வைதிகத்தை வைணவம் ஆக்கியவர்!

ஆயிரமாவது ஆண்டைக் கடந்தும் ஆயிரத்தில் ஒருவராக நிமிர்ந்து நிற்பவர், எம்பெருமானார், இராமாநுசர்.
திருக்குலத்தாரைத் திருமாலின் அடியார்களாக்கினார்,  இராமாநுசர். பெரியநம்பியும் இராமாநுசரும் மடத்திலிருந்து சேரிகளுக்கும் போனார்கள்; சேரிகளில் இருந்தவர்களை மடங்களுக்குள்ளும்  கொண்டு சேர்த்தார்கள்.
திருக்குலத்தாரைத் திருமாலின் அடியார்களாக்கினார், இராமாநுசர். பெரியநம்பியும் இராமாநுசரும் மடத்திலிருந்து சேரிகளுக்கும் போனார்கள்; சேரிகளில் இருந்தவர்களை மடங்களுக்குள்ளும் கொண்டு சேர்த்தார்கள்.

ஆயிரமாவது ஆண்டைக் கடந்தும் ஆயிரத்தில் ஒருவராக நிமிர்ந்து நிற்பவர், எம்பெருமானார், இராமாநுசர். எம்பெருமானாருக்கு முன்னர் வந்த அருளாளர்கள் ஆலயத்திற்குள்ளும் மடத்திற்குள்ளும் இருக்கும் பக்தர்களிடைப் பக்தியை வளர்க்க முயன்றார்கள்.
ஆனால், இராமாநுசர் ஆலயத்திற்குள்ளும், மடத்திற்குள்ளும் நுழைய முடியாதவர்களிடம் பக்தியைக் கொண்டு போனார். இதனை உறுதிப்படுத்துவதுபோல் சுவாமிஜி விவேகானந்தர், "ஆதிசங்கரர் ஞானத்தில் மிகச் சிறந்தவராக இருந்தபோதிலும், இராமாநுசரது இதயமும் கருணையும் உலகத்தின் அளவு பரந்ததாக உள்ளது' எனச் சிகாகோ மாநாட்டில் பதிவு செய்துள்ளார்.
இராமாநுசருக்கு முன்னர் இருந்த ஞானிகள் - அருளாளர்கள், பலபேருக்கு முன்னால் மந்திரங்களைக் கற்பிக்கமாட்டார்கள். ஒவ்வொருவருக்கும் ஓராண்டு, அவராற்றிய சேவைகளை ஆய்வு செய்த பிறகே, பாடங்களைத் தொடங்குவார்கள்.
ஆனால், இராமாநுசர், திருக்கோட்டியூர் நம்பி எச்சரிக்கை செய்தும், திருக்கோட்டியூர் கோபுரத்தின் மீதேறி, தாம் கற்ற நாராயண மந்திரத்தை அனைத்து மக்களையும் அழைத்து, ஓங்கி ஒலித்தார். தாம் நரகத்திற்குப் போனாலும் உலகவர் அனைவரும் வைகுண்டம் செல்ல வேண்டும் என விரும்பியவர், இராமாநுசர்.
வைதிக மதம் என்பது விதித்ததைச் செய்வது வைணவம் என்பது விரும்பியதைச் செய்வது. வைதிக மதமாய் இருந்ததை, வைணவம் ஆக்கியவர், இராமாநுசர். இராமாநுசரின் செயலைக் கண்டு திருக்கோட்டியூர் நம்பி "இவரல்லவா யாம் பல காலம் தேடிக் கொண்டிருந்த தலைவர்' என்று எண்ணி, "வாரீர் எம்பெருமானாரே' என அழைத்து, "அவரோ நீர்' (பாரதப் போரில் பாண்டவர்க்குத் துணைநின்ற கண்ணன்) என வியந்து, இதுவரை பரம வைதிக சித்தாந்தம் என்றிருந்தது.
இன்றுமுதல் எம்பெருமானார் தரிசனம் ஆயிற்று. இதுவே அரங்கன் திருவுளம் என ஆசீர்வதித்து, அங்கீகாரம் தந்தார்.
எம்பெருமானாரின் சமத்துவ உணர்வு, புரட்சிக்கவிஞர் பாரதிதாசனையே வியக்க வைத்தது. "மருட்டுகின்ற மதத்தலைவன் வாழ்கின்றானே' எனப் புரட்சிக்கீதம் பாடிய பாவேந்தர், "முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில், இத்தமிழ் நாடுதன் இருந்தவப் பயனாய், இராமாநுசனை ஈன்றதன்றோ' எனப் பாடுகின்றார்.
இராமாநுசருடைய சமத்துவக் கொள்கையால் வைணவம் கடையனுக்கும் கடைத்தேற்றம் தந்தது. ஒடுக்கப்பட்ட - புறக்கணிக்கப்பட்ட மக்களை முதலில் மனிதர்களாக மதித்தார் பின்னர் அத்திருக்குலத்தாரைத் திருமாலின் அடியார்களாக்கினார், இராமாநுசர்.
பெரியநம்பியும் இராமாநுசரும் மடத்திலிருந்து சேரிகளுக்கும் போனார்கள்; சேரிகளில் இருந்தவர்களை மடங்களுக்குள்ளும் சேர்த்தார்கள்.
எம்பெருமானார் பாய்ச்சிய இரத்தத்தால் வைணவமும் நாலாயிரத் திவ்யப் பிரபந்தமும் திருவேங்கடம் தாண்டி - பூரி செகந்நாதரைத் தாண்டி - நேபாளம் வரை சென்றது. நாட்டு விடுதலைக்குப் போராடிய சுப்பிரமணிய சிவா, "இராமாநுசருடைய விசிஷ்டாத்துவக் கொள்கையானது உலகில் பெரும்பான்மையோராலே அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும், சாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ, இந்த விசிஷ்டாத்துவைதத்தைப் பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அநுசரித்து வருகிறார்கள்' என்று சமூக விடுதலைக்குப் போராடிய இராமாநுசரின் தொண்டினை அங்கீகரிக்கின்றார்.
இராமாநுசர் திருவரங்கத்தின் பீடாதிபதியாகப் பொறுப்பேற்றவுடன் பெரிய பெருமாள் அசரீரியாக, "இராமாநுசரே நம்முடைய உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் உமக்கும் உம்முடையார்க்கும் தந்தோம் இன்றுமுதல் நீ உடையவர்' எனும் பட்டத்தைப் பெற்று நம் காரியங்களை ஆராய்ந்து நடத்துவீர் என அருளிப் போந்தார்.
பக்கத்திலிருந்த பெரிய நம்பி, "இராமாநுசரை உடையவரே' என மார்போடணைத்துக் கொண்டார். திருவரங்கம் கோயிலில் அப்பொழுது பக்திப் போர்வையில் பல கள்ளத்தவ வேடர்கள் இருந்தனர். அவர்கள் ஆஷாடபூதிகள் என்றும், கோயில் பூனைகள் எனவும் அழைக்கப்பட்டனர்.
எம்பெருமான் அவற்றையெல்லாம் குத்தூசிக் கொண்டு குத்தியும் அங்குசம் கொண்டு அடக்கியும், நிர்வாகத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தார். இங்கு மட்டுமன்றி பூரி செகந்நாதர் கோயிலிலும் இருந்த பக்தி வேடதாரிகளை வெளிச்சத்திற்குக் கொண்டு, அனைவரையும் தலைகுனிய வைத்தார்.
இராமாநுசர் ஆளவந்தாரின் ஆணைக்கிணங்க திருவாய்மொழியின் பெருமையைப் பாரதமெங்கும் பரப்பினார். திருமலை ஆண்டானிடம் திருவாய்மொழிப் பாடம் கேட்டார். திருக்குறுகைப் பிள்ளானைக் கொண்டு, திருவாய்மொழிக்கு உரையெழுதப் பணித்தார்.
பராசரப் பட்டர், வியாசர், காரிமாறன் போன்ற பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்டினார். அதனால் தமிழ்மறை போன்ற திருவாய்மொழியை அருளிச் செய்த நம்மாழ்வாரைப் "பெற்ற தாய்; என்றும், இராமாநுசரை "செவிலித்தாய்' என்றும் கூறுவர்.
எம்பெருமானாருக்கு ஆண்டாளின் திருப்பாவையில் மிகுந்த ஈடுபாடு உண்டு. அவருக்குத் "திருப்பாவை ஜீயர்' என்ற பட்டப்பெயரும் உண்டு. எம்பெருமானார் பிட்சைக்குச் செல்லும்போது, திருப்பாவை பாசுரங்களையே உச்சரித்துக் கொண்டு போவாராம். ஒருமுறை திருக்கோட்டியூர் நம்பியின் இல்லத்திற்குப் பிட்சைக்குச் சென்றார்.
"உந்து மதகளிற்றன்' என்ற பாசுரத்தைப் பாடி "சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்து', திருக்கோட்டியூர் நம்பியின் மகள் தேவகிப்பிராட்டி கையில் அரிசியோடு கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாராம். அப்பெண்ணைப் பார்த்தவுடன், எம்பெருமானார் அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினாராம்.
நப்பின்னையையே மனத்தில் தியானம் செய்துகொண்டு வந்தவர், தேவகியைப் பார்த்தவுடன், நப்பின்னையாகவே பார்த்து வணங்கிவிட்டாராம். இது போன்ற ஒரு வைபவம் பெரியநம்பி - அத்துழாய் வரலாற்றிலும் உண்டு. இதிலிருந்து பெண்ணின் பெருமைக்கும் முதன்மை கொடுத்தவர் எம்பெருமானார் என்பது தெளிவாகிறது.
இராமாநுசருடைய எளிமையையும், அவருடைய பெருமையையும் பேசவந்த வேதாந்த தேசிகர், ஆண்டாளிடம் கொண்ட பக்தியினால் இராமாநுசர் பிட்சைக்குப் போகும்போது பாதுகைகள் அணிவதில்லை. அதனால் அவரது திருவடியிலுள்ள தாமரை, மீன்போன்ற அடையாளங்களைப் பூமாதேவி மிக்க ஆதுரத்துடன் தாங்குகிறாள்.
இராமாநுசரின் திருவடிப்பட்ட அந்தத் தூசியை, அவரைத் தொடர்ந்து ஓதிவரும் அடியார்கள் தங்களுக்குக் காப்பாகத் தலையின் முன்னுச்சியில் அணிந்து கொள்கிறார்கள் என்று "யதிராஜ சப்ததி'யில் அருளிச் செய்கிறார்.
தநுர்தாசன் என்ற வேடுவன், பொன்னாச்சி எனும் தாசிப்பெண்ணின் பேரழகில் மயங்கி ரெங்கமன்னாரையே திரும்பிப் பார்க்காமல் இருந்தான். இராமாநுசர் அவனை மடத்திற்கு வரவழைத்து, ரெங்கநாதனின் கண்ணழகைக் காட்டி, அவனைத் திருத்திப் பணி கொள்கிறார். தநுர்தாசன் எனும் பெயரை வில்லியாண்டான் என மாற்றுகிறார்.
பறவைகளை வேட்டையாடும் ஒரு வேட்டுவனை, திருவாய்மொழியைக் கேட்டு உள்ளம் பதைபதைக்கும் பக்தனாக மாற்றியவர், எம்பெருமானார்.
வடுகநம்பி எனும் புறக்கணிக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன்தான், இராமாநுஜருக்கு அத்யந்த சீடன். எம்பெருமானாருடைய பூஜைப்பெட்டியை எப்போதும் சுமப்பவன் அவனே. எம்பெருமானார் வடுக நம்பியின் மடியில் பாதங்களை நீட்டித்தாம் பரமபதம் அடைந்தார்.
மேல்கோட்டையில் எம்பெருமானார் நிகழ்த்திய புரட்சி, பொன்னெழுத்துக்
களால் பொறிக்கப்பட வேண்டியது. நலந்தாங்குச் சாதிகள் நாலினும் கீழிழிந்த பஞ்சமர்களைக் கொண்டு திருநாராயணபுரத்தில் கோயில் கட்டினார். அவர்களுக்கு ஆலயப் பிரவேசமும் செய்து வைத்தார். திருக்குளத்தில் நீராடும் உரிமையையும் வழங்கினார். ஆலய அறங்காவலர்களாகவும் அவர்களை மாற்றினார்.
12 ஆண்டுகள் திருநாராயணபுரத்தில் எம்பெருமானார் ஆற்றிய சமத்துவச் சேவை, ஸ்ரீரங்கப்பட்டணம், பேலூர், கர்நாடக மாநிலத்திலுள்ள அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் செல்வாக்குப் பெற்றிருந்ததாக, புச்சானன் எனும் அயல்நாட்டுப் பயணி பதிவு செய்திருக்கிறார். சுவாமி விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் "பிராமணர்களையும் பஞ்சமர்களையும் சமபந்தியில் அமர்த்தியவர் இராமாநுசர்' எனச் சொல்லியிருக்கிறார்.
"இராமாநுசர் ஒரு சாதாரணத் துறவியல்லர், அவர் ஒரு வீரத்துறவி' என்பதைத் தமது பத்திரிகையில் பதிவு செய்திருக்கிறார், மகாகவி பாரதியார்.
சுப்பிரமணிய சிவா, "எம்பெருமானாருடைய செயற்கரும் செயல்களை எண்ணி, விசிஷ்டாத்துவைதத்தைப் பிரகாசப்படுத்திய ஸ்ரீ இராமாநுசர் ஓர் மஹாபுருஷர். இம்மஹானுடைய அன்புக்கும், அறிவுக்கும் இணையாக எதையும் சொல்ல முடியாது. அவர் ஓர் அவதார புருஷர்' எனச் சாசனப்படுத்திச் சென்றிருக்கிறார்.
திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்கள். எம்பெருமானோ ஏற்கெனவே ஆயிரங்காலத்துப்பயிர். அது செழித்துப் பல்லாண்டு, பல்லாண்டு வளரட்டும் நம்மையும் வாழ்விக்கட்டும்.

இன்று (சித்திரை - திருவாதிரை)
ஸ்ரீ இராமாநுசரின்
1001}ஆவது அவதார தினம்.

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com