சாலை விபத்துகள் தவிர்ப்போம்

ஒவ்வொரு நாளும் வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் அல்லது நான்கு சக்கர வாகனத்தில், கற்பனைத் தேரில் பல கனவுகளுடன்

ஒவ்வொரு நாளும் வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் அல்லது நான்கு சக்கர வாகனத்தில், கற்பனைத் தேரில் பல கனவுகளுடன் பயணிப்பவர்களுக்கு நிச்சயம் எதிர்கால வாழ்வு குறித்தும், குடும்ப நலன்கள், உறவுகள், சமுதாயம் குறித்த எண்ணோட்டங்களுடன் பெருங்கனவுகள் இருக்கும்.
இவர்களில் பலர் கல்வி, விளையாட்டு போன்றவற்றில் சாதனை படைத்தவர்கள், படைப்பதற்காக கனவுகளுடன் பயணிப்பவர்கள். இவர்களில் சிலர் எதிர்காலத்தில் தலைசிறந்த கல்வியாளராகவும், விளையாட்டு வீரராகவும், மருத்துவராகவும், பொறியாளராகவும், விஞ்ஞானியாகவும், அரசியல் தலைவராகவும் வாகை சூடி நம் நாட்டிற்கு பெருமைகள் பல சேர்த்திருக்கக் கூடியவர்கள்.
ஆனால், இந்த சாலை விபத்துகள் அவர்களின் கனவுகளை சிதைத்து, அவர்கள் சார்ந்துள்ள குடும்பத்தினரையும் சொல்லொணா துயரத்தில் தள்ளி வாழ்க்கையையே சூனியமாக்கி விடுகிறது. நாளும் நல்லோர்களையும், வல்லோர்களையும் இந்த சாலை விபத்துகளால் இழந்துவிடு
கிறோம்.
2015-ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் தினமும் சராசரியாக 400 பேரும், மொத்தம் 1.46 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 54.1 சதவீதம் பேர் 15-34 வயதிற்குள்ளானவர்கள். அதே ஆண்டில் தமிழகத்தில் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69,059 பேர். சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடத்திலுள்ளது.
மத்திய நெடுஞ்சாலைத் துறை இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகமாக விபத்து நடக்கும் இடங்களாக 726 இடங்களை கண்டறிந்துள்ளது. அதில் 100 இடங்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றது.
அந்த 100 இடங்களில் 11 இடங்கள் அதிகம் விபத்துகள் நடக்கும் பகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் அதிகமாக சாலை விபத்துகள் நடைபெறுகின்றன.
தமிழ்நாட்டில் தலைநகர் சென்னையில் தான் அதிகளவில் விபத்துகள் நடைபெறுகின்றது. 2015-ஆம் ஆண்டு மட்டும் சென்னையில் சாலை விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 886. அதற்கடுத்தப்படியாக கோயம்புத்தூரில் 238, திருச்சிராப்பள்ளியில் 156 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர் என்கிறது சமீபத்திய புள்ளிவிவரம்.
சாலை விபத்துகள் நடப்பதற்கு வாகன ஓட்டிகளே 96 சதவீதம் காரணமாக இருக்கிறார்கள். பெரும்பாலான விபத்துகளுக்கு ஓட்டுநர்களின் அஜாக்கிரதையும், வேகமாக சென்றதும் தான் காரணம் எனத் தெரிய வருகிறது.
சாலையில் நடந்து செல்பவர்களால் இரண்டு சதவீதமும், திடீர் வாகன பழுது காரணமாக மூன்று சதவீதமும் விபத்துகள் நடக்கின்றன.
அண்மையில் சென்னையில் நடந்த சாலை விபத்தில் 27 வயதான கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தரும், அவரது மனைவி 26 வயதான டாக்டர் நிவேதாவும் உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. பெற்றோருக்கு ஒரே வாரிசான சென்னையைத் சேர்ந்த அஸ்வின் சுந்தர் பிரபல கார் பந்தய வீரராவார்.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்ற பல கார் பந்தயங்களில் சாம்பியன் பட்டங்களை வென்று சாதனைகள் பல புரிந்தவர். தனது 14 வயது முதல் தொடர்ந்து கார் பந்தயத்தில் அவர் பல பட்டங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
2007-இல் பார்முலா ஸ்விப்ட் மற்றும் பார்முலா ஹூண்டாய் பிரிவுகளில் சாம்பியன்ஷிப், 2010, 2011-இல் எம்.ஆர்.எப். பார்முலா 1600 பிரிவில் இண்டர்நேஷனல் சேலஞ்ச் சாம்பியன், 2012, 2013-ஆம் ஆண்டுகளில் அவர் எப்.4 நேஷனல்
சாம்பியன்.
இவர் சாலையில் இருந்த வேகத்தடையை கவனிக்கத் தவறியதால் வேகத்தடையில் ஏறியவுடன் காரின் கீழ் பாகம் சேதமடைந்து அதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலை ஓரம் இருந்த மரத்தில் மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது.
இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் தலைவர், "கார் பந்தய விளையாட்டுக்கு இது ஒரு துயரமான நாள். உண்மையான ஒரு பந்தய வீரரை இந்த விளையாட்டு இழந்து இருக்கிறது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்' என்றார்.
இனியேனும் இவ்வகையான சாலை விபத்துகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், சாலைகளின் இரு புறம் இருக்கும் நெருக்கமான மரங்கள், மின்சார கம்பங்கள், தொலைபேசி கம்பங்கள் ஆகியவைகளை கவனித்து வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக வாகனங்களை ஓட்ட பழக வேண்டும்.
மேடும், பள்ளமுமாக உள்ள சாலைகளைக் கண்டறிந்து அவற்றை உடனடியாக சீரமைத்து வாகனங்கள் செல்ல ஏதுவாக பராமரிக்க வேண்டும். பள்ளமான இடம், மேடான இடம், சாலை வளைவு, வேகத் தடை போன்றவை குறித்தான முன்னெச்சரிக்கை அறிவிப்பு பலகைகளை வாகன ஓட்டிகளுக்குத் தெரியும்படி வைக்க வேண்டும்.
குறிப்பாக, சாலைகளில் இருக்கும் பழுதுகளை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் இரவு நேரங்களில் அதிகமான வெளிச்சம் தரும் மின் விளக்குகளை சாலைகளில் அமைக்க வேண்டும். வலது புறம், இடது புறம் திரும்பும் பாதைக்கு உரிய குறியீடுகளை வாகன ஓட்டிகளுக்கு தெரியுமாறு வைக்க வேண்டும்.
நாம் பயணிக்கும் வாகனம் மணிக்கு எத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் ஓடுகிறது என்பதை வாகன ஓட்டிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வாகனங்களை ஓட்டும் போது செல்லிடப்பேசியில் பேசுவதோ, பக்கத்தில் அமர்ந்திருப்பவர்களுடன் பேசிக் கொண்டோ, ஹெட்செட் மாட்டிக் கொண்டோ பாடல்களை கேட்டுக் கொண்டோ வாகனங்களை ஓட்டக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com