வேர்களைத் தேடும் விழுதுகள்

இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரின் காரணமாகத் தமிழர்கள் தங்கள் உயிரையும், உடைமைகளையும் காப்பாற்றிக் கொள்வதற்காக பல நாடுகளுக்கும் ஓடினர்.

இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரின் காரணமாகத் தமிழர்கள் தங்கள் உயிரையும், உடைமைகளையும் காப்பாற்றிக் கொள்வதற்காக பல நாடுகளுக்கும் ஓடினர். இதனால் தமிழர்கள் இல்லாத உலக நாடுகளே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
இவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர்களால் தமிழ் மொழிக்கும் புதிய வாழ்வு கிடைத்துள்ளது. தங்களை வெளிக்காட்டிக் கொள்வதற்கு பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் தொடங்கப்பட்டதால் அவை தமிழ் வளர்ச்சிக்கு உதவுகிறது. தங்கள் குழந்தைகள் படிப்பதற்குத் தமிழ்ப் பள்ளிகள் ஆங்காங்கு ஏற்படுத்தப்படுகின்றன.
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்று பாரதிப் புலவன் பாடினான். இப்போது உலகம் எங்கும் அகதிகளாகப் போன ஈழத் தமிழர்களால் அவனது ஆணை செயல்படுத்தப்படுகிறது. மிகச் சிறந்த அயலகத் தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளால் தமிழுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்துக் கொண்டிருப்பது நமக்கெல்லாம் பெருமை.
உலகத் தமிழ் மாநாடுகளும், உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடுகளும் அயலகத் தமிழர்களை ஊக்குவிக்கும். இவர்கள் எவ்வளவுதான் முன்னேறியிருந்த போதும் தாயகத்தின் அங்கீகாரத்தை எதிர்பார்க்கின்றனர்.
உலகளாவிய தமிழறிஞர்களை ஒன்று கூட்டும் மாபெரும் முயற்சி தனிநாயகம் அடிகளாரால் 1966ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் முதல் உலகத் தமிழ் மாநாடாக முகிழ்த்தது. அதன் தொடர்ச்சியாக 1968ஆம் ஆண்டு சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு உலகமே வியக்கும் வண்ணம் சிறப்பாக நடைபெற்றது.
மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு 1970-இல் பிரான்ஸ் தலைநகரான பாரீஸ் நகரிலும், நான்காம் தமிழ் மாநாடு 1974-இல் இலங்கையிலும், ஐந்தாம் தமிழ் மாநாடு 1981-இல் மதுரை மாநகரிலும், 1987-இல் ஆறாம் உலகத் தமிழ் மாநாடு மலேசிய நாட்டிலும், 1989-இல் மோரீஷஸ் நாட்டிலும், 1995-இல் தஞ்சாவூரிலும் இதுவரை நடந்து முடிந்துள்ளன.
இதன்பிறகு நீண்ட இடைவெளியில் இது பற்றிய பேச்சே இல்லாமல் போனது. இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டன. அரசியல், பொருளாதாரம், நிர்வாகம் எனப் பல பிரச்னைகள் இருப்பினும் எடுத்து நடத்திட சரியான தலைமை இல்லை என்பதே உண்மையாகும்.
இதற்கிடையே 2010-ஆம் ஆண்டு கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இந்த தமிழ் மாநாடுகள் தமிழையும், தமிழ் இனத்தையும் உலகமே வியந்து பார்க்க வைத்தன என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
இப்போது ஏற்பட்டுள்ள பெரிய இடைவெளியைக் குறைக்கும் வண்ணம் உலகத் தமிழ் எழுத்தாளர்களின் இரண்டாம் மாநாடு சென்னையில் கடந்த 2017 ஜூன் 9, 10, 11-ஆம் நாட்களில் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த மாநாடு அயலக எழுத்தாளர்களின் வேடந்தாங்கலாக விளங்கியது.
புலம் பெயர்ந்த தமிழர்கள் பல நாடுகளில் வசதியோடு வாழ்ந்தாலும், அங்குள்ள மொழி, பண்பாட்டோடு கலந்து விடும் சூழலே மிகுதியாக இருக்கிறது. அதிலிருந்து தங்கள் குழந்தைகளை மீட்டு, தங்கள் மொழியையும், பண்பாட்டையும் காத்துக் கொள்ள வேண்டுமென்று நினைக்கின்றனர். அதற்காக அவர்கள் போராட வேண்டியுள்ளது. அந்தப் போராட்டத்துக்கு உதவுமாறு அவர்கள் தாய்த் தமிழகத்தின் உதவியை நாடுகின்றனர்.
ஆம் மாநாட்டின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் "வேர்களைத் தேடும் விழுதுகள்' என்ற மாநாட்டின் கருப்பொருளுக்கு அழுத்தம் கொடுப்பதாக அமைந்திருந்தன. தமிழக இதழ்களும் ஊடகங்களும் அயலகத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து புலம்பெயர்ந்த இலக்கியங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அதன் ஒரு தீர்மானம் கூறுகிறது.
அயலகத் தமிழ் எழுத்தாளர்களின் சிறந்தவற்றைத் தகுதி அடிப்படையில் தேர்வு செய்து தமிழக நூலகங்களுக்கு அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழகத் தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் விருதுகள், சிறப்புப் பட்டங்கள் போன்று வெளிநாட்டுத் தமிழ்ப் படைப்பாளர்களுக்கும், இலக்கியவாதிகளுக்கும் தனியாக சிறப்பு விருதுகள் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டது.
உலகெங்கும் வாழும் தமிழ்க் குடும்பங்கள் தங்களது இல்லங்களில் பேச்சு மொழியாகவும், வழக்கு மொழியாகவும் தமிழைப் பேசியும், எழுதியும் இந்தத் தலைமுறையினரிடம் தமிழை வளர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு மாநாட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது.
உலக நாடுகளில் வாழும் தமிழ் மாணவர்கள் தாய் மொழி கற்பித்தலுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்யப்படும் என்று தமிழக சட்டப் பேரவையில் கல்வி மானியக் கோரிக்கையின் போது கல்வியமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்களின் தமிழ் உணர்வைப் போற்றிப் பாதுகாப்பது நம் கடமையாகும். அங்குள்ள தமிழ் மாணவர்கள் தமிழை நன்கு கற்றுக் கொள்வதற்கு உதவியாகத் தமிழ் பாடப் புத்தகங்களை அனுப்புதல், சிறந்த தமிழாசிரியர்களை அனுப்பி அங்குள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சியளித்தல், இணையதளம் வாயிலாக அவர்களுக்கு தமிழ் கற்பித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
இந்தத் திட்டத்தின் மூலம் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், மியான்மர், மோரீஷஸ் ஆகிய நாடுகளில் உள்ள தமிழ்க் குழந்தைகள் நல்ல முறையில் தமிழ் கற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும்.
உலக நாடுகளில் உள்ள குறிப்பிட்ட நூலகங்களுக்கு சிறந்த புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்படும். அதன்படி யாழ்ப்பாணத்தில் உள்ள பொது நூலகத்துக்கும், மலேசிய பல்கலைக்கழக நூலகத்துக்கும் பொது மக்களிடமிருந்து ஒரு லட்சம் அரிய நூல்கள் நன்கொடையாகப் பெற்று வழங்கப்படும். இவ்வாறு தமிழகக் கல்வியமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருப்பது அயலகத் தமிழர்களின் வரவேற்புக் குரியதாகும்.
"கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள்
வேலைவா லுகத்து விரிதிரை பரப்பில்' எனச் சிலப்பதிகாரத்தில் புலம்பெயர் மக்கள் பற்றிய குறிப்பை இளங்கோவடிகள் அளித்துள்ளார்.
அன்றும், இன்றும் மனிதன் இடம்பெயர்ந்து கொண்டுதான் இருக்கிறான் என்பது இதனால் விளங்கும். இக்காலத்தில் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் கூட்டத்தில் ஈழத் தமிழரும் சேர்ந்துள்ளனர் என்பதே உண்மை.
18-ஆம் நூற்றாண்டு காலனிய ஆட்சியாளர்களின் அதிகார ஒடுக்குமுறையால் நடத்தப்பட்ட அடிமை வணிகத்தால் ஆப்பிரிக்க மக்கள் தங்கள் மொழி, பண்பாட்டைத் தொலைத்தனர் என்பது வரலாறு. அவர்களின் வேர்களைத் தேடி அலைந்து ஆவணம் ஆக்கிய சாதனையாளர் அலெக்ஸ் ஹெலி படைத்த "வேர்கள்' (பட்ங் தர்ர்ற்ள்) என்ற நூல் அவர்களின் புதிய வரலாற்றுப் பதிவானது.
ஆயிரம் ஆண்டுகள் ஐரோப்பா நோக்கிய புலம்பெயர்வில் தங்களுக்கான அடையாளத்தை உறுதியுடன் வளர்த்துக் கொண்ட யூத, ஜிப்சி இன மக்களின் துயரங்களும், அவற்றை அவர்கள் எதிர்கொண்ட விதமும் நமக்குப் பாடமாகியுள்ளன.
ஈழத் தமிழர்கள் இவற்றை எண்ணிப் பார்க்க வேண்டிய நேரம் இது.
மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு வேலை தேடிப் போன தமிழர்களில் சிலர் அங்கேயே தங்கி அந்நாட்டு குடிமக்களாகி விட்டனர். அவர்களுக்கு அரசாங்க உதவிகள் தாராளமாகக் கிடைக்கின்றன. குழந்தைகள் படிக்க ஏராளமான தமிழ்ப் பள்ளிகள் நிறுவப்பட்டு, அவை சிறப்பாக நிர்வகிக்கப்படுகின்றன.
மலேசியாவில் தமிழ் இலக்கியக் கழகம் தமிழ் வளர்ச்சிக்கும் பெரிதும் பாடுபடுகின்றது. தமிழ் இலக்கியம் பயிற்றுவிக்கப்பட்டு பட்டமும், பட்டயங்களும் வழங்கப்படுகின்றன.
தமிழ் எழுத்தாளர் கழகம், தமிழ் கவிஞர் மன்றம் போன்ற அமைப்புகள் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளிலும் சிறப்பாகப் பணியாற்றி, படைப்பாளர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கின்றன. அரசாங்கமே தமிழை ஆட்சி மொழியாக அங்கீகரித்து, அதன் வளர்ச்சிக்கு மானியங்கள் வழங்குகின்றது.
மலேசியாவில் தமிழ்ப் பத்திரிகைகளுக்குக் குறைவில்லை, வார, மாத இதழ்களும் வெளிவருகின்றன. சிங்கப்பூரில் நாழிதழும், சிற்றிதழ்களும் வெளிவருகின்றன. அவை தமிழை வளர்ப்பதுடன், இலக்கியப் படைப்பாளிகளையும் ஊக்கப்படுத்துகின்றன.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், நார்வே, கனடா, சுவிட்சர்லாந்து, தென்ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, மோரீஷஸ் முதலிய நாடுகளில் புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் சிற்றிதழ்கள் மற்றும் வலைதளங்கள் மூலம் தங்கள் படைப்புகளை அரங்கேற்றுகின்றனர்.
அத்துடன் தமிழ்நாட்டுக்கு வருகை தந்து தங்கள் படைப்புகளைப் புத்தகங்களாக அச்சிட்டு, வெளியீட்டு விழாக்கள் நடத்தித் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளுகின்றனர்.
புலம் பெயர்ந்த தமிழர்களின் எழுத்துகளில் அவர்கள் அனுபவித்த வலிகளும், காயங்களும் தென்படுவதைத் தவிர்க்க முடியாது. ஆயினும் அவர்களின் பல படைப்புகள் பன்னாட்டுப் படைப்புகளோடு போட்டியிடத் தகுதி வாய்ந்தவை. அவற்றை எடுத்துக் காட்ட ஊடகங்கள் தேவைப்படுகின்றன.
அவர்கள் தாயகத்தின் அரவணைப்பையும், ஆதரவையும் தேடுவதற்குக் காரணம் அதுதான்.
அந்தந்த நாட்டு அரசாங்கங்களின் துணையோடு தங்கள் மொழியையும், பண்பாட்டையும் நிலைநிறுத்திட கடுமையாகப் போராட வேண்டியுள்ளது.
"கலைகள் வளர்வதற்கு அரசின் ஆதரவு தேவை. தனிப்பட்ட முறையில் மக்கள் எவ்வளவு உழைத்தாலும் இத்தகைய ஆதரவு இல்லாவிடில் மக்கள் தளர்ச்சி கொள்வார்கள்...' என்று தனிநாயக அடிகளார் இலங்கையில் பேசியுள்ளார். இது எந்நாட்டுக்கும் பொருந்தும்.
"திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு' என்று தமிழ் நூல் கூறுகிறது. புலம் பெயர்ந்த மக்கள் திரவியம் மட்டும் தேடவில்லை. அதைவிடவும் சிறந்த தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் தேடுகிறார்கள். விழுதுகளின் வேண்டுகோளை நிறைவேற்றக் கடமைப்பட்டவை வேர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com