விவசாயிகளைக் காப்போம்!

நூறு ஆண்டுகளாக இல்லாத பெரும் மழை மற்றும் வெள்ளத்தின் பாதிப்பை கடந்த ஆண்டில் எதிர்கொண்ட தமிழகம், இந்த ஆண்டு, கடந்த ஐம்பது ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சியை சந்தித்து வருகிறது.
விவசாயிகளைக் காப்போம்!

நூறு ஆண்டுகளாக இல்லாத பெரும் மழை மற்றும் வெள்ளத்தின் பாதிப்பை கடந்த ஆண்டில் எதிர்கொண்ட தமிழகம், இந்த ஆண்டு, கடந்த ஐம்பது ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சியை சந்தித்து வருகிறது. அதன் விளைவாக பல்லாயிரக் கணக்கான ஏக்கரில் பயிர்கள் கருகியுள்ளன.
விவசாயம் பொய்த்துப்போன கவலையில் விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். தமிழகத்தில் வறட்சி நிலைமையை மத்திய வேளாண் துறைச் செயலர் தலைமையிலான குழு நேரில் ஆய்வு செய்துள்ளது.
இதற்கிடையே, விவசாயிகள் தற்கொலையைத் தடுப்பது, தமிழக அரசு கோரிய நிவாரண நிதியை விரைந்து அளிப்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, வறுமையில் வாடும் விவசாயிகளுக்கு உடனடித் தேவையாக இருப்பவை இரண்டு. ஒன்று, பாசனத்துக்கு தேவைப்படும் நீர் ஆதாரத்தை அடைந்தே தீர வேண்டும். இரண்டாவதாக, கடன் சுமை தாங்காமல் விழி பிதுங்கிக் கொண்டு உள்ள நிலையில், அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், பழைய கடனை அடைப்பதற்கு கூடுதல் கால அவகாசமும், புதிய பயிர் கடனை விரைந்து வழங்குவதும் அவசியம்.
தமிழக விவசாயிகளின் உயிர் நாடிப் பிரச்னையான காவிரி நீர் பங்கீட்டில் கர்நாடகம் காட்டும் அலட்சியப் போக்கும், அக்கறையின்மையும் கவலையளிப்பதாக உள்ளது.
மத்திய அரசு, காவிரி நீர் மேலாண்மை வாரியம், உச்சநீதிமன்றம் என்கிற எந்த ஒரு அமைப்பின் உத்தரவுக்கும் செவி சாய்க்காத ஒரு மாநிலத்திடமிருந்து தமிழக விவசாயிகளுக்கு உரிய நீரை பெற வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
பயிர் கடன் பிரச்னை அப்படி இல்லை. மத்திய, மாநில அரசுகள், ரிசர்வ் வங்கி, நபார்டு, வணிக வங்கிகள் ஆகியவை இணைந்து இந்த பயிர் கடன் பிரச்னையை சுலபமாகத் தீர்த்து வைக்க முடியும்.
விவசாயக் கடன் விஷயத்தை முழுக்க, முழுக்க ஒரு பொருளாதாரப் பிரச்னையாக பார்க்க வேண்டுமே தவிர, அரசியல் அல்லது தேர்தல் சார்புடைய விஷயமாக அல்ல. கடந்த காலங்களில் எப்போதெல்லாம் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதோ அப்போதெல்லாம், அது ஆளும் கட்சியின் தேர்தல் உத்தியாகத்தான் பார்க்கப்பட்டது.
2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிவித்த விவசாயக் கடன் தள்ளுபடியும் சரி, அண்மையில் நடைபெற்ற உத்தரப் பிரதேச தேர்தலில் பா.ஜ.க. அறிவித்த விவசாயக் கடன் தள்ளுபடியும் சரி, தேர்தல் உத்தியாகவே வர்ணிக்கப்படுகிறது.
இதற்கு வலு சேர்க்கும் வகையில் 2013-ஆம் ஆண்டு சி.ஏ.ஜி. (Comptroller and Auditor General)  அறிக்கையில் 80,229 விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதில், 100-க்கு 9 பேர் போலி நபர்கள் என்றும், அவர்கள் அத்தகைய சலுகைகள் பெறுவதற்கு உகந்தவர்கள் அல்ல என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தவறான நபர்களுக்கு சலுகைகள் போய் சேருவது தடுக்கப்பட வேண்டியதுதான். அதற்காக, சரியான நபர்களுக்கு உதவக்கூடிய திட்டத்தை தடுக்கவும் கூடாது.
இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் 2014-ஆம் ஆண்டு அறிக்கையில் தனது கருத்தை முன் வைத்துள்ளார். கடன் தள்ளுபடி ஆரோக்கியமான நடவடிக்கை அல்ல. புதிய கடன் வழங்குவதற்கான தொகை இதனால் சுருங்கி விடுகிறது. தகுதி வாய்ந்த நபர்களுக்கு கடன் கொடுக்க முடியாமல் போய் விடுகிறது என்பதே ரகுராம் ராஜனின் கருத்தாக இருந்தது.
பாரத ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா மேலும் ஒரு படி மேலே போய் 'கடன் தள்ளுபடியால் பயன் அடைந்தவர்கள் அத்துடன் நிற்காமல், எதிர்காலத்திலும் கடன் தள்ளுபடிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்' என்று கூறியுள்ளார்.
இந்த கருத்துகள் மேலோட்டமாகப் பார்க்கையில் நியாயம் என்றுதான் தோன்றக் கூடும். ஆனால், நாட்டில் நிலவும் நிதர்சனமான நிலைமை - அதீதமான வறட்சி, பொதுவான பொருளாதார தேக்க நிலை, விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உட்பட்டிருப்பது, விவசாயிகளின் தற்கொலை ஆகிய அசாதாரணமான சூழ்நிலையில், அசாதாரணமான நிவாரணம் தேவை என்பது தெளிவு.
எனவே கடன் சுமையால் தவிக்கும் ஏழை, எளிய விவசாயிகளுக்கு வங்கிகள் - குறிப்பாக பொதுத் துறை வங்கிகள் - சரியான நேரத்தில், சரியான அளவு புதிய பயிர்க் கடன் கொடுப்பதும், பழைய கடனை அடைப்பதற்கு கூடுதல் கால அவகாசம் கொடுப்பதும் மிகவும் அவசியம்.
அதேபோல், மத்திய - மாநில அரசுகள், தேர்தல் அறிவிப்பு வரும்வரை காத்திராமல், நிலைமையை உரிய முறையில் ஆய்வு செய்து, தகுதியான நபர்களுக்கு, அவசியத்துக்கு ஏற்ப (Case to case basis)   பயிர் கடனை பகுதியாகவோ, முழுமையாகவோ தள்ளுபடி செய்திட வேண்டும்.
ஒட்டுமொத்தமாக எல்லா விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்வது தவறு. வசதி படைத்தவர்களுக்கும், தகுதியில்லாதவர்களுக்கும் கடன் தள்ளுபடி செய்வது முறையல்ல.
இவ்விதமாக, தனித்தனியாக ஆய்வு செய்து முடிவெடுப்பது எளிதல்ல என்பது உண்மை. அதற்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டி இருக்கும். அதேநேரம், இதனால் ஏற்படக்கூடிய நிதிசுமை, தவறான நபர்களுக்கு கடன் தள்ளுபடி செய்வதால் நேரும் இழப்போடு ஒப்பிட்டால், அது மிகவும் குறைவாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரத ஸ்டேட் வங்கி தற்போது அறிவித்துள்ள திட்டம் கவனிக்கத்தக்கது. ரூ.25 லட்சம் வரையிலான டிராக்டர்கள் மற்றும் விவசாய தளவாடங்கள், கருவிகள் வாங்குவதற்காக வழங்கப்பட்ட கடன் தொகை வாராக் கடனாக மாறியிருந்தால், அந்த கடன்களை சலுகை அடிப்படையில் ஒரே தவணையில் திரும்பச் செலுத்துவதற்கு சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் முன் வருவார்களேயானால், அவர்களது கடன் மற்றும் வட்டித் தொகையில் 40 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்பதே பாரத ஸ்டேட் வங்கியின் திட்டமாகும்.
இதில் ரூ.6,000 கோடி அளவுக்கு வாராக் கடன் தொகை (Doubtful and Loss Cases)  அடங்கியுள்ளது. இதை சலுகை அடிப்படையில் ஒரே தவணையில் திரும்பச் செலுத்தும் (One Time Settlement) திட்டம் என்கிறார்கள்.
இது புதுமையான திட்டம் அல்ல. பாரத ஸ்டேட் வங்கியும் பிற வங்கிகளும் சில நேரங்களில் ஒரே தவணையில் சலுகையுடன் கடனைத் திரும்பச் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கின்றன.
எனினும் எப்போதோ ஒரு முறை செய்யாமல், இந்த நடைமுறையை அவ்வப்போது செய்தால் நல்லது. இதன்மூலம் பல நன்மைகள் ஏற்படும். ஒன்று, முழு தள்ளுபடியில் உள்ள குறைபாடுகள் களையப்படும். இரண்டாவதாக, வங்கிகளின் வாராக் கடன் சுமை பெருமளவு குறையும். மூன்றாவதாக, கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு உரிய நிவாரணம் நிச்சயம் கிடைக்கும். ஆக, இதன் மூலம் அனைத்துத் தரப்பினருக்கும் பலன் கிடைக்கிறது. இதனால் அரசியல் கண்ணோட்டமும் அகற்றப்படுகிறது.
பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் ஏப்ரல் 2016 முதல் டிசம்பர் 2016 வரையிலான காலகட்டத்தில் ஒரு லட்சம் கோடி அதிகரித்துள்ளது. 2015-2016 நிதி ஆண்டில் ரூ.5,02,068 கோடியாக இருந்த வாராக் கடன் டிசம்பர் 2016-இல் ரூ.6,06,911 கோடியாக உயர்ந்துள்ளது. இது மாநிலங்கள் அவையில் துணை நிதி அமைச்சர் சந்தோஷ் கங்குவார் தெரிவித்துள்ள தகவல்.
மின்சாரம், சாலைகள், அடிப்படைக் கட்டமைப்பு, ஜவுளி, உருக்கு ஆகிய துறைகளைச் சார்ந்த நிறுவனங்களின் கடன்கள்தான், வாராக் கடன்களில் முன்னிலை வகிக்கின்றன. இவற்றோடு ஒப்பிடுகையில் விவசாயக் கடன்களில் வாராக் கடன் சதவீதம் மிகவும் குறைவு என்றே சொல்ல வேண்டும்.
விவசாயக் கடன்களைப் பொருத்தவரை கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் போவதற்கு பருவ மழை பொய்த்தல், நீர் பற்றாக்குறை, வறட்சி சில நேரங்களில் பெரு வெள்ளம் ஆகிய இயற்கை சார்ந்த காரணங்கள்தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
இந்நிலையில், கடனைத் திரும்பச் செலுத்தாத விவசாயிகள் மீது வங்கிகள் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதோ, அவர்களை மனஉளைச்சலுக்கு உட்படுத்துவதோ முறை ஆகாது.
மாறாக, அடுத்த பாசனத்துக்குத் தேவையான பயிர் கடனை சரியான நேரத்தில், சரியான அளவில் தர வேண்டும். பழைய பாக்கியை வசூலிப்பதற்கு தற்போது உள்ள கால அவகாசத்தைவிட அதிகமான கால அவகாசம் தருவதும் உதவிகரமாக இருக்கும்.
அசாதாரணமான சூழல் நிலவும் பட்சத்தில், பயிர் கடனில் ஒரு பகுதியையோ, அல்லது முழுமையான கடன் தொகையையோ, முறையாக கணக்குகளைத் தனித்தனியாக பரீசிலித்த பிறகு, தள்ளுபடி செய்வதற்கு மத்திய - மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

கட்டுரையாளர்:
வங்கி அதிகாரி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com