இணைந்தால் தவறில்லை

பெங்களூரு பேருந்து நிலையத்தில், கர்நாடக மாநிலப் பேருந்துகள் வந்து நின்றதும்,கூட்டம் திபுதிபு வென அதனை நோக்கி ஓடுவதனைப் பார்க்க முடியும், அடுத்த நடைமேடையில்,

பெங்களூரு பேருந்து நிலையத்தில், கர்நாடக மாநிலப் பேருந்துகள் வந்து நின்றதும்,கூட்டம் திபுதிபு வென அதனை நோக்கி ஓடுவதனைப் பார்க்க முடியும், அடுத்த நடைமேடையில், தமிழகப் பேருந்து கழகத்தின் ஊர்திகள், கேட்பாரற்று நிற்பதனையும், நடத்துனர் கூவிக்கூவி அழைப்பதையும் பார்க்க முடியும்.
பேருந்தின் பராமரிப்புக் குறைபாடு உடலுக்கு அயர்ச்சி ஏற்படுத்துவதாலும், காலம் தாழ்த்துதல் காரணமாகவும், தமிழகப் பேருந்துகளைப் புறக்கணிப்பதை பார்க்கிறோம். கட்டணம் கூடுதலாக இருப்பினும்கூட, பிற மாநிலப் பேருந்துகளை நாடுவதன் காரணம் புரிகிறது.
நாற்பது வருடங்களுக்கு முன்னர் இந்தியாவிலேயே தலை சிறந்த பேருந்துத் துறை தமிழகத்தினைச் சார்ந்தது என்பதை நம்ப முடிகிறதா?
அப்போது, அத்துறையில் பெரும் மாறுதல் நிகழ்ந்தன. குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் இருந்த தனியார் பேருந்துகள் தேசியமயமாக்கப்பட்டன. மேலும், போக்குவரத்துத் துறை நிர்வாக வசதிக்காக மண்டல வாரியாக, தனித்தனியாகப் பிரிக்கப்பட்டன.
அதன் மூலம் ஆரோக்கியமான போட்டி ஏற்படுத்தப்பட்டது. நிர்வாகமும் மண்டல அளவில், மக்களுக்கு நெருக்கமாக இருந்தது. மக்களின் தேவை அறிந்து பல ஊர்களுக்கு புதிதாக போக்குவரத்து வசதி செய்யப்பட்டது.
இது தவிர, பேருந்து வடிவமைப்பு, எரிபொருள் சிக்கனம், உபரிப் பொருள் தேய்மானக் கட்டுப்பாடு, உபரி பொருட்கள் வாங்குதல் போன்றவற்றில் சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் நிர்வாகத்தில் தொழிலாளர்களுக்கும் இடம், ஓட்டுநர் - நடத்துனர் ஆகியோருக்கு செவ்வனே பணி செய்ய ஊக்கம், விபத்துகள் நிகழாமல் கண்காணித்தல் போன்றவையும் இருந்தன.
தவிரவும், ஐ.ஐ.டி. மற்றும் இந்திய நிர்வாகக் கல்லூரி(Indian administrative staff college)   போன்ற அமைப்புகளின் ஆலோசனை பெறப்பட்டும், ஜப்பானின் போக்குவரத்துத் துறையின் சிறந்த அம்சங்கள் முன்மாதிரியாகக் (benchmark) கொள்ளப்பட்டும் அவற்றை எட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டன.
சுருக்கமாக சொல்வதென்றால், ஒரு பொறியியல் சார்ந்த சேவைத்துறை, சிறந்த தொழில் முறை அணுகுமுறையோடு நிர்வகிக்கப் பட்டது. இதனால் பயணிகள், தொழிலாளர்கள், நிர்வாகத்தினர் ஒருங்கே பயன் பெற்றனர். அனைத்துத் தரப்பினரும் திருப்தியும் கொண்டனர்.
அதேபோல, இன்னொரு சேவை துறையைக்கூட உதாரணமாகப் பார்க்கலாம்.
சில ஆண்டுகள் முன்வரை, கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வழங்குவதனை மத்திய அரசு தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
விண்ணப்ப படிவம் வழங்குதல், ஆய்வு செய்தல், விண்ணப்பதாரரின் பின்னணி விசாரணை குறித்து காவல்துறையுடன் ஒருங்கிணைப்பு, கடவுச்சீட்டு அச்சிடுதல், விநியோகம் போன்றவற்றை அரசே செய்து வந்தது. அப்போதெல்லாம், கடவுச்சீட்டு வாங்குவதற்கு, ஆறு மாதம்கூட ஆகும். தவிரவும், இடைத்தரகர்களின் ஆதிக்கமும் நிறைய இருந்தது.
இப்போது, இப்பணியின் பெரும்பகுதியை தனியார்வசம் அரசு கொடுத்திருக்கிறது. காவல்துறை ஒருங்கிணைப்பு - கடவுச்சீட்டு உத்தரவு போன்றவற்றை தவிர, பெரும்பாலானவற்றை தனியார்வசம் ஒப்படைத்ததனால் தற்போது அதிகமான கடவுச்சீட்டு குறுகிய காலத்தில், தொந்தரவின்றி வழங்கப்படுகிறது.
இரு வாரங்களுக்குள் கடவுச்சீட்டு பெற முடிகிறது. இடைத்தரகர்கள் அறவே நீக்கப்பட்டிருக்கின்றனர். அரசின் சுமையும் குறைந்து உபயோகிப்பாளரின் பலனும் கூடுகிறது.
இந்த இரு விஷயங்களும் நமக்கு சில படிப்பினைகளை புலப்படுத்துகின்றன. ஒன்று: அரசு, தனது நிர்வாகத்தில், அக்கறையுடன் சரியான அணுகுமுறையைக் கையாண்டால், தமிழகப் போக்குவரத்து துறையை முன் காலத்தில் நிர்வகிக்கப்பட்டத்தைப்போல எல்லா தரப்பினரும் பயன்படுத்தும்படி நிர்வகிக்க முடியும்.
இரண்டு: அரசு சேவைத் துறை சரி வர இயங்க வில்லை என்றால், தனியார் துறையினரின் உதவியோடு, சிறந்த சேவையை அளிக்க முடியும்.
இவை மேலும் சில கேள்விகளை நமது மனதில் ஏற்படுத்துகின்றன. அரசுத் துறையில் நிர்வாகத் திறமை மங்கி விட்டதா?அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு சாமான்ய மனிதன் ஏன் தனது பணத்தை வீணடிக்க வேண்டும்?
தொழில்முறைச் சார்ந்த அணுகுமுறை ஏற்படுத்தப்படவில்லை என்றால், அதனை ஏற்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு அல்லவா? அது இயலாத
பட்சத்தில், அரசு சில துறைகளை தனியார் வசமோ அல்லது தனியார் துணையுடன் செயல்படுத்துவதுதானே நன்மை பயக்கும்?
அதேபோல, சேவைத் துறையில் பணிபுரிபவர்களுக்கு இருக்க வேண்டிய சேவை மனப்பான்மையும் - கனிவும் இல்லையென்றால், அத்துறை எதற்காக அரசு வசம் இருக்க வேண்டும்.
கடவுச்சீட்டு வழங்கும் நடைமுறையைப்போல, ஒரு சில துறைகளில் மட்டுமாவது, அரசு, தனியார் துறையோடு இணைந்து செயல் படலாம்.
குறிப்பாக, போக்குவரத்து துறையில், ஓட்டுநர் உரிமம் வழங்குதல், புதுப்பித்தல், வாகனப் பதிவு, மற்றும் பத்திர பதிவுத் துறை, ரேஷன் அட்டை வழங்குதல், புதுப்பித்தல், விவசாயிகளுக்கு மானியம் - முதியோர் ஓய்வூதியம் வழங்குதல், பிறப்பு - இறப்பு சான்றிதழ் அளித்தல் என மக்களுடன் நேரடித் தொடர்புடையத் துறைகளில் தனியாரோடு இணைந்து பணிச் சுமையை குறைத்துக் கொள்ளலாம்.
அப்போது, சேவை துரிதமடையும், இடைத் தரகர்கள் அகற்றப்படுவர். அரசு இதனை சோதனை முறையிலாவது, சில மாவட்டங்களில் செய்து பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com