நிர்வாக சீர்திருத்தம் தேவை!

நம் நாட்டின் அடிப்படை பிரச்னைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததும் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டியதும்

நம் நாட்டின் அடிப்படை பிரச்னைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததும் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டியதும் எது என்பதைப் புறந்தள்ளிவிட்டு, தேர்தலில் அமோக வெற்றி பெற்ற கட்சி எது எனவும், தோல்வியடைந்த கட்சியின் எதிர்காலம் என்னவாகும் என்பதைப் பற்றியும் நாம் விவாதங்களில் ஈடுபட்டு வருகிறோம்.
இது சரியான நடைமுறை அல்ல என்பது பல அரசியல் தலைவர்களுக்கும் பொதுநல விரும்பிகளுக்கும்கூட தெரிந்திருக்கவில்லை.
நமது நாட்டின் மக்கள்தொகைக்கும் மக்களின் பல பிரிவினர் பெறும் வருமானத்திற்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை பலர் ஆராய்ந்துள்ளனர். அதன்படி, நமது நாட்டில் 21 கோடியே 65 லட்சம் ஏழை மக்கள் உள்ளனர் என டெண்டுல்கர் கமிட்டி 2009-ஆம் ஆண்டில் கணக்கெடுத்து அறிவித்தது.
அதே ஆண்டில் அர்ஜுன் சென்குப்தா கமிட்டி ஏழை மக்களின் எண்ணிக்கை அதைவிடவும் அதிகம் என்ற கருத்தை முன் வைத்தது. நமது மக்கள்தொகையில் வறுமைக் கோட்டிற்குக்கீழே இருப்பவர்கள் ஏழைகள் எனக்கூறிவிட்டு, அந்த நிலைமையில் இல்லாதவர்கள் எல்லோரும் வசதிபடைத்தவர்களா என்ற வாதம் புதிதாக தொடங்கப்பட்டது.
அதாவது, ஏழைகள் தங்களுக்கு ஒரு நாளைக்கு உண்ண உணவு கிடைக்கும் அளவு வருமானம் உள்ளவர்களா எனக்கேட்டு, அதற்கு கிடைக்கும் என்ற பதிலளிக்கும் மக்கள் வசதியானவர்களா இல்லையா என ஏன் கேட்கவில்லை என ஆராய்ந்து புதிதாக, "நடுத்தட்டு மக்கள்' என்ற புதிய தட்டு ஒன்றை உருவாக்கியுள்ளனர் கணக்கீட்டாளர்கள்.
2015-ஆம் ஆண்டு "கிரடிட் சுயிஸ்úஸ' எனும் ஆணையம் எடுத்த வருமானக் கணக்கீட்டின்படி, இந்தியாவில் 2 கோடியே 36 லட்சம் நடுத்தட்டு மக்கள் உள்ளனர். இவர்களின் மாதாந்திர சராசரி வருமானம் ரூ.16,480. ஆண்டு வருமானம் 7 லட்சத்து 37 ஆயிரத்து 748.
இந்தியாவின் எல்லா நடுத்தர மக்களின் மொத்த சொத்துகளின் மதிப்பீடு 50 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய். சி.என்.என். - ஐ.பி.என். எனும் தொலைக்காட்சி எடுத்த கணக்கீட்டில் இந்தியாவில் சுமார் 20 கோடி பேர், அதாவது மக்கள்தொகையில் சுமார் 20 சதவீத மக்கள் நடுத்தரவர்க்கத்தினர்.
நம் நாட்டின் மக்கள்தொகை அமைப்பு இப்படி இருக்கும் நிலையில், நமது வளர்ச்சி நமது விவசாயத்தையும், அது சார்ந்த தொழில்களையும் சேவை வேலைகள் என்ற வகையான தொழில்களையும் சார்ந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
பத்திரிகையை சைக்கிளில் சென்று விநியோகிப்பவர்கள் முதல், சிறு மற்றும் குறுதொழில்கள் மூலம் காய்கறிகள் மற்றும் விறகுகளை விற்பவர்கள் வரை சேவைத் தொழிலாளர்களே. விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் 80 சதவீதத்தினர் சிறு விவசாயிகள்.
அதாவது, 5 சென்டிலிருந்து 2.5 ஏக்கர் நிலம் உடையவர்கள். இவர்கள்தான் நம் தேசத்தின் எல்லா மக்களுக்கும் தேவையான உணவு பொருள்களை உற்பத்தி செய்பவர்கள். நம் நாட்டின் மக்கள்தொகையில் இவர்கள் 67.63 சதவீதத்தினர்.
அதாவது, மொத்தம் 82 கோடியே 50 லட்சம் பேர். நமது நாட்டில் நிறைய பொருள்கள் உற்பத்தியாகி விற்பனையாகி நமது பொருளாதாரம் செழிக்க இந்த கிராமப்புறத்து மக்களின் வாங்கும் சக்தியே காரணம்.
நம் நாட்டின் வளர்ச்சிக்கு கிராமப்புறங்களின் வளர்ச்சியும் விவசாயத்தின் வளர்ச்சியும் மிக முக்கியமான அம்சங்கள். எனவே நமது மத்திய - மாநில அரசுகள் இணைந்து எடுக்க வேண்டிய பல நடவடிக்கைகள் இந்த கிராமப்புற வளர்ச்சி சார்ந்தவையாக இருக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சி மட்டுமின்றி சமூக வளர்ச்சி மற்றும் சமூக நன்மைகள் சார்ந்தவையாக அரசின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.
இதை மையக்கருத்தாக கொண்டு உருவாக்கப்பட்ட நமது அரசியல் சட்டத்தில் மாநிலங்களின் வழிகாட்டு நடைமுறைகள் உருவாக்கப்பட்டன. சுதந்திர இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும், இன்றைய நிலையில் நாம் அடைந்துள்ள விண்வெளி விஞ்ஞான வெற்றி, அணு ஆராய்ச்சிகளில் வெற்றி மற்றும் பல விஞ்ஞானத்துறைகளின் வளர்ச்சி ஆகியவை மற்ற எல்லா நாடுகளும் பாராட்டும் வகையில் அமைந்துள்ளன.
ஆனால், கோடிக்கணக்கான மக்கள் இன்றும் தாங்கள் அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம் மற்றும் குடிநீர் வசதிக்காக அல்லல்படும் நிலை மாறவில்லை. நமது வளர்ச்சியின் பலன் அடித்தட்டு மக்களை சென்றடையவில்லை என்பதுதான் இதன் பொருள்.
இதற்கு முக்கியமான காரணம், நமது நிர்வாகம் தன் கடமையை சரியாக செய்யவில்லை எனவும், அரசியல்வாதிகள், வியாபாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் சமூக குற்றவாளிகள், பலரும் கைகோத்து தங்களை தாங்களே முன்னேற்றிக் கொண்டுள்ளனர் எனக் குற்றம் சாட்டப்படுகிறது.
இதனால்தான், ஏழை நாடான இந்தியாவில் 1 கோடியே 98 லட்சம்பேர் கோடீஸ்வரர்களாக வலம் வருகிறார்கள். இவர்களது சொத்து மதிப்பு 51 லட்சத்து 81 ஆயிரம் கோடி ரூபாய் என கணக்கிட்டுள்ளது கனடா நாட்டின் கேப் ஜெமினி ராயல் வங்கி.
இந்த பாதிப்பான விவரங்களை விவாதித்த மெஹபூப் உல் ஹஃக் எனும் பொருளாதார அறிஞர் 1999-ஆம் ஆண்டிலேயே கூறியது கவனிக்கத் தகுந்தது. இந்தியாவின் ஆட்சிமுறையும், நிர்வாகமும் தங்கள் கவனத்தை உடனே திருப்ப வேண்டிய திசை எது என்பதை விளக்கினார் அவர்.
"அடிப்படை மனித வளர்ச்சி அம்சங்களான ஏழை மக்களின் தேவைகள், சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளை திறமையுடன் நிறைவேற்றும் ஆட்சி முறை, நிலம் மற்றும் பண உதவியை சரியானவர்களின் கைகளில் கிடைக்கச் செய்வது, அரசின் பல அமைப்புகளிலும் எல்லா மக்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைப்பது, நல்ல சம்பளம் கிடைத்து நேர்மையாக வேலை செய்யும் அரசு ஊழியர்களை திரட்டுவது, சுதந்திர சிந்தனையுடன் அமைந்த நீதித்துறை, அரசும் சமூகமும் ஒன்று சேர்ந்து மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் அமைப்பு, மற்றும் எல்லா மக்களுக்கும் எல்லா விவரங்களையும் தெரிந்துகொள்ளும் உரிமை' போன்ற பல கருத்துகளை முன்வைத்தார் மெஹபூப்.
இந்த அடிப்படைக் கருத்துகளை அப்படியே ஏற்று, நமது அரசின் நடவடிக்கைகள் உடனடியாக உருப்பெற வேண்டும் என 1999-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜரால் அறிக்கை வெளியிட்டார்.
இந்த கருத்துகளை ஏற்றுக்கொண்ட தலைவர்கள் தேர்தலில் தோல்வி அடைவதும், ஊழல் பெருச்சாளி அரசியல்வாதிகள், ஜாதிய, மதவாத இயக்கங்களை ஊக்குவித்து வாக்கு வங்கி அரசியலில் வெற்றியடைவதும் சர்வசாதாரணமாகிவிட்டது.
இதற்கு அத்தாட்சியாக விளங்குவது உலகப் பொருளாதாரத்தை கணக்கீடு செய்த "ஆக்ஸ்ஃபோம்' என்ற அமைப்பு, இந்திய மக்களின் 70 சதவீதத்தினரின் கைகளில் உள் பணமும் சொத்துகளும் அந்நாட்டின் 57 பெருங்கோடீஸ்வரர்களிடம்
உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அதன் மாதிரியை நோக்கினால், முகேஷ் அம்பானி ரூ.15 லட்சம் கோடி, திலிப் சங்வி ரூ.11 லட்சம் கோடி, ஹிந்துஜா குடும்பம் ரூ.10.1 லட்சம் கோடி, அசிம் பிரேம்ஜி ரூ.10 லட்சம் கோடி, பல்லோன்ஜி மிஸ்திரி ரூ.9.31 லட்சம் கோடி, லட்சுமி மிட்டல் ரூ.8.37 கோடி, கோத்ரெஜ் குடும்பம் ரூ.8.31 லட்சம் கோடி, ஷிவ் நாடார் ரூ.7.64 லட்சம் கோடி, குமார் பிர்லா ரூ.5.89 லட்சம் கோடி, சைரஸ் பூனாவாலா ரூ.5.76 லட்சம் கோடி.
இவர்கள் பணத்தையும் சொத்துகளையும் வைத்து மேலைநாட்டு கோடீஸ்வரர்களைவிட வசதியான வாழ்க்கை வாழ்வதை நாம் காணலாம்.
பரந்து விரிந்த ஏழ்மையும், கணக்கிலடங்காத சொத்து குவிப்பும் ஒரே தேசத்தில் திரண்டிருக்கும்போது ஊழல் கொடிகட்டிப் பறக்கும் என்பது திண்ணம். இவற்றில் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டிய அரசின் நிர்வாகத்துறை ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற குழப்பமான விஷயத்திலும், கல்லூரிகளில் ஜாதிய மோதல்கள் நடந்தேறுகின்றதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் பல அரசு விழாக்களிலும் நேரம் செலவழிக்கும் நிலைமை உள்ளது.
உயர்நீதிமன்றங்கள், கிரிக்கெட் விளையாட்டை நடத்தும் இயக்கத்திற்கான விதிமுறைகளை வகுப்பது, ஜல்லிக்கட்டு நடத்துவது, சில சினிமாக்களை வெளியிடலாமா என்று தீர்மானிப்பது போன்ற விஷயங்களில் ஈடுபட்டுள்ளன. வேலையிழப்பு, பணமோசடி வழக்குகள் பல்லாயிரக்கணக்கில் தேங்கியுள்ளது சர்வ சாதாரணமாகிப்போனது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் தொடங்கி நடுத்தட்டு அரசு அதிகாரிகள் பலரும் அமைச்சர்களின் விழாக்களிலும், அவர்கள் நடத்தும் பல கூட்டங்களிலும் கலந்துகொள்வதிலும் கலந்து கொள்ள காத்திருப்பதிலும் காலம் கடந்து போய்
விடுகிறது.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் வரலாறு காணாத வெற்றியை குவித்த பிரதமர் நரேந்திர மோடி, நிர்வாக சீர்திருத்தத்தை உடனடியாக கையிலெடுக்க வேண்டும். அரசுத் துறைகளுடன் தன்னலமற்ற என்.ஜி.ஓ. கட்டமைப்புகளை இணைத்து ஆட்சிமுறையில் பல புதிய நடைமுறைகளை புகுத்த வேண்டும்.
ஓட்டு வங்கி அரசியலில் நிராகரித்து விட்டு, நேர்மையான நடைமுறைகள் பின்பற்றினால் நமது நாட்டில் பொருளாதார, சமூக முன்னேற்றம் நிச்சயமாக ஏற்படும்!

கட்டுரையாளர்:
ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com