தீர்ப்புகளை நடைமுறைப்படுத்துவது எப்போது?

மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர்த் தகராறுகளுக்குச் சட்டப்படித் தீர்வு காண்பதற்கான சட்ட வழிமுறைகளை தர வேண்டிய நதி நீர்த் தகராறுச் சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன.
தீர்ப்புகளை நடைமுறைப்படுத்துவது எப்போது?

மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர்த் தகராறுகளுக்குச் சட்டப்படித் தீர்வு காண்பதற்கான சட்ட வழிமுறைகளை தர வேண்டிய நதி நீர்த் தகராறுச் சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. இச்சட்டத்தின்படி, ஒவ்வொரு நதி நீர்த் தகராறுக்கும் தனித்தனியாக தீர்ப்பாயங்களை (Tribunals)  அமைக்க வேண்டியுள்ளது.
அவ்வாறு அமைக்கப்பட்ட எட்டுத் தீர்ப்பாயங்களில் மூன்று தீர்ப்பாயங்கள் அளித்த இறுதித் தீர்வுகள் மட்டுமே (தகராறில் தொடர்புடைய) மாநிங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. காவிரி, ரவி பியாஸ் ஆகியவற்றின் தீர்ப்பாயங்கள் 26, 30 ஆண்டுகள் செயல்பட்டும் எந்தத் தீர்ப்பையும் வழங்கவில்லை என்று அமைச்சர் உமா பாரதி கூறியுள்ளார்.
அமைச்சரின் இந்தப் பேச்சு காவிரி நதி நீர் தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பை அறிந்த அவனைவருக்கும் ஒரு அதிர்ச்சியை கொடுத்தது. காரணம் 26 ஆண்டுகளில் அல்ல, 1990-இல் அமைக்கப்பட்ட காவிரி நதி நீர்த் தீர்ப்பாயம் (Cauvery water disputes Tribunal),  ஒராண்டுக் காலத்திற்குள் ஒரு இடைக்கால உத்தரவை வழங்கியது.
அதன்படி, ஜூன் முதலான ஓர் நீராண்டில் 205 டி.எம்.சி. நீரை கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டும். ஆனால் அந்த உத்தரவை அரசிதழில் வெளியிட ஏழாண்டுகளை எடுத்துக் கொண்டது இந்திய அரசு. 1998-இல் தான் அது அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன் பிறகுதான் காவிரி நதி நீர் ஆணையம்(Cauvery River Authority - CRA) அமைக்கப்பட்டது.
ஆணையத்தின் தலைவராக பிரதமரும் (அன்று வாஜ்பாய்) உறுப்பினர்களாக நான்கு மாநிலங்களின் முதல்வர்களும் இருப்பார்கள் என்றும், இதன் கீழ் நான்கு மாநிலங்களின் பொதுப்பணித் துறை அதிகாரிகளைக் கொண்ட தொழில் நுட்பக் குழு அமைக்கப்படும் என்றும், அது காவிரி அணைகளில் உள்ள நீர் இருப்பை கணக்கிட்டு, தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு இணங்க நீர்த் திறப்பை உறுதிப்படுத்தும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஆனால் ஒரு ஆண்டுகூட அப்படி நிறைவேற்றப்படவில்லை. மழை அதிகமாக பொழிந்து கர்நாடக அணைகள் நிரம்பி வழியும்போது மட்டுமே உபரி நீரை, அதுவும் தங்கள் அணைகளை காப்பாற்றிக்கொள்ள வேறு வழியின்றி தமிழ்நாட்டிற்கு திறந்துவிட்டது.
இடைக்கால உத்தரவை பிறப்பித்த பிறகு ஆழ்ந்த விசாரணையை மேற்கொண்ட காவிரி நதி நீர்த் தீர்ப்பாயம், 2007-ஆம் ஆண்டிலேயே, அதாவது அது அமைக்கப்பட்ட 16-ஆவது ஆண்டிலேயே இறுதி தீர்ப்பை அளித்துவிட்டது. ஆனால் அதனை இந்திய அரசு 2013-ஆம் ஆண்டில்தான் அரசிதழில் வெளியிட்டது.தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினால்தான் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளிவந்தது.
இடைக்காலத் தீர்ப்பின்படி 205 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டிற்கு என்று இருந்த நிலையில், இறுதித் தீர்ப்பில் அது 183 டி.எம்.சி. நீராகக் குறைக்கப்பட்டிருந்த நிலையிலும் தமிழ்நாடு ஏற்றுக்கொண்டு, அதனை நடைமுறைப்படுத்த அரசிதழில் வெளியிட வேண்டும் என்று கோரித்தான் உச்சநீதிமன்றம் சென்று உத்தரவைப் பெற்றது.
காவிரி தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட ஒரு மாதத்திற்குள் அதனை நிறைவேற்றுவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை ஒன்றிய அரசின் நீர் வளத் துறை அமைத்திருக்க வேண்டும், செய்யவில்லை.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் செய்யவில்லை, 2014-இல் ஆட்சி பீடத்திற்கு வந்துள்ள பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் நிறைவேற்றிடவில்லை. அதனை அமைக்கச் சொன்ன உச்சநீதிமன்றத்தை நோக்கி, இதில் மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று மத்திய அரசின் வழக்குரைஞர் கூறிவிட்ட நிலையில் தற்போது வழக்கு நிலுவையிலுள்ளது. ஜூலை 11 முதல் தொடர் விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
ஆக 26 ஆண்டுகளுக்குப் பிறகு என்று அமைச்சர் உமா பாரதி கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானது என்பதை சுட்டிக்காட்டும் அதே வேளையில், வழங்கப்பட்ட தீர்ப்பை நடைமுறைப்படுத்த தவறியது மத்திய அரசின் குற்றம்தானேயன்றி, தீர்ப்பாயத்தின் குறையாக எப்படி ஆக முடியும்?
மத்திய அரசின் நீர் வளத் துறை வெளியிட்டுள்ள நதி நீர்த் தகராறு சட்ட திருத்தம் 2017 வரைவையும் ஆழமாக பார்க்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு நதி நீர்த் தகராறுக்கும் தனித்தனியாக நதி நீர்த் தகராறு தீர்ப்பாயங்கள் அமைப்பது என்பதைவிட, உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியால் நியமிக்கப்படும் நீதிபதியை தலைவராகக் கொண்டு, ஒரு துணைத் தலைவர், ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நிரந்தரமாக ஒரு தீர்ப்பாயத்தை அமைப்பது.
அத்தீர்ப்பாயம் ஒவ்வொரு நதி நீர்த் தகராறையும் தீர்ப்பதற்கான 3 நீதிபதிகளைக் கொண்டத் தனித்த அமர்வை அமைப்பதற்கான அதிகாரத்தை ஒன்றிய அரசிற்கு வழங்கும். இந்த அமர்வுகளுக்கு உதவ நீர்வளத் துறை தலைமை பொறியாளரைக் கொண்ட தொழில்நுட்பக் குழு அமைத்திடவும் இத்திருத்தங்கள் வழி செய்கின்றன.
இது மட்டுமின்றி, அவ்வாறு அமைக்கப்படும் அமர்வுகள் அதிகபட்சமாக நான்கரை ஆண்டுகளுக்குள் ஒரு நதி நீர்த் தகராறு தொடர்பான வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கிட வேண்டுமென்றும் ஒரு கால வரையறையை வகுத்துள்ளது.
இவை மட்டுமின்றி, இந்தியாவின் பெரும் நதிகளின் நீர் வரத்துத் தொடர்பான தரவுகளை திரட்டித் தொகுத்திட ஒரு தனித்த அமைப்பை (Data collection System) உருவாக்கவும் இத்திருத்தம் வழிவகை செய்கின்றது. இவை யாவும் வரவேற்கத்தக்கதே; அவசியமும் கூட.
இத்திருத்தம் தொடர்பாக தமிழ்நாட்டிற்கு ஏற்படும் குழப்பம் யாதெனில், திருத்தச் சட்டப் பிரிவு 4, பத்தி 2ன் படி, இச்சட்டத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டு, அதன் தொடர்ச்சியாக தனித்த தீர்ப்பாயம் அமைக்கப்பட்ட நாளிற்குப் பிறகு இப்போதுள்ள தீர்ப்பாயங்கள் அனைத்தும் கலைக்கப்பட்டதாகக் கருதப்பட்டு, அவை விசாரித்துவரும் நீர்த் தகராறு வழக்குகள் அனைத்தும் புதிய தீர்ப்பாயத்திற்கு மாற்றப்படும் என்பதாகும்.
அப்படியானால் தற்போதும் இயங்கிவரும் காவிரி நதி நீர்த் தீர்ப்பாயமும் கலைக்கப்படுமா என்கிற கேள்விக்கு அதே பிரிவின் பத்தி 4 விடையளிக்கிறது.
பிரிவு 4 பத்தி 4-இன் படி, இத்திருத்தச் சட்டத்தின் நிறைவேற்றத்திற்கு முன், விசாரணை நடத்தி இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்ட தீர்ப்பாயங்கள் விசாரித்த வழக்குகள் மீண்டும் ஏற்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது. திருத்தச் சட்டங்களில் வார்த்தைகள் தெளிவாகத்தான் இருக்கின்றன.
ஏனெனில் காவிரி நதி நீர்த் தீர்ப்பாயம் தனது இறுதி தீர்ப்பை வழங்கிவிட்டது. அதனை ஒன்றிய அரசும் தனது அரசிதழில் வெளியிட்டுவிட்டது. எனவே வழக்கு விசாரணை என்பது முற்றிலுமாக முடிந்துவிட்டது என்று தெளிவாக எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால் இச்சட்டத் திருத்தத்தின் நோக்கம் மற்றும் காரணங்கள் தொடர்பான அறிக்கையில் (Statement of objects and reason), ØRp Tj§«p Only three out of eight Tribunals have made awards which are accepted by the States. Though the Cauvery and Ravi Beas Water Disputes Tribunals have been in existence for over 26 and 30 years respectively, they have not been able to make any successful award till date  என்று குறிப்பிடப்பட்டுள்ளதுதான் குழப்பத்திற்குக் காரணமாகும்.
காவிரி மற்றும் ரவி பியாஸ் நதி நீர்த் தகராறு தீர்ப்பாயங்கள் 26 மற்றும் 30 ஆண்டுகளாக செயல்பட்டிருப்பினும், அவற்றால் வெற்றிகரமான இறுதித் தீர்ப்பை வழங்க இயலவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் உமா பாரதி இத்திருத்தச் சட்டத்தை மக்களவையில் முன்மொழியும்போது இவ்விரு தீர்ப்பாயங்களும் இறுதித் தீர்ப்பை வழங்கவில்லை என்று கூறினார். இத்திருத்தச் சட்ட வரைவுகளில் வெற்றிகரமான தீர்ப்பை வழங்க இயலவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான பதில், 8 தீர்ப்பாயங்களில் 3 தீர்ப்பாயங்கள் அளித்த தீர்ப்புகளை மட்டுமே வழக்கில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஒப்புக்கொண்டுள்ளன என்று அதே பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஆணையையோ அல்லது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையோ ஒரு மாநில அரசோ அல்லது அரசுகளோ ஏற்றுக்கொண்டால் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என்று கூறினால் அத்தீர்ப்பு செல்லாததாக ஆகிவிடுமா?
மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனாலேயே தீர்ப்பாயங்கள் வழங்கிய தீர்ப்புகள் தோல்வியுற்றதாக அமைச்சர் உமா பாரதி கருதுவாரேயானால், அதற்காக பொறுப்பேற்க வேண்டியது அதனை நியமித்த மத்திய அரசு அல்லவா? தீர்ப்பாயம் எப்படி பொறுப்பாக முடியும்?
காவிரி நதி நீர்த் தகராறு தீர்ப்பாயம் சம்பந்தப்பட்ட தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய 4 மாநில அரசுகள் அளித்த பல்வேறு தரவுகளை ஆராய்ந்ததோடு மட்டுமின்றி, அதிகாரபூர்வமான மதிப்பீட்டாளர்களையும் (அள்ள்ங்ள்ள்ர்ழ்ள்) நியமனம் செய்து, அவர்கள் அளித்த அறிக்கைகளையும் ஆய்வு செய்த பின்னரே இறுதி அறிக்கையை அளித்துள்ளது.
ஐந்து பெரும் பகுதிகளைக் கொண்ட இறுதித் தீர்ப்பை படித்தவர்கள் அனைவரும் அது ஒரு நீதியான அறிக்கை என்பதை ஒப்புக்கொள்வார்கள்.
ஆயினும், இறுதித் தீர்ப்பு தங்களுக்கு உரிய நீதியை வழங்கவில்லை என்று தமிழ்நாடும், கர்நாடகமும், கேரளமும் மேல் முறையீடு செய்துள்ளன. அது தற்போது உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த விசாரணயை மீண்டும் காவிரி நதி நீர்த் தீர்ப்பாயத்திற்கேகூட உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்யலாம்.
ஆனால் காவிரி நதி நீர் தீர்ப்பாயத்தை சட்டத் திருத்தத்திற்குப் பிறகு மத்திய அரசு கலைத்துவிட்டால் அப்போது மேல் முறையீடுகளை விசாரிப்பதற்கென தனித்த அமர்வை உருவாக்குதா? அது காவிரி தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பை - குறிப்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை - புறந்தள்ளும் முயற்சியாகத்தானே அமையும்?
எனவே, இச்சட்டத் திருத்தம் குறித்த தெளிவான விளக்கங்களை தமிழ்நாடு பெற்றாக வேண்டும். நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தமிழ்நாட்டின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கேள்வி எழுப்பி தெளிவான விளக்கத்தை நீர் வளத் துறை அமைச்சரிடமிருந்து பெற வேண்டும்.
இரண்டாவதாக, நதி நீர்த் தீர்ப்பாயங்களின் இடைக்கால மற்றும் இறுதித் தீர்வுகளை உடனடியாக அரசிதழில் வெளியிட்டு, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டபூர்வ அமைப்புகளை உடனடியாக ஏற்படுத்துவதும், தீர்ப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தும் பொறுப்பை, அதிகாரத்தை பெற்றுள்ள மத்திய அரசு, அதனை அரசியல் காரணங்களுக்காக தட்டிக்கழிக்கக் கூடாது.
குறை தீர்ப்பாயங்களில் இல்லை, தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டிய மத்திய அரசிடம் இருக்கிறது.

கட்டுரையாளர்:
பத்திரிகையாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com