கல்வியில் மாற்றம் காலத்தின் கட்டாயம்!

தமிழ்நாட்டுக் கல்வித் துறையில் 10, 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளன. மாணவ மாணவிகள் இந்தத் தேர்வுகளை அடுத்த உயர்நிலைப் படிப்புகளுக்குப் படிக்கட்டுகளாக எண்ணுகின்றனர்.

தமிழ்நாட்டுக் கல்வித் துறையில் 10, 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளன. மாணவ மாணவிகள் இந்தத் தேர்வுகளை அடுத்த உயர்நிலைப் படிப்புகளுக்குப் படிக்கட்டுகளாக எண்ணுகின்றனர். பெற்றோருக்கும், மற்றோருக்கும் பிள்ளைகள் எதிர்காலம் பற்றி பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளன.
பிளஸ் 2 எனப்படும் 12}ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு 2017 மார்ச் 2 அன்று தொடங்கி 31-ஆம் நாள் முடிவுடைகிறது. இத்தேர்வினை 8 லட்சத்து 98 ஆயிரத்து 762 மாணவ } மாணவியர் எழுதுகின்றனர். தனித் தேர்வர்களாக 31 ஆயிரத்து 843 பேரும் எழுதுகின்றனர்.
இதே போல 10-ஆம் வகுப்பு என்னும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 8-ஆம் நாள் தொடங்கி மார்ச் 30 முடிவடைகிறது. இத்தேர்வினை 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 பேர் எழுதவுள்ளனர். இவர்களைத் தவிர, 39 ஆயிரத்து 741 பேர் தனித்தேர்வகளாக எழுதவுள்ளனர்.
எப்போதுமே இல்லாத அறிவிப்பாக இந்தக் கல்வியாண்டு புதிய கல்வியமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதாவது, தேர்வுகள் முடிவதற்குள்ளாகவே தேர்வு முடிவுகள் எப்போது வெளிவரும் என்பதை முன்கூட்டியே அறிவிக்கப்பட்
டுள்ளது.
பிளஸ் 2 தேர்வின் முடிவு மே 12 அன்றும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வின் முடிவு மே 19 அன்றும் வெளியிட ஏற்பாடு செய்யப்படுவதாக புதிய கல்வியமைச்சர் அறிவித்துள்ளார்.
அத்துடன் ஆசிரியர் தகுதித் தேர்வு பற்றிய அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (தாள்-1) ஏப்ரல் 29 அன்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (தாள் - 2) ஏப்ரல் 30 அன்றும் நடை
பெறும்.
மாணவர்களும், பெற்றோர்களும் தேர்வை திருவிழாவாகக் கருத வேண்டும் என்றும், அச்சம் தேவையில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அகில இந்திய வானொலியில் ஒலிபரப்படும் "மனதின் குரல்' நிகழ்ச்சியின் மூலம் இவ்வாறு கூறியுள்ளார்.
தேர்வு காலம் நெருங்கியதும் பெரும்பாலான மாணவர்களும், பெற்றோரும் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். ஒருவித அச்சம் அவர்களைத் தொற்றிக் கொள்கிறது. இது தேவையற்றது.
தேர்வு என்பது ஒரு கொண்டாட்டம் என்பது நமது பிரதமரின் கருத்தாகும். மாணவர்களும், பெற்றோர்களும் தேர்வைத் திருவிழாவாகவும், மகிழ்ச்சிக்கான ஆதாரமாகவும், ஆண்டு முழுவதும் படித்ததை வெளிப்படுத்துவதற்குக் கிடைத்த வாய்ப்பாகவும் கருத வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஏட்டளவில் இருக்கும் மதிப்பெண் மட்டும் வாழ்க்கைக்கு உதவாது. அறிவு, திறமை, தன்னம்பிக்கை, மன உறுதியை வளர்த்துக் கொண்டால் அது நடைமுறை வாழ்க்கைக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மாணவர்கள் தேர்வினைக் கண்டு அஞ்சும் போக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது. தேர்வின் தோல்வியை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சிலர் அதிக அச்சத்தால் தற்கொலை வரை செல்கின்றனர்.
மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கையையும் வளர்த்திடாத கல்வியால் பயன் இல்லை. அவர்களுக்கு மனவளர்ச்சியும், குண வளர்ச்சியும் மிகவும் தேவைப்படுகிறது.
"ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அதுதான்டா வளர்ச்சி'
- என்று கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடியுள்ளதும் இதுபற்றித்தான். உயர் கல்வி படிக்கும் மாணவர்களும் மனம் வெதும்பி தற்கொலை செய்து கொள்ளும் செய்திகள் அன்றாடம் ஊடகங்களில் காணலாம். அதற்காகப் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை வாயிலாக கல்வித்துறைக்கான மொத்த செலவினம் கடந்த மூன்று ஆண்டுகளாகக் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் கல்வி வளர்ச்சிக்குத் தடை ஏற்பட்டுள்ளது.
2013-14ஆம் ஆண்டுக்கான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சார்பாக வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையில் மொத்த செலவினங்களில் கல்விக்கான ஒதுக்கீடு 4.57 விழுக்காடாக இருந்தது. அதன் பின்னர் இந்த ஒதுக்கீடு தொடர்ந்து இறங்குமுகமாகவே உள்ளது.
2016-17ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், திருத்திய மதிப்பீட்டின்படி கல்விக்கான ஒதுக்கீடு 3.65 விழுக்காடாகக் குறைந்துள்ளது. நடப்பு ஆண்டுக்கான அறிக்கையில் மதிப்பீட்டு முதலீடு 3.71 விழுக்காடு என சிறிதளவே கூடுதலாகியுள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் 6 முதல் 13 வயதிற்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் ஆரம்பக் கல்வி பெறும் வகையில் அரசின் திட்டங்கள் தீட்டப்பட்டன. பின்னர் கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டும் நிலை படிப்படியாகக் குறைந்தே வந்துள்ளது என்று கல்வியாளர்கள் வருந்துகின்றனர்.
இதனால் தொடக்கக் கல்வி பெற்றுவரும் மாணவர்களில் சரி பாதியினர் மட்டுமே உயர்நிலை, மேல்நிலைக் கல்வி கற்கின்றனர். மீதிப் பாதியினர் கல்விக் கூடங்களை விட்டே விலகி விடுகின்றனர். இப்படி கல்விக் கூடங்களை விட்டே விலகி விடுபவர்கள் 3.5 கோடி பேர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
முன்னேற்றம் அடைந்த நாடுகளில் மாணவர் சேர்க்கையின் மொத்த விகிதம் ஏறத்தாழ 50 விழுக்காடு அளவிற்கு உள்ளது. நம் நாட்டில் 7.1 கோடி இளைஞர்கள் இன்னமும் உயர் கல்வியினை எட்டா நிலையில் உள்ளனர் என்னும் அவல நிலையே நீடிக்கிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி சமுதாயத்தினரிடம் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்துள்ளது.
ஆனால் அந்த சமுதாய மாணவர்கள் பள்ளியிலிருந்து விலகுவது அதிகமாக உள்ளது. அப்படி ஒதுங்கிடும் பிள்ளைகளைக் கல்வித் திட்டங்களின் மூலம் ஒருங்கிணைக்க வேண்டும்.
இதற்கு பள்ளிக் கட்டமைப்பு வசதிகளும், கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும். தொண்டு அமைப்புகளோ, பெருவணிக நிறுவனங்களோ இந்த அவல நிலையினை அகற்றிவிட முடியாது. மத்திய அரசே அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு வெறும் 4 விழுக்காடு அளவு நிதி ஒதுக்கீட்டையே அதிகரித்துள்ளது.
கல்விப் பிரச்னை இத்துடன் முடிந்துவிடவில்லை. பள்ளி, கல்லூரிகளில் அவர்கள் சேர்க்கப்பட்ட பிறகு அங்கு பயிற்றுவிக்க நல்ல ஆசிரியர்களின் தேவை அதிகமாக உள்ளது.
தற்சமயம் நாட்டில் 86 லட்சம் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் 15 லட்சம் உயர்கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் உள்ளனர். எனவே உரிய கல்வியினைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை உருவாக்கிடத் தரமான ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் தேவைப்படுகின்றன.
அத்துடன் கட்டாயக் கல்விச் சட்டமானது மாணவர் - ஆசிரியர் விகிதம் மற்றும் கட்டடம் மற்றும் உபகரண கட்டமைப்புகளை அடிப்படை கட்டாய விதிகளாக வலியுறுத்துகிறது. மொத்தக் கல்விக் கூடங்களில் 10 விழுக்காடு அளவில்தான் இந்தக் கட்டமைப்பு விதிகள் முறையாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
மொத்த மாணவர்களில் கால் பகுதி
யினர் தனியார் பயிற்றுவித்தலை நம்பியே உள்ளனர். கல்வி முறை நிதிப் பற்றாக்குறையால் வாடும் நிலை தொடருமானால் நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடும்.
இந்திய அரசு உயர்கல்விக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை தொடக்கக் கல்விக்குக் கொடுப்பதில்லை என்பது கல்வியாளர்களின் குறைபாடு. நோபல் பரிசு பெற்றவரும், சிறந்த பொருளாதார மேதையுமான அமர்த்யா சென் சொன்னது இது:
ஜவாஹர்லால் நேருவின் கொள்கையால் ஐ.ஐ.டி. போன்ற உலகப் புகழ் பெற்ற உயர்கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் உருவாயின. ஆனால் தொடக்கக் கல்வி முன்னேற்றத்துக்கு போதிய கவனம் செலுத்தப்படவில்லை.
"நீட் தேர்விலிருந்து விலக்குக் கோருவது தமிழகத்துக்கு அவமானம் இல்லையா' என்று அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எழுப்பியுள்ள கேள்வி பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.
பிற மாநிலங்களில் தமிழகத்தைப்போல உயர்நிலை, மேல்நிலைக் கல்வி கட்டமைப்புகள் ஒழுங்காகச் செயல்படவில்லை. எங்கும் நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களும், தகுதித் தேர்வுக்கான பயிற்சி மையங்களுமே வணிக ரீதியில் செயல்பட்டு வருகின்றன. கல்வி முழுக்க முழுக்க வணிகமாகி விட்டது.
தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் ஆண்டாண்டு காலமாக கல்வி மறுக்கப்பட்டுக் கிடப்போரை மேலே கொண்டு வருவதுதான் தருமம்.
"மின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி வித்தல்'
- என்று மகாகவி பாரதி ஆவேசத்துடன் பாடியுள்ளதும் இதைத்தான்.
யுனெஸ்கோ அறிக்கையின்படி ஆசிய நாடுகளில் கல்வித் துறைக்கு மிகமிகக் குறைவான நிதியை ஒதுக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இன்றைய நிலையிலும் இந்திய மக்கள் தொகையில் சுமார் 28.20 கோடி பேர் எழுத்தறிவு இல்லாதவர்களாக உள்ளனர்.
மக்கள்தொகையில் 33 விழுக்காட்டினரை எழுதப் படிக்கத் தெரியாத பாமரர்களாக வைத்துக் கொண்டிருப்பது வல்லரசாக வேண்டுமென கனவு காணும் இந்தியாவுக்கு பெருமையாகுமா? நம் அனைவருக்குமே தலை குனிவாகும். இதிலிருந்து மீண்டு எழுவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com