மொழி என்பது பாலம்

கடல்வழி வணிகம் செய்யப் புறப்பட்ட சாதுவன் கப்பல் கவிழ்ந்ததால் நாகர் தீவில் கரை ஒதுங்குகிறான். அப்போது அவனைக் கொல்லத் தயாராகும் நாகர் இன மக்களிடம் அவர்களது தாய்மொழியான நாக மொழியில் பேசுகிறான்

கடல்வழி வணிகம் செய்யப் புறப்பட்ட சாதுவன் கப்பல் கவிழ்ந்ததால் நாகர் தீவில் கரை ஒதுங்குகிறான். அப்போது அவனைக் கொல்லத் தயாராகும் நாகர் இன மக்களிடம் அவர்களது தாய்மொழியான நாக மொழியில் பேசுகிறான் சாதுவன். அதைக் கேட்டு மகிழ்ந்த நாகர்கள் அவனை விடுவித்ததுடன், அவனுக்கு விருந்துபசாரமும் செய்கின்றனர். அவர்களுக்கு புத்த தருமத்தை உபதேசித்து நாடு திரும்புகிறான் சாதுவன்.
-இது மணிமேகலை காப்பியத்தில் இடம்பெறும் ஒரு கதை. பிற மொழி ஒன்றை அறிந்திருப்பதன் பயனை இக்கதையால் உணர முடிகிறது. மணிமேகலையை தமிழின் சிறந்த காப்பியமாகப் போற்றும் நாம், இந்தக் கதை கூறும் முக்கிய கருத்தை அறிந்திருக்கிறோமா?
தமிழகத்தில் இந்தி மொழிக்கு எதிரான கிளர்ச்சியைத் தூண்டிவிட தற்போது சிலர் தீவிரமாக முயன்று வருவதைக் காணும்போது, சாதுவன் கதை நினைவில் வருவதைத் தடுக்க முடியவில்லை.
தமிழக நெடுஞ்சாலை மைல் கற்களில் இந்தியில் பெயர் எழுதப்படுவதை சிலர் விமர்சிக்கின்றனர். அவற்றில் தார் பூசி அழிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். இது ஒருவகை அடையாள அரசியல்.
இந்தியை எதிர்ப்பது மட்டுமே தமிழ்மொழி மீதான நேசத்தை உணர்த்துவதாக நம்பும் சிலரின் வெற்று கோஷம். இவர்களில் எவருமே தமிழக தனியார் பள்ளிகளில் தாய்த்தமிழ் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆங்கிலம் முதன்மை பெறுவதை எதிர்ப்பதில்லை.
இந்தி தெரிந்த அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் அம்மொழியிலேயே பேச வேண்டும் என்ற நாடாளுமன்றக் குழு பரிந்துரையும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. அந்நிய மொழியான ஆங்கிலம் நம்மை ஆண்டாலும் பரவாயில்லை; சகோதர மொழியான இந்தி பரவிவிடக் கூடாது என்ற வெறுப்பே இதில் இழையோடுகிறது.
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்நாட்டில் அதிக மக்கள் பேசும் மொழி இந்தி. தில்லி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஹரியாணா, ஹிமாசல பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட் ஆகிய வட மாநிலங்களில் இந்தியே பிரதான மொழி.
பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, ஒடியா, அசாமி, வங்கம், உருது மொழிகளும் இந்தியின் கலப்பு உடையவை. எனவே, இந்தி தெரிந்திருந்தால் பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரம், ஒடிஸா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் ஓரளவு சமாளித்துவிடலாம்.
உலக அளவில் அதிக அளவில் தாய்மொழியாகப் பேசப்படும் மொழிகள் பட்டியலில் இந்தி நான்காமிடம் (31 கோடி) வகிக்கிறது. இந்திய வம்சாவளியினர் வாழும் பல நாடுகளிலும் இந்தி பிரதான இடம் வகிக்கிறது.
தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்கள் அனைத்திலும் மும்மொழித் திட்டம் நடைமுறையில் உள்ளது. மாநில மொழி, இணைப்பு மொழி ஆங்கிலம், தேசிய மொழி இந்தி ஆகிய மூன்றையும் கற்பது அம்மாநிலங்களில் கட்டாயம்.
நமது அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகியவற்றின் மாணவர்கள் அகில இந்தியத் தேர்வுகளில் தமிழக மாணவர்களைவிட அதிக வெற்றிகளைக் குவிக்க இதுவே காரணம். இந்திய குடிமைப்பணித் தேர்வுகளிலும் தமிழகம் பின்னுக்குத் தள்ளப்பட இந்தி அறியாமை ஒரு காரணமாக இருந்து வருகிறது.
ஆயினும், நமது மாநில அரசியல்வாதிகள் மொழியை அறிவுபூர்வமானதாகக் காணாமல் உணர்வுபூர்வமாகவே அணுகுகிறார்கள். இந்தியால் தமிழின் சிறப்பு குறைந்துவிடும் என்ற அவர்களின் கூப்பாடு, வாக்கு வங்கி அரசியலுக்கானதே.
மத்திய அரசு மீண்டும் இந்தியைத் திணிக்க முயல்வதாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. 1965-இல் இந்தித் திணிப்பை எதிர்த்து தி.மு.க.வால் நடத்தப்பட்ட போராட்டமே தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை விளைவித்து, தி.மு.க. ஆட்சியைப் பிடிக்க வித்திட்டது.
எனவே, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மீண்டும் அரங்கேற்றி, இழந்துவிட்ட செல்வாக்கை மீட்டுவிட அக்கட்சி முயற்சிக்கிறது.
ஆனால், 1965-க்கும் 2017-க்கும் இடையே 52 ஆண்டுகால இடைவெளி உள்ளது என்பதை மறக்கக் கூடாது. இன்று வடமாநிலத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு நாடிவரும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.
உணவகங்கள், மருத்துவமனைகள், கட்டுமான நிறுவனங்களில் மட்டுமல்லாது, சாக்கடைத் தூய்மைப் பணிக்காகவும் வடமாநிலத் தொழிலாளர்களையே நாம் நம்பி இருக்கிறோம். நியாயமாகச் சொன்னால், அவர்களின் உழைப்பில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
தமிழகம், கேரளம் வழியாக இயங்கும் ரயில்களில் தினசரி பயணிக்கும் வடமாநில இளைஞர்களின் எண்ணிக்கையைப் பார்த்தாலே நமக்கு உண்மை நிலவரம் புரியும். அவர்களின் மலிவான உழைப்பு நமக்கு தேவைப்படுகிறது. ஆனால் அவர்களிடம் நம்மால் பேச முடிவதில்லை.
இன்று வேலைவாய்ப்புக்காக வடமாநிலங்களுக்குச் செல்லும் தமிழ் இளைஞர்களிடம் கேட்டால் தெரியும், இந்தி தெரியாததன் சிரமம்.
தலைவர்களின் வாரிசுகள் இந்தி படித்திருப்பதால்தான் தில்லியில் அவர்களால் அரசியல் நடத்த முடிகிறது. நம்மால்தான், பிழைக்கச் செல்லுமிடத்திலும் பேச முடிவதில்லை; பிழைக்க வந்த தொழிலாளர்களிடமும் பேச முடிவதில்லை.
இதுவே இந்தி எதிர்ப்பு அரசியலின் விளைவு. இன்னும் எத்தனை நாட்களுக்கு இதனை நாம் அனுமதிக்கப் போகிறோம்? அனுபவிக்கப் போகிறோம்?
தாய்மொழி மீதான பற்று தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அதேசமயம், பிற மொழிகளை அறிவது நமது அறிவை விசாலமாக்கும்.
குறிப்பாக இந்தியாவின் பிரதான மொழியான இந்தியைக் கற்பது தேசிய ஒருமைப்பாட்டுக்கும் வலிமை சேர்க்கும்.
மொழிகள் ஒற்றுமையைப் பிளக்கும் கோடரிகளல்ல; சமூகங்களை இணைக்கும் பாலங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com