என்னாகும் எதிர்கால வேளாண்மை?

இந்தியாவில் நாள்தோறும் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக ஊடகங்களில் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
என்னாகும் எதிர்கால வேளாண்மை?

இந்தியாவில் நாள்தோறும் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக ஊடகங்களில் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. தமிழ்நாட்டில் இரண்டு பருவமழைகளும் பொய்த்துப் போயின. வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. கோடை மழையும் பொய்த்துவிட்டது.
இந்த ஆண்டு வறட்சியால் பாதிப்புற்றது விவசாயிகள் மட்டுமல்ல; கால்நடைகளும்தான். குறிப்பாக கறவை மாடுகள் பாதிப்புகளுக்கு ஆளாயிருக்கின்றன. மழை இல்லாததால் மானாவாரி மாவட்டங்களில் மேய்ச்சல் இல்லாததாலும், கடுமையான தீவனப் பற்றாக்குறையினாலும் கறவை மாடுகள் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டன. கறவை நின்று சினைப்பிடிக்காத அடிமாடுகள் கன்றுக்குட்டி விலைக்கு விற்கப்பட்டன. ஜல்லிக்கட்டு இயக்கத்தின் வெற்றிக்குப் பின் மாடுகளின் விலை படுத்துவிட்டதாக கூறுகின்றனர்.
சாதாரணமாக 7 முதல் 10 லிட்டர் கறவையுள்ள மாடு தீவனப் பற்றாக்குறையால் மேய்ச்சலும் இல்லாமல் 3 முதல் 4 லிட்டர் கறக்கிறது. கறவை மாடுகளை நிர்வகிக்க முடியாமல், 35,000 முதல் 40,000 ரூபாய் மதிப்புள்ள மாடுகளை அடிமாட்டு விலையாக ரூ.10,000 தான் தருவேன் என்கிறார்கள். கறவை இல்லாத அடிமாடுகளைக் கன்றுக்குட்டி விலைக்கு கேட்கிறார்கள்.
அதாவது ரூ.5000. 2016-17 வறட்சி ஆண்டில் தமிழ்நாட்டு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட கணக்கு இருக்கும். எத்தனை லட்சம் மாடுகள் கொல்லப்பட்டன என்பதற்குக் கணக்கு இல்லை. ஜல்லிக்கட்டு நடக்கட்டும், ஜல்லிக்கட்டைக் காரணம் காட்டி அடிமாட்டுச் சந்தையை வீழ்த்துவதால் மாட்டுக்கறி உண்பவர்கள் மாறிவிடப் போவதில்லை.
2016-17 வறட்சியால் தமிழ்நாட்டில் தொலைந்தது விவசாயம் மட்டுமல்ல; பால் உற்பத்தி பாதியாகக் குறைந்துவிட்டது. தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் வழங்காத அண்டை மாநிலங்களான ஆந்திரமும் கர்நாடகமும் அரிசியுடன் பாலையும் வழங்கி ஆதாயம் பெறுகின்றன.
பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வந்தவர்கள் தங்கள் வாரிசுகளை விவசாயத்தில் ஈடுபடுத்த விரும்பவில்லை. விவசாய நிலம் என்பது அசையாத சொத்து. எனினும் விவசாயம் செய்து வருமானம் பெறுவது கடினம் என்பதால் நிலத்தை விற்காமல் வேறு தொழில் செய்து லாபம் பார்த்து விவசாயத்தில் முதலீடு செய்யும் போக்கு உள்ளது.
டாக்டர்கள், வழக்குரைஞர்கள், பள்ளி ஆசிரியர்கள், கந்து வட்டி கறக்கும் பைனான்சியர்கள், ரியல் எஸ்டேட் செய்வோர் விவசாயத்தை விடாமல் செய்வதுடன் தொழில் லாபத்தை நிலத்தில் முதலீடு செய்வோர் உண்டு.
வெளிநாடுகளில் கணினித் தொழில்நுட்பம் கற்ற மென்பொருள் பொறியாளர்கள் தாங்கள் ஈட்டிய வருமானத்தை விவசாய முதலீடுகளாக மாற்றி இயற்கை வழி விவசாயம் செய்கிறார்கள். ஏதோ ஒரு வகையில் வேறு தொழில் மூலம் வருமானத்திற்கு வழியில்லாத விவசாயம் செய்யும் இளைஞர்களுக்கு யாரும் பெண் கொடுப்பதில்லை.
விவசாயம் செய்வதில் இளைஞர் சமுதாயத்திற்கு ஆர்வம் இல்லாவிட்டாலும் விவசாயப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிப்பதில் ஆர்வம் அதிகமாயுள்ளது. இந்தியா முழுவதுமே இந்த ஆண்டு எல்லா விவசாயக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் 40 இடங்களுக்கு சராசரியாக 10,000 விண்ணப்பங்கள் வந்தனவாம்.
துணைவேந்தர்களுக்கும், கல்லூரி முதல்வர்களுக்கும் தமிழ்நாட்டில் 1 சீட்டுக்கு 2 லட்சம் வரை குறிப்பிட்ட சில கோட்டாக்களுக்கு விலை பேசப்பட்டதாம். இந்தக் கல்வி ஆண்டில் பொறியியல் பட்டப்படிப்புக்கு காண்பிக்கப்படாத ஆர்வம் விவசாயத்திற்கு காட்டப்பட்டுள்ளது.
விவசாயப் பட்டப்படிப்புக்கு இவ்வளவு அலைமோதல் ஏனென்று விசாரித்தபோது அரசு வங்கிகளில் உத்தியோகம் பெறும் வாய்ப்பு விவசாயப் பட்டதாரிகளுக்கு அதிகமாம். விவசாயப் பட்டதாரிகள் படிப்பு முடித்ததும் வங்கி வேலைக்கு ஏங்குவார்களே தவிர விவசாயம் செய்ய முன்வர மாட்டார்கள் என்பது தெளிவானது.
விவசாயம் தொழில்ரீதியான படிப்பு என்றாலும் ’வங்கிவேலை வாங்குவதே இலட்சியம்' என்று படிக்கும் விவசாய மாணவர்களைப் பற்றியும் இந்தச் சமூகம் பற்றியும் இந்திய வேளாண்மைப் புள்ளியியல் ஆய்வு நிறுவனம் தில்லியில் முனைவர் பட்டத்திற்குரிய மேற்படிப்பு மாணவியும், அகில இந்திய விவசாயப் பட்டதாரிகள் சங்கத் தலைவியுமான சோனிகா பிரியதர்ஷினி, ’விவசாயப் பட்டதாரிகளின் வங்கி வேலை இலக்கு' என்பது மிகவும் கசப்பான உண்மை என்கிறார்.
இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயக் கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் சுமார் 40 லட்சம் மாணவர்கள் விவசாயம் படிக்கின்றனர். இவர்களில் சுமார் 10 லட்சம் மாணவர்கள் மட்டுமே பட்டதாரிகளாகின்றனர். சுமார் 90 சதவீதம் மாணவர்கள் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. இம் மாணவர்கள் பட்டம் பெற்றதும் 80 சதவீதம் பேர் வங்கியில் வேலைக்குச் சென்றுவிடுகிறார்கள்.
இவ்வாறு புள்ளிவிவரங்களை அள்ளி வீசிய சோனிகா, ’விவசாயம் அரசாங்கத்தில் உள்ள பெரிய துறை. விவசாயப் பட்டதாரிகளின் தொழில்நுட்ப அறிவாற்றல் வீணாகிறது. இத்தகைய மூளைச் சலவையைத் தடுத்து நிறுத்த வேண்டும்' என்றும் கூறுகிறார். மேலும் மகாராஷ்டிரம், பஞ்சாப் மட்டுமே விவசாயப் பட்டதாரிகளைச் சற்று ஊக்கப்படுத்தித் தொழில் ரீதியாக விவசாயத்தில் ஈடுபட வைப்பதாகவும் கூறுகிறார்.
எனினும் பஞ்சாப் விவசாயப் பல்கலைக்கழக மாணவர்களில் சிலர் எதார்த்தங்களை எடுத்துரைத்தனர். ’இந்த நாட்டின் விவசாயக் கொள்கை நெல்லும் கோதுமையும் விளைவிக்கக் கூடிய நஞ்சை நில சாகுபடியாளர்களுக்கு மட்டுமே ஆதரவாயுள்ளது. நெல், கோதுமை, கரும்புக்கு மட்டுமே அதிகபட்ச ஆதரவு விலை வழங்கப்படுகிறது. புஞ்சை தானியங்களும், பருப்பு வகைகளும், எண்ணெய் வித்துக்களும், தோட்டக் கலைப் பயிர்களும் புறக்கணிக்கப்படுகின்றன.
அங்காடி விலையை அனுசரித்து மற்ற விவசாய விளைபொருள்களுக்கும் லாபகரமான விலை வேண்டும். வறட்சியை வளமையாக்கும் நீர்நிலை மேம்பாட்டுத் திட்டம் சரியாக இயங்குவதில்லை. புதிய சிந்தனையில்லாமல் விவசாயம் நஷ்டத்தில் இருக்கும் நிலையில் விவசாயப் பட்டதாரிகள் வங்கி வேலையை விரும்புவதில் என்ன தவறு?' இது அவர்களின் கேள்வி.
மைய - மாநில அரசுகள் புஞ்சை தானியப் பயிர்களான பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்களின் சாகுபடி விரிவாக்கத்திற்கு திட்டமிட்டு நிதி ஒதுக்குகிறார்கள். ஆனால் அந்த நிதி எப்படிச் செலவாகிறது? நிஜமாகவே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதா?
இந்தக் கேள்விகளை ஆராய்ந்தால் உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். பழைய பாணியில்தான் பணம் செலவாகிறது. ’மானியம் என்ற பெயரில் விவசாயிகளுக்கு விதை கொடுத்தோம், உரம் கொடுத்தோம்' என்று பணம் திசை மாறிய செய்தி வெளிவராது. ’மானியமே வேண்டாம். மார்க்கட்டைக் கொடு' என்றுதான் விவசாய மாணவர்கள் கேட்கிறார்கள்.
நல்ல விலையும் லாபமும் உறுதியானால் வறட்சியில் - அதாவது குறைந்த நீர்ச் செலவில் வளரக்கூடிய எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் சாகுபடி உயர வழி உண்டு. இறக்குமதிகளையும் படிப்படையாகக் குறைக்கலாம்.
எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் 1970-80களில் தீட்டப்பட்ட வறட்சி நிலம் - பாலை நிலம் மேம்பாட்டுத் திட்டங்கள், நீராதார மேம்பாட்டுத் திட்டங்கள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டன. மேற்படி திட்டங்களை நஞ்சை நிலப் பகுதிகளில் மட்டுமே செயல்படுத்துவார்கள்.
தமிழ்நாட்டில் வறட்சிக்குக் காரணம்' சீமைக் கருவேல மர ஆக்கிரமிப்பு' என்று கூறி இளைஞர்களும், சினிமா நடிகர்களும் தூண்டி விடப்பட்டுள்ளனர். விஷயம் கோர்ட்டு வரை போய்விட்டது. சீமைக் கருவேலுக்கும் நிலத்தடி நீர் மட்டத்திற்கும் தொடர்பு இல்லை. அதிகபட்சம் மூன்று அடிதான். ஆனால் பக்க வேர்கள் 10 அடி வரையில் மேல் மண்பரப்பில் அதாவது மூன்றடி ஆழத்திற்குள் பரவலாகச் சென்று உழவு செய்து அடிமண்ணின் இருக்கத்தை மாற்றிப் புழுதியாக்கும்.
எனினும், சீமைக் கருவேல் மரங்களை மண்ணில் களர், உவர் மேலோங்கிய நிலையில் ஒரு பயிருமே வராது என்ற சூழ்நிலையில் வளர்வது தவறல்ல. மேல் மண்ணைத் திருத்தி அதிக அளவு தழைச் சத்தை வழங்கும் ஆற்றல் மிக்கது இம் மரம் என்று வன இயல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
பாலைவனப் பகுதிகளில் இப்படிப்பட்ட சோதனைகள் செய்து ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் சீமைக் கருவேலை அழித்துவிட்டு மாற்றுப் பயிர்களை அதாவது மேல் மண் மாறிய சூழ்நிலையில், சாகுபடி செய்து கூடுதல் மகசூல் எடுத்துள்ளனர்.
அதேசமயம், வளமான புறம்போக்கில் சீமைக் கருவேல மரத்தை வளர விடுவது சரியல்ல. பக்க வேர்களின் பலத்தால் காடுகளாக மண்டும். சீமைக் கருவேல மரத்தை அகற்றிவிட்டுச் சும்மாயிருந்தால் மீண்டும் அந்த சீமைக் கருவேல்தான் முளைக்கும். நத்தம் - புறம்போக்கு - நீர்நிலைகளில் வளர்ந்துள்ளதை அழித்துவிட்டு மழைநீர் சேமிப்புக்கு ஏற்ப ஏராளமான கசிவு நீர்க் குட்டைகளை அமைத்திட வேண்டும்.
மராத்வாடாவில் உள்ள கட்வாஞ்சி கிராமத்தை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழ்நாடு செயல்பட வேண்டும். இவ்வாறே கர்நாடகத்தில் ஹிலாசே காட்டே, ஆந்திராவில் கிருஷ்ணாபுரம், ராஜஸ்தானில் சாப்பரியா போன்ற வறண்ட கிராமங்களிலும் விவசாயிகள் பணக்காரர்களாயிருக்கிறார்கள்.
குளத்து வேலைத்திட்டத்தையும், நீர்நிலை மேம்பாட்டுத் திட்டத்தையும் பயன்படுத்தி ஒரே கிராமத்தில் நூற்றுக்கும் அதிகமான கழிவுநீர்க் குட்டைகளை தனியார் நிலங்களிலும் அமைத்து மேல் மண்ணில் ஈரம் காத்து வறட்சியில் வளமையைக் கண்டுள்ளனர்.

கட்டுரையாளர்:
இயற்கை விஞ்ஞானி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com