தேசத்தைக் காத்தல் செய்

விடுதலைக்குப் பிறகு தேச நலங்காக்கும் தியாகச் சீலர்களும், அறிவுஜீவிகளும் அலட்சியப்படுத்தப்படுவது பழக்கமாய்ப் போய்விட்ட வழக்கமாகிவிட்டது.
தேசத்தைக் காத்தல் செய்

விடுதலைக்குப் பிறகு தேச நலங்காக்கும் தியாகச் சீலர்களும், அறிவுஜீவிகளும் அலட்சியப்படுத்தப்படுவது பழக்கமாய்ப் போய்விட்ட வழக்கமாகிவிட்டது. தேச நலங் காப்பவர்களை தொடர்ந்து காயப்படுத்தியும் வருகின்றோம். இயற்பியலுக்காக நோபெல் பரிசு பெற்ற இந்தியக் குடிமகன் டாக்டர் சுப்பிரமணியன் சந்திரசேகர், சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துப் பணியாற்றியவர். ஆனால், அமெரிக்காவிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.
நோபெல் பரிசு பெற்ற அவரை ஏன் இந்தியாவிலேயே தங்கக்கூடாது எனப் பத்திரிகை நிருபர்கள் கேட்டபொழுது, 'என் ஆராய்ச்சிக்கு வேண்டிய வசதிகளை இந்திய அரசு செய்துத் தர தவறிவிட்டது. அதனால் அமெரிக்காவிலேயே தங்கிவிட்டேன்' என்றார். 'சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்' என்றான் மகாகவி.
எட்டுத்திக்கும் இந்திய இளைஞர்கள் செல்கிறார்கள். கலைச்செல்வங்களைச் சேர்க்கிறார்கள். ஆனால் கொணர்ந்திங்குச் சேர்ப்பதில்லை. மின்னஞ்சல் (ஈமெயில்) எனும் அபூர்வமான தகவல் தொடர்பு சாதனத்தைக் கண்டுபிடித்த சிவா அய்யாதுரை என்ற ராஜபாளையத்தைச் சேர்ந்த இந்திய இளைஞன் இன்று இங்கில்லை. அவனைப் பயன்படுத்திக் கொண்டது, அமெரிக்காவே. தேசங் காக்க வேண்டியவர்கள் காக்கவில்லை.
அண்மையில் மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில், மலைவாழ் மக்கள் வாழ்கின்ற திரிம்பகேஷ்வர் எனும் சிற்றூரில் வாழ்கின்ற ராம்ராவ் லோன்தி எனும் தேச பக்தனுக்கு இழைக்கப்பட்ட அநியாயம் தேசத்தையே தலைகுனிய வைத்தது. பழங்குடி இனத்தைச் சார்ந்த ராம்ராவ் லோன்தி, 17 வயதில் இந்திய இராணுவத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்.
1971-இல் இந்திய - பாகிஸ்தான் போரின்போது அரும்பெரும் சாதனைகளை நிகழ்த்தியவர். கிழக்கு வங்காள விடுதலைக்காக நடந்த போரில், ஒரு பாகிஸ்தான் எல்லையைப் பிடிக்கும் பொறுப்பு, 13.12.1971 அன்று ராம்ராவ் லோன்தி தலைமையிலான படைப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இராணுவத்தின் ஆணைக்குக் கட்டுப்பட்ட ராம்ராவ் உக்கிரமமாக நடந்த ஒரு போர்முனையில் உள்புகுந்து, பாகிஸ்தான் படையை வீழ்த்தி, அந்நாட்டு எல்லையைக் கைப்பற்றினார். ஆனால், அப்போது அவருடைய வலது கையில் வீழ்ந்த கொடூரமான காயங்கள், இன்றுவரை துன்புறுத்திக் கொண்டிருக்கின்றன.
அவருடைய வீரதீர சாகசத்தைப் பாராட்டி, இந்திய அரசு அவருக்குத் தங்கப்பதக்கத்தை வழங்கி கெளரவித்தது. ராம்ராவ் ஓய்வு பெறும் தருணத்தில் அவருடைய தியாகத்தைப் பாராட்டி இந்திய அரசு 135 சதுர மீட்டர் நிலத்தையும் திரியம்பகேஷ்வரில் வழங்கியது.
அதில் அவர் வீடு கட்டிக்கொண்டு, மலைவாழ் மக்களுக்கும், ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கும் உதவுவதற்காக ஓர் அலுவலக அறையைக் கட்டிக் கொண்டார். முறையாக நாசிக் நகராட்சியில் அனுமதி பெற்ற பிறகே வீடு கட்டியிருக்கிறார்.
முன்னாள் இராணுவ வீரர்கள் வீடு கட்டுவதற்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை. என்றாலும், ராம்ராவ் கட்டணத்தைக் கட்டிவிட்டுத்தான், அனுமதி பெற்றிருக்கிறார். இராணுவத்தில் பணியாற்றும்போது, நாட்டுக்காகப் பணியாற்றிய ராம்ராவ், ஓய்வுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட அடித்தளத்து மக்களின் போர்க்குரலாக மாறினார்.
சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தாண்டவமாடும், அத்துமீறல்களைத் தட்டிக் கேட்டார். தகவல் அறியும் ஆணையத்திற்கு அடிக்கடி படையெடுத்து, வாழ்விழந்த மக்களுக்கு வாழ்வு கொடுத்தார்.
நாசிக் வட்டாரத்தில் பொது நலன்களுக்காக அரசாங்கம் ஒதுக்கிய நிலங்களை பதினொரு நகராட்சி உறுப்பினர்கள் ஆக்கிரமித்தனர். அதனை எதிர்த்துத் தகவல் அறியும் ஆணையத்திற்குச் சென்று நியாயம் கேட்டார் ராம்ராவ். அதனால், ஆத்திரம் கொண்ட ஆளும் வர்க்கத்தினர், அதிகாரிகளை ஏவி, நாட்டுப் பற்றாளர் ராம்ராவ்வினுடைய வீட்டையும் அலுவலகத்தையும் புல்டோசர் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டனர்.
அந்த வீட்டில் ராம்ராவ் பாரதமாதாவின் சிலையை வைத்து, அதில் தாம் பெற்றிருந்த பதக்கங்களையும், அம்மாதாவின் கரத்தில் சூட்டியிருந்தார். பழிபாவத்திற்கு அஞ்சாத அதிகார வர்க்கம், பாரதமாதாவின் சிலையையும் இடித்து, டிராக்டரில் அள்ளிக்கொண்டுப் போய்விட்டது. ராம்ராவின் வீடு இடிபாடுகளுக்கு உள்ளாகி, குடும்பம் நடுத்தெருவிற்கு வந்தது.
இக்கொடுமையை எதிர்த்துத் திரிகம்பேஷ்வர் வட்டாரத்து மக்கள் குடியரசு தினத்தன்று நாசிக் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு முன் ராம்ராவ் தலைமையில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அம்மக்களைக் கட்டுப்படுத்துவதற்கு அடுத்த பஞ்சாப் படுகொலையைச் செய்தனர்.
ராம்ராவ் தேர்தல் ஆணையத்திற்குச் சென்று நியாயம் கேட்டபொழுது, ராம்ராவ் வீடு கட்டியிருந்த இடம் கும்பமேளாவிற்குச் செல்லும் யாத்திரிகர்களுக்கு இடைஞ்சலாக இருந்ததால் இடிக்கப்பட்டது எனக் காரணம் சொன்னார்கள். திக்கற்றவர்களுக்குத் தேசம் துணை நிற்காது என்பதால்தான், தெய்வம் துணை என்று சொன்னார்கள் போலும்.
காமராசர் சோவியத் நாட்டிற்குச் சென்று இந்தியா திரும்புகையில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி தருகிறார். அப்பொழுது ஒரு நிருபர், 'புரட்சிக்குப் பிறகு சோவியத், நல்லாட்சி பெற்று வல்லரசாக வளர்ந்திருக்கிறது. சுதந்திரம் பெற்ற இந்தியா மட்டும் ஏன் வளரவில்லை' எனக் கேட்டார். அதற்குக் காமராசர், 'சோவியத் நாட்டில் தகுதியுள்ளவர்கள், தகுதி வாய்ந்த இடத்தில்' இருக்கிறார்கள் எனப் பதில் சொன்னார். அப்படியென்றால், இந்தியாவில் தகுதியானவர்கள் தகுதியான இடத்தில் இல்லை என்பது தானே பொருள்?
1966-இல் இருந்த நிலைமை இன்றைக்கும் தொடர்கின்றதே டாக்டர் அமர்த்யா சென், சாந்திநிகேதன் வட்டாரத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை ஆஸ்தோஷ் சென் சாந்திநிகேதனின் துணைவேந்தர். இரவீந்திரநாத் தாகூருக்கு நெருக்கமான குடும்பம். பொருளாதாரத்திற்காக நோபெல் பரிசைப் பெற்ற முதல் ஆசியக்காரர் - இந்தியன் அமர்த்யா சென். நலன் காக்கும் பொருளாதாரத்திலும், பஞ்சத்தைப் போக்கும் பொருளாதாரத்திலும், சமத்துவப் பொருளாதாரத்திலும் அவருக்கு நிகர் அவரே.
சமூக நீதிக்குப் பொருளாதாரத்தின் மூலம் வழிமுறைகளைச் சொன்னதால், இந்திய அரசு 1999-இல் இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது.
டாக்டர் அமர்த்யா சென், தாம் பெற்ற உலகப் புகழை இந்தியாவிற்குள் கொண்டு வந்து சேர்த்தவர்; இந்தியாவின் பெருமையை உலகெங்கும் பறை சாற்றியவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும், ஹார்வர்டு பல்கலைக்கழகமும் அவரைப் போட்டி போட்டுக் கொண்டு, வருகை தரு பேராசிரியராக அழைத்துக் கொண்டிருக்கிறது.
தேசிய மானுடவியலுக்கான பதக்கத்தை, அமெரிக்கரல்லாத அமர்த்யா சென்னுக்கு முதன் முதலாகப் பாரக் ஒபாமா வழங்கி கெளரவித்தார். அமர்த்யா சென்னின் பொருளாதாரச் சிந்தனையைப் பாராட்டி, இங்கிலாந்து நாடு மேநாடு கேனஸ் விருதை வழங்கிச் சிறப்பித்தது.
மனசாட்சிப் பேராசிரியர் என்றும், அன்னை தெரசாவின் பொருளாதாரம் என்றும் இந்திய மக்களால் பாராட்டப் பெறும் டாக்டர் அமர்த்யா சென், பிகாரிலுள்ள நாலந்தா பல்கலைக்கழகத்தி
லிருந்து அனுப்பப்பட்டது தேச நலம் காக்கும் செய்கை அன்று.
கி.பி. 5-ஆம் நூற்றாண்டிலிருந்து 1197 வரை உலகப் புகழோடு ஓங்கி வளர்ந்தது, நாலந்தா பல்கலைக்கழகம். டாக்டர் அமர்த்யா சென் 2007-ஆம் ஆண்டு அதன் வேந்தராக நியமிக்கப்பட்டார்.
அதற்கு அகில உலகத் தொடர்பை ஏற்படுத்துவதற்கும், உலகப் பல்கலைக்கழகமாக ஆக்குவதற்குமான செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டார். என்றாலும், அவருடைய பல்கலைக்கழகப் பணிகளைப் பாராது, அவருடைய தனிப்பட்ட கருத்துகளையும், அரசியல் சித்தாந்தங்களையும் கணக்கிட்டு, அவரை வீட்டுக்கு அனுப்ப, ஆளும் வர்க்கம் திட்டமிட்டது. அனுப்பியதில் கூடத் தப்பில்லை, அனுப்பிய விதம் அநாகரிகமானது.
டாக்டர் அமர்த்யா சென், கடவுள் நம்பிக்கையில்லாதவர்; நிகழ்கால அரசியலை விமர்சிப்பவர். அவரை முதுகெலும்பில்லாதவர் என்றும், பிற்போக்குச் சிந்தனையாளர் என்றும் தூற்றினர். இரண்டாவது முறையும் வேந்தராகத் தொடர வாய்ப்பிருந்தபொழுது, மேலிடம் விரும்பவில்லை என்பதற்காக, ஒதுங்கிக் கொண்டார்.
அவரை ஆட்சிமன்றக் குழுவிலிருந்து அகற்றவேண்டும் என்பதற்காக, ஆற்றல் வாய்ந்த ஆட்சிக் குழு உறுப்பினர்களும் தூக்கியடிக்கப்பட்டனர். திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சுகதா போஸ் நீக்கப்பட்டார். இங்கிலாந்து பொருளாதாரப் பேராசிரியர், பொருளியல் நிபுணர், லார்ட் மேக்நாட் தேசாயும் விலக்கப்பட்டார்.
தன் வசதிக்குப் பழுக்கவில்லை என்பதற்காகத் தோட்டக்காரன் மரத்தை வெட்டமாட்டான். காலம் கனியட்டும் என்று காத்திருப்பான். வழிப்போக்கர்கள்தாம் வந்த வரை இலாபம் என்று கொம்பையும் கிளையையும் ஒடிப்பர்.
சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக அறிவுஜீவிகளைப் புறந்தள்ளும் சமூகம், தான் விழ வேண்டிய பள்ளத்தைத் தானே வெட்டிக் கொள்கிறது என்பதே உண்மை. 'தேசத்தைக் காத்தல் செய்' என்பது ஆத்திசூடி மட்டுமன்று, அரசியலின் அரிச்சுவடியும் ஆகும்.

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com