கருத்துக் கணிப்பும் பொது வாக்கெடுப்பும்

குடியரசில் மக்கள்தான் சர்வ வல்லமை பெற்றவர்கள். அவர்களின் வாக்குத்தான் ஆட்சி புரிகிறது என்று சொல்லப்பட்டாலும், மக்கள் வாக்குகளைப் பெற்று சில குடும்பங்களே தொடர்ந்து ஆட்சி புரிகின்றன.
சா. கந்தசாமி
சா. கந்தசாமி

குடியரசில் மக்கள்தான் சர்வ வல்லமை பெற்றவர்கள். அவர்களின் வாக்குத்தான் ஆட்சி புரிகிறது என்று சொல்லப்பட்டாலும், மக்கள் வாக்குகளைப் பெற்று சில குடும்பங்களே தொடர்ந்து ஆட்சி புரிகின்றன. ஒரு குடும்பத்தினரே கட்சியிலும், ஆட்சியிலும் பதவிகளைப் பிடித்துக் கொண்டு நாட்டை பரிபாலனம் செய்கிறார்கள். ஆட்சிக்கு வர முடியாதபோது எதிர்க்கட்சியாக சட்டப்பேரவையில் அமர்ந்து எதிர் அரசியல் நடத்துகிறார்கள்.
எனவேதான் குடும்பமே கட்சியாக இருக்கிறது. ஆட்சியே குடும்பமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால் அரசியல் குடும்பங்கள் அதுபற்றி எல்லாம் வெட்கப்படுவதில்லை. யாருக்குமில்லாத அரிய திறமைகள் தங்கள் குடும்பத்திற்கு இருக்கிறது என்று பெருமைப்பட்டுக் கொள்கிறது. அதனை நிலைநாட்ட பத்திரிகைகள், தொலைக்காட்சி நிறுவனங்கள் நடத்துகின்றன.
சினிமா நடிகை, நடிகர்களைச் சேர்த்துக் கொண்டு கவர்ச்சிகரமான கலைநிகழ்ச்சிகள் நடத்தி மக்கள் புத்தியை மழுங்கடிக்கின்றன. இளைஞர்கள், பெண்கள், முதியவர்களுக்கென்று பலவிதமான இலவசங்கள் கொடுக்கப்படுகின்றன. எங்களுக்கே வாக்களியுங்கள் என்று பறைசாற்றிக் கொள்கின்றன.
எளிய மக்களின் அறியாமை, ஏழ்மையான நிலைமை, பெறும் இலவசங்கள் அரசியல் குடும்பங்களை நம்ப வைத்து விடுகின்றன. எனவே இவர்களை விட்டால் தங்களுக்கு யாருமில்லை என்று கருதுகிறார்கள். எனவே தேர்தல் தோறும் வரிசையில் நின்று வாக்களித்து குடும்ப ஆட்சியை மலர வைக்கிறார்கள்!
குடும்பத் தலைவராகவும், கட்சித் தலைவராகவும், அரசியல் தலைவராகவும் இருந்தவர் மரணமடைந்தால் அவர் மனைவி, மகன், மகளை கட்சியிலும், ஆட்சியிலும் தலைமைப் பொறுப்பில் ஏற்றி வைத்து விடுகிறார்கள். அது எதிர்பாராத நிகழ்வு இல்லை. பல ஆண்டுகளாக குடும்பம் போட்டு வைத்திருந்த திட்டம் கண்ணீருக்கும் கதறலுக்குமிடையில் நிறைவேற்றப்படுகிறது.
குடும்ப வாரிசு இல்லாத தலைவர் மரணமடைந்தால் கட்சி உடைகிறது. சட்டப்பேரவை உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டு அணியாகிறார்கள். ஜனநாயக அரசியல் என்பது உறுப்பினர்களின் எண்ணிக்கை. எனவே ஓர் அணியினர் பல உறுப்பினர்களைச் சிறை பிடித்துக் கொண்டு போய் உல்லாசபுரியில் அடைத்து வைத்து விடுகிறார்கள்.
உடைந்த கட்சியின் இன்னொரு அணியினர், 'மக்கள் எப்பொழுதும்போல் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். தலைவரின் ஆன்மா எங்களை வழிநடத்துகிறது. சந்தர்ப்பவாதிகளை, துரோகிகளை எதிர்த்து தொகுதி மக்கள் போராட்டங்கள் நடத்துகிறார்கள். அவர்கள் கருத்துகளைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். மக்கள் கருத்தறிந்து செயல்படுவதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை' என்று உபதேசம் புரிகிறார்கள்.
'பொதுமக்களுக்கென்று தனியான அபிப்பிராயம் - கருத்து கிடையாது. அரசியல், பொருளாதாரம் பற்றிக் கருத்து அவர்கள் அறிய மாட்டார்கள். தேர்தலின்போது பணம் வாங்கிக் கொண்டு, இலவசங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பெரும்பான்மையான மக்கள் மீது சுமையை ஏற்றக்கூடாது' என்று மக்களின் கருத்தை வரையறை செய்யும் சமூக, அரசியல் விமர்சனங்கள் பற்றிக் கருத்தும் சொல்லப்படுகிறது.
தேர்தலின் போது மக்கள் யாருக்கு - எந்தக் கட்சிக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்று கருத்துக்கணிப்பு எடுத்து பத்திரிகைகள், தொலைக்காட்சி நிறுவனங்கள் வெளியிடுகின்றன. அது விஞ்ஞான பூர்வமானது என்று சொல்லப்படுகிறது. நிறையப் பணம் புழங்கும் வியாபாரம்.
அது பத்திரிகைகள், தொலைக்காட்சி நிறுவனங்கள் அரசியல் ஈடுபாடு கொண்டவர்கள் சம்பந்தப்பட்டது. பெரும்பாலும் தேர்தல் கருத்துக் கணிப்பு என்பது நூறு சதவீதம் சரியாக இருப்பதில்லை. ஏனெனில் மனிதர்கள் தங்கள் கருத்துகளை வெளியில் சொல்வது இல்லை. ஒரு கருத்தைச் சொன்னவர்களும் சொன்னதையே பற்றிக் கொண்டு இருப்பதில்லை.
பொதுத் தேர்தலின்போது மக்கள் வாக்களிப்பதுதான் அவர்கள் கருத்து. அதனைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அது யாருக்குச் சாதகமாக இருக்கிறது, என்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பது பற்றி எல்லாம் அரசியல் விமர்சனர்கள் கருத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது அவர்களின் வேலை; பொதுமக்கள் வேலை கிடையாது. அவர்கள் பசியாற்றிக் கொள்ள நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.
பெரும்பான்மையான மக்களின் வாக்குகள் அடிப்படையில் அமைந்த அரசாங்கம் சில குறிப்பிட்ட பிரச்னைகளில் மக்கள் கருத்தை அறிந்து கொள்ள பொது வாக்கெடுப்பு நடத்துகிறது. பொதுத் தேர்தலுக்கும் பொது வாக்கெடுப்புக்கும் சம்பந்தம் கிடையாது.
சில ஜனநாயக நாடுகளில், முக்கியமான பிரச்னைகளில் மக்களின் அபிப்பிராயத்தை அறிந்து கொள்ள பொது வாக்கெடுப்பு நடத்துகிறார்கள். பிரச்னைகளின் தன்மை பற்றி விவாதங்கள் நடத்துகிறார்கள். அதன் சாதக - பாதக அம்சங்கள் பற்றி விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்துகிறார்கள்.
பொது வாக்கெடுப்பு என்பது, அரசு வெளிப்படையாக இருக்கிறது, நாடாளுமன்றத்தில் - சட்டப்பேரவையில் பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக செய்ய முடியாது. மக்களுடைய கருத்துகளைக் கேட்டு அதன் அடிப்படையில்தான் செயல்படுகிறோம் என்பதை மெய்ப்பிக்கவே பொது வாக்கெடுப்புகள் நடத்தப்படுகின்றன.
பொது வாக்கெடுப்பு என்பது ஐரோப்பிய நாடுகளிலும் வட அமெரிக்க நாடுகளிலும் அடிக்கடி நடைபெறுகிறது. சிறிய நாடான சுவிட்ஸர்லாந்தில் இருநூறு ஆண்டுகளாக பொது வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் 180 முறை முக்கியமான அரசியல், பொருளாதார அம்சங்கள் பற்றி மக்கள் கருத்தறிய பொது வாக்கெடுப்புகள் நடைபெற்று உள்ளன.
1947-ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது. ஜம்மு - காஷ்மீர் தனி சமஸ்தானமாக இருந்தது. இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் காஷ்மீரை கைப்பற்றிக் கொள்ள பாகிஸ்தான் பெரும்படையுடன் காஷ்மீருக்குள் புகுந்தது. ஜம்மு - காஷ்மீர் மன்னர் தன் நாட்டை இந்தியாவோடு இணைத்துக் கொண்டார்.
அதனால் இந்திய படை காஷ்மீருக்குள் புகுந்தது. பெரும் போர் நடைபெற்றது. பிரச்னை ஐ.நா. சபைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பாகிஸ்தான் பின்னால் நகர்ந்து தன் எல்லைக்குச் செல்ல வேண்டும். மக்கள் கருத்தறிய இந்தியா பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதன் வழியாக காஷ்மீர் யாருக்குச் சொந்தம் என்று முடிவு செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. பாகிஸ்தான் பின்வாங்கித் தன் எல்லைக்குச் செல்லவில்லை. இந்தியா வாக்கெடுப்பு நடத்தவில்லை.
கனடா நாட்டின் பெரிய மாநிலம் கியூபெக். முதலில் கியூபெக்கிற்குள் பிரெஞ்சுக்காரர்கள் குடியேறி காலனியை அமைத்துக் கொண்டார்கள். பின்னர் அது ஆங்கிலேயர்கள் வசமாகி கனடா நாட்டின் ஒரு மாநிலமாகியது. கியூபெக்கில் பிரெஞ்சு மொழி பேசுவோர் அதிகம்.
அவர்கள் கிறிஸ்துவ சமயத்தில் கத்தோலிக்கப் பிரிவைப் பின்பற்றுகிறவர்கள். கியூபெக் பிரெஞ்சு கலாசாரத்தின் அடையாளமாக கனடாவில் இருக்கிறது. பிரெஞ்சு நாட்டை விட நிலப்பரப்பில் பெரியது.
பிரெஞ்சுக்காரர்கள் மொழி அபிமானிகள். எனவே கியூபெக்கைத் தனி நாடாக்க வேண்டும் என்று கிளர்ச்சி செய்தார்கள். கிளர்ச்சி கலவரமானது. படுகொலைகள் நடைபெற்றன.
எனவே கனடா அரசாங்கம் கியூபெக் தனி நாடாக வேண்டுமா வேண்டாமா என்று கியூபெக் மாநில மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தியது. இரண்டு முறை நடைபெற்ற பொது வாக்கெடுப்பு பிரிவினைக்கு எதிராக இருந்தது.
ஆனால் பிரிவினை உணர்வை மழுங்கடிக்க, கியூபெக் மாநிலத்திற்குப் பூரண சுயாட்சி வழங்கப்பட்டது. பிரெஞ்சு மொழி கனடாவின் ஆட்சி மொழியாக்கப்பட்டது.
ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் பல ஆண்டுகளாக இங்கிலாந்து இருந்து வந்தது. அது இங்கிலாந்துக்குச் சாதகமாக இல்லை. சுமையாக இருக்கிறது. நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் கிளர்ச்சி செய்தன.
இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து இருக்க வேண்டுமென்றார் பிரதமர். நெருக்கடி முற்றியது. எனவே 2016-ஆம் ஆண்டில் அது பொது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. பிரதமர் டேவிட் காமரூன் விலகலுக்கு எதிராகப் பிரசாரம் செய்தார்.
விலக வேண்டும் என்பதற்கு ஆதரவாக வாக்கெடுப்பு அமைந்தது. எனவே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
கருத்துக் கணிப்பென்பது தனியார் நிறுவனங்கள் தேர்தல் காலங்களில் நடத்துவது. குறைந்த எண்ணிக்கையிலான மக்களிடம் கருத்துகள் கேட்டு அதனை அறிவியல் முறையில் பெருக்கி பொதுவாகச் சொல்வது.
பொது வாக்கெடுப்பு என்பது அரசாங்கம் நடத்துவது. வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க வேண்டும். ஒரு முறை அளித்த வாக்கை மாற்ற முடியாது. இந்தியாவில் எந்ததொரு பிரச்னைக்காகவும் மத்திய அரசோ, மாநில அரசுகளோ பொது வாக்கெடுப்பு நடத்தியதில்லை.
அரசியல் முடிவுகளே எடுக்கப்பட்டுள்ளன.

கட்டுரையாளர்:
எழுத்தாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com