்பட்டது. இதன் பொருள் பன்னாட்டுத் தொழில் சுதந்திரம்.
அனைத்துலக அணுசக்தி அமைப்பு
(ஐசபஉதசஅபஐஞசஅக அபஞஙஐஇ உசஉதஎவ அஎஉசஇவ), அனைத்துலக ரசாயன உயிர்க்கொல்லி ஆயுத உடன்படிக்கை (ஐசபஉதசஅபஐஞசஅக இஏஉஙஐஇஅக ரஉஅடஞசந இஞசயஉசபஐஞச). இரு அமைப்புகளும் அணுஆயுதங்கள், ரசாயன ஆயுதங்கள் உற்பத்தியைத் தடை செய்தாலும், அத்தடையை உலகநாடுகள் மதிப்பதாகத் தெரியவில்லை.
செல்வச் செருக்குள்ள வடக்கு நாடுகள் மட்டுமல்ல, வடகொரியா மற்றும் கச்சா எண்ணெய் வளமுள்ள மேற்காசிய நாடுகளும் மனித குலத்தையே அழிக்கும் அணுஆயுத உற்பத்தியில் இறங்கிவிட்டன. இந்தியாவும் பாகிஸ்தானும் சளைத்தவை அல்ல. இஸ்லாமிய நாடுகள் கத்தார் நாட்டை ஒதுக்கி வைத்துள்ளன. மத்திய ஆசிய  -  இஸ்லாமிய நாடுகளில் அமைதியற்ற சூழ்நிலை உள்ளது.
முதல் இரண்டு உலகப்போர்களால் பத்துகோடி மக்கள் உயிரிழந்த புள்ளிவிவர அடிப்படையில் உலக அமைதிக்காக உருப்பெற்றுள்ள பல்வேறு உலக அமைப்புகள்  -  மற்றும் ஐ.நா.வின் எச்சரிக்கைகள் புறந்தள்ளப்பட்டு எந்தநாடு எந்த நாட்டின் மீது அணுகுண்டு வீசும் என்ற பயத்திலேயே உலக மக்கள் வாழ்கின்றனர்.
வளர்ச்சி வேண்டும், செல்வம் வேண்டும் என்பதற்காக புவியை வெப்பமாக்கும் மரபுசார்ந்த எரிசக்திப் பயன்பாட்டைக் குறைக்க முடியாது என்று அமெரிக்காவே கூறும்போது புவி மேலும் மேலும் வெப்பமாகி அது எல்லை மீறினால் உலகமே வெடித்துவிடும்.
உலக வெடிப்பு இயற்கையின் சீற்றத்தால் ஏற்படுமா? அணுகுண்டு வீச்சால்
ஏற்படுமா? எதுவுமே நிச்சயமில்லை.
இனி இந்த உலகம் உய்யுமா? என்று நாம் அஞ்சிவாழும் நிலையில் இந்திய மக்கள் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக வாழ்ந்து இந்திய ஒருமைப்பாட்டைக் கட்டிக்காக்க வேண்டும். உலகம் உய்ய வழி காண்போம்!

கட்டுரையாளர்:
இயற்கை விஞ்ஞானி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com